‘சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவியுங்கள்’
‘சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிப்பது’ தம் ஊழியத்தின் பாகமென இயேசு தாம் ஊழியத்தைத் தொடங்கிய சமயத்தில் சொன்னார். (லூக்கா 4:18, NW) உண்மை கிறிஸ்தவர்களும் தங்களுடைய எஜமானரான அவரது முன்மாதிரியைப் பின்பற்றி ‘எல்லா மனுஷருக்கும்’ ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்; இவ்வாறு ஆன்மீக சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்று, நல்வாழ்க்கை வாழ அவர்களுக்கு உதவுகிறார்கள்.—1 தீமோத்தேயு 2:4.
இன்று நிஜ சிறையில் இருப்பவர்களுக்கும்கூட நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது; இவர்கள் பல்வேறு குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஆன்மீக விடுதலையை உயர்வாக மதிக்கிறார்கள். உக்ரைன் நாட்டிலும் ஐரோப்பாவின் பல பாகங்களிலும் உள்ள சிறைகளில் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்திருக்கிறார்கள். அதைப் பற்றிய உற்சாகமூட்டும் அறிக்கைகளை இப்போது வாசித்து மகிழுங்கள்.
அன்று போதைக்கு அடிமைகள், இன்று கிறிஸ்தவர்கள்
செர்ஹிa என்பவருக்கு 38 வயது; அவர் மொத்தம் 20 வருடங்களைச் சிறையில் கழித்திருக்கிறார். பள்ளிப் படிப்பைக்கூட சிறையிலேயே முடித்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் ஒரு கொலை குற்றத்திற்காக நான் கைது செய்யப்பட்டேன். என்னுடைய தண்டனைக் காலம் இன்னும் முடிவடையவில்லை. சிறையில் பயங்கர முரடனைப் போல் நடந்துகொண்டதால் மற்ற கைதிகள் என்னைப் பார்த்து பயந்து நடுங்கினார்கள்.” இது அவருக்கு சுதந்திர உணர்வை அளித்ததா? இல்லை. உண்மையில் பல வருடங்கள் போதைப்பொருள்களுக்கும், மதுபானத்திற்கும், புகையிலைக்கும் அடிமைப்பட்டுத்தான் கிடந்தார்.
பிற்பாடு, மற்றொரு கைதி அவரிடம் பைபிள் சத்தியத்தைப் பற்றிச் சொன்னார். அந்தச் சத்தியம் இருளில் பிரகாசித்த ஒளியைப் போல் அவருக்கு இருந்தது. சில மாதங்களுக்குள்ளாகவே எல்லாக் கெட்ட பழக்கங்களையும் அடியோடு விட்டுவிட்டு, நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்; பிறகு முழுக்காட்டுதலும் பெற்றார். இப்போது சிறையில் யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். திருந்தி வாழ சிறையிலிருந்த மற்ற ஏழு குற்றவாளிகளுக்கு உதவியிருக்கிறார்; இன்று அவர்கள் அவரது ஆன்மீக சகோதரர்கள். அவர்களில் ஆறு பேர் விடுதலையாகிவிட்டார்கள், ஆனால் செர்ஹி இன்னும் சிறையிலேயே இருக்கிறார். அதை நினைத்து அவர் வருந்துவதில்லை; மாறாக, ஆன்மீக சிறையிலிருந்து விடுதலை பெற மற்றவர்களுக்கு உதவ முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறார்.—அப்போஸ்தலர் 20:35.
சிறையில் செர்ஹியின் மூலம் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஒருவர்தான் விக்டர். அவர் ஒருகாலத்தில் போதைப்பொருள் வியாபாரி, அதற்கு அடிமையும்கூட. அவர் விடுதலை பெற்ற பிறகு, ஆன்மீகக் காரியங்களில் தொடர்ந்து முன்னேறினார்; பிற்பாடு உக்ரைனில் நடந்த ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டு பட்டமும் பெற்றார். தற்போது மால்டோவா நாட்டில் விசேஷப் பயனியராக ஊழியம்செய்து வருகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் 8 வயதிலிருந்தே புகைபிடிக்க ஆரம்பித்தேன்; 12 வயதில் குடிக்க ஆரம்பித்தேன்; 14 வயதில் போதைப்பொருள்களையும் பயன்படுத்த ஆரம்பித்தேன். திருந்தி வாழ ஆசைப்பட்டேன், ஆனால் அதற்காக நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப்போயின. பிறகு 1995-ல், என்னுடைய கெட்ட கூட்டாளிகளை விட்டுவிலக நானும் என் மனைவியும் தீர்மானித்தோம்; அந்தச் சமயத்தில்தான், கொலைவெறி பிடித்த பைத்தியக்காரன் ஒருவன் என் மனைவியைக் குத்திக் கொன்றான். என் வாழ்க்கை அப்படியே இருண்டுவிட்டது. ‘என் மனைவி இப்போது எங்கே இருக்கிறாள்? சாகும்போது ஒருவருக்கு என்ன ஆகிறது?’ எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் பதில் கிடைக்கவே இல்லை. என்னுடைய வெறுமையைப் போக்க போதைப்பொருள்களை இன்னும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தேன். போதைப்பொருள்களை விற்றதற்காகக் கைதுசெய்யப்பட்டு, ஐந்தாண்டு கால சிறைத் தண்டனை பெற்றேன். அங்கு செர்ஹியின் மூலம் என் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது. போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்த பலமுறை முயற்சி செய்திருந்தேன். ஆனால் பைபிளைப் படித்த பிறகுதான் அதை என்னால் முற்றிலும் நிறுத்த முடிந்தது. கடவுளுடைய வார்த்தைக்குத்தான் எவ்வளவு வல்லமை!”—எபிரெயர் 4:12.
கல்நெஞ்சமும் கரைகிறது
வாஸில் என்பவர் போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதே இல்லை, என்றாலும் மற்றொரு பழக்கத்திற்கு அவர் அடிமையாக இருந்தார். அவர் சொல்கிறார்: “கிக்பாக்ஸிங் என்றால் எனக்கு உயிர். எந்தக் காயமும் வெளியில் தெரியாமல் மற்றவர்களை எப்படி உதைப்பது என்பது எனக்கு அத்துப்படி.” இப்படி மூர்க்கத்தனமாக ஆட்களை அடித்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்தார். “மூன்று முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன், இதனால் என் மனைவி என்னை விவாகரத்து செய்துவிட்டாள். ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மூன்றாவது முறை ஜெயிலுக்குப் போயிருந்த சமயத்தில்தான் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பிரசுரத்தைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது பைபிளைப் படிக்க என்னைத் தூண்டியது, என்றாலும், உயிருக்குயிராய் நேசித்த கிக்பாக்ஸிங்கை மட்டும் நான் நிறுத்தவில்லை.
“ஆறு மாதங்கள்தான் பைபிளைப் படித்திருப்பேன் அதற்குள் என்னிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். முன்பெல்லாம் சண்டை என்று வந்துவிட்டால் ஜெயித்தால்தான் மனசுக்குத் திருப்தியாக இருக்கும், இப்போது அப்படியில்லை. அதனால், ஏசாயா 2:4 சொல்லும் விஷயத்தை மனதில் வைத்து என் வாழ்க்கையை அலசிப்பார்க்க ஆரம்பித்தேன்; என்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால், வாழ்நாள் முழுவதும் ஜெயில்தான் கதியென கிடக்க வேண்டியிருக்கும் என்பதை அப்போது உணர்ந்தேன். அதனால் சண்டைக்காக வைத்திருந்த எல்லாக் கருவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு, என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்க ஆரம்பித்தேன். அது எனக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, என்றாலும், ஜெபம் செய்வது, தியானிப்பது ஆகியவற்றின் மூலம் படிப்படியாக என்னுடைய கெட்ட பழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டேன். சில சமயங்களில் இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட பலத்தைத் தரும்படி யெகோவாவிடம் அழுது ஜெபம் செய்திருக்கிறேன். கடைசியில் வெற்றிகண்டேன்.
“ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு, மனைவி மக்களோடு திரும்பவும் ஒன்று சேர்ந்தேன். இப்போது ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கிறேன். இங்கு வேலை பார்ப்பதால், என் மனைவியுடன் சேர்ந்து ஊழியத்திற்குப் போவதற்கும் சபை பொறுப்புகளைக் கவனிப்பதற்கும் போதுமான நேரம் கிடைக்கிறது.”
மிகாலாவும் அவரது நண்பர்களும் உக்ரைனில் உள்ள பல வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இதனால் அவருக்குப் பத்து வருட சிறைத்தண்டனை கிடைத்தது. சிறைக்குச் செல்லும் முன் ஒரேவொரு தடவைதான் சர்ச் பக்கம் போயிருந்தார், அதுவும்கூட அந்த சர்ச்சை எப்படிக் கொள்ளையடிக்கலாமென பார்ப்பதற்குத்தான். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. என்றாலும் அப்படிப் போயிருந்தபோது, ஆர்த்தடாக்ஸ் பாதிரிகளையும் மெழுகுவர்த்திகளையும் மதப் பண்டிகைகளையும் பற்றிய அறுவையான கதைகள்தான் பைபிளில் இருக்குமென அவர் நினைத்தார். அவர் சொல்கிறார்: “ஏனோ தெரியவில்லை, நான் பைபிளை வாசிக்க ஆரம்பித்தேன். நான் நினைத்த மாதிரி அதில் இல்லாததைப் பார்த்தபோது எனக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது!” தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி அவர் கேட்டார், 1999-ல் முழுக்காட்டுதல் பெற்றார். இன்று மனத்தாழ்மையான ஓர் உதவி ஊழியராக இருக்கும் அவரைப் பார்த்தால், அன்று ஆயுதமேந்தி வங்கிகளைக் கொள்ளையடித்தவரா இவர் என மூக்கில் விரல் வைக்கத் தோன்றும்!
விலாடிமிர் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி. தண்டனைக்காகக் காத்துக்கொண்டிருந்த வேளையில் கடவுளிடம் ஜெபம் செய்து, தான் கொல்லப்படாமல் இருந்தால் அவருக்குச் சேவை செய்வதாக நேர்ந்துகொண்டார். இதற்கிடையே சட்டம் மாறியது, அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவதற்காக உண்மை மதத்தைத் தேட ஆரம்பித்தார். அஞ்சல்வழிக் கல்வி மூலம் அட்வென்டிஸ்ட் சர்ச்சிலிருந்து டிப்ளமா பெற்றார், ஆனால் அது அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.
என்றாலும், சிறை நூலகத்திலிருந்த காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசித்த பிறகு, யாராவது தன்னை வந்து சந்திக்கும்படி யெகோவாவின் சாட்சிகளுடைய உக்ரைன் கிளை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார். உள்ளூர் சபையிலிருந்த சகோதரர்கள் அவரைச் சந்தித்த சமயத்தில், அவர் ஏற்கெனவே தன்னை ஒரு யெகோவாவின் சாட்சியென சொல்லிக்கொண்டு, சிறையிலுள்ளவர்களுக்குப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாக ஆவதற்குத் தகுதிபெற அவருக்கு உதவி அளிக்கப்பட்டது. இக்கட்டுரை எழுதப்படுகையில் விலாடிமிரும் அச்சிறையில் கைதிகளாக உள்ள இன்னும் ஏழு பேரும் முழுக்காட்டுதல் பெறக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. ஆயுள் கைதிகள் ஒரே மதத்தவராக இருந்தால் அவர்கள் எல்லாரும் ஒரே சிறை அறையில் அடைக்கப்படுவார்கள். எனவே, விலாடிமிரும் அவருடன் அடைக்கப்பட்டிருப்பவர்களும் ஒரே மதத்தவராக இருப்பதால், இனி அவர்கள் யாரிடம் பிரசங்கிப்பார்கள்? அவர்கள் சிறைக் காவலர்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள், கடிதம் மூலமும் பிரசங்கிக்கிறார்கள்.
நாசார் என்பவர் உக்ரைனிலிருந்து செக் குடியரசுக்குக் குடிமாறி வந்தார், அங்கே ஒரு கொள்ளைக் கூட்டத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டார். இதனால் அவர் மூன்றரை வருடங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று. சிறையில் இருந்தபோது, கார்லாவி வாரி என்ற நகரைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் சிறைவாசிகளைச் சந்தித்தனர். அவர்களிடமிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொண்டு, தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டார். அவரது மாற்றங்களைக் கண்ட ஒரு காவலர், நாசாருடன் இருந்த மற்ற கைதிகளிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எல்லாரும் அந்த உக்ரைன்காரனைப் போல மாறினால், நான் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டியதுதான்.” மற்றொருவர் இவ்வாறு சொன்னார்: “இந்த யெகோவாவின் சாட்சிகள் ரொம்பவே திறமைசாலிகள். கைதியாக வருகிற ஒருவரை, கௌரவமானவராகத் திரும்பிப்போக வைத்துவிடுகிறார்களே.” இப்போது நாசார் விடுதலை பெற்று வீட்டிற்குப் போய்விட்டார். தச்சு வேலையைக் கற்றுக்கொண்டார், கல்யாணமும் செய்துகொண்டார். அவரும் அவரது மனைவியும் முழுநேர ஊழியம் செய்துவருகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் சிறையில் வந்து சந்தித்ததற்காக அவர் எவ்வளவு நன்றியுள்ளவராய் இருக்கிறார்!
அதிகாரிகளின் ஒப்புதல்
யெகோவாவின் சாட்சிகளுடைய சேவைக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பது சிறைக்கைதிகள் மட்டுமல்ல. போலந்து நாட்டு சிறை ஒன்றின் பிரதிநிதியான மிராஸ்லாவ் காவால்ஸ்கி இவ்வாறு கூறினார்: “அவர்கள் வந்து சந்திப்பதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். சில கைதிகளுடைய பின்னணியைப் பார்த்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனுஷர்களாகவே மதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் போலும். . . . [யெகோவாவின் சாட்சிகள்] அவர்களுக்கு அளிக்கும் உதவி மிகவும் போற்றத்தக்கது, ஏனென்றால் [கைதிகளுக்கு உதவ] எங்களிடம் பணியாட்களும் இல்லை, கல்விபுகட்டும் ஆட்களும் இல்லை.”
தான் பணியாற்றிவரும் சிறைக்கு யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி வந்து அங்குள்ள கைதிகளுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டுமென போலந்தில் உள்ள மற்றொரு சிறைச்சாலை வார்டன் கிளை அலுவலகத்திற்கு எழுதினார். ஏன்? அதற்கான காரணத்தை அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “உவாட்ச்டவர் பிரதிநிதிகள் அடிக்கடி வந்து சந்திப்பது, கைதிகள் நல்ல குணங்களைக் வளர்த்துக்கொள்வதற்கும், மூர்க்க குணத்தை மாற்றிக்கொள்வதற்கும் உதவலாம்.”
மனச்சோர்வினால் தற்கொலை முயற்சியில் இறங்கிய ஒரு கைதிக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவி அளித்ததைப் பற்றி உக்ரைன் நாட்டு செய்தித்தாள் ஒன்று இவ்வாறு அறிக்கை செய்கிறது: “இப்போது அந்த நபர் உணர்ச்சி ரீதியில் தேறி வருகிறார். சிறைச்சாலை பழக்கவழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார், மற்ற கைதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்.”
விடுதலைக்குப் பிறகும் நன்மைகள்
யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையால் சிறைச்சாலையில் இருக்கும்போது மட்டுமே கைதிகள் நன்மை அடைவதில்லை. விடுதலை பெற்ற பிறகும் அவர்கள் தொடர்ந்து நன்மை அடைகிறார்கள். ப்ரிகிட்டெ, ரெனாட்டே என்னும் இரண்டு கிறிஸ்தவ சகோதரிகள் சில வருடங்களாக பெண் கைதிகளுக்கு இந்த விதத்தில் உதவி அளித்து வந்திருக்கிறார்கள். மைன்-இக்கோ ஆஷாஃபன்பர்க் என்ற ஜெர்மானிய செய்தித்தாள் இந்தச் சகோதரிகளைப் பற்றி இவ்வாறு அறிக்கை செய்கிறது: “விடுதலை பெற்ற கைதிகளை இவர்கள் மூன்றுமுதல் ஐந்து மாதங்கள்வரை கவனித்துக்கொள்கிறார்கள், வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்துகொள்ள கைதிகளை ஊக்குவிக்கிறார்கள். . . . குற்றவாளிகளை மனமுவந்து கவனித்துக்கொள்ளும் அதிகாரிகளாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். . . . சிறையிலுள்ள அதிகாரிகளோடும் அவர்களுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது.” இப்படி அன்புடன் உதவுவதால் அநேக கைதிகள் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் கல்விபுகட்டும் வேலையின் மூலம் சிறை அதிகாரிகளும்கூட நன்மை அடைந்திருக்கிறார்கள். உதாரணமாக, ராமான் என்பவர் இராணுவ அதிகாரியாகவும் உக்ரைன் நாட்டு சிறைச்சாலை ஒன்றில் மனோவியல் நிபுணராகவும் சேவை செய்து வந்தார். யெகோவாவின் சாட்சிகள் அவரை வீட்டில் சந்தித்தபோது, பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். தான் வேலை பார்க்கிற இடத்தில் கைதிகளைச் சந்திக்க யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததைப் பற்றி அவர் அறிந்திருந்தார். ஆகவே, கைதிகளுக்கு உதவுகையில் பைபிளிலிருந்து பேச தனக்கு அனுமதி தரும்படி வார்டனிடம் கேட்டார். அதற்கு அவர் சம்மதித்தார், சுமார் பத்து கைதிகள் பைபிளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். பைபிளிலிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தக் கைதிகளுக்குத் தவறாமல் சொல்லிக்கொடுத்தார், அவரது முயற்சியால் சிறந்த பலன்கள் கிடைத்தன. விடுதலையான சில கைதிகள் தொடர்ந்து முன்னேறி, முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்களாயினர். கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையைக் கண்ணாரக் கண்ட ராமான் பைபிளை இன்னும் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தார். பிறகு, இராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு பைபிள் கல்விபுகட்டும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார். இப்போது முன்னாள் கைதி ஒருவருடன் சேர்ந்து பிரசங்க வேலை செய்துவருகிறார்.
“பைபிளும், பைபிள் பிரசுரங்களும், பைபிள் படிப்பும்தான் இங்கு எங்களுக்குப் பக்கபலமாய் இருக்கின்றன” என்று ஒரு கைதி எழுதினார். சில சிறைச்சாலைகளில் பைபிள் பிரசுரங்கள் எந்தளவுக்குத் தேவைப்படுகின்றன என்பதை இந்த வார்த்தைகள் நன்றாகவே காட்டுகின்றன. ஒரு சிறைச்சாலையில் செய்யப்பட்டுவரும் பைபிள் கல்வி புகட்டும் வேலையைப் பற்றி உக்ரைனில் உள்ள ஒரு சபை இவ்வாறு அறிவிக்கிறது: “நாங்கள் கொடுக்கிற பிரசுரங்களுக்கு சிறை நிர்வாகத்தினர் நன்றி தெரிவிக்கிறார்கள். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் ஒவ்வொன்றிலும் 60 பிரதிகளை அவர்களுக்கு அளிக்கிறோம்.” மற்றொரு சபை இவ்வாறு எழுதுகிறது: “20 நூலகங்கள் உடைய ஒரு சீர்திருத்த சிறையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த எல்லா நூலகத்திற்கும் நம்முடைய முக்கிய பிரசுரங்களைக் கொடுத்திருக்கிறோம். அதாவது, 20 பெட்டிகள் நிறைய பிரசுரங்களைக் கொடுத்திருக்கிறோம்.” ஒரு சிறைச்சாலையில், கைதிகள் நம் பத்திரிகைகளைப் படித்துப் பயன் பெறுவதற்காக, அங்குள்ள நூலகத்தில் காவலர்கள் நம் பத்திரிகைகளை வரிசையாக அடுக்கி வைத்து பராமரிக்கிறார்கள்.
2002-ல் உக்ரைன் கிளை அலுவலகத்தில் சிறை இலாகா ஒன்று செயல்பட தொடங்கியது. இந்த இலாகா இதுவரை சுமார் 120 சீர்திருத்த சிறைகளுடன் தொடர்புகொண்டு, அவற்றைக் கவனிக்க சில சபைகளையும் நியமித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கைதிகளிடமிருந்து சுமார் 50 கடிதங்கள் வருகின்றன; பெரும்பாலானவை பிரசுரங்களை அனுப்பும்படி கேட்டு அல்லது பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டு எழுதப்படும் கடிதங்களே. உள்ளூர் சகோதரர்கள் அவர்களைப் போய்ச் சந்திப்பதற்குள் புத்தகங்களையும், பத்திரிகைகளையும், சிற்றேடுகளையும் கிளை அலுவலகம் அனுப்பி வைக்கிறது
“சிறைப்பட்டவர்களை நினைவில் வையுங்கள்” என சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 13:3, NW) விசுவாசத்தின் நிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டவர்களையே பவுல் இங்கு குறிப்பிட்டார். இன்று யெகோவாவின் சாட்சிகள் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவில் வைத்து, அவர்களைப் போய்ச் சந்தித்து, ‘அவர்களுக்கு விடுதலையை அறிவிக்கிறார்கள்.’—லூக்கா 4:18.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 9-ன் படம்]
உக்ரைனில், லவீஃப் நகரில் உள்ள சிறைச்சாலை சுவர்
[பக்கம் 10-ன் படம்]
மிகாலா
[பக்கம் 10-ன் படம்]
வாஸில் தன் மனைவி ஐரினாவுடன்
[பக்கம் 10-ன் படம்]
விக்டர்