ராஜ்ய செய்தியை பரப்புவதில் வைராக்கியமாய் இருங்கள்
1 யெகோவா சிறந்த கிரியைகளை செய்யும் கடவுள், மேலும் அவைகளை நிறைவேற்றி முடிப்பதில் அவர் வைராக்கியமுள்ளவராக இருக்கிறார். அவர் செய்யும் எல்லாக் காரியங்களும் அவரை சேவிப்பவர்களின் நன்மைக்கே. தன் தகப்பனின் வைராக்கியத்தைப் பின்பற்றுவதில் இயேசு ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார். ஒரு சமயம் ஆலயத்தை வியாபார வீடாக்குகிறவர்களை துரத்தும்படியாக யெகோவாவின் வீட்டிற்கான வைராக்கியம் அவரை உந்துவித்தது. (யோவான் 2:14-17) “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக” நாம் அடையாளம் காட்டப்பட வேண்டுமென்றால் யெகோவா தேவனுக்கு நம் சேவையில் நாமும்கூட வைராக்கியத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.—தீத்து 2:14.
2 கிறிஸ்தவர்களின் நற்கிரியைகள் மற்றவர்களுக்கு பயனளிக்கின்றன. மற்றொரு நபருக்கு நாம் செய்யக்கூடிய மிக அதிக பயனுள்ள காரியம் யெகோவாவை அறிந்து அவரை சேவிப்பதற்கு அவருக்கு உதவி செய்வதாகும். (யோவான் 17:3) அப்பேர்ப்பட்ட உதவியை நாம் வைராக்கியமுள்ள ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் மூலமாகவும் சீஷர்களை உண்டுபண்ணும் வேலையின் மூலமாகவும் அளிக்கிறோம்.
3 வைராக்கியம் என்றால் என்ன? வைராக்கியம் என்பது ஆவல் அல்லது ஆர்வமுனைப்பு. சரியானது, ஒழுங்கானது எதுவோ அதை செய்வதற்கு மனமார்ந்த விருப்பத்திலிருந்து கிறிஸ்தவ வைராக்கியம் தோன்றுகிறது. “வைராக்கியம்” என்ற கிரேக்க வார்த்தைக்கு அர்த்தம் “கொதிக்க வைப்பது.” கடவுளின் ஊழியர்களாக நாம் ராஜ்ய செய்தியை பரப்புகையில் இந்தக் குணாதிசயத்தை வெளிக்காட்ட வேண்டும். ஊழியத்தில் நாம் வைராக்கியமுள்ளவர்களாக இருக்கிறோமா? யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி மற்றவர்கள் கற்றறிய உதவி செய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோமா?
புரோஷுர்களை அளிப்பதில் வைராக்கியத்தைக் காண்பியுங்கள்
4 பள்ளி மற்றும் யெகோவாவின் சாட்சிகள் என்ற புரோஷுரைத் தவிர மற்ற 32 பக்க புரோஷுர்களை செப்டம்பர் மாதத்தில் அளிக்க மறுபடியும் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”, நீங்கள் திருத்துவத்தை நம்ப வேண்டுமா?, என்றென்றுமாக நிலைத்திருக்கப் போகும் தெய்வீக நாமம், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் போன்ற புரோஷுர்களை நாம் அளிக்கலாம். எந்தப் புரோஷுர் பிராந்தியத்திற்கும், வீட்டில் சந்திக்கும் அந்த நபருக்கும் பொருத்தமானதாக தெரிகிறதோ அதை அளிக்க தயாரிப்பு செய்யுங்கள்.
5 ராஜ்ய செய்தியைப் பரப்புவதில் வைராக்கியமுள்ளவர்களாக இருக்க நாம் நன்கு தயாரிக்க வேண்டும். தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறோமா? சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு நாம் அளிக்கும் புரோஷுரை எவ்வாறு இணைத்துப் பேசலாம்? புரோஷுர்களில் உள்ள என்ன திட்டவட்டமான குறிப்புகளை நாம் குறிப்பிடலாம்? நாம் நேரமெடுத்து ஐந்து புரோஷுர்களோடும் அறிமுகமாகி, நம் சொந்த மனங்களிலேயே அதற்கான உற்சாகத்தை வளர்ப்போமானால், அவைகளை வைராக்கியத்தோடு நம் பிராந்தியங்களில் இருப்போர்க்கு அளிக்க தயாராய் இருப்போம்.
புரோஷுர்களை அளிக்க ஆலோசனைகள்
6 உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்பு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இன்றைக்கு உலகில் இருக்கும் துன்மார்க்கத்தைக் குறித்து கடவுள் அக்கறை கொண்டிருக்கிறாரா என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? (பிரதிபலிப்பிற்காக அனுமதியுங்கள்.) சீக்கிரத்தில் துன்மார்க்கமான ஆட்கள் அழிக்கப்படுவார்கள் என்று பைபிள் விளக்குகிறது. (சங்கீதம் 92:7-ஐ வாசியுங்கள்.) காரியம் இவ்வாறாக இருப்பதினால், உண்மையான வழிநடத்துதலுக்கும் பாதுகாப்பிற்கும் யாரிடமாக நாம் திரும்பலாம்? (சங்கீதம் 145:20 வாசியுங்கள்.) ஆகையால் நம்முடைய இரட்சிப்பிற்கான ஒரே வழி நம் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனோடு உள்ள உறவின் மூலமேயாகும். எல்லாக் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கும் அவர் வாக்களித்திருக்கும் ஆசீர்வாதங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.” பின்பு, பூமியில் வாழ்க்கை என்ற புரோஷுரில் 49-ம் படத்திற்குத் திருப்பி, தலைப்பை வாசித்து படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களைக் குறிப்பிடுங்கள். அல்லது அரசாங்கம் புரோஷுரில் 29-ம் பக்கத்திற்குத் திருப்பி அங்கு விளக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களை கலந்தாலோசியுங்கள். சிலர் “இதோ!” புரோஷுரில் பாராக்கள் 49, 50-ஐ உபயோகித்து கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு என்ன செய்யும் என்பதை விளக்க விரும்பலாம்.
7 இவை கொடிய காலங்களாக இருப்பதினால் நாம் எடுத்துச் செல்லும் செய்தி அவசரமானதாய் இருக்கிறது. ராஜ்ய செய்தியை பரப்புவதில் வைராக்கியமுள்ளவர்களாய் இருப்பதற்கு நமக்கு ஒரு தேவை இருக்கிறது, கடவுளோடும் அவருடைய வார்த்தையோடும் அறிமுகமாவதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஜீவனை அளிக்கும் அறிவை வைராக்கியத்தோடு பரப்புவதன் மூலம் நம் தேவ பக்தியையும், யெகோவாவுக்கான நம் அன்பையும் வெளிக்காட்டுகிறோம். உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: ‘நற்கிரியைகளுக்காக நான் வைராக்கியம் உள்ளவனாக இருக்கிறேனா? பிரசங்க வேலைக்காக நான் கொடுக்கும் ஆதரவு ஆர்வ முனைப்போடும் முழு ஆத்துமாவோடும் இருக்கிறது என்று விவரிக்கப்படக்கூடுமா?’ நம் பதில்கள் நம்முடைய வைராக்கியத்தின் தன்மையைக் குறித்து அதிகம் நமக்குச் சொல்லும். ராஜ்ய செய்தியை பரப்புவதில் நாம் எந்த அளவுக்கு பங்கு கொள்ளுகிறோமோ அந்த அளவுக்கு நம் வைராக்கியமும் அதிகமாக இருக்கும். நாம் உண்மையிலேயே நற்கிரியைகளுக்காக வைராக்கியமுள்ள ஜனங்கள் என்பதை மற்றவர்கள் காண்பார்கள்.