உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 1/15 பக். 26-30
  • கஷ்டங்களைச் சமாளிக்க பலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கஷ்டங்களைச் சமாளிக்க பலம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மத ரீதியான துன்புறுத்தலைச் சமாளிக்க...
  • சகாக்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க...
  • எல்லாவித கஷ்டங்களையும் சகிக்க...
  • கஷ்டங்களையும் சோதனைகளையும் சமாளிக்க...
  • சோதனையை... சோர்வை... சமாளிக்க பலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • தன்னுடைய மக்களை யெகோவா அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • சோதனைகளில் சகித்திருப்பது யெகோவாவுக்கு துதி சேர்க்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • நீங்கள் படும் கஷ்டங்கள் கடவுள் தரும் தண்டனையா?
    விழித்தெழு!—2009
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 1/15 பக். 26-30

கஷ்டங்களைச் சமாளிக்க பலம்

“என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு.” —பிலி. 4:13.

1. யெகோவாவின் மக்கள் ஏன் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்?

யெகோவாவின் மக்கள் கஷ்டங்களுக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. அபூரணராக இருப்பதால், இந்தப் பொல்லாத உலகத்தில் வாழ்வதால், கடவுளுக்குச் சேவை செய்பவர்களுக்கும் சேவை செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள பகையால், கஷ்டங்களை எதிர்ப்படுகிறார்கள். (ஆதி. 3:15) மத ரீதியான துன்புறுத்தலைச் சமாளிக்க... சகாக்களின் வற்புறுத்தலை எதிர்த்து நிற்க... வேறு பல கஷ்டங்களைச் சகிக்க... மனித சரித்திரத்தின் ஆரம்பம்முதல் உண்மை ஊழியர்களுக்குக் கடவுள் உதவியிருக்கிறார். அதுபோலவே நமக்கும் சக்தியைத் தந்து உதவுவார்.

மத ரீதியான துன்புறுத்தலைச் சமாளிக்க...

2. மத ரீதியான துன்புறுத்தலின் நோக்கம் என்ன, அது எந்தெந்த விதங்களில் வரலாம்?

2 மத நம்பிக்கையை ஒழிப்பது, அது பரவவிடாமல் தடுப்பது அல்லது கடவுளுடைய மக்களின் உத்தமத்தை முறிப்பது ஆகியவையே மத ரீதியான துன்புறுத்தலின் நோக்கம். துன்புறுத்தல் பல்வேறு விதங்களில் வரலாம்; சில நேரடியாக வரலாம், சில மறைமுகமாக வரலாம். சாத்தானின் தாக்குதலை பால சிங்கத்தின் தாக்குதலுக்கும் விரியன் பாம்பின் தாக்குதலுக்கும் பைபிள் ஒப்பிடுகிறது.—சங்கீதம் 91:13-ஐ வாசியுங்கள்.

3. சிங்கத்தைப் போலவும் விரியன் பாம்பைப் போலவும் சாத்தான் எப்படித் தாக்குகிறான்?

3 பெரும்பாலும் வன்முறை, சிறைவாசம் அல்லது தடையுத்தரவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சாத்தான் ஒரு கொடிய சிங்கத்தைப் போல நேரடியாகத் தாக்கியிருக்கிறான். (சங். 94:20) அவன் பயன்படுத்துகிற எண்ணற்ற உத்திகளைப் பற்றி இயர்புக்கில் வெளிவந்த அறிக்கைகளில் வாசிக்கிறோம். கலகக்காரர்கள்—சில சமயங்களில் மதகுருமார்களால் அல்லது அரசியல் வெறியர்களால் தூண்டிவிடப்பட்ட அடியாட்கள்—கடவுளுடைய மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிங்கத்தைப் போன்ற இந்தத் தாக்குதல்களால் சிலர் யெகோவாவைச் சேவிப்பதையே நிறுத்தியிருக்கிறார்கள். விரியன் பாம்பைப் போல பிசாசு மறைவான இடங்களிலிருந்து தந்திரமாகவும் தாக்குகிறான்; ஆம், மக்களின் மனங்களில் நஞ்சைப் பாய்ச்சி, கடவுளுடைய சித்தத்தைச் செய்யவிடாமல் ஏமாற்றுகிறான். இத்தகைய தாக்குதல் நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்திவிடலாம் அல்லது குலைத்துவிடலாம். ஆனால், கடவுளுடைய சக்தியின் உதவியோடு எல்லா விதமான துன்புறுத்தலையும் நாம் எதிர்த்து நிற்க முடியும்.

4, 5. துன்புறுத்தலை எதிர்கொள்ள எது சிறந்த வழி, ஏன்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

4 துன்புறுத்தல் எப்படியெல்லாம் வருமென யோசித்துக் கொண்டிருப்பது மட்டுமே அதை எதிர்கொள்ள சிறந்த வழி அல்ல. எப்படிப்பட்ட துன்புறுத்தல் வருமென நமக்குத் தெரியாது; அதோடு, நாம் கற்பனை செய்கிற துன்புறுத்தல் வராமலே போகலாம்; அதனால் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவது எவ்விதத்திலும் நமக்கு உதவாது. ஆனால், ஒரு காரியத்தை நாம் செய்ய முடியும். உத்தம சீலர்களைப் பற்றிய பைபிள் பதிவை, இயேசுவின் போதனையை, முன்மாதிரியைத் தியானிப்பதன் மூலம் அநேகர் துன்புறுத்தலை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறார்கள். இது, யெகோவா மீதுள்ள அன்பை ஆழமாக்க அவர்களுக்கு உதவியிருக்கிறது. அந்த அன்பு, பலவித கஷ்டங்களையும் சமாளிக்க உதவியிருக்கிறது.

5 மலாவியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளின் அனுபவத்தைக் கவனியுங்கள். அரசியல் கட்சி அட்டைகளை அவர்கள் வாங்க மறுத்ததால் மூர்க்கத்தனமான கலகக்காரர்கள் அவர்களை அடித்தார்கள், மானபங்கப்படுத்தினார்கள், கற்பழித்துவிடுவதாக மிரட்டினார்கள். பெத்தேல் குடும்பத்தாரும்கூட அந்த அட்டைகளை வாங்கிக்கொண்டதாகப் பொய் சொன்னார்கள். அப்போது அந்தச் சகோதரிகள் என்ன சொன்னார்கள்? “நாங்கள் யெகோவா தேவனையே வணங்குகிறோம். கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் அட்டைகளை வாங்கினார்கள் என்றால் அது அவர்கள் விருப்பம். எங்களைக் கொன்றாலும் நாங்கள் வாங்க மாட்டோம்!” இப்படித் தைரியமாகப் பதிலளித்த பிறகு அவர்களை விட்டுவிட்டார்கள்.

6, 7. துன்புறுத்தலைச் சமாளிக்க யெகோவா தம் ஊழியர்களை எவ்வாறு பலப்படுத்துகிறார்?

6 தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் ‘பயங்கர உபத்திரவத்தின் மத்தியிலும், . . . கடவுளுடைய சக்தியினால் கிடைக்கிற சந்தோஷத்தோடு’ சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தெ. 1:6) அன்றும் சரி இன்றும் சரி, துன்புறுத்தலை வெற்றிகரமாய்ச் சமாளித்த அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் வேதனையின் உச்சத்தில் இருந்தபோது மனசமாதானத்தைப் பெற்றதாகச் சொன்னார்கள்; இந்தச் சமாதானம் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற ஒரு குணம். (கலா. 5:22) இது, இருதயத்திலும் மனதிலும் அமைதியைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவியது. ஆம், கஷ்டங்களைச் சமாளிக்கவும் அப்படிப்பட்ட சமயங்களில் ஞானமாய் நடக்கவும் யெகோவா தம்முடைய ஊழியர்களைத் தம் சக்தியின் மூலம் பலப்படுத்துகிறார்.a

7 கடும் துன்புறுத்தல் மத்தியிலும்கூட கடவுளுடைய மக்கள் உத்தமத்தில் நிலைத்திருப்பதைப் பார்த்து அநேகர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். சாட்சிகளுக்கு இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தி கிடைத்ததுபோல் தோன்றியது; ஆம், உண்மையிலேயே அப்படிப்பட்ட சக்திதான் கிடைத்தது. “கிறிஸ்துவின் பெயரை முன்னிட்டு அவதூறாகப் பேசப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால், கடவுளுடைய சக்தியாகிய மகிமையான சக்தி உங்கள்மீது தங்கியிருக்கிறது என்று அர்த்தம்” என்று அப்போஸ்தலன் பேதுரு நமக்கு உறுதியளிக்கிறார். (1 பே. 4:14) நீதிநெறிகளின்படி நடக்கும்போது நாம் துன்புறுத்தப்படுகிறோம் என்றால் கடவுளுடைய தயவு நமக்கு இருக்கிறது என்று அர்த்தம். (மத். 5:10-12; யோவா. 15:20) யெகோவாவின் இந்த ஆசீர்வாதம் நமக்கு இருப்பது எவ்வளவு சந்தோஷம்!

சகாக்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க...

8. (அ) சகாக்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க யோசுவாவுக்கும் காலேபுக்கும் எது உதவியது? (ஆ) யோசுவா, காலேபுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

8 கிறிஸ்தவர்கள் சமாளிக்க வேண்டிய மறைமுகமான ஒருவகை எதிர்ப்புதான் சகாக்களின் வற்புறுத்தல். யெகோவாவின் சக்திக்கு அந்தளவு வல்லமை இருப்பதால், நம்மைக் கேலி செய்கிறவர்களை... நம்மைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பரப்புகிறவர்களை... உலகத்தின் போக்கில் நம்மை இழுத்துச் செல்கிறவர்களை... நம்மால் எதிர்க்க முடியும். உதாரணத்திற்கு, யோசுவா, காலேபுடைய கருத்துகள் கானான் தேசத்தை வேவுபார்க்க அனுப்பப்பட்ட மற்ற பத்துப் பேரின் கருத்துகளிலிருந்து மாறுபட்டிருந்ததற்குக் காரணம் என்ன? கடவுளுடைய சக்தி அவர்களுக்குள் வேறே ‘ஆவியை,’ அதாவது மனச்சாய்வை, தூண்டியதே அதற்குக் காரணம்.—எண்ணாகமம் 13:30; 14:6-10, 24-ஐ வாசியுங்கள்.

9. கிறிஸ்தவர்கள் ஏன் கும்பலோடு ஒத்துப்போகக் கூடாது?

9 அன்றைய மதத் தலைவர்களுக்குக் கீழ்ப்படியாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிய அவருடைய சக்தியே இயேசுவின் சீடர்களுக்குப் பலமளித்தது. (அப். 4:21, 31; 5:29, 32) அநேகர் எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்குக் கும்பலோடு ஒத்துப்போகவே விரும்புகிறார்கள். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் சரியானதைச் செய்வதில் உறுதியாய் இருக்க வேண்டும். என்றாலும், கடவுளுடைய சக்தி அவர்களுக்குப் பலத்தை அளிப்பதால் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாய் இருக்கப் பயப்படுவதில்லை. (2 தீ. 1:7) நாம் இணங்கிவிடாதிருக்க வேண்டிய சகாக்களின் வற்புறுத்தல்களில் ஒன்றைப் பற்றி இப்போது சிந்திப்போம்.

10. கிறிஸ்தவர்கள் சிலர் என்ன இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்படலாம்?

10 நண்பன் ஒருவன் தவறான பழக்கத்தில் ஈடுபடுவது தெரிய வரும்போது இளைஞர்கள் சிலர் இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்படலாம். மூப்பர்களிடம் விஷயத்தைச் சொன்னால் நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக ஆகிவிடுமென அவர்கள் நினைக்கலாம்; அதனால், அவர்கள் உண்மையை மூடிமறைக்க முயலலாம். தவறு செய்தவரும்கூட அதை யாரிடமும் சொல்லக்கூடாதென நண்பர்களை வற்புறுத்தலாம். உண்மைதான், இப்படிப்பட்ட வற்புறுத்தலை இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்கள் சிலரும்கூட எதிர்ப்படுகிறார்கள். நண்பரோ, குடும்பத்தாரோ செய்த தவறைச் சபை மூப்பர்களிடம் போய்ச் சொல்ல அவர்கள் தயங்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

11, 12. சபையிலுள்ள ஒருவர் தான் செய்த தவறை யாரிடமும் சொல்லக்கூடாதென வற்புறுத்தினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும், ஏன்?

11 இந்தச் சூழ்நிலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஸ்டீவ் என்ற கிறிஸ்தவ இளைஞனுக்கு ஆபாசக் காட்சிகளைப் பார்க்கிற பழக்கம் இருக்கிறது; இது, அவனுடைய நண்பன் அலெக்ஸுக்குத் தெரிய வருகிறது. ஸ்டீவ் செய்வது சரியல்லவென்று அவனுடைய நண்பன் சொல்கிறான். ஆனால், அதை ஸ்டீவ் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. இந்த விஷயத்தைப் பற்றி மூப்பர்களிடம் பேசும்படி அலெக்ஸ் சொல்கிறான்; ‘நீ உண்மையிலேயே என் நண்பனாக இருந்தால் என்னை மூப்பர்களிடம் காட்டிக்கொடுக்க மாட்டாய்’ என்று ஸ்டீவ் சொல்கிறான். நட்பு முறிந்துவிடுமோ என்று அலெக்ஸ் பயப்பட வேண்டுமா? தான் எந்தத் தவறும் செய்யவில்லையென ஸ்டீவ் அடித்துச் சொல்லிவிட்டால் மூப்பர்கள் யார் சொல்வதை நம்புவார்கள் என அவன் பயப்படலாம். ஆனால், அலெக்ஸ் அதைப் பற்றி வாயே திறக்காதிருந்தால் சூழ்நிலை இன்னும் மோசமாகிவிடும். ஆம், யெகோவாவுடன் உள்ள பந்தத்தையே ஸ்டீவ் இழக்க நேரிடலாம். “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என பைபிள் சொல்வதை அலெக்ஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். (நீதி. 29:25) அலெக்ஸ் வேறெதையும் செய்யலாம்? மீண்டும் ஸ்டீவைச் சந்தித்து அவன் செய்த தவறை அன்போடு உணர்த்தலாம். அதற்குத் தைரியம் தேவை. இந்தச் சந்தர்ப்பத்தில், ஸ்டீவ் தன் நண்பன் சொல்வதை ஒருவேளை காதுகொடுத்துக் கேட்கலாம். மூப்பர்களிடம் பேசும்படி ஸ்டீவை அலெக்ஸ் மீண்டும் உற்சாகப்படுத்த வேண்டும்; சீக்கிரத்தில் போய்ப் பேசாவிட்டால் தானே போய் அதை அவர்களிடம் தெரிவிக்கப் போவதாக அலெக்ஸ் சொல்ல வேண்டும்.—லேவி. 5:1.

12 ஒருவேளை இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்பட்டால், உங்களுடைய ஆலோசனையை முதலில் நண்பன் மதிக்காமல் போகலாம். ஆனால், அவனுடைய நன்மைக்காகத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை அவன் காலப்போக்கில் புரிந்துகொள்ளலாம். அவன் உங்கள் உதவியை ஏற்றுக்கொண்டால், உங்களுடைய தைரியத்துக்கும் உண்மைத்தன்மைக்கும் காலமெல்லாம் நன்றியுள்ளவனாக இருப்பான். ஆனால் அவன் உங்கள்மீது கோபப்பட்டால், அப்படிப்பட்டவனை உங்களுடைய நண்பனாக வைத்துக்கொள்வீர்களா? நம்முடைய தலைசிறந்த நண்பரான யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதுதான் எப்போதுமே சரியானது. அவருக்கு முதலிடம் கொடுக்கும்போது அவரை நேசிக்கிற மற்றவர்கள் நம்முடைய உண்மைத்தன்மையை மதிப்பார்கள், நமக்கு உற்ற நண்பர்களாயும் ஆவார்கள். கிறிஸ்தவ சபையில் நாம் பிசாசுக்கு ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. அப்படி இடங்கொடுத்தால், நாம் யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்திவிடுவோம். மாறாக, கிறிஸ்தவச் சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும்போது அந்தச் சக்திக்கு இசைவாகச் செயல்படுவோம்.—எபே. 4:27, 30.

எல்லாவித கஷ்டங்களையும் சகிக்க...

13. எப்படிப்பட்ட கஷ்டங்களை யெகோவாவின் மக்கள் எதிர்ப்படுகிறார்கள், அந்தக் கஷ்டங்கள் ஏன் அனைவருக்கும் வருகின்றன?

13 கஷ்டங்கள் பல வடிவங்களில் வரலாம்; பண நெருக்கடி, வேலை இழப்பு, இயற்கை பேரழிவு, அன்பானவரின் இறப்பு, உடல்நலப் பிரச்சினை போன்ற வடிவங்களில் வரலாம். ‘கொடிய காலங்களில்’ வாழ்வதால், இன்றோ நாளையோ ஏதாவதொரு விதமான கஷ்டத்தை நாம் அனைவரும் எதிர்ப்பட வேண்டியிருக்கும். (2 தீ. 3:1) ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், எல்லாவித கஷ்டங்களையும் சகிக்க கடவுளுடைய சக்தி நமக்குப் பலத்தைக் கொடுக்கும்.

14. கஷ்டங்களைச் சகிக்க யோபுவுக்கு எது பலத்தை அளித்தது?

14 யோபு அடுத்தடுத்து பல கஷ்டங்களை அனுபவித்தார். ஆடுமாடுகளை இழந்தார், பிள்ளைகளைப் பறிகொடுத்தார், நண்பர்களை இழந்தார், வியாதியில் விழுந்தார்; அவருடைய மனைவியும் யெகோவா மீதிருந்த நம்பிக்கையைத் துறந்தார். (யோபு 1:13-19; 2:7-9) என்றாலும், யோபுவுக்கு எலிகூ ஆறுதலாக இருந்தார். யோபுவுக்கு அவர் சொன்ன செய்தியும் யெகோவா சொன்ன செய்தியின் சாராம்சமும் இதுதான்: “தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும்.” (யோபு 37:14) எல்லாக் கஷ்டங்களையும் சகிக்க யோபுவுக்கு எது உதவியது? நம்முடைய கஷ்டங்களைச் சகிக்க நமக்கு எது உதவும்? யெகோவாவின் சக்தியும் வல்லமையும் எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன என்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பதும், தியானித்துப் பார்ப்பதும் உதவும். (யோபு 38:1-41; 42:1, 2) நம் வாழ்க்கையில் எந்தெந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் கடவுள் அக்கறை காட்டியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கலாம். அவர் இன்னமும் நம்மீது அக்கறை காட்டுகிறார்.

15. கஷ்டங்களைச் சகிக்க அப்போஸ்தலன் பவுலுக்கு பலமளித்தது எது?

15 அப்போஸ்தலன் பவுல் விசுவாசத்தின் காரணமாக உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அநேக கஷ்டங்களைச் சகித்தார். (2 கொ. 11:23-28) அந்தக் கடினமான சூழ்நிலைகளில் அவர் எப்படி மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் சமநிலையோடு இருந்தார்? யெகோவாவிடம் ஜெபம் செய்து அவரைச் சார்ந்திருந்ததே பவுலுக்குக் கைகொடுத்தது. தனக்கு வந்த சோதனையின் உச்சக்கட்டமாகத் தியாக மரணத்தைச் சந்திக்கவிருந்த சமயத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “என் மூலம் பிரசங்க வேலை முழுமையாய் நிறைவேற்றப்படுவதற்காகவும், எல்லாத் தேசத்தாரும் அந்தச் செய்தியைக் கேட்பதற்காகவும் நம் எஜமானர் என் பக்கத்தில் நின்று, எனக்குப் பலமூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டேன்.” (2 தீ. 4:17) எனவே, “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்று தன் சொந்த அனுபவத்திலிருந்து சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் உறுதியளிக்க முடிந்தது.—பிலிப்பியர் 4:6, 7, 13-ஐ வாசியுங்கள்.

16, 17. கஷ்டங்களைச் சமாளிக்க இன்று யெகோவா தம்முடைய மக்களுக்கு எப்படிப் பலம் அளிக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.

16 யெகோவா தம்முடைய மக்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதை ரோக்சானா என்ற பயனியர் சகோதரி அனுபவத்தில் கண்டார். மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள சில நாட்கள் விடுப்பு தரும்படி தன் முதலாளியிடம் கேட்டபோது, விடுப்பு எடுத்தால் வேலையிலிருந்து நீக்கிவிடுவதாகக் கோபத்தோடு சொன்னார். ஆனாலும் அவர் மாநாட்டுக்குச் சென்றுவிட்டார், வேலை போய்விடக் கூடாதென ஊக்கமாய் ஜெபமும் செய்தார். அதனால் அவருக்கு மனசமாதானம் கிடைத்தது. மாநாடு முடிந்து திங்கட்கிழமை வேலைக்குச் சென்றபோது அவருடைய முதலாளி சொன்னபடியே அவரை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். ரோக்சானா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். குறைந்த சம்பளமாக இருந்தாலும் குடும்பத்தைக் காப்பாற்ற அந்த வேலை அவருக்குத் தேவைப்பட்டது. அவர் மீண்டும் ஜெபம் செய்தார்; மாநாட்டின் மூலம் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்த கடவுளால் தன் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும் என்பதை யோசித்துப் பார்த்தார். அவர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தபோது, தையல் வேலையில் அனுபவமிக்க “ஆட்கள் தேவை” என்ற விளம்பரத்தைப் பார்த்தார். உடனடியாக விண்ணப்பித்தார். அவருக்கு முன் அனுபவம் இல்லாதபோதிலும் முதலாளி அவருக்கு வேலை போட்டுக் கொடுத்தார்; முன்பு கிடைத்ததைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு சம்பளம் அவருக்குக் கிடைத்தது. தன்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைத்ததை அவர் உணர்ந்தார். அதைவிடப் பெரிய ஆசீர்வாதம் என்னவென்றால், தன்னோடு வேலை பார்க்கிற பலருக்கு நற்செய்தியைச் சொல்ல முடிந்தது. அதனால், அந்த முதலாளியையும் சேர்த்து ஐந்து பேர் சத்தியத்தைப் படித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

17 சில சமயங்களில், நம்முடைய ஜெபத்திற்கு உடனடியாக அல்லது நாம் எதிர்பார்க்கிற விதத்தில் பதில் கிடைக்காதது போல் தோன்றலாம். அப்படியென்றால், அதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். அது யெகோவாவுக்குத்தான் தெரியும், நாம் போகப் போக அதைப் புரிந்துகொள்வோம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதி: கடவுள் தம்முடைய உண்மை ஊழியர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.—எபி. 6:10.

கஷ்டங்களையும் சோதனைகளையும் சமாளிக்க...

18, 19. (அ) கஷ்டங்களும் சோதனைகளும் வருமென நாம் ஏன் எதிர்பார்க்கலாம்? (ஆ) கஷ்டங்களை நீங்கள் எப்படி வெற்றிகரமாய்ச் சமாளிக்கலாம்?

18 சோதனையை, சோர்வை, துன்புறுத்தலை, சகாக்களின் வற்புறுத்தலைச் சந்திக்கும்போது யெகோவாவின் மக்களாகிய நாம் ஆச்சரியப்படுவதில்லை. மொத்தத்தில் இந்த உலகம் நம்மைப் பகைக்கிறது. (யோவா. 15:17-19) ஆனாலும், கடவுளைச் சேவிக்கையில் நாம் எதிர்ப்படுகிற எந்தச் சவாலையும் சமாளிக்க அவருடைய சக்தி நமக்குப் பலத்தைத் தரும். நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு சோதிக்கப்பட யெகோவா அனுமதிக்க மாட்டார். (1 கொ. 10:13) அவர் ஒருபோதும் நம்மைவிட்டு விலகவும் மாட்டார், நம்மைக் கைவிடவும் மாட்டார். (எபி. 13:5) அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது நம்மைப் பாதுகாக்கிறது, பலப்படுத்துகிறது. அதோடு, நாம் கஷ்டத்தில் தவிக்கையில் நமக்கு உதவ கடவுளுடைய சக்தி சக கிறிஸ்தவர்களைத் தூண்டலாம்.

19 நாம் எல்லாரும் ஜெபத்தின் மூலமும் பைபிள் படிப்பின் மூலமும் கடவுளுடைய சக்தியைத் தொடர்ந்து பெறுவோமாக. ‘நாம் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காகவும் நீடிய பொறுமையைச் சந்தோஷத்தோடு காண்பிப்பதற்காகவும், கடவுளுடைய மகத்தான வல்லமையினால் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவோமாக.’—கொலோ. 1:11.

[அடிக்குறிப்பு]

a உதாரணத்திற்கு, காவற்கோபுரம் மே 1, 2001 பக்கம் 16-யும் மே 1, 2005 பக்கங்கள் 24-28-யும் பாருங்கள்.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

• துன்புறுத்தலை எதிர்கொள்ள எது சிறந்த வழி?

• தான் செய்த தவறை யாரிடமும் சொல்லக் கூடாதென ஒருவர் வற்புறுத்தினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

• கஷ்டங்கள் வரும்போது நீங்கள் எதைக் குறித்து நம்பிக்கையாய் இருக்கலாம்?

[பக்கம் 28-ன் படம்]

யோசுவா மற்றும் காலேபிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

[பக்கம் 29-ன் படம்]

தவறுசெய்த ஒரு நண்பருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்