ஜார்ஜியாவில் நடந்த ஒரு மாநாட்டில் இரு “அதிசயங்கள்”
நெஞ்சை விட்டு நீங்காத ஒரு சம்பவம் 2006-ஆம் ஆண்டு, ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற மாநாட்டின்போது நடந்தது; அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு “அதிசயங்கள்” நடந்தன. நாடு முழுவதும் ஆறு இடங்களில் யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாடு ஜூலை 7 முதல் 9-ஆம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெற்றது. வருகை தந்திருந்த 17,000-க்கும் அதிகமான பேருக்கு அது ஒரு கொழுத்த ஆவிக்குரிய விருந்தாக இருந்தது.
ஜார்ஜியா நாட்டின் தலைநகரான டிபிலிஸியில் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆயிரக்கணக்கானோர் கூடுவதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஜனவரி 2006-ல் ஆரம்பமாயின. மாநாடு நடக்கும் மற்ற இடங்கள் தொலைபேசிகள் மூலம் இணைக்கப்படும்.
ஜார்ஜியாவில் கடவுளை வழிபடுவதற்கான சுதந்திரம் பல வருடங்களாகப் படிப்படியாக கிடைத்து வந்திருக்கிறது. கடந்த காலத்தில் பரவலாக இருந்துவந்த எதிர்ப்பின் மத்தியிலும், தலைநகரில் மாநாடு நடத்துவதற்கான இடத்தைக் கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் சாட்சிகள் விடாமுயற்சியுடன் உறுதியாகச் செயல்பட்டார்கள். ஜார்ஜிய மக்கள் இயல்பாகவே தோழமை மனமுள்ளவர்கள், உபசரிக்கும் குணமுள்ளவர்கள். என்றாலும், சில அதிகாரிகள் மற்ற மதத்தினரைக் காரணமின்றி வெறுத்தார்கள். அவர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொண்டு சாட்சிகளுக்கு மாநாடு நடத்த இடத்தை வாடகைக்குக் கொடுப்பார்களா?
மாநாட்டுக் குழுவில் உள்ள சகோதரர்கள் பல்வேறு அரங்கங்களுக்கும் பெரிய விளையாட்டு கூடங்களுக்கும் சென்று விசாரித்தார்கள். நிர்வாகிகள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாமென அவர்களுக்கு உறுதியளித்தார்கள்; ஆனால் எந்தத் தேதியில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனச் சகோதரர்கள் கேட்டதும் மறுத்துவிட்டார்கள். அதனால், தங்கள் மன்றத்தை யெகோவாவின் சாட்சிகள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள டிபிலிஸி இசை அரங்கத்தின் நிர்வாகம் அனுமதித்தபோது மாநாட்டுக் குழுவினர் ஆச்சரியப்பட்டார்கள். அந்த இசை அரங்கம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, அதிமுக்கியமான பல நிகழ்ச்சிகள் அங்கேதான் நடக்கும்.
மாநாட்டுக் குழுவின் முயற்சிகளுக்குக் கடைசியாக பலன் கிடைத்த உற்சாகத்தில், அவர்கள் டிபிலிஸில் மாநாட்டிற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்; அதேபோல, ட்ஸ்னாரீ, கூடாயீசீ, சூக்டீடீ, காஸ்பீ, காரீ ஆகிய நாடு முழுவதுமுள்ள நகரங்களிலும் மாநகரங்களிலும் மாநாட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரே நேரத்தில் நிகழ்ச்சியைக் கேட்பதற்காக மாநாடுகள் அனைத்தையும் தொலைபேசிமூலம் இணைக்க ஏகப்பட்ட வேலைகள் செய்யப்பட்டன. மாநாட்டுக்குத் தேவையான அனைத்துக் காரியங்களும் தயாராக இருந்தன. மாநாடு துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் டிபிலிஸி இசை அரங்கத்தின் நிர்வாகம், திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. அதற்கு அவர்கள் எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.
முதல் “அதிசயம்”
கடைசி நேரத்தில் சகோதரர்களால் என்ன செய்ய முடியும்? டிபிலிஸியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய இடமான மார்னயுலீ நகருக்குச் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான அந்த இடத்தில் பல மாநாடுகள் நடந்திருக்கின்றன. அந்த இடம் ஒருகாலத்தில் மிகப்பெரிய தோட்டமாக இருந்தது. கடந்த பத்து வருடங்களாக டிபிலிஸியிலுள்ள சபைகள் மாநாடுகளை நடத்துவதற்காக இந்த இடத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், மார்னயுலீயில்தான் யெகோவாவின் சாட்சிகள் கலவர கும்பல்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவங்களில் ஒன்று, செப்டம்பர் 16, 2000-ல் நடந்தது. மார்னயுலீ நகர போலீஸார் மாநாட்டிற்காகச் சென்றுகொண்டிருந்த சாட்சிகளை அங்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக சாலைகளை அடைத்தார்கள். பதவியிழந்த ஆர்த்தடாக்ஸ் பாதிரியான வாசீலீ மகாலாவீஷ்வீலீ தலைமையில் பேருந்து நிறைய கலகக் கும்பல் கூட்டமாக வந்து இறங்கியது. அவர்கள் வாகனங்களையும் பேருந்துகளையும் நிறுத்தி மார்னயுலீ மாநாட்டிற்காகச் சென்று கொண்டிருந்தவர்களை வாகனங்களிலிருந்து வெளியே தரதரவென்று இழுத்து வந்து இரக்கமே இல்லாமல் அடித்து உதைத்தார்கள். அவர்களின் பைபிள்களும் பைபிள் பிரசுரங்களும் உட்பட மற்ற பயணிகளின் பொருள்களையும் கொள்ளையடித்தார்கள்.
மார்னயுலீயில் உள்ள மாநாட்டு இடமும் கிட்டத்தட்ட 60 பேர்கொண்ட கும்பலால் தாக்கப்பட்டது. சுமார் 40 சாட்சிகள் காயமடைந்தார்கள். ஒரு சகோதரர் கத்தியால் நெஞ்சில் குத்தப்பட்டார். தாக்கியவர்களில் சிலர் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினார்கள், வானத்தை நோக்கி மூர்க்க வெறியோடு சுட்டார்கள். அவர்களில் ஒருவன் அந்த இடத்தின் எஜமானியிடம் துப்பாக்கியைக் காட்டி பணத்தையும் நகையையும் கொடுக்கும்படி மிரட்டினான். அந்த இடத்தின் ஒரு மூலையில் இருக்கும் அவருடைய வீட்டை அந்தக் கும்பல் சல்லடையாய் சலித்து தேடி, மதிப்புமிக்க பொருள்களையெல்லாம் திருடிச் சென்றது. அவர்கள், வீட்டிலுள்ள ஜன்னல்களையெல்லாம் உடைத்துப்போட்டார்கள்; பிறகு, பைபிள் பிரசுரங்களையும் மாநாட்டிற்கு விசேஷமாய்ச் செய்திருந்த நாற்காலிகளையும் தீக்கிரையாக்கினார்கள். ஒன்றரை டன் எடையுள்ள பிரசுரங்களை அழித்தார்கள். இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையினரோ கலகக்காரர்களோடு கைகோர்த்துக்கொண்டார்கள்.a
மாநாட்டுக் குழு இந்த வன்முறையின் அச்சுறுத்துதலைக் குறித்து மட்டுமல்ல, சுமார் 2,500 பேருக்கே போதுமான இடத்தில் எப்படி 5,000 பேரை அமர வைக்கமுடியும் என்பதைக் குறித்தும் கவலைப்பட்டது. ஒரு குறுகிய காலத்தில் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்? பக்கத்திலுள்ள இடங்களின் சொந்தக்காரர்கள் இருவர், தங்களுடைய தோட்டங்களை வாடகைக்குக் கொடுக்க சகோதரர்களை அணுகினபோது அது ஓர் அதிசயமாகவே தோன்றியது.
அந்த இடங்களை மாநாட்டுக்குத் தகுந்த இடமாக மாற்றுவது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. சீதோஷ்ணம், சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியது. மாநாட்டுக்கு முந்தின வாரம் முழுவதும் மழை பெய்துகொண்டிருந்தது. அருகில் உள்ளவர்களின் நிலங்களில் உருளைக்கிழங்கு பயரிடப்பட்டிருந்தது, அவற்றை அறுவடை செய்யவேண்டியிருந்தது. முதலில் அந்தக் கொட்டும் மழையில் உருளைக்கிழங்கைத் தோண்டியெடுக்க வாலண்டியர்கள் ஒன்று திரண்டார்கள். பின்பு, வேலிகள் நீக்கப்பட்டு, பார்வையாளர்களை வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாப்பதற்காகக் கூரைகள் போடப்பட்டன. மர பெஞ்சுகள் இன்னும் அதிகம் தேவைப்பட்டதால் அவற்றைச் செய்யவேண்டியிருந்தது, கூடுதலான ஒலி உபகரணங்கள் பொருத்தப்பட்டன. பலகைகளை அறுத்தல், ஆணியடித்தல், துளையிடுதல் போன்ற வேலைகளைச் செய்வதற்காக வாலண்டியர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள், சிலர் தூக்கத்தையும் தியாகம் செய்தார்கள்.
“மாநாடு நடக்கும் சமயத்தில் தொடர்ந்து மழை பெய்தால் என்ன செய்வது? சொதசொதவென்றிருக்கும் ஈர நிலம் வருபவர்களை விழுங்கிவிடுமோ?” என்று அனைவரும் யோசித்தார்கள். ஈரமான தரையை மூடுவதற்கு வைக்கோல் வாங்கப்பட்டது. இறுதியாக, சூரியன் எட்டிப்பார்த்தது! அந்தத் தரை அழகிலும் இதமான சூரிய ஒளியிலும் குளித்ததுபோல மாநாடு நடந்த மூன்று நாட்களும் காட்சியளித்தது.
பார்வையாளர்கள் வந்தபோது அழகாக அமைக்கப்பட்டிருந்த காட்சிகளைக்கண்டு வாயாரப் புகழ்ந்தார்கள். அந்தக் கிராமப்புறத்தில் நிலவிய அமைதி, புதிய உலகத்திற்கு ஒரு முன்னோட்டத்தைப்போல் தெரிந்தது. அத்தி மரங்களும் மற்ற கனி மரங்களும் மக்காச்சோள, உருளைக்கிழங்கு நிலங்களும் சுற்றியிருக்க, வந்திருந்தவர்கள் வசதியாக அமர்ந்தார்கள். மேடையின் பின்புறம் திராட்சைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது, சேவல்கள் கூவுவதையும் கோழிகள் தங்களுடைய முட்டைகளைச் சேர்க்கையில் கொக்கரிப்பதையும் பார்வையாளர்களால் எப்போதாவது கேட்க முடிந்தது. அந்த நாட்டுப்புறத்திற்கே உரிய மற்ற ஒலிகளும் வந்தன; ஆனால், வந்திருந்தவர்களுக்கு இவையெல்லாம் மகிழ்வூட்டுகிற பின்னணி இசையாகவே இருந்தன. பார்வையாளர்கள் தங்களுடைய கவனத்தைத் திசைதிருப்பாமல் அரிதாகவே அவற்றையெல்லாம் பார்த்தனர். மாறாக பைபிள் அடிப்படையிலான அருமையான நிகழ்ச்சியைக் கருத்தூன்றி கவனித்தனர். என்றாலும், அந்த மாநாட்டில் இவை மட்டுமே மறக்க முடியாத தருணங்கள் அல்ல.
இரண்டாம் “அதிசயம்”
வெள்ளிக்கிழமை காலை நிகழ்ச்சி முடிகையில், வந்திருந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது; அது என்னவென்றால், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு உறுப்பினரான ஜெஃபரீ ஜேக்ஸன், ஜார்ஜிய மொழியில், பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை வெளியிட்டார்.b திகைப்படைந்த அநேகருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது. ஒரு குடும்பத்தினர் மகிழ்ச்சிபொங்க இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “யெகோவா செய்த இந்த அதிசயத்திற்கு நாங்கள் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. குறுகிய சமயத்தில் எவ்வளவு பெரிய வேலை நடந்திருக்கிறது!”
தொலைபேசிமூலம் நிகழ்ச்சியைக் கேட்ட, டாலென்ஜீஹா நகரைச் சேர்ந்த ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “முழு பைபிளை நாங்கள் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மிகச் சிறப்பான இந்த மூன்று நாள் மாவட்ட மாநாட்டிற்கு என்னுடைய நன்றி. உண்மையில், இது ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த நிகழ்ச்சி.” கருங்கடல் பக்கத்திலுள்ள மேற்கு ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு சபையைச் சேர்ந்த குடும்பம் இவ்வாறு சொன்னது: “எங்கள் குடும்பத்திற்கு இது வரைக்கும் ஒரே ஒரு பைபிள் மட்டுமே இருந்தது, ஆனால் இப்பொழுது எங்கள் நான்கு பேருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் சொந்தமாக இருக்கிறது. தற்போது நாங்கள் ஒவ்வொருவரும் பைபிளைச் சொந்தமாகப் படிக்க முடிகிறது.”
என்றாலும், வந்திருந்தவர்களின் கண்களுக்குத் தெரியாத சம்பவங்கள் எல்லாமே சுமூகமாக நடக்கவில்லை. உதாரணத்திற்கு, முழுமையான புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் அச்சடித்து மாநாட்டிற்காகச் சரியான நேரத்தில் ஜார்ஜியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், சகோதரர்கள் அவற்றை ஜார்ஜியாவின் எல்லைக்குள் கொண்டுசெல்ல சுங்க இலாகா அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். தனிநபர் புகார் செய்யும் அலுவலகத்தில் சகோதரர்கள் மேல்முறையீடு செய்தார்கள். அதன் விளைவாக, மாவட்ட மாநாட்டிற்கு ஒரு வினாடிகூட பாக்கியில்லாத சமயத்தில் பைபிள்களை வெளியிட அந்த அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தது. அந்த அலுவலக அதிகாரிகூட தன்னுடைய உதவியாளரை மார்னயுலீ மாநாட்டிற்கு அனுப்பி தங்களுடைய அலுவலகத்திற்காகப் புதிய பைபிள்களைப் பெற்றுக்கொண்டார்.
ஜார்ஜியர்கள் பாணியில் அன்பான வரவேற்பு
இன்னொரு காரணத்திற்காகவும் மார்னயுலீயில் நடைபெற்ற மாவட்ட மாநாடு ஜார்ஜியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு உறுப்பினர் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வந்திருந்த அனைவரும் அவரைக் கண்ட சந்தோஷத்தில் அவரை நேரடியாகச் சந்தித்துத் தங்களுடைய அன்பான பாரம்பரிய வரவேற்பைத் தெரிவிக்க விரும்பினார்கள். மாநாட்டிற்கு முன்பும் பின்பும் சகோதர சகோதரிகளை வாழ்த்துவதற்கு சகோதரர் ஜேக்ஸன் பல மணி நேரமாக நின்றுகொண்டிருக்க வேண்டியிருந்தது, ஆனால் அப்படி வாழ்த்துவதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
1903-ல் நடைபெற்ற மற்றொரு மாநாட்டின் முடிவில் ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார், “நான் ஏழைதான், ஆனாலும் இந்த மாநாட்டிலிருந்து கிடைத்த நன்மைகளுக்குப் பதிலாக ஆயிரம் டாலர்கள் கொடுத்தால்கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” இதே உணர்வுதான், நூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது 2006-ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த மாநாடுகளில் கலந்துகொண்டவர்களுக்கும் இருந்தது.
[அடிக்குறிப்புகள்]
a ஜார்ஜியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டது பற்றிய கூடுதலான தகவலுக்கு பிப்ரவரி 8, 2002, விழித்தெழு! பக்கங்கள் 22-28-ஐக் காண்க.
b கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஜார்ஜிய மொழியில் 2004-ல் வெளியிடப்பட்டது.
[பக்கம் 19-ன் பெட்டி]
“சின்னவன்” வளர்ந்திருக்கிறான்
“சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” என்று ஏசாயா 60:22-ல் சொல்லப்பட்ட வார்த்தைகள் ஜார்ஜியாவில் உண்மையாக நிறைவேறியிருக்கின்றன. இருபதுக்கும் குறைவான ஆண்டுகளில் ஜார்ஜியாவிலுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை சுமார் 100-லிருந்து கிட்டத்தட்ட 16,000-மாக அதிகரித்துள்ளது. கடவுளுடைய வார்த்தையின் வைராக்கியமான ஊழியர்கள் ஏறக்குறைய 8,000 பைபிள் படிப்புகளை ஒவ்வொரு வாரமும் நடத்துகிறார்கள்; இது ஜார்ஜியாவில் ஏற்படப்போகும் மேலுமான வளர்ச்சிக்கு அற்புதமான வாய்ப்பிருப்பதைக் காட்டுகிறது அல்லவா!
[பக்கம் 16-ன் படம்/தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ரஷ்ய குடியரசு
ஜா ர் ஜி யா
⇨ சூக்டீடீ
⇨ கூடாயீசீ
மார்னயுலீ ⇨ காரீ
⇨ காஸ்பீ
⇨ ட்ஸ்னாரீ
டிபிலிஸி
துருக்கி
அர்மேனியா
அஜர்பைஜான்
[படத்திற்கான நன்றி]
பூமி: Based on NASA/Visible Earth imagery
[பக்கம் 16-ன் படம்]
டிபிலிஸில் உள்ள சிலை
[பக்கம் 17-ன் படங்கள்]
மர்னயுலீயில் நடைபெற்ற மாநாடு மற்ற ஐந்து இடங்களுடன் செல்போன்கள் மூலம் இணைக்கப்பட்டது
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜார்ஜிய மொழியில் வெளியிடப்பட்ட முழுமையான “புதிய உலக மொழிபெயர்ப்பு” பைபிள் வந்திருந்தவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது