அவருடைய சீஷர்களாகும்படி அவர்களை உந்துவியுங்கள்
1 ஒன்று கொரிந்தியர் 3:6-ல் பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.” கிறிஸ்துவினுடைய தலைமைத்துவத்தில் ஐக்கியமாக வேலை செய்வதற்கான அவசியத்தை உணரும்படி தம்முடைய சகோதரர்களுக்கு உதவிசெய்ய இந்த நியாயவிவாதத்தைப் பவுல் பயன்படுத்தினார். இந்த முறையில், நடுகிறதும் நீர்ப்பாய்ச்சுகிறதுமாகிய முக்கியமான வேலையில் அவர்கள் வகித்த இன்றியமையா பங்கை மதித்துணருவதற்கும் அவர் உதவிசெய்தார்.
2 ஜீவனைக் காக்கும் அந்த வேலை இந்த நாளிலேயே முடிவுக்கு கொண்டுவரப்படவிருக்கிறது. ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக, இயேசுவைப் பின்பற்றுபவர்களாகும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்ய நாம் பொறுப்புவாய்ந்த உத்தரவாதத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். (அப். 13:48) எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைப் பயன்படுத்துவதன்மூலம் உங்களால் தூண்டப்படமுடிந்த அக்கறையை நீங்கள் எவ்வாறு தொடர்வீர்கள்?
3 அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை சந்திக்க நீங்கள் மீண்டும் செல்வீர்களானால் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நாம் போனதடவை பேசியபோது, ஒரு மனிதராக இயேசு எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதைக் கலந்தாலோசித்தோம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தை உங்களுக்கு விட்டுச்செல்வதில் நான் சந்தோஷப்பட்டேன். இயேசுவின் போதனையைப் பற்றியும் அவருடைய ஆள்தன்மையைப் பற்றியும் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?” பதில்சொல்ல அனுமதியுங்கள். 113-ம் அதிகாரத்திற்குத் திருப்பி, மனத்தாழ்மைக்கான இயேசுவினுடைய மிகச் சிறந்த முன்மாதிரியை கலந்தாலோசியுங்கள். இயேசுவின் மனத்தாழ்மையான மனநிலையை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு நோக்கினார் என்பதைக் காண்பிக்க பிலிப்பியர் 2:8-ஐ வாசியுங்கள். பைபிளை ஒழுங்காகப் படிப்பதன்மூலம் எவ்வளவு அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பின்பு நீங்கள் விளக்கலாம்.
4 இந்த அறிமுகத்தை நீங்கள் விரும்பலாம்:
◼ “இயேசு பூமியிலிருக்கும்போது செய்த காரியங்களைப் பற்றி நாம் பேசினோம், அவர் நம்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை அவை காட்டுகின்றன. பெருந்துன்பம் அனுபவித்திருப்பவர்களை விடுவிப்பதற்கு முடிவாக அவர் என்ன செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதில்சொல்ல அனுமதியுங்கள். 133-ம் அதிகாரத்திற்குத் திருப்பி, ஐந்தாவது பாராவிலுள்ள குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். அடுத்தப் பக்கத்திலுள்ள படத்திற்குத் திருப்பி, கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படும்போது எப்படியிருக்கும் என்பதை விளக்குங்கள். அதிகத்தைக் கற்றுக்கொள்வதனால் பெறப்போகிற நன்மைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
5 உங்களுடைய முதற்சந்திப்பில் வீட்டுக்காரர் அந்தப் புத்தகத்தை ஏற்காதிருந்தால், ஒருவேளை நீங்கள் இந்த முறையில் உங்களுடைய கலந்தாலோசிப்பை ஆரம்பிக்கலாம்:
◼ “இன்றைக்கு அநேகர் இலட்சிய மாதிரியாக தாங்கள் கருதுகிற ஒருவரைப் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை அமைக்கிறார்கள் என்பதை நாம் இருவருமே ஒத்துக்கொள்வோம் என்று நான் நினைக்கிறேன். வேறு எவரும் வைத்திருக்கக்கூடிய மாதிரியைவிட இயேசு கிறிஸ்துவே மிகச் சிறந்த இலட்சிய மாதிரியாக இருக்கிறார். இயேசுவினால் வைக்கப்பட்ட முன்மாதிரியைப் படிப்பதன்மூலம் நான் கற்றுக்கொண்ட ஒரு மிக முக்கியமான பாடத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். [மிகப் பெரிய மனிதர் புத்தகத்திலுள்ள 40-வது அதிகாரத்திற்குத் திருப்பி, இரக்கத்தின்பேரிலான இயேசுவினுடைய அன்பான போதனைக்கு கவனத்தைத் திருப்புங்கள்.] மற்றவர்களிடம் இந்தக் குணத்தை நான் எவ்வளவு அதிகமாக காட்டவேண்டியிருக்கிறது என்பதை இது எனக்கு சக்திவாய்ந்த வண்ணமாக நினைப்பூட்டியது.” மத்தேயு 5:7-ஐ வாசியுங்கள். இந்தப் புத்தகத்தை மறுபடியுமாக அளிப்பதற்கு, அல்லது கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை அளிப்பதற்கு இது ஒரு பொருத்தமான தருணமாக இருக்கலாம்.
6 அல்லது இந்த நேரடியான அணுகுமுறையை நீங்கள் முயற்சிசெய்து பார்க்க விரும்பலாம்:
◼ “போனதடவை நான் இங்கு வந்திருந்தபோது, இயேசுவைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் கலந்தாலோசித்தோம். இத்தகைய அறிவைப் பெற்றுக்கொள்வதே ‘நித்தியஜீவன்’ என்பதை யோவான் 17:3 சொல்லுகிறது. நாம் அதை எவ்வாறு செய்யலாம்?” பதில்சொல்ல அனுமதியுங்கள். நம்முடைய பைபிள் படிப்பு ஏற்பாட்டையும் அதை அனுகூலப்படுத்திக்கொள்வது எவ்வாறு என்பதையும் விளக்குவதன்மூலம் தொடர்ந்து பேசுங்கள்.
7 அறுவடையில் வேலைசெய்கிற ஒருவன் “தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்,” என்று பவுல் சொல்கிறார். (1 கொ. 3:8) இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் நாம் தீவிரமாக முயற்சிசெய்வோமாகில், நம்முடைய பலனானது பெரிதாயிருக்கும் என்பது நிச்சயம்.