கூட்டங்களை நேரத்துக்கு ஆரம்பித்து நேரத்துக்கு முடியுங்கள்
1 வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் உட்பட, எல்லா சபை கூட்டங்களும் நேரத்துக்கு ஆரம்பித்து நேரத்துக்கு முடிக்கப்பட வேண்டும். ஏன்? நேரத்தில் இருப்பது, கூட்டங்களுக்கு ஆஜராகி பங்கெடுக்கும் அனைவருக்கும் மதிப்பு கொடுப்பதையும், ஒழுங்கையும் பிரதிபலிக்கிறது. (பிர. 3:17பி; 1 கொரி. 14:33) கூட்டங்களை நேரத்துக்கு ஆரம்பித்து முடிப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நம் அக்கறையைக் காண்பிக்கலாம்.
2 தேவையான விஷயங்களை கவனித்துக் கொள்வதற்காகவும், ஆரம்ப பாட்டு மற்றும் ஜெபத்தில் பங்கு கொள்வதற்காகவும், மற்றவர்களைச் சந்திப்பதற்காகவும் கூட்டங்களுக்கு முன்பாகவே வந்துசேர நாம் எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும். பாட்டுக்கும் ஜெபத்துக்கும் பொதுவாக ஐந்து நிமிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. சபையை ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்பவர்கள், கூட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, அது அவர்களுடைய ஆரம்ப மற்றும் முடிவு ஜெபங்களின் சொற்களில் பிரதிபலிக்குமாறு செய்ய வேண்டும். அப்பேர்ப்பட்ட ஜெபங்கள் நீண்டதாக இருக்கத் தேவையில்லை.
3 பொது கூட்டம்: பொது பேச்சுகள் 45 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறுவது அதைத் தொடர்ந்து வரும் காவற்கோபுரம் படிப்பை பாதிக்கும். பாட்டுகள் மற்றும் ஜெபங்கள் உட்பட, இரண்டு கூட்டங்களும் இரண்டு மணிநேரத்தில் முடிக்கப்பட வேண்டும். சங்கத்தின் குறிப்புத்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தை பொது பேச்சாளர்கள் கடைபிடிக்க வேண்டும். வாழ்த்துக்கள் போன்ற தொடர்பற்ற விஷயங்களை பேச்சில் சேர்க்கக்கூடாது. ஒரு பேச்சாளர் ராஜ்ய மன்றம் இருக்கும் இடத்தைப் பற்றி விவரம் இல்லாதவராயிருந்தால், போக வேண்டிய வழியையும், ஏறத்தாழ பயணம் எடுக்கும் நேரத்தைப் பற்றியும் அழைத்திருக்கும் சபையிடம் விவரம் கேட்க வேண்டும்.
4 “காவற்கோபுரம்” படிப்பு: எல்லாப் பாராக்களும் வாசிக்கப்பட்டு, விமர்சனக் கேள்விகள் சிந்தித்தலோடு உட்பட காவற்கோபுரம் படிப்புக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நடத்துபவரின் சுருக்கமான, குறிப்பான முன்னுரை குறிப்புகள், அக்கறையைத் தூண்டி பாடத்திற்குள் வழிநடத்த வேண்டும். படிப்பின் போது அவருடைய குறிப்புகளும் விளக்கங்களும் அளவோடு இருக்க வேண்டும். பொருளடக்கத்தை நேரத்துக்கு ஏற்றாற் போல் பிரித்துக் கொள்வது, பாடத்தின் முதற் பாதியில் அதிக நேரம் செலவழித்துவிட்டு பின்னர் அடுத்த பாதியை விரைவில் முடிப்பதைத் தவிர்க்க நடத்துபவருக்கு உதவி செய்யும்.
5 தேவராஜ்ய உழியப்பள்ளி: இது 45 நிமிட கூட்டம். போதனை பேச்சும், பைபிள் வாசிப்பிலிருந்து சிறப்பு அம்சங்களும் நேரம் முடிந்தவுடன் நிறுத்தப்படாவிட்டாலும், இந்தப் பகுதிகள் நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் முடிக்க வேண்டும். இது செய்யப்படாவிட்டால், தனிப்பட்ட முறையில் ஆலோசனை கொடுக்கப்பட வேண்டும். பள்ளி கண்காணியின் ஆலோசனையும், குறிப்புகளும் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் இருக்கவேண்டும். எல்லா மாணாக்கர்களும் மேடைக்கு அருகில் அமர்ந்திருப்பதாலும், கொடுக்கப்பட்ட நேரம் முடிகையில் ஒவ்வொருவரும் உடனடியாக தன் பேச்சை முடித்துக்கொள்வதாலும் நேரம் சேமிக்கப்படலாம்.—1991-ன் தேவராஜ்ய ஊழியப்பள்ளி அட்டவணையைப் பாருங்கள்.
6 ஊழியக் கூட்டம்: இதுவும் 45 நிமிட கூட்டம். தேவராஜ்ய ஊழியப்பள்ளி மற்றும் பாட்டுகள் ஜெபங்களோடு சேர்ந்து, முழு நிகழ்ச்சிநிரலும் 1 மணிநேரம், 45 நிமிடங்களை மீறிச் செல்லக்கூடாது. ஊழியக்கூட்டத்தின் பகுதிகளை கையாளும் சகோதரர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தை கடைபிடிக்க வேண்டும். கேள்விகள் மற்றும் பதில்கள் மூலம் சிந்திக்கப்படும் பகுதிகளுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் மட்டுமே தேவைப்படும். விரிவான அறிமுக தகவலை கூட்ட வேண்டிய தேவையில்லை. நடிப்புகள் நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்டிருக்க வேண்டும், அந்தப் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வதற்கு பங்கு பெறுவோர் தயாராகவும் இருக்க வேண்டும்.
7 சபை புத்தகப் படிப்பு: ஆரம்ப மற்றும் முடிவு ஜெபம் உட்பட இது ஒரு மணிநேர கூட்டம். எல்லாப் பாராக்களும் வாசிக்கப்பட வேண்டும். கூட்டத்தை நேரத்துக்கு முடிக்க உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, பாடத்தின் கடைசி பாகத்தை விரைவாக முடிப்பதைத் தவிர்க்க அல்லது அதிக முன்னதாகவே முடிப்பதைத் தவிர்க்க, நடத்துபவர் பொருளடக்கத்தை பிரிப்பார். ஒவ்வொரு பாராவிலும் எவ்வளவு நேரம் செலவழிக்கப்படுகிறது என்பதைப் பற்றி நடத்துபவர் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். முக்கிய குறிப்புகள் தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த விஷயத்தில் எப்பேர்ப்பட்ட சவாலையும் எதிர்ப்பட நடத்துபவரின் கற்பிக்கும் கலை அவருக்கு உதவும்.—தீத்து 1:9.
8 வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்: பிராந்திய நிமிப்புகள் செய்வது மற்றும் ஜெபத்தோடு முடிப்பதையும் சேர்த்து இவைகள் 15 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடாது. ஊழியத்துக்கு வெளியே செல்பவர்கள் கூடுமானவரை விரைவில் தங்கள் வெளி ஊழியத்தை ஆரம்பிக்க விரும்புவார்கள். ஒரு பெரிய தொகுதி வரும் வரை தாமதிக்காமல், நடத்துபவர் கூட்டத்தை நேரத்துக்கு ஆரம்பிப்பார். பிராந்திய நியமிப்புகள் செய்யப்பட்டு, கூட்டம் ஜெபத்துடன் முடிக்கப்பட்டவுடனும், அந்தத் தொகுதி உடனடியாக வெளியே புறப்படலாம். வந்திருக்கும் பயனியர்களுக்கு இது விசேஷமாக முக்கியமானதாயிருக்கும்.
9 நேரத்துக்கு ஆரம்பித்து, நேரத்துக்கு முடிவடையும் கூட்டங்களிலிருந்து நாம் அனைவருமே பயனடையலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வீட்டில் இருக்கும்படி எதிர்ப்பார்க்கும் விசுவாசத்தில் இல்லாத துணைவர்களை உடையவர்களால் இது விசேஷமாகப் போற்றப்படுகிறது. கூட்டங்களுக்கு போகவும், திரும்பி வரவும் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்கையில் அல்லது வீட்டுக்குத் திரும்பும் நேரத்தை சொல்கையில், பிளவுபட்ட குடும்பங்களிலிருந்து வருபவர்கள், கூட்டங்களுக்கு முன்னும் பின்னும் மற்றவர்களுடன் பழகுவது, பிரசுரங்களை வாங்குவது போன்ற காரியங்களுக்காக தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தை நினைவில் கொள்ள வேண்டும். கேள்விக்கிடமின்றி, கூட்டங்களை நேரத்துக்கு ஆரம்பித்து, நேரத்துக்கு முடிப்பது, காரியங்கள் “நல்லொழுக்கமாயும் கிரமமாயும்” செய்யப்படுவதற்கு வழிவகுக்கும்.—1 கொரி. 14:40.