வேதப்படிப்புகளைத் துவங்குவதற்குவிழிப்புள்ளவர்களாயிருங்கள்
1 வேதப்படிப்புகளைத் துவங்கி அவற்றை நடத்துவது யெகோவாவின் சாட்சிகளாக நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாக இருக்கிறது. (மத். 28:19, 20) ஆகையால், இதைச் செய்வதில் கடவுளுடைய உடன் வேலையாட்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களா? (1 கொரி. 3:9) சர்வலோகத்திலும் மிகப்பெரியவராகிய அவரைக் குறித்து அறிந்துகொள்வதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்!
2 விரைவில் மாறும் உலக சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட அநேக பிரச்னைகள் இருக்கையில், இந்தக் காரியங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு விடைக்காக நேர்மை இருதயமுள்ள அநேகர் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கேள்விகளுக்கு வெகு நாட்களுக்கு முன்பே யெகோவா விடையை அளித்திருக்கிறார். கடவுளுடைய வார்த்தையில் உண்மை மனதுள்ளோர் போதிக்கப்படுகையில், அவர்கள் ஆறுதல் பெறுகிறார்கள். ஆகவே, வேதப்படிப்புகளைத் துவங்க வாய்ப்புகளுக்காக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.—நீதி. 3:27.
வாய்ப்புகளுக்கு விழிப்புள்ளவர்களாக இருங்கள்
3 நெருங்கிய உறவினர் அல்லது சத்தியத்தில் இல்லாத உங்களுக்கு அறிமுகமான ஒருவருடன் வேதப்படிப்பைத் துவங்குவதைக் குறித்து நீங்கள் சிந்தித்ததுண்டா? நீங்கள் அவர்களை அறிந்திருப்பதனால், இவ்விஷயத்தை அவர்களுடன் கலந்துபேசுவதற்கு பொருத்தமான நேரம் எது என்பதை பகுத்தறிவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும். நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட கேள்வி அல்லது பொருத்தமான நேரத்தில் சொல்லப்படும் ஒரு வார்த்தை சத்தியத்தில் அவர்களுடைய அக்கறையை எழுப்பிவிடக்கூடும். ஒருவரின் அறியவேண்டுமென்ற ஆவல் தூண்டப்படுகையில், பலன்தரும் சம்பாஷணைகள் பொதுவாக தொடருகின்றன, ஒரு பைபிள் படிப்பும் துவங்கப்படலாம்.
4 பல சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ துணையின் சிறந்த நடத்தை விசுவாசத்திலில்லாத ஒருவர் சத்தியத்தில் வருவதற்கு வழியை திறந்து வைத்திருக்கிறது. (1 பேதுரு 3:1, 2) விசுவாசத்திலில்லாத துணைவர்களும் குடும்பத்தின் மற்ற அங்கத்தினரும், அவர்கள் சபையின் அங்கத்தினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படுகையில், அதை விரும்புகிறார்கள். இவர்களில் தனிப்பட்ட அக்கறை காண்பிப்பது சிநேகபான்மையான உறவை வளர்ப்பதற்கு அதிகம் உதவும். சத்தியத்திலுள்ள துணையோடு அல்லது குடும்ப அங்கத்தினரோடுகூட சேர்ந்து வேலை செய்வதன் மூலம், ஒரு வேதப்படிப்பை நீங்கள் ஸ்தாபிக்கக்கூடும்.
5 வீட்டுக்கு வீடு வேலையில் ஈடுபடுகையில், முதல் சந்திப்பிலேயே நாம் ஒரு வேதப்படிப்பைத் துவங்க பிரயாசப்படலாம். இதை எப்படி செய்வது? வீட்டுக்காரர் பிரசுரங்களிலிருந்து நேரடியாக பதிலளிக்கப்படக்கூடிய கேள்விகள் கேட்கையில் சில பிரஸ்தாபிகள் இதைச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். அவர் பிரசுரத்தை வாசிக்க மனமுள்ளவராயிருந்தால், அல்லது நம்மை உள்ளே அழைத்தால், நாம் சம்பாஷணையைத் தொடர்ந்து ஒருவேளை படிப்பை நடித்துக் காட்ட சந்தர்ப்பத்தை பற்றிக்கொள்ளலாம். முதல் சந்திப்பில் எவ்வளவு நேரம் தங்குவது என்பதைக் குறித்து உங்களுடைய நல்யோசனையை உபயோகியுங்கள். வேறொரு மணிநேரத்தில் அல்லது வேறு தினத்தில் மீண்டும் வந்து சம்பாஷணையைத் தொடருவது பயனுள்ளதாக இருக்கலாம். பின்னால் சந்திக்கையில், முதல் சந்திப்பில் நீங்கள் அறிமுகப்படுத்தின பொருளின் பேரில் தொடர்ந்து சம்பாஷிக்க விரும்பலாம். அல்லது முந்தின சந்திப்பின் முடிவில் நீங்கள் எழுப்பின கேள்வியை மீண்டும் தொடரலாம்.
முறைப்படியல்லாத சந்தர்ப்பங்களில்
6 வீட்டு வேதப்படிப்புகளைத் துவங்கும் நம் முயற்சியில் முறைப்படியல்லாத சாட்சி பகருதல் மற்றொரு பலன்தரும் வழியாகும். நம்முடைய அன்றாடக வேலைகளில், படிக்க விரும்பும் அநேக ஆட்களுடன் நாம் தொடர்புக்குள் வரலாம். நாம் திறம்பட்டவர்களாக இருப்பதற்கு உதவிசெய்ய, சம்பாஷணைகளைத் துவங்குவதற்கு நியாயங்கள் புத்தகத்திலுள்ள நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட சில அறிமுகங்களை நாம் உபயோகிக்கலாம். மேலும் அந்த நபர் வேறு இடத்தில் வசிப்பதனால் நாம்தானே அதை நடத்த முடியாமல் இருக்கும் என்பதனால் முதல் சந்திப்பில் வேதப்படிப்பை அளிக்க தயக்கமுள்ளவர்களாய் இருக்காதீர்கள்.
7 முறைப்படியல்லாத சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளுக்காக விழிப்புள்ளவர்களாக இருங்கள், சத்தியத்திற்குச் செவிகொடுப்பவரின் அக்கறையை எழுப்பிவிடும் துண்டுப்பிரதிகளையும் பத்திரிகைகளையும் தாராளமாக வைத்திருங்கள். (பிர. 11:1) ஒரு நபர் சத்தியத்தில் அக்கறையை காட்டினால், அவர் உங்கள் சபையின் பிராந்தியத்தில் இல்லையென்றால், அவருடைய விலாசத்தையும் மற்ற தேவையான தகவல்களையும் பெற்று அவர் வசிக்கும் இடத்திலுள்ள சபைக்கு அதை அனுப்புங்கள். அப்பொழுது வேறொருவர் ஒழுங்கான முறையில் அவருக்கு கவனம் செலுத்தக்கூடும்.
8 சீஷராக்கும் வேலை வெறுமென ஒருசிலர் மட்டுமே செய்யவேண்டிய ஒன்று அல்ல. சபையிலுள்ள யாவரும் செய்யவேண்டிய ஒன்று. சீஷராக்குபவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு கிறிஸ்தவக் கடமை என்பதை மனதில் வைத்திருப்பது வேதப்படிப்புகளைத் துவங்குவதற்கு வாய்ப்புகளுக்காக விழிப்புள்ளவர்களாக இருக்கும்படி நம்மை உற்சாகப்படுத்தும்.