தீமை —கட்டுக்கடங்காமல் போய்விட்டதா?
கண்ணை உறுத்திய ஒரு பொருளை ஆர்வம் பொங்க எடுக்கிறான் ஒரு சிறுவன். அது ஒரு கண்ணிவெடி. விளைவு? தன் கண்களைப் பறிகொடுக்கிறான், அவனுடைய வாழ்க்கையே இருண்டுவிட்டது. சாலையோர குப்பைத்தொட்டியில் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையையே போட்டுச்செல்கிறாள் ஒரு தாய். தன்னுடைய முன்னாள் அலுவலகத்திற்குத் திரும்பவும் வருகிறான் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவன். கண்ணில்பட்ட அனைவரையும் கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளி தன் உயிரையும் மாய்த்துக்கொள்கிறான். அப்பாவி பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார் சமுதாயத்தில் கௌரவமாக வாழ்ந்து வரும் ஒருவர்.
இதுபோன்ற தீயச் செயல்களைப் பற்றிய செய்திகளைக் கேட்பது இந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்தச் செய்திகளையும் மிஞ்சுமளவுக்கு இனப்படுகொலை, தீவிரவாதச் செயல்கள் ஆகியவை நடப்பது வருத்தமளிக்கிறது. “இதுவரை நடந்துள்ள பயங்கரமான காரியங்களைப் பார்க்கும்போது, இதுதான் சாத்தானின் நூற்றாண்டாக இருக்க வேண்டும். இனத்திற்காகவோ மதத்திற்காகவோ அந்தஸ்திற்காகவோ லட்சோப லட்சம் பேரை கொன்று குவிக்க வேண்டுமென்ற எண்ணமும் வெறியும் வேறெந்த சகாப்தத்திலும் மக்களிடம் இந்தளவு அதிகமாக இருந்ததில்லை” என்று 1995-ல் வெளியான தலையங்கம் ஒன்று குறிப்பிட்டது.
அதே சமயத்தில், மனிதன் காற்றை மாசுபடுத்துகிறான், பூமியைக் கெடுக்கிறான், அதன் வளங்களை உறிஞ்சிவிடுகிறான், எண்ணற்ற விலங்கினங்களை அழித்து வருகிறான். இந்தத் தீமைகளையெல்லாம் வென்று, மனிதனால் இவ்வுலகத்தை வாழ்வதற்கேற்ற பாதுகாப்பான ஓர் இடமாக மாற்ற முடியுமா? அல்லது அவ்வாறு செய்வது கதிரவனை கைகளால் மறைக்க முயலுவதுபோலவே இருக்குமா? தீமை என்னும் பொருளில் ஏராளமான கட்டுரைகளை எழுதிய ஒரு பேராசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “இந்த உலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த உலகத்தை, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் நான் எப்போதுமே நினைத்ததுண்டு. ஆனால் இந்த உலகம் முன்னேறிய பாடில்லை.” நீங்களும் ஒருவேளை அவ்வாறே உணரலாம்.
இந்த உலகம் போகும் போக்கு, நாளுக்கு நாள் கொந்தளிப்பும் ஆபத்தும் அதிகரித்துக்கொண்டே போகும் ஆழ்கடலுக்குள் செல்லும் கப்பலைப்போல இருக்கிறது. யாரும் அத்திசையில் செல்ல விரும்பவில்லை என்றாலும், கப்பலை வேறு திசையில் செலுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன. அந்தக் கப்பல் கட்டுக்கடங்காமல் உயிரைக் காவுகொள்ளும் சூறைக்காற்றை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறது.
ஒருவகையில், மோசமடைந்துகொண்டே போகும் இந்த உலக நிலைமைகளுக்குக் காரணம் மனித அபூரணத்தன்மை என்றும் சொல்லலாம். (ரோமர் 3:23) ஆனால், தீமையின் அளவையும், அது மிகப்பரவலாக இருப்பதையும், அதன் தீவிரத்தையும் பார்க்கையில், இவற்றுக்கெல்லாம் மனிதர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அப்படியானால் காண முடியாத, வல்லமைவாய்ந்த ஒரு தீய சக்தி மனிதவர்க்கத்தை ஆட்டிப் படைத்து வருகிறதா? அப்படியொரு சக்தி இருக்கிறதென்றால், அது என்ன, அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
© Heldur Netocny/Panos Pictures