வாழ்க்கை சரிதை
யெகோவாவைச் சேவிப்பது ஈடிணையற்ற பாக்கியம்
ஸீரா ஸ்டைகர்ஸ் சொன்னபடி
முழுநேர ஊழியத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்த என் கணவர் 1938-ல் இறந்துவிட்டார். கைக்குழந்தையையும் பத்து வயது மகனையும் பராமரிக்கும் பொறுப்புடன் நான் விடப்பட்டேன். இந்தச் சூழ்நிலையிலும் நான் முழுநேர ஊழியராக சேவிக்க வேண்டுமென்று ஏங்கினேன், ஆனால் என்னால் எப்படி முடிந்தது? அதை விளக்குவதற்கு முன் என் ஆரம்பகால வாழ்க்கையைப்பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன், கேளுங்களேன்.
அ மெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள அலபாமாவில் ஜூலை 27, 1907-ல் நான் பிறந்தேன். நான் பிறந்து சில வருடங்கள் கழித்து, என்னையும் என் உடன் பிறந்தோர் மூவரையும் கூட்டிக்கொண்டு என் பெற்றோர் ஜார்ஜியாவுக்குக் குடிபெயர்ந்தனர். சீக்கிரத்தில் அங்கிருந்து டென்னெஸீக்கும் பின்னர் ப்ளோரிடாவிலுள்ள டம்பாவுக்கு அருகிலுள்ள பகுதிக்கும் மாறிச் சென்றோம். அங்கிருந்தபோது, 1916-ல் ஒலியுடன்கூடிய “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படத்தைப் பார்த்தேன். திரைப்படத் துறை அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்த சமயம் அது. எனவே, அனைவருமே “ஃபோட்டோ-டிராமா”வை அனுபவித்து மகிழ்ந்தார்கள்!
காவற்கோபுரத்தையும் பிற பைபிள் பிரசுரங்களையும் என் பெற்றோர் ஆர்வத்துடன் வாசித்து வந்தனர். அப்பா பிரசுரங்களை வாசிக்க விரும்பியபோதிலும், அப்போது பைபிள் மாணாக்கர் என்றழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடன் அந்தச் சமயத்தில் நெருங்கிய கூட்டுறவை வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் அம்மா, பிள்ளைகளாகிய எங்களை கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். சொல்லப்போனால், மிச்சிகனிலுள்ள நைல்ஸ் கிராமத்துக்கு குடிமாறிய சில காலத்திற்குள், நாங்கள் இண்டியானாவிலுள்ள தென் பெண்ட்டிற்கு ரயிலில் 16 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பயணித்து தவறாமல் கூட்டங்களுக்குச் சென்றோம்.
கடைசியில் 1924, ஜூலை 22 அன்று யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக முழுக்காட்டுதலைப் பெற்றேன். அதற்குப் பின் சீக்கிரத்தில் முழுநேர ஊழியராகும்படி அம்மா தன் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொண்டார். யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் அப்போது கால்பார்டர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அம்மாவும் மற்ற கால்பார்டர்களும் வைத்த முன்மாதிரி, அதே வேலையில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசையை என்னிலும் விதைத்தது.
துணையைக் கண்டுபிடித்தல்
1925-ல், இண்டியானாவிலுள்ள இன்டியானாபோலிஸில் பெரியதொரு மாநாட்டுக்குச் சென்றபோது சிகாகோவைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் ஸ்டைகர்ஸை சந்தித்தேன். அவர் யெகோவாவை ஆர்வத்துடன் சேவிக்கும் ஊழியர் என்று எனக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. சிகாகோவிலிருந்து 160 கிலோமீட்டர் தூரத்தில் நான் வசித்ததால் நாங்கள் ஒருவரையொருவர் சந்திப்பது சுலபமாய் இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் அவ்வளவு பெரிய நகரில் ஒரேவொரு சபைதான் இருந்தது. மாடியில் ஒரு வாடகை அறையிலேயே கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆன்மீக ரீதியில் என்னை உற்சாகப்படுத்த ஜேம்ஸ் அடிக்கடி கடிதம் எழுதினார். டிசம்பர் 1926-ல் நாங்கள் மணம் முடித்தோம். சுமார் ஒரு வருடம் கழித்து, எங்கள் மூத்த மகன் எடீ பிறந்தான்.
சில காலத்திற்குப்பின், ஜேம்ஸும் நானும் சேர்ந்து பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம். மிச்சிகன், லூயிஸியானா, மிஸ்ஸிசிப்பி, தென் டகோட்டா, அயோவா, நெப்ராஸ்கா, கலிபோர்னியா, இல்லினாய்ஸ் ஆகிய எட்டு மாகாணங்களில் நாங்கள் ஊழியம் செய்தோம். அந்த வருடங்கள் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனுபவித்த மிகவும் இனிமையான வருடங்கள். ஜேம்ஸின் உடல்நிலை மோசமானதால் குடும்பமாக நாங்கள் மகிழ்ச்சியுடன் கழித்த அந்த நாட்கள் நீடிக்கவில்லை.
ஜேம்ஸின் சிகிச்சைக்கு நிறைய செலவாகிவிட்டதால் நாங்கள் 1936-ல் என் மாமியாருடன் போய் வாழ சிகாகோவிற்குச் சென்றோம். என் மாமியாரும் யெகோவாவின் சாட்சிதான். ஜேம்ஸ் வியாதிப்பட்டிருந்த காலத்தின் பிற்பகுதியில் நான் என் இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிற்றுண்டிச் சாலையில் வேலை செய்து ஒரு நாளைக்கு ஒரு டாலர் சம்பாதித்தேன். சாப்பிடுவதற்கு ஏராளமான உணவு இருக்கும்படி என் அருமை மாமியார் பார்த்துக்கொண்டார். அதற்கு கைமாறாக ஒரு பைசாகூட வாங்கவில்லை. மிகச் சிறந்த விதத்தில் எங்களை கவனித்துக்கொண்டார்.
மூளை வீக்கம் காரணமாக ஜேம்ஸ் இரண்டு வருடங்கள் அவதிப்பட்டு ஜூலை 1938-ல் இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் அவரால் வாகனம் ஓட்டவோ வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடவோ முடியவில்லை. ஆனாலும் சாட்சி கொடுப்பதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் அவர் தவறவிடவில்லை. பண ரீதியில் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக, நான் முழுநேர ஊழியத்தை விட்டுவிட்டேன். பல வேலைகளைக் கண்டுபிடித்தாலும், ஒவ்வொன்றையுமே கொஞ்ச நாட்களுக்குத்தான் செய்ய முடிந்தது.
ஜேம்ஸ் இறந்து எட்டு நாட்களுக்குப்பின் ஜூலை 30, 1938-ல் எங்கள் மகன் பாபி பிறந்தான். ஆனாலும் என் மாமியார் என்னை அங்கிருந்த மாவட்ட மருத்துவமனைக்குப் போக விடவில்லை. மாறாக அதைவிட நல்ல மருத்துவமனைக்குச் செல்வதற்கும் தன்னுடைய மருத்துவரின் கவனிப்பு எனக்கு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்ல, அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். இப்படிக் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டியதற்கு நான் உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
மீண்டும் முழுநேர ஊழியத்தில்
பாபி பிறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக என் மாமியாரின் வீட்டிலேயே இருந்தோம்; அப்போது எடீக்கு 12 வயது. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், முழுநேரமாக யெகோவாவுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் தணியவே இல்லை. மிச்சிகனிலுள்ள டெட்ராய்ட் நகரில் 1940-ல் நடந்த மாநாட்டில், ஒரு பயனியர் தம்பதியைச் சந்தித்தேன். பயனியர் செய்வதற்காக தென் கரோலினாவிற்கு வரும்படி அவர்கள் எனக்கு உற்சாகமூட்டினார்கள். ஆகவே, நான் 150 அமெரிக்க டாலருக்கு 1935 மாடல் பான்டியாக் காரை வாங்கினேன்; அங்கு குடிமாற தயாரானேன். 1941-ல் ஐக்கிய மாகாணங்கள் இரண்டாம் உலகப் போரில் சேர்ந்துகொண்ட சமயத்தில், என் மகன்கள் இருவரும் நானும் தெற்கு நோக்கிச் சென்றோம். நான் மீண்டும் முழுநேர ஊழியத்தில் கால்வைத்தேன்.
தென் கரோலினாவிற்கு மாறிச் சென்றபின், முதலில் காம்டனுக்கும், பின்னர் லிட்டில் ரிவருக்கும் அதற்குப்பின் கான்வேயுக்கும் போனோம். அங்கு சிறிய டிரெய்லரை வாங்கினேன். தயவுள்ளம் படைத்த ஒரு பெட்ரோல் நிலையத்தின் சொந்தக்காரர், என் டிரெய்லரை அங்கு நிறுத்துவதற்கும் அங்கேயே கியாஸ் நிரப்புவதற்கும் மின்சார இணைப்புக்கும் அனுமதி அளித்தார். அந்த நிலையத்திலிருந்த கழிவறையை பயன்படுத்தவும் அனுமதித்தார். இரண்டாம் உலகப் போரின்போது, பெட்ரோல் அளவாகக் கொடுக்கப்பட்டதால், பெட்ரோல் கிடைப்பது கடினமாயிற்று. எனவே, நான் ஒரு பழைய சைக்கிளை வாங்கினேன். பின்னர், 1943-ல் பணமெல்லாம் காலியாகிவிட்டதால் பயனியர் ஊழியத்தைத் தொடர முடியாததுபோல் தோன்றியது. அந்தச் சமயத்தில் நான் விசேஷ பயனியராக ஆவதற்கு அழைப்பு கிடைத்தது. அதனால் செலவுகளுக்காக மாதாமாதம் பணம் கிடைத்தது. கடந்துசென்ற வருடங்களில் யெகோவா எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்!
அப்போது கான்வேயில் சாட்சிகள் வேறு யாரும் இருக்கவில்லை. ஊழியத்திற்கு பிள்ளைகளும் நானும் மட்டுமே செல்வது கடினமாக இருந்தது. ஆகவே விசேஷ பயனியர் ஒருவரை அனுப்புமாறு எழுதிக் கேட்டேன். 1944-ல் ஈடித் வாக்கர் என்ற அருமையான சகோதரி அனுப்பப்பட்டார். 16 வருடங்களாக பல நியமிப்புகளில் ஒன்றாகச் சேர்ந்து ஊழியம் செய்தோம். வருத்தகரமாக, உடல்நல பிரச்சினை காரணமாக அவர் ஒஹாயோவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.
மறக்கமுடியாத ஆசீர்வாதங்கள்
கடந்துசென்ற வருடங்களின் இனிய நினைவுகளில், ஒருபோதும் மறக்க முடியாதது 13 வயது ஆல்பர்த்தாவைப் பற்றியது. கான்வேயில் வாழ்ந்த அவள் ஊனமுற்றிருந்த பாட்டியம்மாவையும் தன்னுடைய இரு தம்பிகளையும் கவனித்து வந்தாள். நான் கற்பித்த பைபிள் சத்தியங்களை அவள் நேசித்தாள், மற்றவர்களுக்கு அவற்றைச் சொல்லவும் விரும்பினாள். அவளும் பயனியர் சேவையை அதிக மதிப்புள்ளதாகக் கருதினாள். 1950-ல் பள்ளிப் படிப்பை முடித்ததும் பயனியர் செய்யத் தொடங்கினாள். 57 வருடங்கள் கடந்தபின் இன்னும் முழுநேர ஊழியத்தைச் செய்கிறாள்!
1951-ல், தென் கரோலினாவிலுள்ள ராக் ஹில்லில் கொஞ்ச காலத்திற்குச் சேவை செய்யும்படி ஈடித்தும் நானும் நியமனம் பெற்றோம். அங்கு மிகக் குறைவான சாட்சிகளே இருந்தனர். பின்பு ஜார்ஜியாவிலுள்ள எல்பர்ட்டனில் மூன்று வருடங்கள் சேவை செய்தோம். மீண்டும் தென் கரோலினாவுக்குத் திரும்பி, 1954-லிருந்து 1962 வரை நான் அங்கிருந்தேன். வால்ஹாலாவில், கிராமப் பகுதியில் தனியாக வாழ்ந்துவந்த காது கேளாதவரான நெட்டி என்ற வயதான பெண்மணியைச் சந்தித்தேன். பைபிள் படிப்பின்போது, பிரசுரத்திலிருந்து அவர் ஒரு பாராவை வாசிப்பார். அதே பக்கத்தில் கீழேயுள்ள கேள்வியை நான் சுட்டிக் காட்டுவேன். அப்போது அவர் பாராவிலுள்ள பதிலைச் சுட்டி காட்டுவார்.
அவருக்கு ஏதோவொன்று புரியவில்லை என்றால், ஒரு துண்டு காகிதத்தில் கேள்வியை எழுதித் தருவார், நான் அதில் பதிலை எழுதிக் கொடுப்பேன். காலப்போக்கில், அவர் பைபிள் சத்தியத்தை மிகவும் மதித்தார், சபை கூட்டங்களுக்குப் போவதோடு, வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் ஈடுபடத் தொடங்கினார். தன்னந்தனியாகவே பிரசங்கிக்கச் சென்றார், ஆனால் தேவைப்படும்போது அவருக்கு உதவ வசதியாக நான் பெரும்பாலும் அதே தெருவில் பக்கத்திலேயே ஊழியம் செய்தேன்.
வால்ஹாலாவில் இருந்தபோது, என்னுடைய பழைய கார் பழுதடைந்தது. 100 அமெரிக்க டாலருக்கு வேறொரு காரை வாங்கும் வாய்ப்பு இருந்தது, என்னிடமோ பணம் இல்லை. வியாபாரம் நடத்தி வந்த ஒரு சாட்சியிடம் 100 டாலரை கடனாகப் பெற்றேன். கொஞ்ச நாட்களுக்குள் என் தங்கையிடமிருந்து எதிர்பாராத ஒரு கடிதம் வந்தது. அப்பா இறந்தபோது கொஞ்சம் பணத்தை வங்கியில் விட்டுச் சென்றிருப்பதை இப்போதுதான் என் உடன்பிறந்தவர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், அதை என்ன செய்வதென்று கலந்து பேசியபோது எனக்கு அனுப்பிவைக்க முடிவு செய்திருப்பதாகவும் அவள் எழுதியிருந்தாள். அந்தப் பணத்தின் தொகை சரியாக 100 டாலர்!
மகன்களுடன் பயனியர் ஊழியம்
வீட்டுக்கு வீடு பிரசங்க ஊழியம் செய்கையில் சிறு வயதில், எடீயும் பாபியும் எப்போதுமே என்னோடுதான் இருந்தார்கள். அன்றெல்லாம் பொதுவாக மக்கள் மத்தியில் போதை மருந்து பழக்கம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இன்று இருக்குமளவுக்கு ஒழுக்கக்கேடும் அதிகமாக இருக்கவில்லை. யெகோவாவை சேவிக்கும்படி பிள்ளைகளை வளர்க்கையில் இன்று பெற்றோர் எதிர்ப்படும் அநேக பிரச்சினைகளை என்னால் தவிர்க்க முடிந்தது. நான் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு பிரசங்க வேலையில் அதிக கவனம் செலுத்தியதே அதற்கு காரணம்.
காம்டனில் எடீ பள்ளிக்குச் சென்று எட்டாம் வகுப்பு வரை படித்தான். பின்னர் என்னுடன் பயனியர் ஊழியம் செய்ய விரும்பினான். ஒன்றாக பயனியர் ஊழியம் செய்வதை சில வருடங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். பின்னர் நியூ யார்க்கில் புரூக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் வேலை செய்ய விரும்பினான். 1947 முதல் 1957 வரை அங்குச் சேவை செய்தான். என்னுடைய பைபிள் மாணவராக இருந்த ஆல்பர்த்தாவை 1958-ல் மணம் முடித்தான். அவர்கள் இருவரும் பயனியர் துணையானார்கள். 2004-ல் நாங்கள் மூவருமாக பயனியர் ஊழியப் பள்ளிக்குச் சென்றது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது!
அநேக வருடங்களுக்கு முன்பு, பாபி குட்டி பையனாக இருந்தபோது நான் என்னுடைய பைபிள் படிப்புகளுக்கு காரில் செல்வதற்காக போதுமான பெட்ரோல் கிடைக்க எனக்கு உதவுமாறு ஒரு நாள் யெகோவாவிடம் ஜெபித்துக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அது இன்றும் என் நினைவில் இருக்கிறது. பாபி எப்போதுமே ஊழியத்தை நேசித்தான், அநேக வருடங்களாக பயனியர் ஊழியத்தை ருசித்திருக்கிறான். வருத்தகரமாக, பாபியின் வாழ்விலும் சோகம் குறுக்கிட்டது. 1970-ல், திருமணமாகி 22 மாதங்களில் அவன் மனைவியை இழந்தான். பிரசவத்தின்போது அவள் தன் இரட்டைக் குழந்தைகளுடன் இறந்துபோனாள். பாபியும் நானும் எப்போதும் அருகிலேயே வாழ்ந்து வந்திருக்கிறோம். மிகவும் நெருங்கிய உறவை அனுபவித்திருக்கிறோம்.
இன்னும் பயனியராக!
1962-ல், வட கரோலினாவிலுள்ள லம்பர்ட்டன் சபைக்குச் செல்லும்படியான நியமிப்பைப் பெற்றேன். 45 வருடங்கள் கழித்து இன்றுவரை இங்குதான் இருக்கிறேன். சுமார் 84 வயதுவரை என் காரை ஓட்டினேன். இப்போது, பக்கத்திலிருக்கும் சாட்சி குடும்பத்தினர் என்னைக் கூட்டங்களுக்கும் பிரசங்க ஊழியத்திற்கும் அழைத்துச் செல்கிறார்கள்.
என்னிடம் ஒரு வாக்கரும் சக்கர நாற்காலியும் உள்ளன. இவை இரண்டையுமே நான் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால், உதவியின்றி என்னால் நடக்க முடிகிறது. நல்ல ஆரோக்கியம் பெற்றிருப்பதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன். இப்போது கொஞ்ச நாட்களாக என் கண்கள் தொந்தரவு கொடுத்து வருகின்றன. உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தாலொழிய நான் கூட்டங்களுக்குப் போக தவறவே மாட்டேன். உடல்நலம் குறைந்த ஒழுங்கான பயனியர் பட்டியலில் நான் இன்னமும் இருக்கிறேன்.
70-க்கும் அதிகமான வருடங்களைச் சந்தோஷமாக பயனியர் ஊழியத்தில் கழித்திருக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் யெகோவா எனக்கு உதவி செய்திருக்கிறார் என்று என்னால் நிச்சயமாகவே சொல்ல முடியும்.a நான் அதி புத்திசாலியாகவும் இருந்ததில்லை, அதிவேகமான உழைப்பாளியாகவும் இருந்ததில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பது யெகோவாவுக்குத் தெரியும். நான் முயற்சி எடுப்பதை அவர் அறிந்திருப்பதற்காகவும் என்னைப் பயன்படுத்தியிருப்பதற்காகவும் நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
நாம் முடிந்தளவுக்கு முழுமையாக யெகோவாவை சேவிப்பது முக்கியம் என்று நினைக்கிறேன், ஏனென்றால் நம்மிடம் இருக்கும் அனைத்துமே அவருடையவை. என்னால் முடிந்தவரை, ஒரு பயனியராக இருப்பதைவிட வேறெந்த சேவையையும் நான் தேர்ந்தெடுக்கவே மாட்டேன். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! நித்தியத்திற்கும் யெகோவா என்னைப் பயன்படுத்த வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன்.
[அடிக்குறிப்பு]
a ஏப்ரல் 20, 2007 அன்று சகோதரி ஸ்டைகர்ஸ், 100 வயதை எட்டுவதற்கு மூன்றே மாதங்கள் இருக்கும்போது தனது பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துவிட்டார். அநேக வருடங்களாக அவர் செய்துவந்த உண்மையுள்ள சேவை நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அவர் பரலோக வெகுமதியைப் பெறுவதைக் குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
[பக்கம் 13-ன் படம்]
கால்பார்டர் வேலையில் என் கணவரும் நானும் பயன்படுத்திய வாகனம்
[பக்கம் 14-ன் படம்]
1941-ல் என் மகன்களுடன்
[பக்கம் 15-ன் படம்]
சமீபத்தில் எடீயோடும் பாபியோடும்