மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான சம்பவம்
1 நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியத்தைக் குறித்து சாட்சிபகர இயேசு தம்முடைய பிதாவின் கட்டளையினால் பூமிக்கு வந்தார். (யோவா. 18:37) மரணம் வரையான அவருடைய உண்மைத்தன்மை யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவந்தது, கடவுளுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தியது, மேலும் கிரய பலியை அளித்தது. (யோவா. 17:4, 6) இதுவே இயேசுவின் மரணத்தை மனித சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சம்பவமாக்கியது.
2 ஆதாமுடைய சிருஷ்டிப்பிலிருந்து, இரண்டே பரிபூரண மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆதாம் தன்னுடைய பிறவா சந்ததியினருக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் நிலையில் இருந்தான். பதிலாக, அவன் சுயநலத்துடன் கலகம்செய்து, மரணத்தில் முடிவடைகிற பரிதாபகரமான வாழ்விற்கு அவர்களை ஆக்கினைக்குள்ளாக்கினான். இயேசு வந்தபோது, பரிபூரண பற்றுமாறா தன்மையையும் கீழ்ப்படிதலையும் காண்பித்தார், இதன்மூலம் விசுவாசத்தை அப்பியாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனுக்கான வாய்ப்பைத் திறந்துவைத்தார்.—யோவா. 3:16; ரோ. 5:12.
3 வேறெந்த சம்பவத்தையும் இயேசுவினுடைய பலிக்குரிய மரணத்தோடு ஒப்பிட முடியாது. அது மனித சரித்திரத்தின் போக்கையே மாற்றியது. கோடிக்கணக்கான மக்களை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதற்கான ஆதாரத்தை அது அளித்தது. துன்மார்க்கத்திற்கு முடிவைக் கொண்டுவந்து, இந்தப் பூமியைப் பரதீஸாக்குகிற ஒரு நித்திய ராஜ்யத்திற்கான அஸ்திவாரத்தை அது போட்டது. இறுதியில் அது எல்லா விதமான ஒடுக்குதலிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் மனிதவர்க்கத்தினர் அனைவரையும் விடுவிக்கும்.—சங். 37:11; அப். 24:15; ரோ. 8:21, 22.
4 ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதோடு அவருடைய மரணத்தை நினைவுகூரும்படி சீஷர்களுக்கு இயேசு ஏன் கட்டளையிட்டார் என்பதை மதித்துணருவதற்கு நம் அனைவருக்கும் இது உதவி செய்கிறது. (லூக். 22:19) அதன் முக்கியத்துவத்தை மதித்துணருகிறவர்களாக, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுடன் கூட்டுறவுகொள்வதற்கு நாம் எதிர்நோக்கியவர்களாக இருக்கிறோம். அதற்கு முன்பாக, பூமியில் இயேசுவினுடைய கடைசி நாட்களைப் பற்றிய பைபிள் விவரங்களையும் சத்தியத்திற்கான அவருடைய தைரியமிக்க நிலைநிற்கையையும் குடும்பமாக ஒன்றுசேர்ந்து வாசிப்பது நல்லது. (பரிந்துரை செய்யப்படுகிற பகுதிகள் நமது 1995 காலண்டர், ஏப்ரல் 9-14-ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.) நம்முடைய சிருஷ்டிகருக்கான பயபக்திக்கு அவர் நமக்கு மாதிரியை வைத்திருக்கிறார். (1 பே. 2:21) நம்முடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பைபிள் மாணாக்கரையும் அக்கறைகாட்டுகிற மற்றவர்களையும் இந்த முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பதற்கு நம்மால் இயன்றதை நாம் செய்வோமாக. என்ன செய்யப்படும் என்பதையும் அந்த அடையாளச் சின்னங்களின் முக்கியத்துவத்தையும் முன்னதாகவே விளக்கிக்கூறுங்கள்.—1 கொ. 11:23-26.
5 இராஜ்ய மன்றம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு மூப்பர்கள் முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும். ஒருவர் அந்த அடையாளச் சின்னங்களைக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அந்தச் சின்னங்களைப் பரிமாறுவது நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு நாம் எவ்வாறு மரியாதை காண்பிக்கலாம் என்பதன்பேரிலான பயனுள்ள ஆலோசனைகள் ஆங்கில காவற்கோபுரம் பிப்ரவரி 15, 1985, பக்கம் 19-ல் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆசரிப்புக்குப் பல நாட்களுக்கு முன்பாகவும் அதைத் தொடர்ந்துவருகிற ஒருசில நாட்களின்போதும் அதிகமான வெளி ஊழிய நடவடிக்கைகளுக்காக ஏற்பாடு செய்வது சபைக்கு மிகவும் பொருத்தமானதாயிருக்கும்.
6 கடந்த வருடத்தில் இந்த முக்கியமான நினைவு ஆசரிப்புக்கு உலகமுழுவதும் மொத்தமாக 1,22,88,917 பேர் ஆஜராயிருந்தனர். நம்முடைய நாட்காட்டியில் இது மிக முக்கியமான நாளாக இருப்பதால், அனைவரும் ஆஜராயிருக்க வேண்டும்.