பண்டிகைக் காலம் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்குமா?
“ஜனவரி 1-ம் தேதி, எல்லா சர்ச்சுகளிலும் புத்தாண்டு தின விசேஷப் பூசைகள் நடத்த வேண்டுமென்று [மகா] பீட்டர் ஆணையிட்டார். ஊசியிலை மரக்கிளைகளால் வீட்டுநிலைகளை அலங்கரிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். அதுமட்டுமல்ல, புத்தாண்டு தினத்தன்று மாஸ்கோ மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ‘சத்தமாய் வாழ்த்துச்சொல்லி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க’ வேண்டுமென்றும் அறிவித்தார்.”—மகா பீட்டர்—அவரது வாழ்க்கையும் உலகமும் (ஆங்கிலம்).
பண்டிகைக் காலம் வருகிறதென்றால் நீங்கள் எதையெல்லாம் ஆசை ஆசையோடு எதிர்பார்ப்பீர்கள்? கிறிஸ்மஸ் தினத்தை, அதாவது கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதப்படுகிற தினத்தை, மையமாகக் கொண்ட காலப் பகுதியையே பண்டிகைக் காலம் என உலகெங்குமுள்ள ஜனங்கள் சொல்கிறார்கள், ஆனால் அதில் புத்தாண்டுக் கொண்டாட்டமும் சேர்ந்திருக்கிறது. எனவே அது ஒரு நீண்ட விடுமுறைக் காலமாகும். அச்சமயத்தில் பெற்றோர்களும் சரி, பிள்ளைகளும் சரி, விடுப்பில் இருக்கலாம், ஆகையால், குடும்பமாக ஒன்றுசேர்ந்து பொழுதைக் கழிப்பதற்கு அது மிகமிக ஏற்ற ஒரு காலமாகத் தோன்றலாம். ஆனால் மற்றவர்களோ, வருடத்தின் இந்தச் சமயத்தில் கிறிஸ்துவைக் கௌரவிக்க விரும்புவதால் இந்தக் காலத்தை “கிறிஸ்மஸ் காலம்” என்று குறிப்பிடுகிறார்கள். பண்டிகைக் காலத்தின் மிக முக்கிய நோக்கமே அதுதான் என நீங்களும் ஒருவேளை நினைக்கலாம்.
கிறிஸ்துவைக் கௌரவிப்பதாக இருந்தாலும் சரி, குடும்பத்துடன் ஜாலியாகப் பொழுதைக் கழிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது இரண்டையுமே செய்வதாக இருந்தாலும் சரி, கணவன், மனைவி, பிள்ளைகள் என உலகெங்குமுள்ள கோடிக்கணக்கானோர் இந்தப் பண்டிகைக் காலத்திற்காக ஆசை ஆசையோடு காத்திருக்கிறார்கள். அப்படியானால், இந்த வருட பண்டிகைக் காலத்தைப் பற்றி என்ன? குடும்பத்திற்கு அது ஒரு விசேஷக் காலமாக இருக்குமா? கடவுளுக்கு அது ஒரு விசேஷக் காலமா? ஒருவேளை குடும்பத்தார் எல்லாரும் ஒன்றுகூடி வரும் சமயமாக இருந்தால், நீங்கள் எதிர்பார்த்தபடியே அது இருக்குமா, அல்லது உங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்குமா?
கிறிஸ்மஸ் சமயத்திலும் புத்தாண்டு தினத்திலும் கிறிஸ்துவின் மனப்பான்மையை மக்கள் துளியும் வெளிக்காட்டுவதில்லை என்பதை மதக் கண்ணோட்டமுடைய அநேகர் கவனித்திருக்கிறார்கள். பண்டிகைக் காலத்தை, கிறிஸ்துவின் மனப்பான்மையை வெளிக்காட்டும் காலமாக அல்ல, ஆனால் பரிசுப்பொருள்களைப் பெறுவதற்கான காலமாகவே மக்கள் கருதுகிறார்கள்; அதோடு, குடும்பமாக ஒன்றுசேர்ந்து பொழுதைக் கழிப்பதற்கும் விருந்துகளை ஏற்பாடு செய்வதற்கும் அது ஒரு வழி என்று கருதுகிறார்கள்; அந்த விருந்துகளில் கிறிஸ்துவை அவமதிக்கிற மோசமான காரியங்கள் இடம்பெறலாம். குடும்பத்தில் எல்லாரும் ஒன்றுசேரும்போது ஒருவரோ பலரோ பெரும்பாலும் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டு, குடித்து வெறித்து, ஏதாவதொரு வாக்குவாதத்தில் இறங்கிவிடுவார்கள், இது அடிக்கடி வன்முறையில் முடிவடைகிறது. இதையெல்லாம் ஒருவேளை நீங்கள் பார்த்தும் இருக்கலாம், அல்லது அனுபவித்தும் இருக்கலாம்.
அப்படியானால், கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரஷ்ய சக்கரவர்த்தி மகா பீட்டருடைய காலம்முதல் இன்றுவரை எந்த மாற்றமும் நிகழாதது போலவே உங்களுக்குத் தோன்றலாம். பண்டிகைக் காலம் ஆழ்ந்த பக்தியைக் காட்டுவதற்கும், குடும்பத்தார் நல்ல கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதற்கும் வழிசெய்கிற காலமாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தற்போதைய போக்கை விரும்பாத அநேகர் நினைக்கிறார்கள். மாற்றத்தை விரும்பி சிலர் தீவிர நடவடிக்கையும் எடுக்கிறார்கள், ‘பண்டிகை இயேசுவுக்காகவே’ என்று அவர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். ஆனால், மாற்றம் வருமா? அந்த மாற்றம் கிறிஸ்துவை உண்மையிலேயே கௌரவிக்குமா? பண்டிகைக் காலத்தை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க காரணங்கள் இருக்கின்றனவா?
திருப்திகரமான பதில்களைப் பெற, இந்தப் பண்டிகைக் காலத்தை நன்றி காட்டுவதற்குரிய விசேஷக் காலமாகக் கருதும் ஒரு நாட்டவரின் கண்ணோட்டத்தில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.