இத்தாலிய மொழியில் பைபிள் ஒரு சிக்கலான சரித்திரம்
“நம்முடைய நாட்டில் [இத்தாலியில்] மிக அதிகமாக விநியோகிக்கப்படுகிற புத்தகங்களில் பைபிளும் ஒன்று, ஆனால் மிகக் குறைவாக வாசிக்கப்படுகிற புத்தகங்களிலும் அது ஒன்றாகும். பைபிளை நன்கு படித்துப் புரிந்துகொள்ள விசுவாசிகளுக்கு இன்னமும் ஊக்குவிப்பு கிடைப்பதில்லை, அதைக் கடவுளுடைய வார்த்தையாக நினைத்துப் படிக்க உதவியும் கிடைப்பதில்லை. பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தான் ஆள் இல்லை.”
1995-ல் நடந்த இத்தாலி நாட்டு பிஷப்புகளின் மாநாட்டில் மேற்கண்டவாறு சொல்லப்பட்டது; இது அநேக கேள்விகளை எழுப்புகிறது. கடந்த நூற்றாண்டுகளில், இத்தாலியர்கள் பைபிளை எந்தளவிற்கு வாசித்திருக்கிறார்கள்? மற்ற நாடுகளோடு ஒப்பிட, இத்தாலியில் மட்டும் பைபிள் விநியோகிப்பு ஏன் பின்தங்கியுள்ளது? இத்தாலியில் ஏன் இன்னமும் பைபிள் மிகமிகக் குறைவாகவே வாசிக்கப்படுகிறது? இத்தாலிய பைபிள் மொழிபெயர்ப்புகளின் சரித்திரத்தை ஆராய்கையில், இக்கேள்விகளுக்கு ஓரளவு பதிலைத் தெரிந்துகொள்ளலாம்.
லத்தீன் மொழியிலிருந்து பிரெஞ்சு, இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் தோன்றுவதற்கு அதிக காலம் பிடித்தது. ஒருகாலத்தில் லத்தீனை முக்கிய மொழியாக கொண்டிருந்த அநேக ஐரோப்பிய நாடுகளில், பொதுமக்களுடைய மேற்கண்ட மொழிகள் மெல்ல மெல்ல புது மதிப்பைப் பெற்றன, இலக்கியப் புத்தகங்களிலும் அவை உபயோகிக்கப்பட்டன. பொதுமக்களுடைய மொழியில் உண்டான முன்னேற்றம் பைபிள் மொழிபெயர்ப்பின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியது. எப்படி? ஒரு கட்டத்தில், கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரபூர்வ மொழியாகிய லத்தீனுக்கும் பொதுமக்களுடைய வெவ்வேறு கிளைமொழிகளுக்கும் இடையே உண்டான பிளவு மேன்மேலும் அதிகமாகி, கடைசியில் பாமரர்களுக்கு லத்தீன் மொழியே புரியாமல்போனது.
1000-ம் ஆண்டிற்குள், இந்த இத்தாலிய தீபகற்பத்தில் வசித்த பெரும்பாலோர் லத்தீன் வல்கேட்டின் ஒரு பிரதியை ஒருவேளை பெற முடிந்திருந்தாலும் அதை வாசிக்கத் திணறியிருப்பார்கள். பல நூற்றாண்டுகளுக்கு, கல்வித்துறை முழுவதையும், ஏன் அப்போதிருந்த சில பல்கலைக்கழகங்களையும்கூட, மத குருமார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்! உயர்குடி மக்கள் மட்டுமே கல்வி கற்க முடிந்தது. இதன் காரணமாக, காலப்போக்கில் பைபிள் “அறியப்படாத ஒரு புத்தகமாக” ஆனது. இருந்தாலும், அநேகர் கடவுளுடைய வார்த்தையான பைபிளைச் சொந்தமாக வைத்துக்கொள்வதற்கும், அதைத் தங்கள் சொந்த பாஷையில் படித்துப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் ஆசைப்பட்டார்கள்.
ஆனால், சர்ச்சுக்கு முரணான கோட்பாடுகள் எழும்பிவிடும் என்று பயந்து, பைபிளை மொழிபெயர்ப்பதை பொதுவாக குருமார் எதிர்த்தார்கள். “பொதுமக்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பது, மொழித்தடையை [லத்தீன் பயன்பாட்டை] நீக்கிப்போடும்; அதாவது, மத சம்பந்தமான விவகாரங்களில் குருமாருக்குள்ள ஏகபோக அதிகாரத்தைக் கட்டிக்காத்து வந்திருக்கும் அந்த மொழித்தடையை நீக்கிப்போடும்” என்று சரித்திர ஆசிரியர் மாஸ்ஸிமோ ஃபீர்போ கூறுகிறார். ஆக, கலாச்சாரம், மதம், சமூகம் ஆகிய அனைத்து காரணங்களாலும்தான் இத்தாலியில் இன்று பைபிள் கல்வி அவ்வளவாய் இல்லை.
பைபிளின் முழுமைபெறாத முதல் மொழிபெயர்ப்புகள்
13-ம் நூற்றாண்டின்போது பைபிளிலுள்ள சில புத்தகங்கள் முதன்முதலில் லத்தீனிலிருந்து இத்தாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்பு அவை கைப்பட நகலெடுக்கப்பட்டன, விலை உயர்ந்தவையாய் இருந்தன. 14-ம் நூற்றாண்டில் இன்னுமநேக மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டதால், கிட்டத்தட்ட முழு பைபிளுமே இத்தாலிய மொழியில் கிடைத்தது; ஆனால், பைபிள் புத்தகங்கள் வித்தியாசமான காலங்களிலும் இடங்களிலும் வாழ்ந்த வித்தியாசமான ஆட்களால் மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்த்தவர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் அவற்றில் குறிப்பிடப்படவில்லை. பணக்காரர்கள் அல்லது படித்தவர்கள் மட்டுமே இவற்றை வாங்கினார்கள், ஏனென்றால் அதற்கான வசதி அவர்களுக்கு மட்டுமே இருந்தது. அச்சடிக்கும் முறை வந்த பிறகு புத்தகங்களின் விலை கணிசமாகச் சரிந்தபோதிலும், பைபிள் மட்டும் “கொஞ்சம் பேருக்கே கிடைத்தது” என்று சரித்திர ஆசிரியர் ஜில்யோலா ஃப்ரான்யிட்டோ கூறுகிறார்.
பல நூற்றாண்டுகளுக்கு, பெரும்பாலான இத்தாலியர் படிப்பறிவில்லாமல் இருந்தார்கள். 1861-ன்போது இத்தாலியில் ஒருமைப்பாடு ஏற்பட்ட சமயத்தில்கூட, அந்நாட்டு மக்கள்தொகையில் 74.7 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்களாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் கட்டாயக் கல்வியை இலவசமாக வழங்கும் சட்டத்தை இத்தாலியின் புது அரசு அமல்படுத்த தயாரானபோது, ஒன்பதாம் போப் பயஸ் 1870-ல் ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சொல்லித் தூண்டினார்; “கத்தோலிக்க பள்ளிகளை ஒட்டுமொத்தமாய் அழிப்பதற்கு” குறிவைக்கும் “கொள்ளைநோய்” என்று அச்சட்டத்தை அவர் விவரித்தார்.
இத்தாலிய மொழியில் முதன்முதலாக முழு பைபிள்
வெனிஸ் நகரில், அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் முறை பயன்படுத்தப்பட ஆரம்பித்து சுமார் 16 வருடங்கள் கழித்து, அதாவது 1471-ல் முதன்முதலாக இத்தாலிய மொழியில் முழு பைபிள் அச்சடிக்கப்பட்டது. நிகோலா மாலெர்பி என்ற காமல்டாலிஸ் துறவி, எட்டு மாதங்களில் பைபிளை மொழிபெயர்த்து முடித்தார். இதற்கு அப்போதிருந்த மற்ற மொழிபெயர்ப்புகளையே அவர் பெரும்பாலும் பயன்படுத்தினார்; லத்தீன் வல்கேட்டை ஆதாரமாகக்கொண்டு அவற்றைத் திருத்தியமைத்தார்; அதோடு, சில வார்த்தைகளை எடுத்துவிட்டு அவற்றிற்குப் பதிலாக, தன்னுடைய பிராந்தியமான வினிசியாவில் புழக்கத்திலிருந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதுவே மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட முதல் இத்தாலிய பைபிள் பதிப்பாக இருந்தது.
பைபிள் மொழிபெயர்ப்பை வெனிஸ் நகரில் வெளியிட்ட மற்றொருவர், அன்டான்யோ புரூச்சோலி ஆவார். இவர் ஒரு மனிதநலக் கொள்கையர், புராட்டஸ்டன்ட் கருத்துகளில் நாட்டம் கொண்டிருந்தவர். ஆனால் கத்தோலிக்க சர்ச்சைவிட்டு இவர் பிரிந்துவரவே இல்லை. 1532-ல், மூல மொழிகளான எபிரெயு மற்றும் கிரேக்கிலிருந்து இவர் பைபிளை மொழிபெயர்த்தார். இதுவே மூலப் பதிவுகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதல் இத்தாலிய பைபிள். இந்த மொழிபெயர்ப்பு இத்தாலிய இலக்கிய நடையில் ஓகோவென இல்லையென்றாலும், அது குறிப்பிடத்தக்கதாக இருந்தது; ஏனென்றால் அநேகருக்கு பழங்கால மொழிகளே தெரியாதிருந்த அக்காலத்தில், மூலப் பதிவுகளின் அர்த்தம் மாறாமல் திருத்தமாக புரூச்சோலி மொழிபெயர்த்திருந்தார். தனது மொழிபெயர்ப்பில் சில இடங்களிலும் சில பதிப்புகளிலும் கடவுளுடைய பெயரை “எயோவா” என்று குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு, இத்தாலிய புராட்டஸ்டன்டுகள் மத்தியிலும், மத அதிருப்தியாளர்கள் மத்தியிலும் இந்த மொழிபெயர்ப்பு மிகப் பிரபலமாக இருந்தது.
இத்தாலிய மொழியில் மற்ற மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டன, அவை உண்மையில் புரூச்சோலீயுடைய மொழிபெயர்ப்பின் திருத்தப்பட்ட பதிப்புகளாகவே இருந்தன. அவற்றில் சில கத்தோலிக்கர்களால் வெளியிடப்பட்டன; என்றாலும், அவை எதுவுமே நன்கு விற்பனையாகவில்லை. கால்வினிஸ்ட் சர்ச் பாஸ்டரான ஜோவானி டீயாடாட்டி—இவரது பெற்றோர் மதத் துன்புறுத்தலுக்குப் பயந்து சுவிட்சர்லாந்துக்கு ஓடிப்போயிருந்தார்கள்—1607-ல் மூல மொழிகளிலிருந்து இத்தாலிய மொழியில் மற்றொரு மொழிபெயர்ப்பை ஜெனிவாவில் வெளியிட்டார். இதைத்தான் இத்தாலிய புராட்டஸ்டன்டுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். இந்த மொழிபெயர்ப்பு உருவாக்கப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கையில், இதுவொரு மிகச் சிறந்த இத்தாலிய மொழிபெயர்ப்பு என்றே சொல்லலாம். டீயாடாட்டீயின் மொழிபெயர்ப்பு, பைபிள் போதகங்களைப் புரிந்துகொள்ள இத்தாலியர்களுக்கு உதவியது. ஆனால், அந்த மொழிபெயர்ப்பும் மற்ற மொழிபெயர்ப்புகளும் ஜனங்களுடைய கைக்குக் கிடைக்காதபடி மதகுருமார் தடையாக நின்றார்கள்.
பைபிள்—‘அறியப்படாத ஒரு புத்தகம்’
“புத்தகங்களைக் கவனமாகக் கண்காணிப்பதில் சர்ச் எப்போதும் வெற்றி பெற்றிருக்கிறது; ஆனால் அச்சுமுறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, தடைசெய்யப்பட்ட புத்தகங்களைப் பட்டியலிட்டு வைக்க வேண்டிய அவசியத்தை அது உணரவில்லை, ஏனெனில் ஆபத்தானவை எனக் கருதப்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டுவந்தன” என்று என்சீக்ளோப்பெடீயா காட்டாலீக்கா சொல்கிறது. புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் தொடங்கிய பிறகும்கூட, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்த குருமார், சர்ச்சுக்கு முரணான கொள்கைகளைப் பரப்புவதாகக் கருதப்பட்ட புத்தகங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். ஆனால், 1546-ல் கவுன்சில் ஆஃப் ட்ரென்ட் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது; பொதுமக்களுடைய மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்படலாமா கூடாதா என்ற கேள்வி அப்போது சிந்திக்கப்பட்டது. இதன் விளைவாக, இரண்டு விதமான கருத்துகள் எழும்பின. ‘சர்ச்சுக்கு முரணான கொள்கைகளுக்கெல்லாம் காரணம்,’ பொதுமக்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்த்ததுதான் என்று சொல்லி சிலர் எதிர்த்தார்கள். ஆனால், பைபிள் மொழிபெயர்ப்பை ஆதரித்தவர்கள் என்ன சொன்னார்கள்? பொதுமக்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பது கத்தோலிக்க சர்ச்சின் “பித்தலாட்டத்தையும் கபடத்தையும்” அம்பலப்படுத்திவிடும் என்பதால்தான் சர்ச் அதற்குத் தடைவிதிக்கிறது என “எதிரிகளான” புராட்டஸ்டன்டுகள் விவாதிப்பார்களென சொன்னார்கள்.
இந்தக் கருத்துவேறுபாட்டின் காரணமாக, ஆலோசனைக் கூட்டம் எவ்வித திட்டவட்டமான முடிவையும் எடுக்கவில்லை; ஆனால் வல்கேட் மொழிபெயர்ப்பு நம்பகமானது என்ற ஒப்புதலை மட்டும் அளித்தது; பிற்பாடு இதுவே கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக ஆனது. என்றபோதிலும், வல்கேட்டை “நம்பகமான” மொழிபெயர்ப்பு என சர்ச் அழைத்ததானது, ‘அது ஒன்றுதான் உண்மையான பைபிள் மொழிபெயர்ப்பு என்ற கருத்தை ஆதரித்ததாக’ ரோமிலுள்ள பான்டிஃபிக்கல் யூனிவர்சிட்டி ஸாலெஸ்யானுமில் பணியாற்றும் ஆசிரியரான கார்லோ பூட்செட்டீ குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் நிகழ்ந்தவை அதையே நிரூபித்தன.
1559-ல், தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் முதல் பட்டியலை நான்காம் போப் பால் வெளியிட்டார்; பட்டியலிடப்பட்ட அப்புத்தகங்களை கத்தோலிக்கர்கள் படிக்கவோ, விற்கவோ, மொழிபெயர்க்கவோ, வைத்திருக்கவோ தடைவிதிக்கப்பட்டது. அப்புத்தகங்கள் விசுவாசத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் தீங்கானவையாகவும் ஆபத்தானவையாகவும் கருதப்பட்டன. அந்தப் பட்டியல், புரூச்சோலீயின் மொழிபெயர்ப்பு உட்பட, பொதுமக்களுடைய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட எந்த பைபிளையும் வாசிக்கக்கூடாதென்று தடைவிதித்தது. அத்தடையை மீறியவர்கள் சர்ச்சிலிருந்து நீக்கப்பட்டார்கள். 1596-ல் வெளியிடப்பட்ட பட்டியல் இன்னும் அதிகக் கட்டுப்பாடுகளை விதித்தது. பொதுமக்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்க்கவோ அச்சடிக்கவோ ஒருவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. அத்தகைய பைபிள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சுட்டெரிக்கப்பட வேண்டியிருந்தன.
இதன் விளைவாக, 16-ம் நூற்றாண்டின் முடிவுக்குப் பிறகு சர்ச் சதுக்கங்களில் பைபிளை எரிக்கும் பழக்கம் வெகுவாக அதிகரித்தது. பைபிள் என்றாலே சர்ச்சுக்கு முரணான கொள்கைகளைப் பரப்பும் புத்தகம் என்ற எண்ணம் பொதுவாக மக்கள் மனதில் தோன்ற ஆரம்பித்து, இன்றுவரை வேரூன்றியிருக்கிறது. தனியார் மற்றும் பொது நூலகங்களில் இருந்த கிட்டத்தட்ட எல்லா பைபிள்களும், பைபிள் விளக்கவுரைகளும் அழிக்கப்பட்டன. அடுத்த 200 ஆண்டுகளுக்கு எந்தவொரு கத்தோலிக்கரும் பைபிளை இத்தாலிய மொழிக்கு மொழிபெயர்க்க முன்வரவில்லை. புராட்டஸ்டன்ட் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்கள் மாத்திரமே இத்தாலியில் விநியோகிக்கப்பட்டன; பறிமுதல் செய்யப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவை ரகசியமாக விநியோகிக்கப்பட்டன. ஆக, “சர்ச் அங்கத்தினர்கள் பைபிள் படிப்பதைப் பல நூற்றாண்டுகளுக்குச் சுத்தமாக நிறுத்திவிட்டார்கள். பைபிள் கிட்டத்தட்ட அறியப்படாத ஒரு புத்தகமாகவே ஆனது; கோடிக்கணக்கான இத்தாலியர்கள் பைபிளிலிருந்து ஒரு பக்கத்தைக்கூட படிக்காமலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தார்கள்” என்று சரித்திராசிரியர் மார்யோ சின்யோனி கூறுகிறார்.
தடை தளர்த்தப்படுகிறது
பின்னர், 1757 ஜூன் 13 தேதியிடப்பட்ட பட்டியலின் பேரில் பதினான்காம் போப் பெனடிக்ட் ஓர் ஆணைப்பத்திரத்தை வெளியிட்டார்; முன்பிருந்த தடையைச் சற்று மாற்றியமைத்தார்; “போப்பினால் அங்கீகரிக்கப்பட்டு பிஷப்புகளின் ஒப்புதலுடன் பிரசுரிக்கப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்புகளைப் படிப்பதற்கு அவர் அனுமதி வழங்கினார்.” இதன் காரணமாக, ஆன்டான்யோ மார்ட்டினி என்பவர் வல்கேட்டை மொழிபெயர்ப்பதற்கு ஆயத்தமானார்; இவர் பிற்பாடு ஃப்ளாரன்ஸின் ஆர்ச்பிஷப்பாக ஆனார். 1769-ல் இவருடைய மொழிபெயர்ப்பின் முதல் பகுதி வெளியிடப்பட்டது, 1781-ல் அது முழுமையாக முடிக்கப்பட்டது. மார்ட்டினியின் மொழிபெயர்ப்புதான் “குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இருந்த முதல் இத்தாலிய மொழிபெயர்ப்பு” என ஒரு கத்தோலிக்க புத்தகம் சொல்கிறது. இம்மொழிபெயர்ப்பு வெளியாவதற்கு முன், சர்ச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பைபிளை லத்தீன் மொழி தெரியாத கத்தோலிக்கர்களால் படிக்க முடியாமல் இருந்தது. அடுத்த 150 வருடங்களுக்கு, இத்தாலிய கத்தோலிக்கர்கள் மார்ட்டீனியின் மொழிபெயர்ப்பை மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
இரண்டாம் வாடிகனின் திருச்சபை ஒற்றுமைக்கான மாநாட்டில் (ecumenical council Vatican II) ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 1965-ல் முதன்முறையாக, “சரியான, திருத்தமான மொழிபெயர்ப்புகளை வெளியிடும்படி” டெயி வெர்பும் எனும் ஆவணம் ஊக்கமூட்டியது. “முக்கியமாக பரிசுத்த புத்தகங்களின் மூலப் பதிவுகளிலிருந்து பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்க” அது ஊக்கமூட்டியது. அதற்குக் கொஞ்சக் காலம் முன், 1958-ல், பான்டிஃபிசோ இஸ்டிடூடோ பிபிலிகோ (பான்டிஃபிக்கல் பிப்ளிக்கல் இன்ஸ்டிட்யூட்) என்ற நிறுவனம் “மூலப் பதிவுகளிலிருந்து முதன்முறையாக முழு கத்தோலிக்க மொழிபெயர்ப்பை” வெளியிட்டது. இந்த மொழிபெயர்ப்பு கடவுளுடைய பெயரை “ஜாவே” என்று சில இடங்களில் குறிப்பிட்டது.
பொதுமக்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பதற்கு வந்த எதிர்ப்பு பயங்கரச் சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறது; அதன் பாதிப்புகள் இன்னமும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, “சர்ச் அங்கத்தினர்கள், சுயமாகச் சிந்திப்பதற்கும் மனசாட்சியை சார்ந்திருப்பதற்கும் தங்களுக்கு போதிய திறன் இருக்கிறதா என சந்தேகப்படும் அளவுக்கு செய்திருக்கிறது” என ஜில்யோலா ஃரான்யிட்டோ குறிப்பிட்டார். அதோடு, மதப் பாரம்பரியங்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன; அநேக கத்தோலிக்கர்கள் பைபிளைவிட அத்தகைய பாரம்பரியங்களையே அதிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள். இவை எல்லாவற்றின் காரணமாக, மக்கள் பைபிளைவிட்டே விலகிப்போயிருக்கிறார்கள்; பெரும்பாலோர் படிப்பறிவுள்ளவர்கள் என்றபோதிலும் அவ்வாறு விலகிப்போயிருக்கிறார்கள்.
ஆனாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை, இத்தாலிய மொழி பைபிள்மீது புதியதோர் ஆர்வத்தைப் பிறக்கச் செய்திருக்கிறது. 1963-ல், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை இத்தாலிய மொழியில் சாட்சிகள் வெளியிட்டார்கள். 1967-ல் முழு பைபிளையும் வெளியிட்டார்கள். இத்தாலியில் மட்டும் 40,00,000-க்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மூலமொழி பதிவுகளில் உள்ளபடியே இந்த புதிய உலக மொழிபெயர்ப்பு, கடவுளுடைய பெயரை—யெகோவா என்ற பெயரை—பயன்படுத்தியிருக்கிறது; மூலமொழி பதிவுகளிலுள்ள அர்த்தம் துளியும் மாறாதவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த மொழிபெயர்ப்பை நிகரற்ற ஒரு படைப்பு என்றே சொல்ல வேண்டும்.
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாகச் சென்று விருப்பமுள்ள எல்லோருக்கும் பைபிளிலுள்ள நம்பிக்கையான செய்தியை வாசித்துக் காட்டுகிறார்கள், அதை விளக்கவும் செய்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:20) எனவே, அடுத்த முறை நீங்கள் யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்கும்போது, ‘நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியை’ உண்டாக்கப்போவதாக கடவுள் அளித்திருக்கும் அற்புதமான வாக்குறுதியைப் பற்றி உங்கள் பைபிளிலிருந்தே விளக்கும்படி அவர்களிடம் கேட்கலாமே!—2 பேதுரு 3:13.
[பக்கம் 13-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வெனிஸ்
ரோம்
[பக்கம் 15-ன் படம்]
புரூச்சோலீயின் மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயர் எயோவா என்றுள்ளது
[பக்கம் 15-ன் படம்]
தடைசெய்யப்பட்ட ஆபத்தான புத்தகங்களின் பட்டியலில் இத்தாலிய பைபிள் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
பைபிளின் தலைப்புப் பக்கம்: Biblioteca Nazionale Centrale di Roma
[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]
புரூச்சோலீயின் மொழிபெயர்ப்பு: Biblioteca Nazionale Centrale di Roma; Index: Su concessione del Ministero per i Beni e le Attività Culturali