முதல் நூற்றாண்டு யூதர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பரவுகிறது
சுமார் பொ.ச. 49-ல் எருசலேமில், ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற்றது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் “தூண்களாக எண்ணப்பட்ட” யோவான், கேபா (பேதுரு), இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு ஆகியோர் அங்கு இருந்தார்கள். கூட்டத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிற மற்ற இரண்டு பேர், பவுல் மற்றும் அவருடைய தோழர் பர்னபா. கூட்டத்தில் கலந்தாலோசிக்கவிருந்த விஷயம்: பரந்த பிராந்தியத்தை பிரசங்க வேலைக்காக எவ்வாறு பிரித்துக்கொடுப்பது என்பதே. பவுல் இவ்வாறு விளக்கினார்: “[அவர்கள்] நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்.”—கலாத்தியர் 2:1, 9, பொது மொழிபெயர்ப்பு.a
அவர்கள் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் ஒருபுறம், புறஜாதிகள் மறுபுறம் என்று மக்களின் அடிப்படையில் பிராந்தியம் பிரித்துக்கொடுக்கப்பட்டதா? அல்லது இடத்தின் அடிப்படையில் பிரித்துக்கொடுக்கப்பட்டதா? இதற்கு ஒரு நியாயமான பதிலைக் கண்டுபிடிக்க, பாலஸ்தீனாவுக்கு வெளியே குடியிருந்த யூதர்களின் வரலாற்றை கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும்.
முதல் நூற்றாண்டில் யூதர்களின் உலகம்
முதல் நூற்றாண்டில் எத்தனை யூதர்கள் பாலஸ்தீனாவிற்கு வெளியே குடியிருந்தார்கள்? யூத உலக அட்லஸ் என்ற ஆங்கில பிரசுரம் சொல்வதை அநேக வல்லுநர்கள் ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது. அது சொல்வதாவது: “திட்டவட்டமான எண்ணிக்கையைச் சொல்வது கடினம். ஆனால் (பொ.ச.) 70-க்குச் சற்று முன்பு யூதேயாவில் இருபத்தைந்து லட்சம் யூதர்களும், ரோம சாம்ராஜ்யத்தில் 40 லட்சத்திற்கு அதிகமான யூதர்களும் இருந்தார்களென தோராயமாகக் கணக்கிடப்பட்டது . . . (ரோம) சாம்ராஜ்யத்தின் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தினர் யூதர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. யூதர்கள் மிக அதிகமாக வசித்தது, கிழக்கு மாநிலங்களில் இருந்த பெரிய நகரங்களில்தான்; அந்நகரங்களில் வாழ்ந்த மக்களில் இருபத்தைந்து சதவீதத்தினர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் யூதர்களே.”
கிழக்கே அமைந்திருந்த சீரியா, ஆசியா மைனர், பாபிலோன், எகிப்து ஆகிய இடங்களில் யூதர்கள் அதிகமாகக் குடியிருந்தார்கள். மேலும் ஐரோப்பாவிலும் அவர்கள் சிறிய தொகுதிகளாக குடியிருந்தார்கள். பிரசித்தி பெற்ற ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் சிலர் இஸ்ரவேலுக்கு வெளியே வசித்தவர்கள்தான். உதாரணமாக, பர்னபா என்பவர் சீப்புரு தீவைச் சேர்ந்தவர், ஆக்கில்லா, பிரிஸ்கில்லா தம்பதியர் முன்பு பொந்துவிலும் பிறகு ரோம தேசத்திலும் குடியிருந்தவர்கள், அப்பொல்லோ என்பவர் அலெக்சந்திரியா பட்டணத்தைச் சேர்ந்தவர், பவுலோ தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவர்.—அப்போஸ்தலர் 4:36; 18:2, 24; 22:3.
இஸ்ரவேலுக்கு வெளியே வசித்த யூதர்கள் தங்கள் தாய்நாட்டுடன் அநேக வழிகளில் தொடர்பு வைத்திருந்தார்கள். அதில் ஒன்று: எருசலேமிலுள்ள ஆலயத்திற்கு வருடாந்தர வரி அனுப்பிவைத்து ஆலய சேவையிலும் வணக்கத்திலும் பங்கேற்றார்கள். இதைக் குறித்து ஜான் பர்க்லே என்ற அறிஞர் இவ்வாறு சொன்னார்: “இப்பணத்தையும், செல்வந்தர்களிடமிருந்து கிடைத்த கூடுதலான நன்கொடைகளையும் சிதறியிருந்த யூத தொகுதிகள் மிகக் கிரமமாக ஒன்று திரட்டின என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன.”
யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டுடன் தொடர்பு வைத்திருந்த மற்றொரு வழி, பண்டிகைகளுக்காக ஒவ்வொரு வருடமும் எருசலேமுக்கு சென்றதே; பல ஆயிரக்கணக்கான யூத யாத்திரிகர்கள் அவ்வாறு சென்றார்கள். அப்போஸ்தலர் 2:9-11-ல் உள்ள பதிவு இதற்கு சான்றளிக்கிறது; பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக யூத யாத்திரிகர்கள் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொப்பொத்தாமியா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, லீபியா, ரோமாபுரி, கிரேத்தா, அரபி தேசம் ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்ததாக அது காட்டுகிறது.
எருசலேமிலிருந்த மதத் தலைவர்கள் வேறு இடங்களிலிருந்த யூதர்களிடம் கடிதங்கள் மூலம் தொடர்பு வைத்திருந்தார்கள். அப்போஸ்தலர் 5:34-ல் குறிப்பிடப்பட்டுள்ள நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் பாபிலோனுக்கும் உலகின் பிற பாகங்களுக்கும் கடிதங்கள் அனுப்பினார் என தெரிகிறது. சுமார் பொ.ச. 59-ல் அப்போஸ்தலன் பவுல் ரோமுக்கு ஒரு கைதியாக சென்றபோது, ‘யூதரில் பிரதானமானவர்கள்’ அவரிடம் இவ்வாறு சொன்னார்கள்: “உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப் பற்றிப் பேசினதுமில்லை.” எனவே தாய்நாட்டிலிருந்து ரோமுக்கு கடிதங்களும் அறிக்கைகளும் அடிக்கடி அனுப்பப்பட்டன என்பது இதிலிருந்து தெரிகிறது.—அப்போஸ்தலர் 28:17, 21.
எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுவஜின்ட், மற்ற இடங்களிலிருந்த யூதர்களின் பைபிளாக இருந்தது. அதைக் குறித்து ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “LXX [செப்டுவஜின்ட்] இஸ்ரவேலுக்கு வெளியே வசித்த யூதர்களின் பைபிளாக அல்லது ‘பரிசுத்த வேதாகமமாக’ ஏற்றுக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவது சரியென்று தோன்றுகிறது.” இதே மொழிபெயர்ப்பைத்தான் பூர்வ கிறிஸ்தவர்களும் தங்களுடைய போதனையில் அதிகமாக பயன்படுத்தினார்கள்.
இவை எல்லாமே, எருசலேமிலிருந்த கிறிஸ்தவ ஆளும் குழுவிற்கு நன்கு தெரிந்திருந்த விஷயங்கள். தமஸ்கு, அந்தியோகியா ஆகிய இடங்கள் உட்பட சீரியாவிலும் சீரியாவுக்கு அப்பால் உள்ள இடங்களிலும் வசித்துவந்த யூதர்களுக்கு நற்செய்தி ஏற்கெனவே சென்றெட்டியிருந்தது. (அப்போஸ்தலர் 9:19, 20; 11:19; 15:23, 41; கலாத்தியர் 1:21) ஆக, பொ.ச. 49-ல் நடந்த கூட்டத்தில் இருந்தவர்கள், அதன்பிறகு செய்யவிருந்த பிரசங்க வேலையைக் குறித்தே திட்டமிட்டிருப்பார்கள். யூதர்கள் மத்தியிலும், யூத மதத்திற்கு மாறியவர்கள் மத்தியிலும் ஏற்பட்ட அதிகரிப்பைக் குறித்து பைபிள் தரும் தகவல்களை இப்போது கவனிக்கலாம்.
பவுலின் பயணங்களும் சிதறியிருந்த யூதர்களும்
பவுலுக்கு முதன்முதலில் கொடுக்கப்பட்ட ஊழியப் பொறுப்பு, ‘புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் [இயேசு கிறிஸ்துவின்] நாமத்தை அறிவிப்பதே.’b (அப்போஸ்தலர் 9:15) எருசலேமில் கூட்டம் நடந்துமுடிந்த பிறகு பவுல் எங்கெல்லாம் பயணித்தாரோ அங்கெல்லாம் சிதறியிருந்த யூதர்களிடம் தொடர்ந்து பிரசங்கித்தார். (பக்கம் 14-ல் உள்ள பெட்டியைக் காண்க.) எனவே அந்த ஒப்பந்தம் இடத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டிருக்கலாம், மக்கள் அடிப்படையில் செய்யப்பட்டிருக்காது எனத் தெரிகிறது. பவுலும் பர்னபாவும் ரோம சாம்ராஜ்யத்தின் மேற்கில் தங்கள் மிஷனரி ஊழியத்தைத் தொடர்ந்தார்கள். மற்றவர்களோ யூதர்களின் தாயகத்திலும் யூதர்கள் அதிகமாக வசித்த கிழக்குப் பகுதிகளிலும் தங்கள் ஊழியத்தை மேற்கொண்டார்கள்.
பவுலும் அவரது தோழர்களும் தங்களுடைய இரண்டாம் மிஷனரி பயணத்தை சீரியா தேசத்து அந்தியோகியாவிலிருந்து தொடங்கியபோது மேற்கே அமைந்திருந்த ஆசியா மைனர் வழியாக துரோவா பட்டணத்திற்கு வழிநடத்தப்பட்டார்கள். ‘[மக்கெதோனியர்களுக்கு] சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் தங்களை அழைத்தாரென்று அவர்கள் நிச்சயித்துக் கொண்டதால்’ அங்கிருந்து மக்கெதோனியாவுக்குச் சென்றார்கள். பிற்காலத்தில் அத்தேனே, கொரிந்து ஆகிய இடங்கள் உட்பட ஐரோப்பாவின் மற்ற நகரங்களிலும் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.—அப்போஸ்தலர் 15:40, 41; 16:6-10; 17:1-18:18.
சுமார் பொ.ச. 56-ல், பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில், மேற்கே இன்னும் வெகு தூரம் செல்ல திட்டமிட்டார்; இவ்வாறு, எருசலேமில் நடந்த கூட்டத்தின்போது தனக்கு நியமிக்கப்பட்டிருந்த பிராந்தியத்தை விரிவாக்க நினைத்தார். ‘ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன் . . . உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்’ என்று எழுதினார். (ரோமர் 1:15; 15:24, 28) ஆனால், யூதர்கள் அதிகமாகக் குடியிருந்த கிழக்கு பகுதிகளைப் பற்றியதென்ன?
கிழக்கிலிருந்த யூத தொகுதிகள்
பொ.ச. முதலாம் நூற்றாண்டின்போது எகிப்தில், முக்கியமாக அதனுடைய தலைநகரான அலெக்சந்திரியாவில், யூதர்களின் மிகப் பெரிய சமுதாயம் இருந்தது. வணிகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மையமாயிருந்த இந்நகரில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் குடியிருந்தார்கள். அங்கே இவர்களுடைய ஆலயங்கள் பல இருந்தன. அந்தச் சமயத்தில் எகிப்து முழுவதிலும் கிட்டத்தட்ட பத்து லட்சம் யூதர்கள் இருந்ததாக அலெக்சந்திரியாவைச் சேர்ந்த ஃபிலோ என்ற யூதர் சொன்னார். அதோடு அநேக யூதர்கள் லீபியாவிலும் சீரேனே பட்டணத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் குடியிருந்தார்கள்.
கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களில் சிலர் இப்பகுதிகளிலிருந்து வந்தவர்கள். உதாரணத்திற்கு, ‘அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த அப்பொல்லோவையும்,’ ‘சீப்புரு தீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலரையும்,’ சிரியாவின் அந்தியோகியா சபையை ஆதரித்த ‘சிரேனே ஊரானாகிய லூகியையும்,’ பற்றி நாம் வேதவசனங்களில் வாசிக்கிறோமே! (அப்போஸ்தலர் 2:10; 11:19, 20; 13:1; 18:24) முதல் நூற்றாண்டில் எகிப்திலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் கிறிஸ்தவ ஊழியம் நடைபெற்றதற்கு அத்தாட்சியாக இப்பதிவுகளும், கிறிஸ்தவ சுவிசேஷகனான பிலிப்பு எத்தியோப்பியன் ஒருவனுக்கு பிரசங்கித்த பதிவும் மட்டுமே பைபிளில் இருக்கின்றன.—அப்போஸ்தலர் 8:26-39.
பாபிலோன், அதற்கு அப்பால் இருந்த பார்த்தியா, மேதியா, ஏலாம் ஆகியவை யூதர்கள் அதிகமாக குடியிருந்த மற்றொரு பகுதியாகும். ஒரு சரித்திர ஆசிரியர் அதைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “டைக்ரிஸ், ஐப்பிராத்து ஆகிய சமவெளிகளிலும், ஆர்மீனியா முதல் பெர்சிய வளைகுடா வரையிலும், வடகிழக்கே காஸ்பியன் கடல் வரையிலும், அதோடு கிழக்கே மேதியா வரையிலுமாக எல்லாப் பகுதிகளிலும் யூதர்கள் குடியிருந்தார்கள்.” அந்த யூதர்களின் எண்ணிக்கை எட்டு லட்சமாகவோ அதற்கு மேலாகவோ இருந்திருக்கலாம் என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா மதிப்பிடுகிறது. வருடாந்தர பண்டிகைகளை கொண்டாடுவதற்காக பல்லாயிரக்கணக்கான பாபிலோனிய யூதர்கள் எருசலேமுக்கு பயணம் செய்தார்கள் என்று முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் கூறினார்.
பாபிலோனிய யாத்திரிகர்களில் சிலர் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று முழுக்காட்டப்பட்டார்களா? அதைப் பற்றி நமக்கு தெரியவில்லை. ஆனால் அன்றைய தினம் அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த சொற்பொழிவைக் கேட்டவர்களில் மெசொப்பொத்தாமியாவிலிருந்து வந்தவர்கள் இருந்தார்களெனத் தெரிகிறது. (அப்போஸ்தலர் 2:9) சுமார் பொ.ச. 62-64 வரை அப்போஸ்தலன் பேதுரு பாபிலோனில் இருந்தார் என்று நமக்கு தெரியும். அங்கு இருந்தபோது அவர் தன்னுடைய முதல் கடிதத்தை எழுதினார், அதோடு இரண்டாவது கடிதத்தையும் அங்கிருந்துதான் எழுதியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ( பேதுரு 5:13) எனவே, கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கூட்டத்தில் பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோருக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்ட பிராந்தியத்தில் பாபிலோனும் அங்கிருந்த மிகப் பெரிய யூத தொகுதியும் ஒரு பாகமாக இருந்திருக்க வேண்டும் என்றே நம்பப்படுகிறது.
எருசலேம் சபையும் சிதறியிருந்த யூதர்களும்
யாக்கோபு எருசலேம் சபையில் கண்காணியாக சேவை செய்தார்; பிராந்தியங்கள் நியமிக்கப்பட்ட கூட்டத்தில் இவரும் இருந்தார். (அப்போஸ்தலர் 12:12, 17; 15:13; கலாத்தியர் 1:18, 19) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் பிற இடங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான யூதர்கள் நற்செய்திக்கு செவிசாய்த்து முழுக்காட்டுதல் பெற்றதை இவர் கண்ணாரக் கண்டார்.—அப்போஸ்தலர் 1:14; 2:1, 41.
அப்போதும் அதற்குப் பிறகும் ஆயிரக்கணக்கான யூதர்கள் வருடாந்தர பண்டிகைகளுக்காகச் சென்றார்கள். நகரமோ நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. எனவே, பிற தேசங்களிலிருந்து வந்தவர்கள் அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களிலோ கூடாரங்களிலோ தங்க வேண்டியிருந்தது. இவர்கள் தங்கள் நண்பர்களை சந்தித்தது மட்டுமல்லாமல், ஆலயத்திற்குள் சென்று, கடவுளை வணங்கி, பலிகளை செலுத்தி தோராவைப் படித்தார்கள் என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா விவரிக்கிறது.
யாக்கோபும் எருசலேம் சபையின் மற்ற அங்கத்தினர்களும், இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் அந்த யூதர்களிடம் பிரசங்கித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும் ஸ்தேவானின் மரணத்திற்குப் பின் ‘எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிருந்த’ சமயத்தில் அப்போஸ்தலர்கள் மிகுந்த விவேகத்துடன் பிரசங்கித்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 8:1) இச்சம்பவத்திற்கு முன்பும்சரி பின்பும்சரி, கிறிஸ்தவர்கள் ஆர்வத்துடன் நற்செய்தியைப் பிரசங்கித்ததால்தான் தொடர்ந்து அதிகரிப்பு ஏற்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.—அப்போஸ்தலர் 5:42; 8:4; 9:31.
நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஆம், யூதர்கள் வசித்த எல்லா இடங்களிலும் பூர்வ கிறிஸ்தவர்கள் மும்முரமாகப் பிரசங்கித்தார்கள். அதேசமயம் பவுலும் மற்றவர்களுமோ ஐரோப்பிய பிராந்தியத்தில் புறஜாதியாரைச் சந்தித்துப் பிரசங்கித்தார்கள். இயேசு தம் சீஷர்களை விட்டுப் பிரிந்து சென்றபோது கொடுத்த கட்டளைக்கு, அதாவது “சகல ஜாதிகளையும்” சீஷராக்குங்கள் என்ற கட்டளைக்கு, அவர்கள் கீழ்ப்படிந்தார்கள்.—மத்தேயு 28:19, 20.
பிரசங்க வேலையில் யெகோவாவுடைய ஆவியின் வழிநடத்துதல் இருக்க வேண்டுமானால், அது கிரமமாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது அவசியம் என்பதை இவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். மேலும், கடவுளுடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிற ஆட்களைச் சந்தித்துப் பிரசங்கிப்பதன் நன்மைகளையும் தெரிந்துகொள்கிறோம்; முக்கியமாக, யெகோவாவின் சாட்சிகள் வெகு சிலரே வசிக்கும் பகுதிகளில் அவ்வாறு பிரசங்கிப்பதன் பயன்களை அறிந்துகொள்கிறோம். உங்களுடைய சபைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களில் சில, மற்ற பிராந்தியங்களைவிட அதிக பலன் தருகின்றனவா? அப்படிப்பட்ட பிராந்தியங்களில் அடிக்கடி ஊழியம் செய்வது பிரயோஜனமாக இருக்கும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கும் தெரு ஊழியம் செய்வதற்கும் ஏற்றவாறு உங்கள் சுற்றுவட்டாரத்தில் ஏதேனும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டா?
நாம் பைபிளில் பூர்வ கிறிஸ்தவர்களைப் பற்றி படிப்பதோடு, வரலாறு மற்றும் நிலவியல் விவரங்களை தெரிந்துகொள்வதும்கூட பயனுள்ளது. இந்த விவரங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்வதற்கு ஒரு கருவி உள்ளது. அதுதான் வரைபடங்களையும் புகைப்படங்களையும் கொண்ட, ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேடு.
[அடிக்குறிப்புகள்]
a முதல் நூற்றாண்டு ஆளும் குழு, விருத்தசேதனத்தைப் பற்றி அல்லது அது தொடர்பான விஷயத்தைப் பற்றி கலந்தாலோசித்த சமயத்தில் ஒருவேளை இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கலாம்.—அப்போஸ்தலர் 15:6-29.
b யூதர்களிடம் பவுல் பிரசங்கித்ததைப் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை பேசுகிறது, அவர் ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருந்ததை’ குறித்து பேசுவதில்லை.—ரோமர் 11:13.
[பக்கம் 14-ன் அட்டவணை]
இஸ்ரவேலுக்கு வெளியே சிதறியிருந்த யூதர்களிடம் பவுலுக்கிருந்த அக்கறை
பொ.ச. 49-ல் எருசலேமில் நடந்த கூட்டத்திற்கு முன்பு
அப்போஸ்தலர் 9:19, 20 தமஸ்கு—“ஆலயங்களிலே பிரசங்கித்தான்”
அப்போஸ்தலர் 9:29 எருசலேம்—‘கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு
வாதாடினார்’ (பொ.மொ.)
அப்போஸ்தலர் 13:5 சாலமி, சீப்புரு—‘யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்’
அப்போஸ்தலர் 13:14 பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா—‘ஜெபஆலயத்தில் பிரவேசித்தார்’
அப்போஸ்தலர் 14:1 இக்கோனியா—‘யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்தார்’
பொ.ச. 49-ல் எருசலேமில் நடந்த கூட்டத்திற்கு பின்பு
அப்போஸ்தலர் 16:14 பிலிப்பி—‘தேவனை வணங்குகிறவளாகிய லீதியாள்’
அப்போஸ்தலர் 17:1 தெசலோனிக்கே—‘யூதருடைய ஜெபஆலயம்’
அப்போஸ்தலர் 17:10 பெரோயா—‘யூதருடைய ஜெபஆலயம்’
அப்போஸ்தலர் 17:17 அத்தேனே—‘ஜெபஆலயத்தில் யூதரோடு . . . சம்பாஷணை பண்ணினார்’
அப்போஸ்தலர் 18:4 கொரிந்து—‘ஜெபஆலயத்திலே சம்பாஷணை பண்ணினார்’
அப்போஸ்தலர் 18:19 எபேசு—‘ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணை பண்ணினார்’
அப்போஸ்தலர் 19:8 எபேசு—‘ஜெபஆலயத்தில் பிரவேசித்து, மூன்று மாதமளவும் தைரியமாய்ப்
பிரசங்கித்தார்’
அப்போஸ்தலர் 28:17 ரோமாபுரி—“யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்”
[பக்கம் 15-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று நற்செய்தியைக் கேட்டவர்கள் பரந்த பிராந்தியங்களிலிருந்து வந்தவர்கள்
இல்லிரிக்கம்
இத்தாலி
ரோமாபுரி
மக்கெதோனியா
கிரீஸ்
அத்தேனே
கிரேத்தா
சிரேனே
லீபியா
பித்தினியா
கலாத்தியா
ஆசியா
பிரிகியா
பம்பிலியா
சீப்புரு
எகிப்து
எத்தியோப்பியா
பொந்து
கப்பத்தோக்கியா
சிலிசியா
மெசொப்பொத்தாமியா
சீரியா
சமாரியா
எருசலேம்
யூதேயா
மேதியா
பாபிலோன்
ஏலாம்
அரபி தேசம்
பார்த்தியா
[நீர்நிலைகள்]
மத்தியதரைக் கடல்
கருங்கடல்
செங்கடல்
பெர்சிய வளைகுடா