புதிய சிற்றேட்டை திறம்பட பயன்படுத்துதல்
1 நம்முடைய சமீபத்திய மாநாட்டில், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற புதிய சிற்றேட்டைப் பெற்றுக்கொள்வதில் நாம் அதிக மகிழ்ச்சியடைந்தோம். பலதரப்பட்ட வாழ்க்கைப் பின்னணியிலுள்ள மக்களையும் அது கவர்ந்திழுக்கும், ஏனென்றால் எண்ணற்றோர் அன்பான ஒருவரின் இழப்பைக்குறித்து துக்கித்திருக்கின்றனர். அதன் கண்கவர் நிழற்படங்களும் விளக்கப்படங்களும் அதை அளிப்பதை எளிதாக்கும். மரணத்திலிருந்து லாசரு உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றி பக்கம் 29-ல் உள்ள தத்ரூபமான சித்திரம் ‘மரணத்தின் விளைவுகளைத் துடைத்தழிப்பதற்கான இயேசுவின் தீவிர ஆசையை’ காட்டுகிறது. அடுத்துள்ள முழுப்பக்க விளக்கப்படம் புதிய உலகில் சந்தோஷகரமான உயிர்த்தெழுதல் காட்சியை வருணிக்கிறது. துக்கப்படுகிறவர்களுடைய இருதயங்களை இது எவ்வளவாக அனலூட்டும்!
2 மரணத்தில் அன்பானவரை இழந்தோரை ஆறுதல்படுத்துவதில் இந்தச் சிற்றேடு ஓர் ஒப்பற்ற உதவியாக இருக்கக்கூடும். சம்பாஷணை முறை கலந்தாலோசிப்புக்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முக்கியக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுவதற்கான கேள்விகள், ஒவ்வொரு பக்கத்தின் அடியில் காணப்படுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பாகத்தின் கடைசியிலுள்ள பெட்டியில் காணப்படுகின்றன. இந்தச் “சிந்தனைக்கு கேள்விகள்” என்பதை, நீங்கள் உங்களுடைய மாணாக்கருக்கு மிகச் சிறந்த உதவியாய் இருப்பதாக உணருகிற எம்முறையிலும் பயன்படுத்தலாம்.
3 மீண்டும் சந்திக்கும்பொழுது, அந்தச் சிற்றேட்டில் காணப்படுகிற குறிப்புகளைக் கலந்தாலோசிப்பதில் தெரிந்தெடுப்பவர்களாய் இருங்கள். பக்கம் 2-ல் உள்ள பொருளடக்க அட்டவணையைக் காண்பித்து, வீட்டுக்காரருக்கு எது அக்கறையூட்டுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும்படி அவரைக் கேட்பதை நீங்கள் பொருத்தமாக நினைக்கலாம். ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் விழிப்புள்ளவர்களாக இருங்கள். அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதித்த பின்பு, எவ்வாறு அந்தச் சிற்றேடு ஆறுதலளிக்கிறது என்பதைக் காண்பியுங்கள். நம்முடைய நம்பிக்கைக்கான ஆதாரத்தை அளிக்கிற பைபிள் வசனங்களை ஒவ்வொரு பாகமும் நிறைவாக அளிக்கிறது.
4 பக்கம் 5-ல் உள்ள “உண்மையான நம்பிக்கை ஒன்று இருக்கிறது” என்ற உபதலைப்பு, மரித்தோருக்கான பைபிள் ஆதாரமுள்ள ஆறுதலளிக்கும் நம்பிக்கையை சிறப்பித்துக் காட்டுகிறது. இது, பக்கங்கள் 26-31-ல் காணப்படுகிற “மரித்தோருக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கை” என்பதைக் கலந்தாலோசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும். “ஆறுதலளிக்கும் வசனங்கள்” என்ற பக்கம் 27-ல் உள்ள பெட்டி, கூடுதலான வசனங்களை அளிக்கிறது. யெகோவா உண்மையிலேயே ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாக’ இருக்கிறார் என்பதைத் துக்கப்படுகிற வீட்டுக்காரர் விரைவில் புரிந்துகொள்வார்.—2 கொ. 1:3-7.
5 சாதுரியமான ஒரு முறையில், இடைப்பட்ட பாகங்கள் மரித்த அன்பான ஒருவருக்கான வித்தியாசமான பிரதிபலிப்புகளைக் கலந்தாலோசிக்கின்றன. துயரத்தை எவ்வாறு சமாளிப்பது, மேலும் இப்படிப்பட்ட இக்கட்டான காலங்களில் எவ்வாறு மற்றவர்கள் உதவிசெய்யலாம் என்பதை அவை காண்பிக்கின்றன. பக்கம் 25-ல், “மரணத்தை சமாளிக்க பிள்ளைகளுக்கு உதவுதல்” என்று தலைப்பிடப்பட்ட பெட்டி இருக்கிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டிய பெற்றோருக்கு இது உண்மையிலேயே உதவியாக இருக்கவேண்டும்.
6 கூடுதலான ஒரு பிரதியை கையில் வைத்துக்கொண்டு, அதை சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்காக பயன்படுத்துங்கள். மரணத்தில் அன்பானவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலளிக்க இந்தப் பிரதிகளை அவர்கள் கொண்டிருக்கும்படி விரும்புகிறார்களா என்பதைக் காண்பதற்கு நீங்கள் உங்களுடைய பிராந்தியத்திலுள்ள ஏதாவது இழவு வீடுகளைச் சந்திக்கச் செல்ல விரும்பலாம். அன்பான ஒருவரின் சவக்குழியைப் பார்ப்பதற்கு வருகிற சந்தர்ப்பங்களில் கல்லறைக்கு வந்த துக்கப்படுகிறவர்களை சாதுரியமாக நீங்கள் அணுகலாம்.
7 யெகோவா ‘சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவனாக’ இருக்கிறார் என்பதைக் குறித்து நாம் களிகூருகிறோம். (2 கொ. 7:6) ‘துயரப்பட்ட இவர்களுக்கு ஆறுதல்செய்வதில்’ ஒரு பங்கைக்கொண்டிருப்பதை நாம் சிலாக்கியமாக கருதுகிறோம்.—ஏசா. 61:2.