கிறிஸ்மஸ் காலம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?
கோடிக்கணக்கானோருக்கு பண்டிகைக் காலம் என்றாலே சொந்தபந்தங்களோடும் நண்பர் வட்டங்களோடும் சேர்ந்து கூடிக்குலாவுகிற காலமாக இருக்கிறது, பாசப்பிணைப்புகளைப் புதுப்பிக்கும் காலமாக இருக்கிறது. இன்னும் பலருக்கு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியும் மனிதகுலத்தின் இரட்சிப்புக்கு அவர் ஆற்றிய பங்கைப் பற்றியும் நினைத்துப் பார்க்கும் காலமாக இருக்கிறது. ரஷ்யர்களுக்கோ, ஒருகாலத்தில் மற்ற நாட்டவரைப் போல் கிறிஸ்மஸ் கொண்டாட அனுமதியிருக்கவில்லை. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் பல நூற்றாண்டுகளுக்கு கிறிஸ்மஸை ஊரறிய உலகறிய கொண்டாடி வந்திருந்தாலும், 20-ம் நூற்றாண்டின் பெரும் காலப்பகுதியில் அதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏன் அந்த மாற்றம்?
1917-ல் போல்ஷிவிக் கம்யூனிஸ புரட்சி நடந்துமுடிந்த கையோடு, சோவியத் அதிகாரிகள் நாடெங்கும் நாத்திகக் கொள்கையை மிகத் தீவிரமாக அமல்படுத்தினார்கள். மதம் சார்ந்த கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் முற்றிலும் அதன் அங்கீகாரத்தை இழந்துபோனது. கிறிஸ்மஸையும் புத்தாண்டையும் கொண்டாடுவதை எதிர்த்து சோவியத் அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. இந்தப் பண்டிகைக் காலத்தின்போது பயன்படுத்தப்பட்ட சின்னங்களும்கூட—கிறிஸ்மஸ் மரம், டயெட் மரோஸ், அதாவது சான்ட்டா கிளாஸுக்கு ஒப்பான ரஷ்யாவின் உறைபனி தாத்தா போன்ற சின்னங்களும்கூட—அந்நாட்டில் பகிரங்கமாகக் கண்டனம் செய்யப்பட்டன.
1935-ல் ஒரு மாற்றம் நிகழ்ந்தது; அது, ரஷ்யர்கள் பண்டிகைக் காலத்தை அனுசரித்த விதத்தையே பெருமளவு மாற்றியது. உறைபனி தாத்தாவையும், கிறிஸ்மஸ் மரத்தையும் சோவியத் மக்கள் பழையபடி ஏற்றுக்கொண்டார்கள், புத்தாண்டு தினத்தையும் கொண்டாட ஆரம்பித்தார்கள், ஆனால் படுவித்தியாசமாக. உறைபனி தாத்தா கிறிஸ்மஸ் தினத்தன்று அல்ல, ஆனால் புத்தாண்டு தினத்தன்று பரிசுப்பொருள்களைக் கொண்டுவருவார் எனச் சொல்லப்பட்டது. அதேபோல், இனி கிறிஸ்மஸ் மரம் பயன்படுத்தப்படப் போவதில்லை, ஆனால் புத்தாண்டு தின மரம்தான் இருக்கும்! இவ்வாறு, பண்டிகைக் காலத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பது குறித்து சோவியத் யூனியனில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், கிறிஸ்மஸ் பண்டிகையின் இடத்தைப் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் பிடித்துக்கொண்டது.
கிறிஸ்மஸ் காலம், முழுக்க முழுக்க மதச்சார்பற்ற பண்டிகைக் காலமாகவே ஆனது. புத்தாண்டு தின மரம், வழிபாட்டுப் பொருள்களால் அல்ல, ஆனால் சோவியத் யூனியனின் முன்னேற்றத்தைச் சித்தரித்த பொருள்களால் அலங்கரிக்கப்பட்டது. வக்ரூக் ஸ்வயீட்டா (உலகெங்கும்) என்ற ரஷ்யப் பத்திரிகை இவ்வாறு விளக்குகிறது: “புத்தாண்டு மரம் அலங்கரிக்கப்படுகிற விதத்தை வைத்தே சோவியத் சகாப்தத்தின் வெவ்வேறு ஆண்டுகளில் தோன்றிய கம்யூனிஸ சமுதாயத்தின் சரித்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம். முயல்குட்டிகள், கூர்மையான ஐஸ்கட்டிகள், வட்டவடிவ பிரெட் துண்டுகள் போன்ற வழக்கமான பொருள்களோடு அரிவாள்கள், சுத்தியல்கள், டிராக்டர்கள் ஆகிய வடிவங்களிலும் அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. பிற்பாடு இவற்றிற்குப் பதிலாக சுரங்கத் தொழிலாளிகள், விண்வெளி வீரர்கள், எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்குரிய கருவிகள், ராக்கெட்டுகள், சந்திரனில் பயன்படுத்துகிற மோட்டார் வண்டிகள் ஆகியவற்றின் சிறுசிறு பொம்மைகள் அலங்காரப் பொருள்களாகத் தயாரிக்கப்பட்டன.”
கிறிஸ்மஸ் தினத்தைப் பற்றி என்ன? அது அங்கீகரிக்கப்படவே இல்லை. மாறாக, சோவியத் அரசு அதை ஒரு சாதாரண வேலை நாளாக்கியது. மதப் பண்டிகையாக கிறிஸ்மஸைக் கொண்டாட விரும்பியவர்கள் சர்வஜாக்கிரதையாகத்தான் அதைக் கொண்டாட முடிந்தது, அரசின் வெறுப்பையும், மோசமான பின்விளைவுகளையும் எதிர்ப்படும் ஆபத்து அவர்களுக்கு இருந்தது. ஆம், ரஷ்யாவில் 20-ம் நூற்றாண்டின்போது, பண்டிகைக் காலம் மத ஆசரிப்பிற்குப் பதிலாக அரசியல் கொண்டாட்டத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
சமீப மாற்றம்
1991-ல், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது மக்களுக்கு நிறைய விஷயங்களில் சுதந்திரம் கிடைத்தது. அரசின் நாத்திகக் கொள்கை ஒழிக்கப்பட்டது. புதிதாகப் பிறந்த பல்வேறு தனி நாடுகள் பெரும்பாலும் மதச்சார்பற்றவையாக இருந்தன, சர்ச்சும் அரசும் தனித்தே இயங்கின. இதன் காரணமாக, மதப்பற்றுள்ள அநேகர் தங்களுடைய மதத்தை இனி மனம்போல் பின்பற்ற முடியுமென நினைத்தார்கள். தங்கள் மதப்பற்றை வெளிக்காட்டுவதற்கான ஒரு வழி, கிறிஸ்மஸை மதப் பண்டிகையாகக் கொண்டாடுவதே என அவர்கள் நியாயப்படுத்தினார்கள். என்றாலும், அப்படி நினைத்த ஏராளமானோருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்?
இந்தப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வியாபார உலகிற்கு மிக அதிகமாகத் தீனிபோட்டுக்கொண்டே வருகிறது. ஆம், மேற்கத்திய நாடுகளைப் போல், கிறிஸ்மஸ் காலம் உற்பத்தியாளர்களுக்கும், மொத்த விற்பனையாளர்களுக்கும், வணிகர்களுக்கும் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்குரிய மிகச் சிறந்த காலமாக ஆகிவிட்டிருக்கிறது. கிறிஸ்மஸ் அலங்காரப் பொருள்களெல்லாம் கடை ஷோ-கேஸுகளில் கண்ணைக் கவரும் விதத்தில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதற்குமுன் ரஷ்யா கண்டிராத மேற்கத்திய பாணி கிறிஸ்மஸ் இன்னிசைகளும், பாடல்களும் கடைகளில் ஒலிக்கின்றன. கிறிஸ்மஸ் அலங்காரப் பொருள்களை சேல்ஸ்-மேன்கள் இரயிலிலும் மற்ற பொது வாகனங்களிலும் பயணிப்பவர்களிடம் விற்பனை செய்கிறார்கள். ஆம், இதையெல்லாம்தான் இன்று ரஷ்யாவில் நீங்கள் பார்ப்பீர்கள்.
பண்டிகைக் காலத்தின்போது வியாபாரத்திற்கு இப்படி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லையென நினைப்பவர்கள், ஒருவேளை மற்றொரு அம்சத்தைக் கண்டு மனம் புழுங்கலாம், அதாவது போதையேற குடிப்பதையும், அதனால் ஏற்படுகிற விபரீதங்களையும் கண்டு வேதனைப்படலாம். மாஸ்கோ ஆஸ்பத்திரி ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள டாக்டர் ஒருவர் இவ்வாறு விளக்கினார்: “புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே வீக்கங்கள், கீறல்கள் என்று தொடங்கி கத்திக்குத்து, துப்பாக்கி சூடு எனப் பலதரப்பட்ட காயங்கள் கணக்குவழக்கில்லாமல் ஏற்படும்; அவை குடும்பத்தில் நடக்கிற அடிதடியாலும், குடிவெறியாலும், கார் விபத்துகளாலுமே பெரும்பாலும் நிகழ்கின்றன. டாக்டர்களான எங்களுக்கு இது நன்றாகவே தெரியும்.” ரஷ்ய அறிவியல் கழகத்தின் கிளை ஒன்றில் பணிபுரியும் ஒரு மூத்த விஞ்ஞானி இவ்வாறு சொன்னார்: “மதுபானத்தால் ஏற்படும் சாவு எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 2000-ம் ஆண்டின்போது அது வெகுவாக அதிகரித்தது. தற்கொலைகளிலும் கொலைகளிலும்கூட திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது.”
வருத்தகரமாக, ரஷ்யாவில் பண்டிகைக் காலத்தின்போது ஆட்கள் இப்படி படுமோசமாக நடந்துகொள்வதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. “ரஷ்யர்கள் இரு முறை கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்” என்ற தலைப்பில் ஈஸ்வெஸ்டீயா என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிவித்தது: “ஏறக்குறைய பத்து ரஷ்யர்களில் ஒருவர் கிறிஸ்மஸை இரு முறை கொண்டாடுகிறார். ஒரு ரஷ்யக் கண்காணிப்பு மையம் (ROMIR) நடத்திய சர்வேயின்போது பதில் அளித்தவர்களில் 8 சதவீதத்தினர், கத்தோலிக்க காலண்டர்படி கிறிஸ்மஸை டிசம்பர் 25 அன்றும், ஆர்த்தடாக்ஸ் வழக்கப்படி ஜனவரி 7 அன்றும் கொண்டாடுவதாக ஒப்புக்கொண்டார்கள். . . . சிலர் மதக் காரணத்தைவிட, அதைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதையே அதிக முக்கியமானதாய் கருதுகிறார்கள்.”a
தற்கால போக்கு கிறிஸ்துவை உண்மையிலேயே கௌரவிக்கிறதா?
பண்டிகைக் காலத்தின்போது ஜனங்கள் பெரும்பாலும் அவபக்தியான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாய்த் தெரிகிறது. சிலர் இதைப் பார்த்து வருத்தப்படுகிறபோதிலும், கடவுள்மீதும் கிறிஸ்துமீதும் உள்ள மரியாதையின் காரணமாக பண்டிகைகள் கட்டாயம் கொண்டாடப்பட வேண்டுமென நினைக்கலாம். கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவது பாராட்டத்தக்கதே. ஆனால் கிறிஸ்மஸ் காலம் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் உண்மையிலேயே பிரியமானதாக இருக்கிறதா? கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்படி ஆரம்பமானதென்று சற்றுக் கவனியுங்கள்.
உதாரணத்திற்கு, கிறிஸ்மஸ் பண்டிகையைக் குறித்ததில் சோவியத் மக்களின் மனப்பான்மையைப் பற்றி ஒருவருக்கு எப்படிப்பட்ட கருத்து இருந்தாலும் சரி, கிரேட் சோவியத் என்ஸைக்ளோப்பீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் சரித்திரப்பூர்வ உண்மைகளை அவரால் மறுக்க முடியாது: “கிறிஸ்மஸ் என்பது . . . கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில் இருந்த தெய்வ வழிபாடுகளிலிருந்து வந்துள்ளது; அந்தத் தெய்வங்கள், ‘மரித்துக்கொண்டும், உயிர்த்தெழுந்துகொண்டும்’ இருந்ததாக நம்பப்பட்டது; முக்கியமாய், வேளாண்மை குடியினர் மத்தியில் அந்தக் கருத்து பிரபலமாயிருந்தது; இயற்கையைத் தட்டியெழுப்பி, புதுப்பிக்கிற இரட்சகரான கடவுளின் ‘பிறப்பை’ வருடாவருடம் இவர்கள் வழக்கமாக டிசம்பர் 21-லிருந்து 25 வரை குளிர்கால சங்கிராந்தியின்போது கொண்டாடினார்கள்.”
இந்த என்ஸைக்ளோப்பீடியா துல்லியமாகக் குறிப்பிடுகிற விஷயத்தின் முக்கியத்துவத்தை ஒருவேளை நீங்கள் உணரலாம்: “முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியவர்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. . . . மித்ரா வழிபாட்டிலிருந்து ஆரம்பமான குளிர்கால சங்கிராந்தி கொண்டாட்டத்தை நான்காம் நூற்றாண்டின் மத்திபத்தில் கிறிஸ்தவ மதம் ஏற்றுக்கொண்டது, பின்பு அதைக் கிறிஸ்மஸ் கொண்டாட்டமாக மாற்றியது. கிறிஸ்மஸை முதன்முதலில் கொண்டாடியவர்கள் ரோமில் இருந்த மதச் சமுதாயத்தினரே. பத்தாவது நூற்றாண்டில், கிறிஸ்தவ மதமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ரஷ்யாவுக்குள் நுழைந்தன; அங்கு மூதாதையரின் ஆவிகளைக் கௌரவிக்கிற பூர்வ ஸ்லாவ் இனத்தவரின் குளிர்கால கொண்டாட்டத்தோடு அது கலந்துவிட்டது.”
அப்படியானால், ‘இயேசு டிசம்பர் 25-ம் தேதி பிறந்தது பற்றி கடவுளுடைய வார்த்தையான பைபிள் என்ன சொல்கிறது?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையில் பார்த்தால், இயேசுவின் பிறந்த தேதி பைபிளில் இல்லவே இல்லை, இயேசு அதைக் கொண்டாடச் சொன்னதாகவோ, ஏன் அதைப் பற்றிப் பேசினதாகவோகூட எந்தவொரு பதிவும் இல்லை. என்றாலும், வருடத்தின் எந்தச் சமயத்தில் இயேசு பிறந்தார் என்பதை உறுதிசெய்ய பைபிள் நமக்கு உதவுகிறது.
மத்தேயு சுவிசேஷத்தின் 26, 27 அதிகாரங்களின்படி, பொ.ச. 33, மார்ச் 31-ம் தேதி தொடங்கிய யூத பஸ்கா பண்டிகையின்போது, அதாவது நிசான் 14 அன்று, பிற்பகல் வேளையில் இயேசு மரணம் அடைந்தார். அவருக்கு ஏறக்குறைய 30 வயதாக இருந்தபோது முழுக்காட்டுதல் பெற்று, தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தார் என்பதை லூக்கா சுவிசேஷத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். (லூக்கா 3:21-23) மூன்றரை வருடங்களுக்கு அவர் ஊழியம்செய்தார். அப்படியானால், அவர் மரித்தபோது அவருக்குச் சுமார் 33 1/2 வயது. பொ.ச. 33, அக்டோபர் 1-ம் தேதி வாக்கில், அவருக்கு 34 வயதாகியிருக்கும். இயேசு பிறந்த சமயத்தில், மேய்ப்பர்கள் “வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்” என லூக்கா குறிப்பிடுகிறார். (லூக்கா. 2:8) டிசம்பர் மாதக் குளிரில், அதுவும் பெத்லகேமின் சுற்றுவட்டாரத்தில் பனி கொட்டிக்கொண்டிருக்கிற சமயத்தில், மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு வெளியே தங்கியிருந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் அக்டோபர் 1-ம் தேதி வாக்கில் அவர்கள் தங்களது மந்தையோடு வெளியில் தங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது; இதுவே இயேசு பிறந்த சமயம் என்பதை அத்தாட்சிகள் காட்டுகின்றன.
அது ஒருபுறமிருக்க, புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தைப் பற்றி என்ன? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அக்கொண்டாட்டத்தின்போது முழுக்க முழுக்க ஒழுக்கங்கெட்ட காரியங்களே நடக்கின்றன. இதைப் பொதுக் கொண்டாட்டமாக ஆக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிற போதிலும், இதுவும்கூட புறமதத்திலிருந்து ஆரம்பமானதே.
ஆக, பண்டிகைக் காலத்தைப் பற்றிய உண்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பண்டிகை இயேசுவுக்காகவே போன்ற கோஷங்கள் அர்த்தமற்றவையாக இருப்பது தெளிவாகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் நடைபெறுகிற வியாபாரங்களையும், மோசமான நடத்தையையும், வெறுக்கத்தக்க புறமத ஆரம்பத்தையும் கண்டு நீங்கள் குழப்பம் அடைகிறீர்கள் என்றால், சோர்ந்துவிடாதீர்கள். கடவுளுக்குப் பயபக்தி காண்பிப்பதற்கும், கிறிஸ்துவைக் கௌரவிப்பதற்கும், அதே சமயத்தில் குடும்பப் பிணைப்புகளைப் பலப்படுத்துவதற்கும் பொருத்தமான ஒரு வழி இருக்கிறது.
கடவுளையும் கிறிஸ்துவையும் கௌரவிப்பதற்கு மேம்பட்ட ஒரு வழி
இயேசு கிறிஸ்து, “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” வந்தார் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 20:28) ஜனங்கள் தம்மைக் கொன்றுபோட அனுமதித்தார், நம்முடைய பாவங்களுக்காக மனமுவந்து உயிரைக் கொடுத்தார். இதனால் சிலர் கிறிஸ்துவைக் கௌரவிக்க விரும்பலாம், கிறிஸ்மஸ் காலத்தின்போது அவ்வாறு கௌரவிக்க நினைக்கலாம். ஆனால் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, கிறிஸ்மஸ் பண்டிகை, புத்தாண்டு தினக் கொண்டாட்டம் ஆகியவற்றிற்கும் கிறிஸ்துவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது, அவை புறமதக் கொண்டாட்டங்களிலிருந்து தோன்றியிருக்கின்றன. அதோடு, கிறிஸ்மஸ் காலம் சிலருக்கு எவ்வளவுதான் கவர்ச்சிகரமாக இருந்தாலும், அது முழுக்க முழுக்க வியாபாரத்திற்கான காலமாகவே ஆகிவிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் வெறுப்பூட்டுகிற வெட்கக்கேடான செயல்களுடன் இந்தப் பண்டிகை சம்பந்தப்பட்டிருக்கிறது, இதை மறுக்கவே முடியாது.
அப்படியானால், கடவுளைப் பிரியப்படுத்த முயலுகிற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? மதப்பற்றை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிற, ஆனால் பைபிளுக்கு முரணான மனித பாரம்பரியங்களை விடாப்பிடியாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, உண்மை மனமுள்ள நபர் கடவுளையும் கிறிஸ்துவையும் கௌரவிப்பதற்குரிய சத்திய வழியை நாடித்தேட வேண்டும். அந்தச் சத்திய வழி எது, நாம் என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்துதாமே நம்மிடம் இவ்வாறு சொல்கிறார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) ஆம், கடவுளையும் கிறிஸ்துவையும் எப்படிக் கௌரவிப்பதென்ற திருத்தமான அறிவைப் பெற நல்மனமுள்ள நபர் உண்மையிலேயே பிரயாசப்படுகிறார். பிறகு, அந்த அறிவை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு சமயத்தின்போது மட்டுமல்ல, ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் பின்பற்றுகிறார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அத்தகைய உண்மையான முயற்சிகளில் கடவுள் வெகுவாகப் பிரியப்படுகிறார்.
பைபிளில் சொல்லப்பட்டிருப்பதற்கு இசைய கடவுளையும் கிறிஸ்துவையும் கௌரவிக்கிற ஜனங்கள் மத்தியில் உங்கள் குடும்பமும் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? பைபிளின் அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்ள உலகெங்குமுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவியிருக்கிறார்கள். ஆகவே, உங்களுடைய பிராந்தியத்தில் உள்ள யெகோவாவின் சாட்சிகளை நீங்கள் சந்தித்துப் பேசும்படி அல்லது இந்தப் பத்திரிகையின் பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்குக் கடிதம் எழுதும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a அக்டோபர் 1917-ல் நடந்த புரட்சிக்கு முன், ரஷ்யர்கள் பழைய ஜூலியன் காலண்டரைப் பயன்படுத்தினார்கள், ஆனால் பெரும்பாலான நாட்டவரோ கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். 1917-ம் வருடத்தின்போது, ஜூலியன் காலண்டர் கிரிகோரியன் காலண்டரைவிட 13 நாட்கள் பிந்தி இருந்தது. போல்ஷிவிக் புரட்சிக்குப் பின், சோவியத்தினர் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள், அதிலிருந்து உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட காலண்டரையே ரஷ்யரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். என்றாலும், ஆர்த்தடாக்ஸ் சர்ச் தன்னுடைய மதக் கொண்டாட்டங்களுக்கு ஜூலியன் காலண்டரையே பயன்படுத்தி தேதிகளை நிர்ணயித்தது; அதைப் “பழைய பாணி” காலண்டர் என்று அழைத்தது. ரஷ்யாவில் ஜனவரி 7-ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாடப்படுவதை ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கிரிகோரியன் காலண்டரில் ஜனவரி 7 என்பது ஜூலியன் காலண்டரில் டிசம்பர் 25-ம் தேதி என்பதை நினைவில் வையுங்கள். எனவே, அநேக ரஷ்யர்கள் பின்வரும் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்: டிசம்பர் 25, மேற்கத்திய கிறிஸ்மஸ்; ஜனவரி 1, உலகெங்கும் கொண்டாடப்படுகிற புத்தாண்டு தினம்; ஜனவரி 7, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ்; ஜனவரி 14, பழைய பாணி புத்தாண்டு தினம்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம்
ஜார்ஜிய நாட்டு ஆர்த்தடாக்ஸ் துறவி ஒருவர் மனந்திறந்து பேசுகிறார்
“புத்தாண்டு தினக் கொண்டாட்டம் பூர்வ ரோமிலிருந்து வந்த அநேக புறமதக் கொண்டாட்டங்களிலிருந்து ஆரம்பமாயிருக்கிறது. விடுமுறை நாளாக இருந்த ஜனவரி 1-ம் தேதி, ஜானெஸ் என்ற புறமதத் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஜானெஸ் என்ற பெயரின் அடிப்படையில்தான் அந்த மாதத்திற்கு ஜனவரி என்ற பெயர் சூட்டப்பட்டது. ஜானெஸ் தெய்வத்திற்கு முன்னும் பின்னும் பார்த்தபடி இரண்டு முகங்கள் இருந்ததை உருவச்சிலைகள் காண்பிக்கின்றன; இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் அந்தத் தெய்வத்தால் பார்க்க முடியும் என்பதே அதன் அர்த்தம். கூத்தும்கும்மாளமுமாக, குடியும் விருந்துமாக ஜனவரி 1-ம் தேதியை வரவேற்பவர்கள், அந்த வருடம் முழுவதும் சகல சௌபாக்கியங்களோடு சந்தோஷமாக இருப்பார்கள் என்ற ஒரு கருத்து நிலவியது. புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவது குறித்து அதே மூடநம்பிக்கைதான் நமது தேசத்தார் அநேகருக்கும் இருக்கிறது . . . சில புறமதப் பண்டிகைகளின்போது, ஜனங்கள் ஒரு சிலைக்கு முன் நேரடியாகவே பலிகளைச் செலுத்தினார்கள். அவர்களில் சிலர் ஒழுக்கக்கேடான களியாட்டங்களுக்கும், விபச்சாரத்திற்கும், வேசித்தனத்திற்கும் பேர்போனவர்களாக இருந்தார்கள். மற்ற சமயங்களின்போது, உதாரணத்திற்கு ஜானெஸ் பண்டிகையின்போது, ஏகபோக விருந்து உபசாரங்களும், குடியும், குடிவெறியும், அதோடு சம்பந்தப்பட்ட எல்லாவித அசுத்தமான செயல்களும் நடைபெற்றன. கடந்த காலங்களில் நாம் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிய விதத்தை நினைத்துப் பார்த்தோமானால், இந்தப் புறமதக் கொண்டாட்டத்தில் பங்குபெற்றிருந்தோம் என்பதை நாம் எல்லாருமே கட்டாயம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.”—ஜார்ஜிய நாட்டு செய்தித்தாள் ஒன்றின்படி.
[பக்கம் 6-ன் படம்]
மித்ரா வழிபாட்டை கிறிஸ்தவமண்டலம் ஏற்றுக்கொண்டது
[படத்திற்கான நன்றி]
Museum Wiesbaden
[பக்கம் 7-ன் படம்]
டிசம்பர் மாதக் குளிரில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு வெளியே தங்கியிருந்திருக்கவே மாட்டார்கள்