பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்தல்
பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை வெவ்வேறு விதங்களில் அளிப்பதற்கான ஆலோசனைகள் இந்த உட்சேர்க்கையில் உள்ளன. மிகுந்த பலனைப் பெறுவதற்கு, இங்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்கங்களை உங்கள் சொந்த வார்த்தைகளில் சொல்லுங்கள்; உங்கள் பிராந்தியத்திலுள்ள ஜனங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்; இந்தப் புத்தகத்திலிருந்து பேசப்போகிற குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்திருங்கள். இவை தவிர, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு பிரசங்கங்களையும் பயன்படுத்தலாம்.—ஜனவரி 2005, நம் ராஜ்ய ஊழியம், பக். 8.
பைபிள்
◼ “மக்கள் பொதுவாக பைபிளை கடவுளுடைய வார்த்தை என்றே குறிப்பிடுகிறார்கள். மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை, கடவுளுடைய வார்த்தை என்று எப்படிச் சொல்ல முடியுமென்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 2 பேதுரு 1:21-ஐயும், பக்கங்கள் 19-20-ல் உள்ள பாரா 5-ஐயும் வாசியுங்கள்.] இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதிலை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.” பக்கம் 6-ல் உள்ள கேள்விகளைக் காண்பியுங்கள்.
◼ “முன்பு எப்போதையும்விட இப்போது அதிகப்படியான தகவல்களை மக்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைவதற்குத் தேவையான நல்ல புத்திமதிகளை எங்கே கண்டடையலாமென்று நினைக்கிறீர்கள்? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 2 தீமோத்தேயு 3:16, 17-ஐயும் பக்கம் 23-ல் உள்ள பாரா 12-ஐயும் வாசியுங்கள்.] கடவுளைப் பிரியப்படுத்தும் விதத்திலும், நமக்கு நன்மை அளிக்கும் விதத்திலும் எப்படி வாழ்வது என்பது பற்றி இந்தப் புத்தகம் விவரிக்கிறது.” பக்கங்கள் 122-3-ல் உள்ள அட்டவணையையும் படத்தையும் காண்பியுங்கள்.
சாவு/உயிர்த்தெழுதல்
◼ “சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது என்று அநேகர் யோசிக்கிறார்கள். அதை நம்மால் தெரிந்துகொள்ள முடியுமென்று நினைக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு பிரசங்கி 9:5-ஐயும் பக்கங்கள் 58-9-ல் காணப்படும் பாராக்கள் 5-6-ஐயும் வாசியுங்கள்.] இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற பைபிள் வாக்குறுதியின் அர்த்தத்தைப் பற்றியும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.” பக்கம் 75-ல் உள்ள படத்தைக் காண்பியுங்கள்.
◼ “நமக்குப் பிரியமான ஒருவர் இறந்துவிடும்போது, அவரைத் திரும்பப் பார்க்க மாட்டோமா என்று நாம் ஏங்குவது இயல்பு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா? [பதில் அளிக்க அனுமதியுங்கள்.] உயிர்த்தெழுதல் பற்றி பைபிள் தரும் வாக்குறுதியிலிருந்து அநேகர் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். [யோவான் 5:28, 29-ஐயும் பக்கம் 72-ல் உள்ள பாராக்கள் 16-17-ஐயும் வாசியுங்கள்.] இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்த அதிகாரத்திலேயே பார்க்கலாம்.” பக்கம் 66-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்பக் கேள்விகளைக் காண்பியுங்கள்.
நித்திய ஜீவன்
◼ “ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டுமென்றே பெரும்பாலோர் ஆசைப்படுகிறார்கள். அது நிஜமாகவே நடக்கப் போவதாக இருந்தால், என்றென்றும் வாழ நீங்கள் விரும்புவீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐயும், பக்கம் 54-ல் உள்ள பாரா 17-ஐயும் வாசியுங்கள்.] நித்திய ஜீவனை நாம் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அந்த வாக்குறுதி நிஜமாகும்போது வாழ்க்கை எப்படியிருக்கும் என்றும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
குடும்பம்
◼ “மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைத்தான் எல்லாருமே விரும்புவார்கள். நீங்கள் இதை ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா? [பதில் அளிக்க அனுமதியுங்கள்.] குடும்பத்திலுள்ள எல்லாரும் ஒன்றைச் செய்தால், அதாவது கடவுளைப் போல அன்பு காட்டினால், முழு குடும்பமும் மகிழ்ச்சியை அனுபவிக்குமென பைபிள் தெரிவிக்கிறது.” எபேசியர் 5:1, 2-ஐயும் பக்கம் 135-ல் உள்ள பாரா 4-ஐயும் வாசியுங்கள்.
வீடு
◼ “பல இடங்களில், சக்திக்குத் தகுந்தாற்போல் திருப்தியான ஒரு வீடு கிடைப்பது ரொம்பவே கஷ்டம். என்றாவது ஒருநாள் எல்லாருக்குமே போதிய வீட்டு வசதிகள் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு ஏசாயா 65:21, 22-ஐயும் பக்கம் 34-ல் உள்ள பாரா 20-ஐயும் வாசியுங்கள்.] கடவுள் தந்திருக்கும் இந்த வாக்குறுதி எப்படி நிறைவேறப்போகிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.”
யெகோவா தேவன்
◼ “கடவுள் நம்பிக்கையுள்ள அநேகர் அவரிடம் நெருங்கிவர விரும்புவார்கள். அப்படி நெருங்கிவரும்படியே பைபிள் சொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு யாக்கோபு 4:8அ-வையும் பக்கம் 16-ல் உள்ள பாரா 20-ஐயும் வாசியுங்கள்.] கடவுளைப் பற்றி நிறைய விஷயங்களைத் தங்கள் பைபிளிலிருந்தே தெரிந்துகொள்ள ஜனங்களுக்கு உதவும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.” பக்கம் 8-ல் உள்ள ஆரம்பக் கேள்விகளைக் காண்பியுங்கள்.
◼ “கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காக அல்லது அர்ச்சிக்கப்படுவதற்காக அநேகர் ஜெபிக்கிறார்கள். அந்தப் பெயர் என்னவென்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு சங்கீதம் 83:17-ஐயும் பக்கம் 195-ல் உள்ள பாராக்கள் 2-3-ஐயும் வாசியுங்கள்.] யெகோவா தேவனையும், மனிதருக்கான அவருடைய நோக்கத்தையும் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.”
இயேசு கிறிஸ்து
◼ “உலகமுழுவதிலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர் ஒரு தலைசிறந்த மனிதர், அவ்வளவுதான் என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவர்களோ அவரை சர்வவல்லமையுள்ள கடவுளாக வணங்குகிறார்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் என்ன நம்புகிறோம் என்பது முக்கியம் என நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு யோவான் 17:3-ஐயும் பக்கங்கள் 37-8-ல் உள்ள பாரா 3-ஐயும் வாசியுங்கள். அந்த அதிகாரத்தின் ஆரம்பக் கேள்விகளிடம் அவருடைய கவனத்தைத் திருப்புங்கள்.
கடைசி நாட்கள்
◼ “நாம் இந்த உலகத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்று அநேகர் நம்புகிறார்கள். எதிர்காலத்தில் நல்ல நிலைமை வருமென்று நாம் எதிர்பார்க்க முடியுமா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். 2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்.] கடைசி நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்குமென்று இங்கு சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்களேன்.” பக்கம் 94-ல் உள்ள பாரா 15-ஐ வாசியுங்கள்.
ஜெபம்
◼ “நாம் செய்யும் ஜெபங்களுக்குக் கடவுள் எப்படிப் பதில் அளிக்கிறார் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 1 யோவான் 5:14, 15-ஐயும், பக்கங்கள் 170-2-ல் உள்ள பாராக்கள் 16-18-ஐயும் வாசியுங்கள்.] நாம் ஏன் கடவுளிடம் ஜெபிக்க வேண்டுமென்றும், அவர் நம் ஜெபங்களுக்குப் பதில் அளிக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றும்கூட இந்த அதிகாரம் விவரிக்கிறது.”
மதம்
◼ “இந்த உலகிலுள்ள மதங்களெல்லாம், மனிதருக்கு உதவியாக இல்லாமல் உபத்திரவமாகவே இருக்கின்றன என்பதாக அநேகர் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்களைச் சரியான பாதையில் மதம் வழிநடத்துகிறதென நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு மத்தேயு 7:13, 14-ஐயும் பக்கங்கள் 145-6-ல் உள்ள பாரா 5-ஐயும் வாசியுங்கள்.] கடவுள் அங்கீகரிக்கிற வணக்கத்தை அடையாளம் காட்டும் ஆறு அம்சங்களை இந்த அதிகாரம் விவரிக்கிறது.” பக்கம் 147-ல் உள்ள பட்டியலைக் காண்பியுங்கள்.
துக்கம்/துன்பம்
◼ “துக்க சம்பவம் ஏதாவது நடக்கையில், கடவுள் உண்மையிலேயே மக்களிடம் அக்கறை காட்டுகிறாரா, அவர்கள் படும் துன்பத்தையெல்லாம் பார்க்கிறாரா என்றெல்லாம் அநேகர் யோசிக்கிறார்கள். நீங்கள் அப்படி எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு 1 பேதுரு 5:7-ஐயும் பக்கம் 11-ல் உள்ள பாரா 11-ஐயும் வாசியுங்கள்.] மனிதர் படும் துன்பத்தையெல்லாம் கடவுள் எப்படி ஒட்டுமொத்தமாக அகற்றப்போகிறார் என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது.” பக்கம் 106-ல் உள்ள ஆரம்பக் கேள்விகளைக் காண்பியுங்கள்.
போர்/சமாதானம்
◼ “மக்கள் அனைவருமே சமாதானத்திற்காக ஏங்குகிறார்கள். இந்தப் பூமியில் சமாதானம் வரப்போவது வெறும் கனவுதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் அளிக்க அனுமதியுங்கள். பின்பு சங்கீதம் 46:8, 9-ஐ வாசியுங்கள்.] கடவுள் தம் நோக்கத்தை நிறைவேற்றி, உலகளாவிய சமாதானத்தை எப்படிக் கொண்டுவரப்போகிறார் என்று இந்தப் புத்தகம் விவரிக்கிறது.” பக்கம் 35-ல் உள்ள படத்தைக் காட்டி, பக்கம் 34-ல் உள்ள பாராக்கள் 17-21-ஐக் கலந்தாலோசியுங்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
நன்கொடை ஏற்பாடு பற்றிக் குறிப்பிட வழிகள்
“எங்கள் உலகளாவிய வேலைக்காக இன்றைக்கு நீங்கள் ஒரு சிறிய நன்கொடையை கொடுக்க விரும்பினால், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.”
“எங்கள் பிரசுரங்கள் விலையின்றி கொடுக்கப்பட்டாலும், எங்கள் உலகளாவிய வேலைக்காகத் தரப்படும் சிறிய நன்கொடைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.”
“இந்த வேலையை எங்களால் எப்படிச் செய்ய முடிகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். எங்கள் உலகளாவிய வேலை, மனமுவந்து தரப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. இன்றைக்கு நீங்கள் ஒரு சிறிய நன்கொடையைக் கொடுக்க விரும்பினால் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.”