ஜார்ஜியா—பாதுகாக்கப்படும் பழம்பெரும் சொத்து
விழித்தெழு! நிருபரிடமிருந்து
செழிப்பான பள்ளத்தாக்குகளாலும், 4,600 மீட்டர் உயரமுள்ள பனிமூடிய சிகரங்களைக்கொண்ட மலைகளாலும் சூழப்பட்ட தேசத்தில், 100 அல்லது அதற்கும் அதிகமான வயதுவரை வாழும் ஜனங்கள் மத்தியில் வாழ்வதைக் குறித்து நீங்கள் எவ்விதம் உணருவீர்கள்? ஜார்ஜியாவில் வாழும் ஜனங்களுக்கு, இது வெறும் கனவல்ல, அதுவே நிஜம்.
ஜார்ஜியா, புவியியல் மற்றும் கலாச்சார எல்லையில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே அமைந்திருக்கிறது. பூர்வீக நாட்களில், பட்டுத் துணிகளின் வியாபாரப் பாதையில் ஜார்ஜியா முக்கியமான இடம் வகித்தது; சீனாவிற்குச் செல்ல இந்தப் பாதையையே மார்க்கோ போலோ பயன்படுத்தினார். கிழக்கத்திய நாடுகளோடும் மேற்கத்திய நாடுகளோடும் தொடர்பு இருந்ததால், ஜார்ஜியா பொருளாதாரரீதியிலும் கலாச்சாரரீதியிலும் அதிக பயனடைந்தது; ஆகவே, முயற்சி வீண்போகாது என்றும், கை மேல் பலன் இருக்கும் என்றும் படையெடுப்பவர்கள் உணர்ந்தார்கள். ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிஸி, 29 முறை அழிக்கப்பட்டது என்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது! இன்று டிபிலிஸி, இரைச்சல் மிக்க உயிரோட்டமுள்ள நகரமாக, சுரங்கப் பாதைகளும் நவீன கட்டடங்களும் அநேக ஆண்டுகளாக இருக்கும் சிற்பக்கலைப் பொருந்திய நினைவுச் சின்னங்களுடன் காணப்படுகிறது.
ஜார்ஜியாவின் நிலப்பகுதியில் 87 சதவீதம் மலைகளே. உயர்ந்த, மனிதவாடையற்ற பனிப்பிரதேசத்திலிருந்து, 25,000 ஆறுகள் ஏராளமான டிரவுட் மீன்களுடன், தாழ்ந்த பிரதேசத்திற்குப் பாய்ந்தோடுகின்றன. தேசத்தில் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் அல்லது புதர் காடுகளால் நிறைந்திருக்கிறது. ஜார்ஜியாவின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் காகஸஸ் மலைத்தொடர், வடக்கே இருந்து வரும் கடுங்குளிர் காற்று, தேசத்தின் உட்பகுதியை தாக்காத வண்ணம் பாதுகாக்கிறது. இந்த இட அமைப்பு கருங்கடலில் இருந்து வரும் மிதமான ஈரக்காற்று மேற்கு ஜார்ஜியாவை கதகதப்பாக்க வைக்கிறது—விடுமுறையை கழிக்க வருவோருக்கு ஜார்ஜியா பிடித்தமான இடமாக இருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம். இப்படிப்பட்ட மிதமான சீதோஷணநிலை, உலகின் மிகப் பழமையான, நேர்த்தியான, பாரம்பரியமுறை திராட்சரசத் தயாரிப்பிற்கு வழிவகுத்திருக்கிறது. சொல்லப்போனால், ஜார்ஜியா 500-க்கும் அதிக வகையான திராட்சப் பழங்களையும் திராட்சரசங்களையும் உற்பத்தி செய்கிறது!
இருப்பினும், ஜார்ஜியாவின் மிகப் பெரிய சொத்து அதன் ஜனங்களே. அவர்களுடைய, மனோதிடத்திற்காகவும், புத்திசாலித்தனத்திற்காகவும், அந்நியரை மனமார வரவேற்று உபசரிக்கும் தன்மைக்காகவும், நகைச்சுவை மற்றும் உயிரை நேசிப்பதற்காகவும் நூற்றாண்டுகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கலாச்சாரத்தில், பாடலும் நடனமும் நிறைந்திருக்கிறது; இன்றும்கூட ஜார்ஜியக் குடும்பங்களில் உணவுக்குப் பிறகு மேஜையைச் சுற்றி அமர்ந்து கிராமியப் பாடல்கள் அடிக்கடி பாடப்படுகின்றன.
ஜார்ஜியாவின் இலக்கிய சரித்திரம் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே அறியப்பட்டிருக்கிறது. பைபிள் மொழிபெயர்க்கப் படத்தொடங்கிய பூர்வீக மொழிகளில் ஜார்ஜிய மொழியும் ஒன்று; ஜார்ஜிய மொழியின் தனித்தன்மை வாய்ந்த அழகான எழுத்துக்களால் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படிப்பட்ட எல்லா கலாச்சாரங்கள் ஜார்ஜியாவின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பின்னிப் பிணைத்து நவீன தேசத்தில் அதன் பழம்பெரும் சொத்தை பாதுகாக்கிறது.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pat O’Hara/Corbis
[பக்கம் 25-ன் படம்]
1. ஜார்ஜிய பைபிள்
2. சில ஜனங்கள் 100 வயது அல்லது அதற்கு மேலும் வாழ்கிறார்கள்!
3. டிபிலிஸியில் நெரிச்சலான தெரு
[படத்திற்கான நன்றி]
Dean Conger/Corbis