‘கழுகு தேசத்தில்’ யெகோவாவின் வார்த்தை செழித்தோங்குகிறது
“கழுகு தேசம்.” இப்படித்தான் அல்பேனியர்கள் தங்களுடைய நாட்டை தங்கள் மொழியில் அழைக்கிறார்கள். ஏட்ரியாடிக் கடலைப் பார்த்தவாறு பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்நாடு, கிரீஸுக்கும் முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கும் இடையே உள்ளது. அல்பேனியர்களின் பூர்வீகத்தைப் பற்றிச் சொல்லும் கதைகள் ஏராளம் இருந்தாலும், இவர்களும் இவர்களது மொழியும் பழங்காலத்து இல்லிரிக்கர்களின் சந்ததியிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று அநேக சரித்திராசிரியர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அந்த இல்லிரிக்கர்களின் கலாச்சாரம் பொ.ச.மு. 2000-ல் தோன்றியதாக தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.
அல்பேனிய நாட்டின் இயற்கை அழகு, வடகோடியில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மலை சிகரங்களிலிருந்து தொடங்கி தெற்கே ஏட்ரியாடிக்கில் வெண்மணல் பரப்பிய நீண்ட கடற்கரைவரைக்கும் பரந்து விரிந்துள்ளது. ஆனால் இயற்கையிடம் உள்ள அழகைவிட அங்கிருக்கிற மனிதர்களிடம் உள்ள அழகுதான் அதிகம். அவர்கள் எப்பொழுதும் இன்முகத்தோடும் அன்போடும் கனிவோடும் உபசரிப்பவர்கள். கலகலவென்று உணர்ச்சிபொங்க பேசுபவர்கள். எதையுமே சீக்கிரத்தில் கற்றுக்கொள்பவர்கள். உற்சாகம் ததும்ப சைகைகளோடு கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள்.
பிரசித்திபெற்ற ஒரு மிஷனரியின் சந்திப்பு
அந்த மக்களின் இனிய சுபாவமும் அங்குள்ள எழில் கொஞ்சும் இயற்கை அழகும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வித்தியாசமான ஒரு பயணியை இங்கு சுண்டி இழுத்தது. பல இடங்களுக்குப் பயணம் செய்திருந்த அப்போஸ்தலன் பவுல் சுமார் பொ.ச. 56-ல் இவ்வாறு எழுதினார்: “இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.” (ரோமர் 15:19) இல்லிரிக்கமின் தெற்குப் பகுதியே, இன்றுள்ள மத்திய மற்றும் வட அல்பேனியா ஆகும். இல்லிரிக்கமிற்கு தெற்கேயுள்ள கிரீஸ் நாட்டின் கொரிந்து பட்டணத்திலிருந்து இந்தக் கடிதத்தை பவுல் எழுதினார். அதில் அவர் “இல்லிரிக்கம் தேசம்வரைக்கும்” பூரணமாய்ப் பிரசங்கித்ததாகக் குறிப்பிட்டதால், அதன் எல்லைப் பகுதிவரை அல்லது அந்த தேசத்திற்குள்ளேயே அவர் சென்றிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இப்பொழுது இருக்கும் தெற்கு அல்பேனியாவில் அவர் நிச்சயம் பிரசங்கித்திருப்பார். ஆகவே, நமக்குத் தெரிந்தவரை, அல்பேனியாவில் முதன்முதலாக ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்த பெருமை பவுலையே சேரும்.
பல நூற்றாண்டுகள் கடந்தன. பல வல்லரசுகள் தோன்றி மறைந்தன. ஐரோப்பாவின் ஒரு மூலையில் அமைந்துள்ள அல்பேனியாவில் அந்நியர்களுடைய ஆட்சிகள் பல வந்துபோயின; பிறகு, 1912-ல் அது சுதந்திரம் பெற்றது. அதன்பின் சுமார் பத்தாண்டுகள் கழித்து, யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி மீண்டும் அங்கு ஒலிக்க ஆரம்பித்தது.
பரபரப்பான நவீனநாளைய ஆரம்பம்
1920-களில் ஐக்கிய மாகாணங்களில் குடியேறியிருந்த அல்பேனியர்கள் சிலர், சர்வதேச பைபிள் மாணாக்கர்களிடம், அதாவது யெகோவாவின் சாட்சிகளிடம், பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்டார்கள். அவர்களில் சிலர், தாங்கள் கற்றுக்கொண்டதைத் தங்களுடைய தாய்நாடான அல்பேனியாவில் உள்ளவர்களுக்குச் சொல்ல அங்கு திரும்பிச் சென்றார்கள். அவர்களில் ஒருவர்தான் நாஷோ இட்ரிஸி. அல்பேனியாவில் சிலர் நற்செய்திக்கு நன்கு செவிசாய்த்தார்கள். ஆர்வம் காட்டியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், 1924-ல் அல்பேனியாவின் பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு ருமேனிய கிளை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டது.
அந்தச் சமயத்தில், அல்பேனியாவில் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டவர்களில் தானாஸ் டூலி (ஆதான் டூலிஸ்) என்பவரும் ஒருவர். அவர் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “1925-ல் அல்பேனியாவில் மூன்று சபைகள் இருந்தன. பைபிள் மாணாக்கர்களும் ஆர்வம் காட்டியவர்களும் நாடு முழுவதும் ஆங்காங்கே சிதறி இருந்தார்கள். அவர்கள் மத்தியில் நிலவிய அன்பு . . . மற்றவர்களிலிருந்து அவர்களை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டியது!”a
குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்வது மிகக் கடினமாக இருந்தது. ஆனாலும், ஆர்வமிக்க பிரஸ்தாபிகள் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார்கள். உதாரணத்திற்கு, தெற்கு கரையோரப் பகுதியில் உள்ள விலார் எனும் இடத்தைச் சேர்ந்த ஆரெடி பீணா என்ற 18 வயது பெண் 1928-ல் முழுக்காட்டப்பட்டார். எப்பொழுது பார்த்தாலும் பைபிளும் கையுமாக, கரடுமுரடான மலைப் பாதையில் ஏறி இறங்கி சாட்சி கொடுத்துவந்தார். 1930-களின் ஆரம்பத்தில், விலார் சபையில் இருந்த பக்திவைராக்கியமான மற்ற பிரஸ்தாபிகளோடு சேர்ந்து சேவை செய்தார்.
1930-களில், அல்பேனியாவின் பிரசங்க வேலை கிரீஸில் உள்ள ஆதன்ஸ் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் வந்தது. 1932-ல் கிரீஸிலிருந்த ஒரு பயணக் கண்காணி அல்பேனிய சகோதரர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அன்று பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்ட பெரும்பாலோருக்குப் பரலோக நம்பிக்கை இருந்தது. சுத்தமான, நேர்மையான ஜனங்கள் என்ற நற்பெயரை இவர்கள் சம்பாதித்ததால் எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள். உண்மையுள்ள இந்தச் சகோதரர்களுடைய உழைப்புக்கு பன்மடங்கு பலன் கிடைத்தது. 1935, 1936 ஆகிய இரண்டு வருடங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,500 பைபிள் பிரசுரங்கள் அல்பேனியாவில் விநியோகிக்கப்பட்டன.
ஒருநாள் விலாரின் முக்கிய பகுதியில் ஜே. எஃப். ரதர்ஃபர்டு கொடுத்த ஒரு பொதுப்பேச்சை கிராமஃபோனில் நாஷோ இட்ரிஸி போட்டுக்காட்டினார். மக்கள் எல்லோரும் தங்களுடைய கடைகளை அடைத்துவிட்டு பேச்சைக் கேட்க வந்தார்கள். சகோதரர் இட்ரிஸி அந்தப் பேச்சை அல்பேனிய மொழியில் மொழிபெயர்த்தார். இவ்வாறு ஆரம்ப காலத்தில் அயராமல் பைபிளை போதித்தவர்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் தக்க பலன் கிடைத்தது. 1940-க்குள் அல்பேனியாவில் சாட்சிகளின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தது.
ஒரு நாத்திக நாடு
1939-ல், இத்தாலிய பாஸிசவாதிகள் அல்பேனியாவைக் கைப்பற்றினார்கள். அப்பொழுது யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது, அதோடு பிரசங்க வேலையும் தடை செய்யப்பட்டிருந்தது. கொஞ்ச நாட்களிலேயே ஜெர்மானிய படைகள் அல்பேனியாவைக் கைப்பற்றின. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் செல்வாக்குமிக்க படைத் தளபதியான ஏன்வேர் ஹோஜாவின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்தது. 1946-ல் நடந்த தேர்தலில் அவருடைய கம்யூனிஸ கட்சி வெற்றி பெற்றதால் அவர் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து வந்த வருடங்கள் சுதந்திரக் காலம் என்று அழைக்கப்படலானது. ஆனால் யெகோவாவின் ஜனங்களுக்கோ அது ஒடுக்குதலின் காலமாக இருந்தது.
மதத்தை அந்த அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தது. அல்பேனியாவில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொள்வதற்காகப் போர்களிலும் அரசியலிலும் ஈடுபட மறுத்தார்கள். (ஏசாயா 2:2-4; யோவான் 15:17-19) இதனால் அநேகர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உணவோ அத்தியாவசியமான பிற தேவைகளோ வழங்கப்படவில்லை. கைது செய்யப்படாத அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரிகள்தான் பல தடவை அவர்களுடைய துணிமணிகளைத் துவைத்து, அவர்களுக்கு உணவு சமைத்துத் தந்தார்கள்.
துன்புறுத்துதல் மத்தியிலும் தைரியம்
1940-களின் தொடக்கத்தில், பர்மெட் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஃப்ரோஸினா ஜெகா என்ற ஓர் இளம் பெண் வாழ்ந்து வந்தாள். செருப்பு தைக்கும் வேலை செய்துகொண்டிருந்த சாட்சியாகிய நாஷோ டோரி என்பவரிடமிருந்து அவளுடைய அண்ணன்மார் கற்றுக்கொண்ட விஷயங்களை அவளும் கற்றுக்கொண்டாள்.b யெகோவாவின் சாட்சிகளிடம் அதிகாரிகள் மிகக் கறாராக நடந்துகொள்ள ஆரம்பித்த சமயம் அது. ஆனால், பெற்றோரின் எதிர்ப்புகளின் மத்தியிலும் ஃப்ரோஸினாவின் விசுவாசம் நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டே போனது. “கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நான் சென்றால், என்னுடைய செருப்பை ஒளித்துவைத்துவிட்டு என்னை அடிப்பார்கள். யெகோவாவை வணங்காத ஒருவரைத் திருமணம் செய்யச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் மறுத்தபோது வீட்டை விட்டே என்னைத் துரத்தினார்கள். அன்று பனி கொட்டிக் கொண்டிருந்தது. எனக்கு உதவி செய்யுமாறு கிரோகாஸ்டரில் உள்ள கோலே ஃப்லோகோ என்ற சகோதரரிடம் நாஷோ டோரி கேட்டுக்கொண்டார். தன்னுடைய குடும்பத்தோடு தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்தார். அந்தச் சமயத்தில் என்னுடைய அண்ணன்மார் நடுநிலை வகித்ததால் இரண்டாண்டு காலம் சிறை தண்டனை பெற்றார்கள். அவர்கள் விடுதலையான பிறகு அவர்களுடன் சேர்ந்து நான் விலாருக்குச் சென்றேன்.
“அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும்படி போலீஸ்காரர்கள் என்னை வற்புறுத்தினார்கள். நான் மறுத்தேன். என்னைக் கைதுசெய்து ஒரு அறையில் அடைத்து, என்னைச் சுற்றி நின்றுகொண்டார்கள். அதில் ஒருவர், ‘இப்போது எங்களால் உன்னை என்ன செய்ய முடியும் தெரியுமா?’ என்று மிரட்டினார். அதற்கு நான்: ‘யெகோவா உங்களை என்ன செய்ய அனுமதிக்கிறாரோ அதை மட்டும்தான் உங்களால் செய்ய முடியும்’ என்று சொன்னேன். அவர் கோபத்தோடு: ‘உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது! முதலில் இங்கிருந்து வெளியே போ!’ என்று கத்தினார்.”
அச்சமயத்தில் வாழ்ந்த அல்பேனிய சகோதரர்கள் எல்லோரும் இதேபோன்ற உண்மைப் பற்றுறுதியைக் காட்டினார்கள். 1957-ல் ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கை 75-ஐ எட்டியது. 1960-களின் ஆரம்பத்தில், டிரானேவுக்குச் சென்று பிரசங்க வேலையை ஒழுங்கமைக்குமாறு ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்துகொண்டிருந்த அல்பேனிய சகோதரர் ஜான் மார்கிடம் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டது.c அதன் பிறகு சீக்கிரத்திலேயே லூசி ஜெக்கா, மீஹால் ஸ்வேசி, லேயோனிதா போபே ஆகியோரும் பொறுப்பிலிருந்த மற்ற சகோதரர்களும் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.
நம்பிக்கை ஒளி வீசியது
1967 வரை அல்பேனியாவில் எல்லா மதங்களும் வெறுக்கப்பட்டன. பிறகு, அவை அனைத்தும் தடை செய்யப்பட்டன. கத்தோலிக்க குருமார், ஆர்த்தடாக்ஸ் குருமார், முஸ்லீம் மதத் தலைவர்கள் என யாருமே மதச் சடங்குகளை நடத்த அனுமதிக்கப்படவில்லை. சர்ச்சுகளும் மசூதிகளும் மூடப்பட்டன, அல்லது உடற்பயிற்சி களங்களாகவோ, அருங்காட்சியகங்களாகவோ, மார்கெட்டுகளாகவோ அவை மாற்றப்பட்டன. பைபிளை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டது. கடவுளைப் பற்றி பேச்செடுக்கவும்கூட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வெளி ஊழியம், சபை கூட்டம் என்பதையெல்லாம் மறந்துவிட வேண்டியிருந்தது. அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் ஒன்றுசேர்ந்து யெகோவாவைச் சேவிக்க முடியாமற்போனாலும் தனிப்பட்ட முறையில் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்தார்கள். 1960-லிருந்து 1980 வரை, விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் சாட்சிகள் அங்கு இருந்தார்கள். என்றபோதிலும், ஆன்மீக ரீதியில் அவர்கள் பலமாக இருந்தார்கள்.
1980-களின் முடிவில், அல்பேனிய அரசியலில் மாற்றங்கள் ஆமை வேகத்தில் நடந்தேறின. உணவுக்கும் உடைக்கும் ஜனங்கள் திண்டாடினர். கவலையில் வாடினர். கிழக்கு ஐரோப்பா முழுவதும் நடந்த சீர்திருத்த நடவடிக்கைகள் 1990-களில் அல்பேனியாவிலும் நடந்தன. 45 வருட சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு புதியதோர் ஆட்சி துவங்கியது; இதன் காரணமாக, மீண்டும் மதச் சுதந்திரம் கிடைத்தது.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவிடமிருந்து வந்த வழிநடத்துதலால், ஆஸ்திரியா மற்றும் கிரீஸ் நாட்டு கிளை அலுவலகங்கள் உடனடியாக அல்பேனிய சகோதரர்களைத் தொடர்புகொண்டன. அல்பேனிய மொழியை அறிந்திருந்த கிரேக்க சகோதரர்கள் புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட சில பைபிள் பிரசுரங்களை டிரானே மற்றும் பராட் என்ற இடங்களுக்குக் கொண்டுவந்தார்கள். அங்குமிங்கும் சிதறியிருந்த அல்பேனிய சகோதரர்கள் முதன்முறையாக வெளிநாட்டு சகோதரர்களைப் பார்த்தபோது சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார்கள்.
ஆர்வமிக்க வெளிநாட்டு பயனியர்கள் —ராஜ்ய வேலையில் முன்னோடிகள்
1992-ன் ஆரம்பத்தில், மைக்கேல் மற்றும் லின்டா டிகிரெகோரியோ என்ற மிஷனரி தம்பதியை அவர்களுடைய சொந்த நாடான அல்பேனியாவுக்குச் சென்று சேவை செய்யுமாறு ஆளும் குழு கேட்டுக்கொண்டது. உண்மைப் பற்றுறுதியுடன் இருந்த வயதான அல்பேனிய சகோதர சகோதரிகளை இவர்கள் சந்தித்தார்கள்; சர்வதேச ஆன்மீகக் குடும்பத்தின் ஓர் அங்கமாக மீண்டும் ஆவதற்கு அவர்களுக்கு உதவினார்கள். கடின உழைப்பாளிகளாக இருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த 16 விசேஷப் பயனியர்களுடன் சேர்ந்து நான்கு கிரேக்க பயனியர்களும் அல்பேனியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அல்பேனிய மொழியைக் கற்றுக்கொள்வதற்காக வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த வெளிநாட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது பெரும் பாடாக இருந்தது. போதுமான மின்வசதி இருக்கவில்லை. பனிக்காலத்தின் குளிரும் ஈரப்பதமும் அவர்களை உறையவைத்தது. உணவுக்காகவும் மற்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் ஜனங்கள் மணிக்கணக்காக வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் அதை எல்லாவற்றையும்விட, சத்தியத்தின் மீது ஆர்வம் காட்டிய திரளான ஜனங்களை அமர வைப்பதற்குப் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் சகோதரர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது!
அல்பேனிய மொழியில் பேச போராடிக்கொண்டிருந்த பயனியர்கள், அம்மொழியைக் கரைத்துக்குடிக்க வேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டார்கள். அனுபவமுள்ள ஒரு பைபிள் போதகர் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் சகோதரர்களைப் பார்த்து அன்பாகச் சிரிப்பதற்கும் கட்டித் தழுவுவதற்கும் அவர்களுடைய மொழியை இலக்கணப் பிழையின்றி பேச வேண்டும் என்று அவசியமில்லை. அல்பேனியர்கள், உங்களுடைய உள்ளப்பூர்வ அன்புக்குத்தான் அடிபணிவார்களே தவிர பிழையில்லாத இலக்கணத்திற்கு அல்ல. அதனால் கவலைப்படாதீர்கள், நீங்கள் பேசுவதை அவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.”
முதல் மொழிப்பயிற்சி வகுப்பு முடிந்தவுடனே பராட், டுரஸ், கிரோகாஸ்டர், ஷ்கோடர், டிரானே, விலார் போன்ற இடங்களில் பயனியர்கள் பிரசங்க வேலையைத் தொடங்கினார்கள். விரைவில் இந்த இடங்களில் சபைகள் உருவாயின. 80 வயதைத் தாண்டிய ஆரெடி பீணா அப்போதும் விலாரில்தான் இருந்தார்; அவரது உடல்நிலை மோசமாயிருந்தது. அவருக்கு உதவ விசேஷப் பயனியர்கள் இருவர் விலாருக்கு அனுப்பப்பட்டார்கள். வெளிநாட்டவர்கள் தங்களுடைய மொழியைப் பேசுவதைப் பார்க்க அல்பேனியர்களுக்குப் பிரமிப்பாக இருந்தது. எனவே, அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “மற்ற மத மிஷனரிகளிடமிருந்து நாங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் முதலில் எங்களைத் தங்களுடைய மொழியான ஆங்கிலத்தை அல்லது இத்தாலியைக் கற்றுக்கொள்ள சொல்வார்கள். ஆனால் நீங்களோ எங்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக எங்கள் மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது, அதுமட்டுமல்ல, நீங்கள் சொல்லும் செய்தி எவ்வளவு முக்கியம் என்றும் புரிகிறது.” ஆரெடி கடைசிவரை உண்மையுடன் இருந்து தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை ஜனவரி 1994-ல் முடித்தார். உயிருடன் இருந்த கடைசி மாதம்வரை ஊழியத்தில் அவர் சுறுசுறுப்பாக இருந்தார். ஆரெடியும் அவரோடு இருந்த பயனியர்களும் காட்டிய வைராக்கியத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. 1995-ல் விலாரில் இருந்த சபை மீண்டும் செயல்படத் தொடங்கியது. இன்று அங்கே மூன்று சபைகள் செழித்தோங்குகின்றன; அங்குள்ள துறைமுகத்தில் சுறுசுறுப்பாக நற்செய்தியைப் பிரசங்கித்துவருகின்றன.
ஆன்மீகக் காரியங்களுக்காக இந்த நாடெங்கிலும் மக்கள் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் மத வெறுப்பு எதுவும் இருக்கவில்லை. சாட்சிகள் கொடுத்த பைபிள் பிரசுரங்கள் எல்லாவற்றையும் அவர்கள் ஆர்வத்தோடு வாசித்தார்கள். அநேக இளைஞர்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்து, வேகமாக முன்னேறினார்கள்.
அல்பேனியாவில் இன்று 90-க்கும் அதிகமான சபைகளும் சிறு தொகுதிகளும் ‘விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றன.’ (அப்போஸ்தலர் 16:5) அல்பேனியாவில் உள்ள 3,513 சாட்சிகளுக்கு இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்கிறது. மார்ச் 2005-ல் இயேசு கிறிஸ்துவின் மரண நாள் ஆசரிப்புக்கு 10,144 பேர் வந்திருந்தார்கள். உபசரிக்கும் குணமுடைய அல்பேனியர்களிடம் சாட்சிகள் பேசுவதால், 6,000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதோடு, சமீபத்தில் அல்பேனிய மொழியில் வெளியிடப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள். யெகோவாவுக்குத் துதிசேர்க்கும் வகையில் ‘கழுகு தேசத்தில்’ அவருடைய வார்த்தை செழித்தோங்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
[அடிக்குறிப்புகள்]
a தானாஸ் டூலியின் வாழ்க்கை சரிதையை டிசம்பர் 1, 1968-ம் வருட ஆங்கில காவற்கோபுர இதழில் பார்க்கலாம்.
b நாஷோ டோரியின் வாழ்க்கை சரிதையை ஜனவரி 1, 1996-ம் வருட காவற்கோபுர இதழில் பார்க்கலாம்.
c ஜான் மார்க்கின் மனைவி எலனின் வாழ்க்கை சரிதையை ஜனவரி 1, 2002-ம் வருட காவற்கோபுர இதழில் பார்க்கவும்.
[பக்கம் 20-ன் பெட்டி]
கொஸோவோவில் இனப் பூசல் மறைகிறது!
1990-களின் முடிவில் கொஸோவோ என்ற பெயர் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம், உள்நாட்டு பூசல்களினாலும் வேரூன்றியிருந்த இனப் பகைமையினாலும் அங்கு போர்மூண்டு அதில் பல நாடுகள் தலையிட்டதுதான்.
பால்கனில் போர் நடந்துகொண்டிருந்தபோது அநேக சாட்சிகள் பக்கத்து நாடுகளுக்கு ஓடிப்போக வேண்டியிருந்தது. போரின் வீரியம் குறைந்த பிறகு ஒரு சிறு தொகுதியினர் மட்டும் கொஸோவோவுக்குத் திரும்பிவந்து நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். 23,50,000 மக்கள் வாழும் கொஸோவோவுக்குச் சென்று அங்கு ஊழியம் செய்ய அல்பேனிய மற்றும் இத்தாலிய விசேஷப் பயனியர்கள் முன்வந்தார்கள். இப்பொழுது அங்கு நான்கு சபைகளும் ஆறு தொகுதிகளும் இருக்கின்றன. மொத்தம் 130 பிரஸ்தாபிகள் யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள்.
2003 இளவேனிற் காலத்தில் பிரிஷ்டினா என்ற இடத்தில் ஒரு நாள் விசேஷ மாநாடு நடந்தது. அதற்கு 252 பேர் வந்திருந்தார்கள். அவர்களில் சிலர் அல்பேனியர், இத்தாலியர், செர்பியர், ஜிப்ஸி இனத்தவர், மற்றும் ஜெர்மானியர். முழுக்காட்டுதல் பேச்சு முடிந்தவுடன் பேச்சாளர் இரண்டு கேள்விகளைக் கேட்டார். அதற்கு “ஆம்” என்று பதில் சொல்ல மூன்று பேர் எழும்பி நின்றார்கள். அவர்களில் ஒருவர் அல்பேனியர், இன்னொருவர் ஜிப்ஸி இனத்தவர், மற்றொருவர் செர்பியர்.
ஆம் என்ற பதிலை அவரவர் மொழியில் “வ்வா!,” “டா!,” “ப்போ!” என்று மூவரும் ஒரே நேரத்தில், சப்தமாகச் சொன்னபோது கூடியிருந்தவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பிறகு, அந்த மூவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டார்கள். ஆம், அவர்களுடைய நாட்டை ஆட்டிப்படைத்து வந்த இனப் பகைமையின் கொடிய பிரச்சினைகளுக்குரிய தீர்வை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
[பக்கம் 17-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மத்தியதரைக் கடல்
இத்தாலி
அல்பேனியா
கிரீஸ்
[பக்கம் 18-ன் படம்]
பெரியோர்களின் ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் இளம் சாட்சிகள்
[பக்கம் 18-ன் படம்]
ஆரெடி பீணா, 1928-லிருந்து 1994-ல் மரணமடையும்வரை உண்மையோடு சேவை செய்தார்
[பக்கம் 19-ன் படம்]
மொழியைக் கற்றுக்கொள்ள முதன்முதல் பயற்சி பெற்ற வெளிநாட்டு பயனியர்கள்
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
கழுகு: © Brian K. Wheeler/VIREO