மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதால் வரும் ஆசீர்வாதங்கள்
1 மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதில் அனுபவித்துமகிழக்கூடிய ஆசீர்வாதங்கள் இருக்கின்றனவென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இயேசு அவ்வாறுதான் உணர்ந்தார். அறுவடை மிகுதியாக இருந்து வேலையாட்கள் குறைவாக இருந்தபோதிலும், அவர் 70 சீஷர்களை “இரண்டிரண்டு பேராக” ஊழியத்திற்கு அனுப்பினார். “தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும்” சென்று பிரசங்கிப்பதில் அவர்களனைவரும் என்னேவொரு பலனளிக்கும் சமயத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்!—லூக். 10:1, 17; மத். 9:37.
2 மற்றவர்களோடு ஊழியம் செய்வது உந்துவிப்பதாக இருக்கிறது. நம்மில் சிலர் முன்பின் அறியாதவர்களை அணுகுவதற்குக் கூச்சப்படுகின்றனர்; அதைக் கடினமானதாகக் காண்கின்றனர். வேறொருவர் நம்மோடுகூட இருப்பது கடவுளுடைய வார்த்தையைத் தைரியத்துடன் பேச நமக்கு நம்பிக்கையளிக்கலாம். நம்மோடு ஒருவர் இருக்கும்போது, நாம் பயிற்றுவிக்கப்பட்ட ரீதியிலே ஊழியத்தைச் செய்வது எளிதாக இருக்கலாம். (நீதி. 27:17) ஞானி சொன்னார்: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்.”—பிர. 4:9.
3 வெவ்வேறு பிரஸ்தாபிகளோடும் பயனியர்களோடும் ஊழியம் செய்வது நல்லது. அப்போஸ்தலன் பவுலின் ஊழியக் கூட்டாளிகளில் பர்னபா, சீலா, தீமோத்தேயு, யோவான் மாற்கு போன்றோர் உள்ளடங்கினர். சேர்ந்து பிரசங்கிக்கையில் அவர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். இன்றும் அவ்வாறு ஆசீர்வாதங்களைப் பெறமுடியும். சத்தியத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒருவரோடு நீங்கள் ஊழியம் செய்ததுண்டா? சாட்சிகொடுப்பதில் அவருக்கிருக்கும் திறமையைக் கவனித்தப்பின் நீங்கள் முன்னேற்றம் அடைய உதவியிருக்கிற சில நல்ல கருத்துக்களை ஒருவேளை கற்றிருப்பீர்கள். ஓரளவு புதிதாக பிரஸ்தாபிகளானவர்களோடு சேர்ந்து போனதுண்டா? அப்படியானால் நீங்கள் கற்றுக்கொண்டவற்றுள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் தங்கள் ஊழியத்தில் அதிக திறம்பட்டவர்களாக இருக்கவும், அதிக சந்தோஷத்தைக் கண்டடையவும் நீங்கள் உதவியிருக்கலாம்.
4 தற்போது நீங்கள் ஏதாவது பைபிள் படிப்பை நடத்திவருகிறீர்களா? ஆம் என்றால், மூப்பர்களில் ஒருவரையோ வட்டாரக் கண்காணியையோ உங்களோடு வரும்படி ஏன் அழைக்கக்கூடாது? கண்காணிகளோடு பழகியிருப்பது நம்முடைய பைபிள் மாணாக்கருக்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். ஒரு மூப்பரின் முன்னிலையில் படிப்பை நடத்த தயங்குகிறீர்கள் என்றால், ஒருவேளை அவர் படிப்பை நடத்தி நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கும்படி செய்யலாம். அதன் பிறகு மாணவர் அதிக முன்னேற்றம் செய்யும்படி நீங்கள் எவ்வாறு உதவமுடியும் என்பதன்பேரில் அவரிடம் யாதொரு தயக்கமுமின்றி ஆலோசனைகளைக் கேளுங்கள்.
5 மற்றவர்களோடு நீங்கள் ஊழியம் செய்யும்போது ஊக்கமளிக்கும் கூட்டாளியாக இருங்கள். பிராந்தியத்தைப்பற்றி நீங்கள் சொல்லும் அபிப்பிராயங்கள் நம்பிக்கையூட்டுபவையாக இருக்கட்டும். மற்றவர்களைப்பற்றி ஒருபோதும் புறங்கூறாதிருங்கள்; அல்லது சபை ஏற்பாடுகளைப்பற்றி குறைகூறாதிருங்கள். ஊழியத்தின்மேலும் யெகோவாவிடம் இருந்துவரும் ஆசீர்வாதங்கள்மேலும் கருத்தூன்றி இருங்கள். இதைச் செய்வீர்களேயானால், நீங்களும் உங்களுடைய கூட்டாளிகளும் ஆவிக்குரிய புத்துணர்ச்சிப் பெற்று வீடுதிரும்புவீர்கள்.
6 மற்ற சகோதர சகோதரிகளுடன் கிரமமாக ஊழியம் செய்வதை உங்களுடைய சூழ்நிலைகள் கடினமாக்கலாம். எனினும் முடியுமானால் மற்றொரு பிரஸ்தாபியோடு சிறிதுநேரம் ஊழியம் செய்ய நீங்கள் ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது? நீங்கள் இருவருமே ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!—ரோ. 1:10, 11.