நீங்கள் ஏன் ஒரு பைபிள் படிப்பு நடத்தவிரும்ப வேண்டும்
1 ஒரு கிறிஸ்தவனுக்கு அதிக பலன்தரத்தக்க அனுபவங்களில் ஒன்று மற்றொருவர் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு அவருக்கு உதவ யெகோவாவால் உபயோகிக்கப்படுதல் ஆகும். (மத். 28:19, 20; 1 கொரி. 3:6, 9) இவ்வாறு நாம் உதவி செய்வோர்க்கு இது நித்திய ஜீவனைக் குறிக்கக்கூடும்.
2 போதிப்பவருக்கும் கற்றுக்கொள்பவருக்கும் இடையே மிக நெருங்கிய உறவு ஒன்று வளருகிறது. மாணாக்கரின் ஆவிக்குரிய வளர்ச்சி உண்மையிலேயே மிகுந்த சந்தோஷத்திற்கு ஊற்றுமூலமாய் இருக்கிறது. (1 தெச. 2:11, 19, 20) ஆகையால், தன் சொந்த குடும்பத்தாராக இல்லாத வெளியே இருக்கும் ஒருவரோடு ஒரு பைபிள் படிப்பாவது நடத்த வேண்டும் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் இலக்காக இருக்க வேண்டும். தன் சொந்த குடும்பத்தோடு அர்த்தமுள்ள, ஒழுங்கான பைபிள் படிப்பை நடத்துவது ஒவ்வொரு குடும்பத் தலைவரின் உத்தரவாதமாயிருக்கிறது என்பது உண்மையே. தகப்பன் விசுவாசியாக இல்லாத குடும்பங்களில், கிறிஸ்தவத் தாய் பைபிளை தன் பிள்ளைகளோடு படிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
படிப்புகளுக்காக ஜெபியுங்கள்
3 இந்தக் கடைசி காலத்திற்குள் நாம் இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டபடியால் திறம்பட்ட பைபிள் படிப்புகளை நடத்த நாம் அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் யெகோவாவிடம் ஒழுங்காக ஜெபிப்பது, ஒரு பைபிள் படிப்பை நடத்துவதற்கு நம்முடைய உண்மையான ஆர்வத்தைக் காட்டும். இதில் ஜீவன் அல்லது மரணம் என்ற பிரச்னை உட்பட்டிருப்பதை நாம் காண்கிறோம் என்பதை இது காட்டுகிறது. (எசே. 33:7-9, 14-16) நம்முடைய நேர்மையான முயற்சிகளில் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—1 யோவான் 5:14, 15.
4 சீஷர்கள் உண்டுபண்ணுவதில் திறம்பட்டவர்களாக ஆவதற்கு நாம் நன்கு தயாரிக்க வேண்டும். பைபிள் படிப்புகளை நடத்துவதில் தேர்ச்சி பெற்றவர்களை கவனிப்பதும்கூட மிகவும் உதவியாயிருக்கும். சீஷர்களை உண்டுபண்ணுவதில் வெற்றியடைந்திருக்கும் பயணக் கண்காணிகள் மேலும் மற்றவர்களின் பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் வரப்போகும் மாதங்களில் தெரியப்படுத்துவோம். எவ்வாறு பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, பலன்தரும் வகையில் நடத்த வேண்டும் என்பதன் பேரில் நடைமுறையான கருத்துக்கள் தொடர்ச்சியான கட்டுரைகள் மூலம் மேம்படுத்திக் காட்டப்படும்.
எதிர்கால கட்டுரைகள்
5 நம் ராஜ்ய ஊழியத்தின் எதிர்கால இதழ்களில் சிந்திக்கப்பட போகும் கருத்துக்களில் சில யாவை? எப்படி பல பிரஸ்தாபிகளும் பயனியர்களும் பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கின்றனர் என்பதையும் அவர்களுடைய மாணாக்கர்களின் இருதயத்தை எட்ட எந்தக் கற்பிக்கும் முறைகளை உபயோகித்திருக்கின்றனர் என்பதையும் நாங்கள் கலந்தாலோசிப்போம். யெகோவாவின் அமைப்பிற்கான போற்றுதலை வளர்ப்பதற்கும் மேலும் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கான விருப்பத்தை விருத்திசெய்வதற்கும் கருத்துக்களை நாங்கள் பகிர்ந்துகொள்வோம். உங்கள் பிள்ளைகள் யெகோவா தேவனோடு ஒரு நெருங்கிய தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதற்கு உங்களுடைய சொந்த குடும்ப பைபிள் படிப்பை எவ்வாறு அதிக அர்த்தமுள்ளதாக ஆக்குவது என்பதைப் பற்றியும் ஆலோசனைகள் இருக்கும்.
6 கடந்த நான்கு ஊழிய ஆண்டுகளில் உலகமுழுவதும் 9,59,834 ஆட்கள் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 836 பேர் இந்தியாவில் உள்ள சபைகளில் இருக்கின்றனர். இந்த ஆட்களில் பெரும்பான்மையோர் அவர்களோடு ஒருவர் பைபிள் படிப்பு நடத்தியதின் உதவியால் முழுக்காட்டுதல் எடுக்கும் நிலையை எட்டினர். ஞாபகார்த்த நாளிற்கும், நம் மாவட்ட மாநாடுகளுக்கும் ஆஜராயிருப்பவர்களின் எண்ணிக்கை முழுக்காட்டுதலுக்கு முன்னேற்றமடைய உதவப்பட வேண்டிய அநேகர் இருக்கின்றனர் என்று சுட்டிக் காட்டுகிறது. அப்பேர்ப்பட்டவர்களோடு பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, நடத்த நாம் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் இன்னும் அநேகர் சீஷர்களாக ஆவதற்கு நாம் உதவி செய்து இறுதியில் நித்திய ஜீவனை அனுபவிக்கலாம்.—1 தீமோ. 6:12, 19.