மழைக்கால மாதங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்
1 தங்கள் விடுமுறை நாட்களின்போது என்ன செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று பள்ளிப் பிள்ளைகளிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. பள்ளிக்குத் திரும்பியவுடன் தாங்கள் என்ன செய்தார்கள் என்பதன் பேரில் ஓர் அறிக்கையைக் கொடுக்கும்படியும் ஒருவேளை அவர்கள் கேட்கப்படலாம். மெய்யாகவே, நாம் அனைவரும் இளைஞராயிருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் நம்மை நாமே பின்வருமாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘மழைக்கால மாதங்களில் நாம் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறோம்? அது கடந்துபோனதும் பிரயோஜனமான விதத்தில் செலவழிக்கப்பட்ட நேரத்தைக் குறித்து பயனுள்ள அறிக்கையை நம்மால் கொடுக்கமுடியுமா?’ ‘காலத்தை பிரயோஜப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்ற அறிக்கைக்குச் செவிகொடுப்போமானால் நாம் அவ்வாறு செய்வோம்.—எபே. 5:15, 16.
மாநாடுகளிலிருந்து நன்மை அடையுங்கள்
2 நமது திட்டங்களில் நாம் அனைவரும் உட்படுத்தியிருக்க வேண்டிய ஒரு காரியம் “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவதாகும். பிற்பாடு என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டோம் என்பதைக் காண்பதற்கும் யெகோவாவை துதிப்பவர்களாக அதை நமது வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதற்கும் நாம் எழுதின குறிப்புகளை ஆய்வு செய்வது நல்லதாக இருக்கும். எபேசியர் 4:25-ல் “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” என்று நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். நமது நெருங்கிய பிறன் நம்முடைய சொந்த குடும்ப அங்கத்தினர்களே. அவர்களோடு அல்லது நமது ஆவிக்குரிய குடும்ப அங்கத்தினரோடு மாநாட்டு நிகழ்ச்சிநிரலின்போது வழங்கப்பட்ட மகத்தான ஆவிக்குரிய உணவின் ஒருசில காரியங்களை நாம் கலந்துரையாடலாம். அப்படி செய்வதன் மூலம் நாம் “யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்வதற்கு” நாம் ஒருவருக்கொடுவர் உதவி செய்பவர்களாக இருப்போம்.—செப். 3:9.
வெளி ஊழியத்தில் பங்குகொள்ளுங்கள்
3 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பள்ளி புரோஷுர் தவிர எந்த ஒரு புரோஷுரையாகிலும் அளிக்க சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் புரோஷுர்களை அளிப்பவர்களாயிருக்க இந்த இரண்டு மாதங்களின்போது கூடிய மட்டும் மிகுதியான அளவில் ஊழியத்தில் பங்குபெற நீங்கள் திட்டமிட்டுவிட்டீர்களா? நம்முடைய சொந்த சபையில் நாம் இருப்போமாகில் நாம் ஒழுங்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை ஆதரிக்க விரும்புவோம். ஆண்டின் இந்தக் காலப்பகுதியின்போது பகல்வெளிச்சம் சற்று நீண்டதாக இருப்பதால் நாம் ஒருவேளை மாலைநேர வெளி ஊழியத்தில் பங்குபெறும் நிலையில் இருக்கக்கூடும். மாலை நேரங்களில் அநேக ஆட்கள் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் அச்சமயத்தில் அதிக ஓய்வான மனநிலையில் இருப்பார்கள். நமக்குப் போதிக்கப்பட்டிருக்கும் அந்த ராஜ்ய நற்செய்தியைக் குறித்து அவர்களோடு பேசுவதை இது நமக்கு எளிதாக்கக்கூடும்.—ஏசா. 50:4.
4 மாநாட்டுக்குச் செல்வதற்கோ அல்லது விடுமுறையை கழிப்பதற்கோ நாம் பயண ஏற்பாடுகளைச் செய்யும்போது நாம் சில புரோஷுர்களை நம்முடன் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, புரோஷுர்கள் ஒன்றிற்கு நாம் அவர்களுடைய கவனத்தைத் திருப்பலாம். வெளியூருக்குச் செல்லும்போது அங்குள்ள ராஜ்ய மன்றத்தைக் கண்டுபிடித்து கூட்டங்களுக்கு ஆஜராகலாம். அங்குள்ள சகோதர சகாதரிகளுடன் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளலாம். இது நமக்கும் நாம் கூட்டுறவு கொள்ளும் அந்தச் சகோதரருக்கும் உற்சாகமூட்டுதலின் சிறந்த ஊற்றுமூலமாக நிரூபிக்கும்.—ரோமர் 1:12.
5 மாத கடைசியில் நாம் நமது சபையை விட்டு புறப்பட்டுச் செல்கிறோம் என்றால், அடுத்த மாதம் ஆறாம் தேதியன்று சபையின் காரியதரிசி அனுப்பக்கூடிய சபை அறிக்கையில் சேர்க்கப்படும்படி போதியளவு சீக்கிரமாக நம்முடைய வெளி ஊழிய அறிக்கையை நாம் தபாலில் அனுப்பிவிட வேண்டும்.
படிப்புகளை நடத்த பிரயாசப்படுங்கள்
6 சில பைபிள் மாணாக்கர் விடுமுறை நாட்களின்போது வெளியூருக்கு சென்றுவிடுவதால் மழைக்கால மாதங்களில் ஒருசில பைபிள் படிப்புகளே நடத்தப்படுகின்றன. வேதப்படிப்பு நடத்தும் பலரும்கூட வேறொரு சமயத்தில் வெளியூருக்குச் செல்லக்கூடும். படிப்பு நடத்தப்படாமலேயே பல வாரங்கள் கடந்துசெல்லும்படி அனுமதிப்பதைக் காட்டிலும் நாம் ஊரில் இல்லாத சமயங்களில் சபையில் உள்ள யாராவது ஒருவர் அந்தப் படிப்பை நடத்தும்படி நாம் ஏற்பாடு செய்யக்கூடுமா? தொடர்ச்சியான ஆவிக்குரிய போஷாக்கு தேவை என்பதை மாணாக்கரின் மனதில் உணர்த்துவதற்கு கூடிய மட்டும் படிப்பு ஒழுங்காக நடத்தப்படும்படி ஏற்பாடு செய்வது நல்லது.
7 பிராந்தியத்தில் நாம் அக்கறையைக் காணும்போது கூடியமட்டும் விரைவாக அதைத் திரும்பப் போய் பார்க்கவேண்டும். வீட்டுக்காரர் ஒரு புரோஷுரை ஏற்றுக்கொள்வாரானால் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை ஒரு சில பாராக்களை அவர்களோடு சேர்ந்து சிந்திப்பதன் மூலம் நடித்துக் காட்டலாம். பின்பு படிப்பைத் தொடருவதற்காக மறுசந்திப்பு செய்வதற்கு ஒரு திட்டவட்டமான நேரத்தைக் குறித்துவிட நாம் பிரயாசப்பட வேண்டும்.
8 1990-ன் மழைக்கால மாதங்களை நாம் அனைவரும் பின்னோக்கிப் பார்த்து “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கொண்டிருப்பதிலும்” யெகோவாவினுடைய வார்த்தையிலுள்ள ஆரோக்கியமான சத்திய வசனங்களைக் கற்றுக்கொள்ளும்படி மற்றவர்களுக்கு உதவுதிலும் யெகோவாவின் ஊழியராக உண்மையிலேயே நாம் நம்முடைய நேரத்தை ஞானமாக பயன்படுத்தினோம் என்ற உணர்ச்சியைக் கொண்டிருப்போமாக.—2 தீமோ. 1:13.