பாதுகாத்திடுங்கள்
வெளி ஊழியத்திற்கான மாதிரி அளிப்புகள்
ஒவ்வொரு மாத பிரசுர அளிப்புக்கான பிரசங்கங்களைத் தயாரிக்கையில் பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
“கடவுள் நம்பிக்கையுள்ள அநேகர் அவருடன் நெருக்கமான ஓர் உறவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். தம்மிடம் நெருங்கி வரும்படி கடவுளே நம்மை அழைக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? [யாக்கோபு 4:8-ஐ வாசியுங்கள்.] நம்முடைய பைபிளையே பயன்படுத்தி கடவுளுடன் நெருங்கிச் செல்வதற்கு உதவியாக இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.” பக்கம் 16-ல் பாரா 1-ஐ வாசியுங்கள்.
“இன்றைக்கு எங்குப் பார்த்தாலும் அநியாயம்தான் நடக்கிறது. இங்குச் சொல்லப்பட்டிருக்கிற மாதிரியே நடக்கிறது. [பிரசங்கி 8:9ஆ-வை வாசியுங்கள்.] கடவுளுக்குக் கொஞ்சமாவது அக்கறையிருக்கிறதா என்று அநேகர் யோசிக்கின்றனர். [பக்கம் 119-ல் 4-வது பாராவிலிருந்து முதல் இரண்டு வாக்கியங்களை வாசியுங்கள்.] குறிப்பிட்ட காலத்திற்கு அநீதியை கடவுள் ஏன் விட்டுவைத்திருக்கிறார் என்பதை இந்த அதிகாரம் விவரிக்கிறது.”
உங்கள் மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்)
“சில சமயங்களில் ஏதாவது சிக்கலான பிரச்சினைகள் எழுந்துவிட்டால் தலையே வெடித்து விடும் போலாகிறது; அவற்றைத் தீர்ப்பதற்கு சிறந்த ஆலோசனையை எங்கே பெறலாம் என்று நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு மத்தேயு 7:28, 29-ஐ வாசியுங்கள்.] இயேசுவின் மலைப்பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் என்ன செய்தார்கள் என்பதை இது விளக்குகிறது. மற்றவர்கள்கூட இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். [152-ம் பக்கத்திலுள்ள குறிப்புகளைக் காட்டுங்கள்.] இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் இந்த அதிகாரம் கலந்தாலோசிக்கிறது.”
“‘கடவுள் என்று ஒருவர் இருந்தால், இந்த உலகத்தில் நடக்கும் அநியாயத்தையும் துன்பத்தையும் அடியோடு ஒழித்துக்கட்ட ஏதாவது செய்ய வேண்டாமா’ என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.] கஷ்டங்களைப் போக்கி அவற்றுக்கான காரணத்தையும் அடியோடு அகற்றுவதற்காக கடவுள் என்ன செய்யப் போகிறார் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.” 10-வது அதிகாரத்தைக் காட்டுங்கள்.
விழிப்புடன் இருங்கள்!
“இன்று மோசமான பிரச்சினைகள் எழும்புவதும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடப்பதும் சகஜமாகிவிட்டன. இதைப் பற்றி அநேகர் கவலைப்படுகின்றனர். [உள்ளூரில் நடந்த சம்பவம் எதையாவது உதாரணமாகக் கூறுங்கள்.] ஆனால் சீக்கிரத்தில் இந்த உலக விவகாரங்களில் கடவுளுடைய அரசாங்கம் தலையிடப் போகிறது; அதற்கு அடையாளமாகத்தான் உலகம் பூராவும் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு, மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:7, 10, 11; 2 தீமோத்தேயு 3:1-5 போன்ற பொருத்தமான வசனங்களை வாசியுங்கள்.] இப்படியெல்லாம் நடப்பதற்கான காரணத்தை அறிந்து இக்காலத்தில் விழிப்புடன் இருப்பது ஏன் மிக மிக அவசியம் என்பதை இந்தச் சிறிய புத்தகம் விவரிக்கிறது.”
“அதிர்ச்சி தரும் சம்பவங்களால் அல்லது பெரும் கஷ்ட நஷ்டங்களால் இன்று அநேகர் மனசு உடைந்து போயிருக்கின்றனர். இப்படிப்பட்ட காரியங்களில் கடவுள் தலையிட்டு தடுத்தாலென்ன என்று சிலர் யோசிக்கின்றனர். ஆனால், மனிதர் படும் கஷ்டங்களைப் போக்குவதற்காகக் கடவுள் சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்றே பைபிள் உறுதியளிக்கிறது. [வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ வாசியுங்கள்.] கடவுள் இந்த உலகை நியாயந்தீர்க்கும்போது என்ன நடக்கும் என்பதைக் கவனியுங்கள். [2 பேதுரு 3:10, 13-ஐ வாசியுங்கள்.] இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி கூடுதலான விளக்கத்தை இந்தச் சிறிய புத்தகத்தில் வாசிக்கலாம்.”
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
“இப்படிப்பட்ட அழகான இடத்தில் குடியிருக்கும்படி யாராவது சொன்னால் நீங்கள் குடியிருக்க விரும்புவீர்களா? [4, 5 பக்கங்களிலுள்ள படத்தைக் காட்டி, பின்பு பதிலளிக்க அனுமதியுங்கள்.] இதுபோல் என்றென்றுமாய் வாழப்போவது எப்படி என கடவுளுடைய வார்த்தை சொல்வதைக் கவனியுங்கள். [யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.] நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பெற இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும்.” முதலாம் அதிகாரத்திலிருந்து ஐந்து பாராக்களை அடுத்த சந்திப்பில் கலந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பக்கங்கள் 188-9-ல் உள்ள படத்திற்குத் திருப்புங்கள். அங்குள்ள படக்குறிப்பைப் பயன்படுத்தி வீட்டுக்காரரிடம் இப்படிக் கேளுங்கள்: “கடவுளை அறியும் அறிவினால் பூமி நிரம்பி இருக்கும்போது, பரதீஸில் வாழும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு ஏசாயா 11:9-ஐ வாசியுங்கள்.] பரதீஸைப் பற்றியும் நாம் அதில் எப்படி வாழலாம் என்பதைப் பற்றியும் பைபிள் சொல்வதைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும்.” முதல் அதிகாரத்தில் 11-16 பாராக்களை அடுத்த சந்திப்பில் கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
“இந்தப் பொன்மொழிக்கு இசைய மக்கள் வாழ்ந்தால் இந்த உலகமே பொன்னானதாக மாறிவிடும் என்று நினைக்கிறீர்களா? [மத்தேயு 7:12அ-வை வாசியுங்கள். பின்பு பதிலளிக்க அனுமதியுங்கள்.] எக்காலத்திலும் வாழ்ந்தவர்களில் மிகப் பெரிய போதகர் கற்பித்த அநேக பாடங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.” 17-வது அதிகாரத்திலுள்ள படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் காண்பியுங்கள்.
“இன்று அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதில் நல்ல நெறிமுறைகளைப் பதிய வைக்க முயற்சி செய்கிறார்கள். இது முக்கியமென நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு நீதிமொழிகள் 22:6-ஐ வாசியுங்கள்.] சின்னக் குழந்தையாக இருக்கும்போதே பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்க வேண்டுமென பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். அதற்கு உதவும் விதத்தில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.” அதிகாரம் 15 அல்லது 18-லுள்ள படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் சிறப்பித்துக் காட்டுங்கள்.
“பிள்ளைகள் சிலசமயம் கேள்விகள் கேட்கும்போது பெற்றோர்கள் திக்குமுக்காடிப் போகிறார்கள். சில கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது, இல்லையா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு எபேசியர் 6:4-ஐ வாசியுங்கள்.] பிள்ளைகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல பெற்றோர்களுக்கு இந்தப் புத்தகம் உதவும்.” அதிகாரங்கள் 11, 12 அல்லது அதிகாரங்கள் 34 முதல் 36 வரை உள்ள சில படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் சிறப்பித்துக் காட்டுங்கள்.
உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
“வன்முறையும் குற்றச்செயல்களும் நம்முடைய ஏரியாவில் நடப்பதைப் பார்க்கும்போது நம் எல்லாருக்குமே கவலையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை யாராவது ஒட்டுமொத்தமாக தீர்த்து வைப்பார்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] கடவுள் தீர்த்து வைக்கப் போகிறார்.” பக்கம் 196-க்குத் திருப்புங்கள். நீதிமொழிகள் 2:21, 22-ஐ 19-வது பாராவிலிருந்து வாசித்து விளக்கமளியுங்கள். அதிகாரம் 16-ன் தலைப்பைக் காட்டி அந்தப் புத்தகத்தை அளியுங்கள்.
ஆறாவது பக்கத்திற்குத் திருப்பி இவ்வாறு சொல்லுங்கள்: “நாம் வசிக்கும் இந்த அழகிய பூமியும் இதிலுள்ள உயிர்களும் தானாக வந்துவிட்டதாக அநேகர் நினைக்கின்றனர். இதெல்லாம் எப்படி வந்திருக்கும் என்பதற்கு எது நியாயமான விளக்கமென நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] சக்தி வாய்ந்தவரும், நம்மை மிகவும் நேசிக்கிறவருமான ஒரு படைப்பாளரைப் பற்றிய பைபிள் பதிவை உறுதி செய்யும் அத்தாட்சிகள் ஏராளமாய் இருக்கின்றன. அவர் உண்மையான கடவுள், அவர் பெயர் யெகோவா.” சங்கீதம் 83:17-ஐ வாசியுங்கள்; அவர் இந்த முழு பூமியையும் ஒரு பரதீஸாக எப்படி மாற்றப்போகிறார் என்பதைச் சுருக்கமாக விளக்குங்கள்.
கடவுளைத் தேடி
“இன்று எத்தனை எத்தனையோ மதங்கள் இருக்கின்றன, ஆனால் கடவுள் அங்கீகரிக்கிற மதம் எது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” பதிலளித்த பிறகு, பக்கம் 377-க்குத் திருப்புங்கள். 7-வது குறிப்பைச் சிறப்பித்துக் காட்டுங்கள்; மெய் மதம் எல்லா இனத்தாரையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதை வீட்டுக்காரர் ஒத்துக்கொள்கிறாரா என கேளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள ஒரு வசனத்தை வாசியுங்கள்; நேரம் அனுமதித்தால், அந்தப் பட்டியலில் காணப்படும் பிற குறிப்புகளில் சிலவற்றைக் கலந்தாலோசியுங்கள். உண்மையான ஆர்வம் தென்பட்டால் அந்தப் புத்தகத்தை அளியுங்கள். அங்கிருந்து கிளம்புவதற்கு முன், “மெய் மதம் ஒருவரது நடத்தையை எப்படிப் பாதிக்க வேண்டும்?” என்று கேளுங்கள். அந்தக் கேள்விக்கு பதிலளிக்க ஒரு மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
தான் பிரசித்திபெற்ற மதத்தைச் சேர்ந்தவரென ஒருவர் சொன்னால், நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பது சந்தோஷமாய் இருக்கிறது. மக்கள் பல வித்தியாசமான வழிகளில் கடவுளைத் தேடியிருக்கின்றனர். [பொருத்தமாய் இருந்தால் அப்போஸ்தலர் 17:26, 27-ஐ வாசியுங்கள்.] பெரும்பாலும் மக்கள் தங்கள் பெற்றோரின் மதத்தையே பின்பற்றுகின்றனர். [பக்கம் 8-ல் உள்ள பாரா 12-ஐ வாசியுங்கள்.] பிற மதங்களைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வது அறிவுக் கண்ணைத் திறப்பதுடன் கல்வி புகட்டவும் செய்கிறது. உலகத்திலுள்ள பிரபல மதங்களின் தோற்றம், பழக்கங்கள், போதனைகள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகிறது.” ஒருவருடைய மதத்தைப் பற்றி என்னென்ன விஷயங்களையெல்லாம் இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் காட்டுங்கள்; பின்வரும் பக்கங்களில் அவை காணப்படுகின்றன: சீக்கிய மதம் (100-1); இந்து மதம் (116-17); புத்த மதம் (141); தாவோ மதம் (164-6); கன்பூசிய மதம் (177); ஷின்டோ மதம் (190-5); யூத மதம் (220-1); இஸ்லாம் மதம் (289).
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!
“[செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு] நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எதிர்பாராமல் மக்களின் உயிர் பறிபோகையில், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென அநேகர் யோசிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதிலளிக்க அனுமதியுங்கள். பிறகு 299-வது பக்கத்திற்குத் திருப்பி, அங்குச் சித்தரிக்கப்பட்டுள்ள உயிர்த்தெழுதல் காட்சியைக் காண்பியுங்கள். இப்படிச் சொல்லித் தொடருங்கள்: “இறந்துபோன நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்; இதே பூமியில் பரதீஸான நிலைமையில் வாழ்வார்கள் என்பதை அறியும்போது அநேகர் ஆச்சரியப்படுகிறார்கள். [பக்கம் 297-ல் 9-வது பாராவில் கொடுக்கப்பட்டிருக்கும் அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள். பிறகு 10-வது பாராவில் உள்ள விளக்கத்தைச் சொல்லுங்கள்.] கடவுள் வைத்திருக்கும் எதிர்கால நோக்கத்தைப் பற்றி ஆர்வமூட்டும் இன்னும் அநேக விவரங்களை இந்தப் புத்தகம் கலந்தாலோசிக்கிறது.”
பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்)
“பெரும்பாலும் எல்லாருமே பெரிய பெரிய பிரச்சினைகளைச் சந்திக்கும் ஒரு காலத்தில்தான் நாம் வாழ்கிறோம். இவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என தெரிந்துகொள்வதற்கு அநேகர் கவுன்சிலிங் கேட்க பல பக்கம் போகிறார்கள். சிலர் மனவியல் நிபுணர்களிடம் செல்கிறார்கள். நமக்கு நல்ல பலன்தரும் சரியான ஆலோசனையை எங்குக் காணலாம் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நாம் எல்லாருமே புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பைபிள் குறிப்பிடுகிறது. [2 தீமோத்தேயு 3:16-ஐ வாசியுங்கள். பின்னர் பக்கம் 187-க்குத் திருப்பி 9-வது பாராவை வாசியுங்கள்.] பைபிள் சொல்வதைக் கடைப்பிடிப்பது எப்போதுமே நம் நன்மைக்கானதுதான் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.”
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்
“இந்த சீசனில் அநேகர் இயேசுவைப் பற்றி நினைக்கிறார்கள். என்றாலும், உலகம் முழுவதிலும் இவ்வளவு மோசமான காரியங்கள் நடப்பதால் அவர் உண்மையில் நம்மீது அக்கறை வைத்திருக்கிறாரா என்று சிலர் யோசிக்கலாம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதிலளிக்க அனுமதியுங்கள். அதிகாரம் 24-க்குத் திருப்பி, இயேசு ஏன் பூமிக்கு வந்தார் என சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். பின்னர் யோவான் 15:13-ஐ வாசித்து மற்றவர்களை அவர் நெஞ்சார நேசித்ததை வலியுறுத்துங்கள்.
“இயேசு கிறிஸ்து என்றவுடன், அவரை ஒரு குழந்தையாகவோ சாகும் தறுவாயில் வேதனைப்படும் ஒரு மனிதராகவோதான் அநேகர் நினைத்துப் பார்க்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, அவரது பிறப்பையும் இறப்பையும் பற்றித்தான் தெரிந்து வைத்திருக்கின்றனர். பூமியில் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்ன, செய்த அருமையான காரியங்கள் அனைத்தையும் எவருமே பொதுவாக கண்டுகொள்வதில்லை. அவர் நிறைவேற்றிய காரியங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கும் ஒவ்வொருவரையுமே பாதிக்கின்றன. அதனால்தான் அவர் நமக்காகச் செய்திருக்கும் அதிசயமான காரியங்களைப் பற்றி நாம் முடிந்தவரை கற்றுக்கொள்வது அவசியம்.” யோவான் 17:3-ஐ வாசியுங்கள். முன்னுரையின் முதல் பக்கத்தைத் திருப்பி நான்காவது பாராவை வாசியுங்கள்.
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
“இன்றைக்கு இருப்பது மாதிரி நிறைய கஷ்டங்கள் மத்தியில் நாம் வாழ வேண்டுமென்பதா கடவுளுடைய நோக்கமாக இருந்திருக்கும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு மத்தேயு 6:10-ஐ வாசியுங்கள்.] கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன என்பதாக எப்பொழுதாவது யோசித்ததுண்டா?” 6-வது பாடத்திற்குத் திருப்பி, அதன் ஆரம்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை வாசியுங்கள். அந்தப் பாடத்தைக் கலந்தாலோசிக்கத் துவங்குங்கள், அல்லது அடுத்த சந்திப்பில் துவங்குவதாகச் சொல்லுங்கள்.
“நவீன சமுதாயத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன; என்றாலும், நோயும் மரணமும் தொடர்கதையாய் இருப்பதால் மனிதருக்குத் துன்பமும் துயரமுமே மிஞ்சுகின்றன. நோயுற்றோருக்கு, வயோதிகருக்கு, ஏன் இறந்தவர்களுக்கும்கூட, இயேசு என்ன செய்வார் என்று உங்களுக்குத் தெரியுமா?” பதிலளிக்க அனுமதியுங்கள். இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள அந்நபருக்கு விருப்பம் இருந்தால், 5-வது பாடத்திற்குத் திருப்பி பாராக்கள் 5, 6-க்கான கேள்விகளை வாசியுங்கள். அந்தப் பாராக்களைக் கலந்தாலோசியுங்கள், அல்லது அடுத்த சந்திப்பில் கலந்தாலோசிப்பதாகச் சொல்லுங்கள்.
ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
“வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவிக்காக யாரிடம் போகலாமென நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு ரோமர் 15:4-ஐ வாசியுங்கள்.] கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களில் போதனை, ஆறுதல், நம்பிக்கை ஆகியவை அடங்கியுள்ளன; இவை நாம் படும் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள தெம்பளிக்கின்றன. பைபிள் வாசிப்பிலிருந்து மிகச் சிறந்த பலனைப் பெறுவது எப்படி என்பது சம்பந்தமாக இந்தப் புத்தகம் நல்ல நல்ல ஆலோசனைகளைத் தருகிறது.” பக்கம் 30-ல் கொடுக்கப்பட்டுள்ள நான்கு குறிப்புகளைக் காட்டுங்கள்.
“இயேசு பூமியில் வாழ்ந்த காலத்திலிருந்தே அநேகர் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபித்து வந்திருக்கின்றனர். வரப்போகும் அந்த ராஜ்யம் மனிதகுலத்திற்கு என்ன செய்யும் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.] கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, அது என்ன செய்யும், அதன் நீதியான ஆட்சியிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம் என்பதை இது விளக்குகிறது.” பக்கங்கள் 92-3-ல் உள்ள படத்தைக் காண்பியுங்கள்.