(1) ஒரு கேள்வி, (2) ஒரு வசனம், (3) ஓர் அதிகாரம்
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதற்கு ஓர் எளிய வழி, (1) நோக்குநிலைக் கேள்வி ஒன்றைக் கேட்டு, (2) பொருத்தமான ஒரு வசனத்தை வாசித்து, (3) அந்த விஷயத்தைக் கலந்தாலோசிக்கிற ஓர் அதிகாரத்தின் தலைப்பிற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரம்பக் கேள்விகளை வாசித்து அந்த அதிகாரத்திடம் கவனத்தைத் திருப்புவதாகும். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், அந்த அதிகாரத்தின் ஆரம்பத்திலுள்ள ஓரிரு பாராக்களைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு நடத்தப்படும் விதத்தைக் காட்டலாம். பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு இந்த அணுகுமுறையை, முதல் சந்திப்பில் அல்லது மறுசந்திப்பில் பயன்படுத்தலாம்.
◼ “பைபிளிலுள்ள இந்த வசனம் குறிப்பிடுகிறபடி, சாதாரண மனிதர்களான நாம் சர்வவல்லமையுள்ள கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமென்று நினைக்கிறீர்களா?” அப்போஸ்தலர் 17:26, 27-ஐ வாசியுங்கள், பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு அதிகாரம் 1-ஐச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “நாம் இன்று எதிர்ப்படுகிற பிரச்சினைகளையெல்லாம் பார்க்கும்போது, இங்கு சொல்லப்பட்டுள்ளபடி ஆறுதலும் நம்பிக்கையும் கிடைக்குமென்று நினைக்கிறீர்களா?” ரோமர் 15:4-ஐ வாசியுங்கள், பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு அதிகாரம் 2-ஐச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “உங்களுக்குச் சக்தி இருந்தால், இந்த மாற்றங்களை நீங்கள் செய்வீர்களா?” வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசியுங்கள், பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 3-வது அதிகாரத்திலுள்ள விஷயத்தைக் கலந்தாலோசியுங்கள்.
◼ “இந்தப் பண்டைய காலப் பாடலில் விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகளில் நம் பிள்ளைகள் எப்பொழுதாவது வாழ்வார்கள் என்று நினைக்கிறீர்களா?” சங்கீதம் 37:10, 11-ஐ வாசித்து, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 3-வது அதிகாரத்திற்குக் கவனத்தைத் திருப்புங்கள்.
◼ “இந்த வார்த்தைகள் என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று நினைக்கிறீர்களா?” ஏசாயா 33:24-ஐ வாசித்துவிட்டு, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 3-வது அதிகாரத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “உயிரோடிருப்பவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது இறந்தவர்களுக்குத் தெரியுமா என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா?” பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு பிரசங்கி 9:5-ஐ வாசியுங்கள், 6-வது அதிகாரத்திலுள்ள விஷயத்தைக் கலந்தாலோசியுங்கள்.
◼ “இந்த வசனங்களில் இயேசு குறிப்பிட்டிருக்கிறபடி, இறந்துபோன நம்முடைய பிரியமானவர்களை என்றாவது ஒருநாள் பார்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?” யோவான் 5:28, 29-ஐ வாசித்துவிட்டு, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 7-வது அதிகாரத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “நம் எல்லாருக்கும் தெரிந்த இந்த ஜெபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடியே கடவுளுடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதைப் போல பூமியிலும் எப்படிச் செய்யப்படுமென நினைக்கிறீர்கள்?” மத்தேயு 6:9, 10-ஐ வாசித்து, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 8-வது அதிகாரத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “இந்தத் தீர்க்கதரிசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள காலத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறீர்களா?” 2 தீமோத்தேயு 3:1-4-ஐ வாசித்து, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 9-வது அதிகாரத்திலுள்ள விஷயத்தைக் கலந்தாலோசியுங்கள்.
◼ “மனிதர் எதிர்ப்படும் பிரச்சினைகள் மோசமாகி வருகிறதென அநேகர் நினைக்கிறார்கள். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது காரணமாக இருக்குமென்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா?” வெளிப்படுத்துதல் 12:9-ஐ வாசித்துவிட்டு, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 10-வது அதிகாரத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “இதுபோன்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள நீங்கள் எப்பொழுதாவது ஆசைப்பட்டிருக்கிறீர்களா?” யோபு 21:7-ஐ வாசித்து, பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு அதிகாரம் 11-க்குக் கவனத்தைத் திருப்புங்கள்.
◼ “பைபிளிலிருந்து இந்தப் புத்திமதியைக் கடைப்பிடித்தால் மக்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க முடியுமென நினைக்கிறீர்களா?” எபேசியர் 5:33-ஐ வாசியுங்கள், பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 14-வது அதிகாரத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படும் என்பதைக் காட்டியபின், இரண்டு முறை பைபிள் படிப்பு நடத்தப்பட்டு, அந்தப் படிப்பு தொடரும் என்று தோன்றினால், அதை ஒரு பைபிள் படிப்பாக அறிக்கை செய்யலாம்.