நித்திய ஜீவ நம்பிக்கையைஅளிக்கும் இறப்பை அனுசரித்தல்
1 ஏப்ரல் 6, 1993 அன்று சூரிய மறைவிற்கு பிறகு நாம் ஜீவாதிபதியின் இறப்பை அனுசரிப்போம். (அப். 3:15) நிச்சயமாகவே, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் இறப்பையும் நினைவுகூருவது மிகவும் பொருத்தமானதாயிருக்கிறது. என்றும் வாழக்கூடிய நம்முடைய நம்பிக்கைதானே இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின்பேரில் சார்ந்திருக்கிறது.
2 யெகோவாவின் நோக்க நிறைவேற்றத்தில் கிறிஸ்துவுடைய இறப்பின் முக்கியத்துவத்தை இந்த நினைவுகூருதல் அழுத்திக்காட்டுகிறது. ஆதாமுடைய சந்ததியை மீட்பதற்கு தேவையான பரிபூரண மனித பலி அளிக்கப்படுவது அந்த நோக்கத்தில் உள்ளடங்கும். இப்படியாக இலட்சக்கோடி மக்கள் விசுவாசம் வைத்து பரதீஸிய பூமியில் என்றும் வாழ்வதைச் சாத்தியமாக்குகிறது.—யோவா. 3:16.
3 சத்தியத்தையும் உயிரையும் நேசிக்கிற அனைவருமே இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்க எதிர்நோக்கியிருக்கின்றனர். (லூக். 22:19) கிறிஸ்துவின் மீட்கும் கிரய பலியின் ஏற்பாட்டுக்கு நம்முடைய மதித்துணர்வைக் காட்ட தனிப்பட்டவர்களாக நாம் என்ன செய்யலாம்? இந்த அனுசரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நல்ல ஒழுங்கமைப்பு அதிமுக்கியமாயிருக்கிறது. இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு என்னென்ன ஆயத்தவேலைகளை நீங்கள் செய்கிறீர்கள்?
4 முன்தயாரிப்பு அவசியம்: குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் ஆஜராயிருப்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது உண்மைதான். ஏப்ரல் 1-6-ற்கு 1993 நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கிற பைபிள் பகுதிகளை வாசித்து, தியானிப்பதன் மூலம் நாம் மனப்பிரகாரமாகவும் தயாராயிருக்கவேண்டும். ஏப்ரல் 6-ற்கு சற்று முன்னால் நம்முடைய தனிப்பட்ட, குடும்ப பைபிள் படிப்பில் இந்த நினைவுகூருதலின் முக்கியத்துவத்தைப் பற்றிய தகவலை உட்படுத்திக்கொள்வது பொருத்தமாயிருக்கும். முன்கூட்டியே வருவதற்கு திட்டமிடுங்கள், நினைவு ஆசரிப்பு முடிந்த பிறகு கொஞ்சநேரம் இருந்துவிட்டுச் செல்லுங்கள், அப்போது முதல் விசையாக ஆஜராகும் புதியவர்களை நீங்கள் வரவேற்க முடியும்.
5 நினைவு ஆசரிப்பு தினத்திற்கு முந்தைய வாரங்களில், இந்த ஆசரிப்புக்கு உங்களுக்குத் தெரிந்த எல்லா ஆர்வமான ஆட்களுக்கும் அழைப்புக் கொடுங்கள். சபையின் வருடாந்தர நமூனாக்களோடுகூட அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆர்வமுள்ள ஆட்களிடம் கொடுக்கையில், உள்ளூரில் இந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரியையும் நேரத்தையும் ஞாபகமாகத் தெரிவியுங்கள். அழைக்க விரும்பும் ஆட்களின் பட்டியல் ஒன்றை நீங்கள் தயாரியுங்கள். ஆஜராக விரும்பும் அனைவருக்கும் போக்குவரத்து வசதி இருக்கிறதா? இல்லையெனில், அவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்? உதாரணமாக, உங்களுடைய காரில் இடமிருக்குமேயானால், யாருக்காகிலும் போக்குவரத்து வசதி வேண்டுமா என்று ஏன் நீங்கள் மூப்பர்களைக் கேட்கக்கூடாது?
6 இது இந்த வருடத்திலேயே அதிமுக்கியமான அனுசரிப்பாக இருப்பதாலும் அநேகர் ஆஜராயிருப்பது எதிர்பார்க்கப்படுவதாலும், மூப்பர்கள் விசேஷ முன்தயாரிப்புகளைச் செய்யவேண்டியது அவசியமாயிருக்கிறது. (1 கொ. 14:40) ஏப்ரல் 6-ற்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு மூப்பர்கள் அனுசரிப்பில் உதவிசெய்கிற சகோதரர்களோடு ஒரு விசேஷ கூட்டத்தை ஏற்பாடுச் செய்வர். இருக்கை ஏற்பாடுகளை அவர்கள் புரிந்துகொள்வதற்கும் சின்னங்கள் எப்படி பரிமாறப்படவேண்டும் என்பதையும் அவர்கள் நிச்சயப்படுத்திக்கொள்வர். அனுசரிப்பில் உங்களை ஒரு துணையாளராகவோ பரிமாறுபவராகவோ நியமித்தால், இவ்விஷயங்களில், நிச்சயமாக மூப்பர்களின் அறிவுரைகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள். மூப்பர்கள் பக்கம் 7-ல் உள்ள பெட்டியிலிருக்கும் நினைப்பூட்டுதல்களை ஒத்துச் சரிபார்ப்பதன் மூலம் துணையாளர்கள், பரிமாறுபவர்கள், சின்னங்கள், பேச்சாளர் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே கவனிக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
7 இன்று கிறிஸ்துவின் சகோதரர்களில் ஒருசிலரே மீந்திருக்கின்றனர், அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் இந்தக் கர்த்தருடைய இராப்போஜன அனுசரிப்பு அதன் முடிவை எட்டிவிட்டிருக்கும். (1 கொ. 11:25, 26) இவ்வாறு அனுசரிப்பது நம்முடைய சிலாக்கியமாக இருக்கும் வரை பொருத்தமாகவே, நாம் நித்திய ஜீவ நம்பிக்கையை அளிக்கும் அந்த இறப்பைத் தொடர்ந்து அனுசரிப்போமாக.