எவ்வகையான மனப்பான்மையை நீங்கள் காட்டுகிறீர்கள்?
1 பிலிப்பியிலிருந்த சபைக்குப் பவுல் எழுதிய கடிதத்தை இந்தப் புத்திமதியோடு முடித்தார்: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தகுதியற்ற தயவு நீங்கள் காட்டும் மனப்பான்மையோடு இருப்பதாக.” (பிலி. 4:23, NW) அவர் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான அவர்களுடைய உண்மையான ஆர்வத்திற்காகவும் ஒருவர் நலனில் ஒருவர் காட்டும் அனலான, அன்பான கரிசனைக்காகவும் அவர்களைப் பாராட்டினார்.—பிலி. 1:3, 4, 6; 4:15, 16.
2 நம்முடைய சபையிலும் அதைப்போன்ற மனப்பான்மையை வெளிக்காட்டுவதே நம்முடைய ஆசையாக இருக்கவேண்டும். அனைவருமே வைராக்கியம், தயவு, உபசரிப்பு ஆகிய பண்புகளை வெளிக்காட்டும்போது, இது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெளிவாகப் புரியும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. நம்பிக்கைகரமான, அன்பான ஒரு மனப்பான்மை ஐக்கியத்தையும் ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் கொண்டுவருகிறது. (1 கொ. 1:10) எதிர்மறையான ஒரு மனப்பான்மையானது உற்சாகமிழக்கச்செய்து அரைமனதாக இருக்கச்செய்கிறது.—வெளி. 3:15, 16.
3 மூப்பர்களே முன்னிலையில் இருங்கள்: மூப்பர்கள் தங்கள் மத்தியிலும் தங்களுடைய சபைக்குள்ளேயும் ஒரு நல்ல நம்பிக்கைகரமான மனப்பான்மையைக் கொண்டிருக்கும் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுடைய மனப்பான்மையினாலும் நடத்தையினாலும் சபை செல்வாக்குச் செலுத்தப்படக்கூடும். வெளி ஊழியத்தில் வைராக்கியமுள்ளவர்களும், அனலான புன்சிரிப்புடனும் தயவான வார்த்தைகளுடனும் வாழ்த்துகிறவர்களும், தனிப்பட்ட விதமாகவோ மேடையிலிருந்தோ ஆலோசனை கூறுவதில் நம்பிக்கைகரமாகவும் கட்டியெழுப்பக்கூடியவர்களுமாக இருக்கிற மூப்பர்களைக் கொண்டிருப்பதை நாம் மதித்துணருகிறோம்.—எபி. 13:7.
4 நட்புறவு, உபசரிப்பு, வைராக்கியம், ஆவிக்குரிய காரியங்களில் நாட்டம் ஆகியவற்றைக் கொண்ட சபையாக்குவதற்கு, சந்தேகமின்றி நாம் அனைவருமே நம்முடைய பங்கைச் சரிவர செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம். தனிப்பட்ட வகையில், நாம் மற்றவர்களிடம் கூட்டுறவு கொள்ளும்போது அனலுள்ளவர்களாய் இருந்து அன்பைக் காட்டலாம். (1 கொ. 16:14) வயது, இனம், கல்வி அல்லது பொருளாதார அந்தஸ்து ஆகிய எந்தப் பாகுபாடும் நம் மத்தியில் இருக்கக்கூடாது. (எபேசியர் 2:21-ஐ ஒப்பிடுங்கள்.) நம்முடைய நம்பிக்கையின் காரணமாக, மகிழ்ச்சி, தாராள உபசரிப்பு குணம் மற்றும் ஊழியத்தில் வைராக்கியம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மனப்பான்மையைப் பிரதிபலிக்கலாம்.—ரோ. 12:13; கொலோ. 3:22, 24.
5 புதியவர்கள் உட்பட, நம்மோடு கூட்டுறவு கொள்ளும் அனைவரையும் வரவேற்கப்பட்டவர்களாக உணரவைக்க வேண்டும்; சகோதரத்துவத்தின் அன்பு, தியாகம் ஆகியவற்றை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். நம்முடைய ஊழியத்தின் மூலமும் நல்ல கிறிஸ்தவ குணங்களை வெளிக்காட்டுவதன் மூலமும் சபை “சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது” என்பதற்கு நாம் சான்று பகருகிறோம். (1 தீ. 3:15) நம் இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும் ‘தேவசமாதானத்தின்’ மூலம் நாம் ஆவிக்குரிய பாதுகாப்பையும் அனுபவிக்கிறோம். (பிலி. 4:6, 7) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் யெகோவாவின் தகுதியற்ற தயவை அனுபவித்து மகிழ்வதை நமக்கு உத்தரவாதமளிக்கும் வகையான மனப்பான்மையைக் காட்ட நாம் அனைவரும் கடுமையாக முயற்சிப்போமாக.—2 தீ. 4:22.