பிரசங்கித்தல்—கனம்பொருந்திய ஒரு சிலாக்கியம்
1 நற்செய்தியின் ஊழியமானது யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் கனம்பொருந்திய ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. (ரோ. 15:15; 1 தீ. 1:12) நீங்கள் அதை அவ்வாறுதான் கருதுகிறீர்களா? நாட்கள் கடந்து போவதோ மற்றவர்கள் கேலிசெய்வதோ அதற்காக நாம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்கும்படி அனுமதித்துவிடக்கூடாது. கடவுளின் நாமத்தைத் தாங்கியிருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிற சிலாக்கியமாகும். இந்தச் சிலாக்கியத்திற்கான நமது போற்றுதலை வளரச்செய்வது எப்படி?
2 இராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பது, உலகத்தாரின் நற்பிரியத்தை நமக்குக் கொண்டுவருவது கிடையாது. நாம் செய்யும் வேலையை அநேகர் அக்கறையற்ற விதத்திலும் அசட்டையாகவும் கருதுகின்றனர். மற்றவர்களோ ஏளனம்பேசி அதை எதிர்க்கின்றனர். உடன்வேலையாட்கள், அயலகத்தார் அல்லது குடும்ப அங்கத்தினரிடம் இருந்தும்கூட அத்தகைய எதிர்ப்பு வரக்கூடும். அவர்களுடைய கண்களுக்கு நாம் தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவும் முட்டாள்களாகவும்தான் காணப்படுகிறோம். (யோவா. 15:19; 1 கொ. 1:18, 21; 2 தீ. 3:12) உற்சாகமிழக்கச் செய்யும் அவர்களுடைய குறிப்புகள் நம்முடைய வைராக்கியத்தைக் குளிர்வித்து, நாம் மந்தமடைந்து, நம்முடைய கனம்பொருந்திய சிலாக்கியத்தை உதறித் தள்ளும்படி செய்யவுமே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. எதிர்மறையான குறிப்புகள் சாத்தானால் ஆதரிக்கப்பட்டவையாகும். அவன் “மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, . . . அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொ. 4:4) நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்?
3 இராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும் வேலையானது இன்று நம்மில் எவரும் செய்யக்கூடிய மிக முக்கிய வேலையாக இருக்கிறது என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. வேறு எந்த வழியிலும் கிடைக்காத, உயிரைக் காப்பாற்றும் செய்தியை நாம் கொண்டிருக்கிறோம். (ரோ. 10:13-15) மனிதனுடைய அங்கீகாரத்தையல்ல, ஆனால் கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதே முக்கியமாக இருக்கிறது. நம்முடைய பிரசங்க வேலையைப் பற்றிய இவ்வுலகத்தின் எதிர்மறையான நோக்குநிலைதானே, தைரியத்துடன் நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்தப்போவதில்லை.—அப். 4:29, 30.
4 தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்யும் சிலாக்கியத்தை இயேசு மிக உயர்வாக மதித்தார். (யோவா. 4:34) ஊழியத்தைச் செய்வதற்கென்றே தம்மையே முழுவதும் அர்ப்பணித்தார். கவனச் சிதறல்களோ எதிரிகளோ தம்மை மந்தமடையச் செய்யும்படி அவர் விட்டுவைக்கவில்லை. இராஜ்ய செய்தியை பிரசங்கித்தல் அவருடைய வாழ்க்கையில் எப்பொழுதுமே முதலிடம் வகித்தது. (லூக். 4:43) அவருடைய முன்மாதிரியை பின்பற்றும்படி நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (1 பே. 2:21) அவ்வாறு செய்வதன்மூலம், நாம் “தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்.” (1 கொ. 3:9) இந்தச் சிலாக்கியத்தை நாம் முழுவதுமாக அனுகூலப்படுத்திக் கொள்கிறோமா? முறைப்படி அமைந்த விதத்திலும் முறைப்படி அமையாத சந்தர்ப்பங்களிலும், இந்த நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புக்களைத் தேடுகிறோமா? யெகோவாவின் சாட்சிகளாக, ‘அவருடைய நாமத்தைத் துதிப்பதற்கு’ நாம் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும்.—எபி. 13:15.
5 நாம் ஊழியத்தில் எந்தளவுக்குப் பங்குகொள்கிறோம் என்பது பெரும்பாலும் நம்முடைய மனப்பான்மையினாலே தீர்மானிக்கப்படுகிறது. யெகோவா நமக்காகச் செய்திருக்கும் அனைத்தையும் நாம் உயர்வாகப் போற்றுகிறோமா? யெகோவாவுடைய சேவையில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி நம்மைத் தூண்டுவிக்கும் அவருக்கான அன்பை, நம் இருதயங்களில் வளர்த்திருக்கிறோமா? நாம் இப்பொழுது அனுபவிக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும், எதிர்காலத்திற்காக அவர் வாக்களித்திருப்பவற்றைப் பற்றியும் தியானிப்பது, நம்முடைய படைப்பாளருக்கான நம்முடைய அன்பில் பெருகிவர நமக்கு உதவிசெய்கிறது. அத்தகைய அன்பு நம்முடைய சூழ்நிலைகள் அனுமதிப்பதற்கு ஏற்றாற்போல, செயல்படுவதற்கு—ராஜ்ய பிரசங்க வேலையில் விடாப்பிடியாகவும், தவறாமலும் இருப்பதற்கு—நம்மைத் தூண்டிவிடுகிறது. நம்முடைய வைராக்கியமானது, யெகோவாவிடமும் நம் அயலாரிடமும் நாம் கொண்டிருக்கும் அன்புக்கு அத்தாட்சி அளிக்கும்.—மாற். 12:30, 31.
6 ஒரு காரியத்தை வைத்து நாம் என்ன செய்கிறோம், அதைப்பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதன்மூலம் அக்காரியத்தை எந்தளவு உயர்வாக மதிக்கிறோம் என்பதைக் காண்பிக்கிறோம். இராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிக்கும் சிலாக்கியத்தை நாம் உண்மையிலேயே மதிக்கிறோமா? நாம் நம்முடைய ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறோமா? எதிர்ப்பின் மத்தியிலும் இந்த இன்றியமையாத வேலையில் நிலைத்திருக்க நாம் தீர்மானமுள்ளவர்களாக இருக்கிறோமா? அற்புதகரமான இந்தச் சிலாக்கியத்தை நாம் உயர்வாக மதிப்போமானால், நிச்சயமாக வைராக்கியம் உள்ளவர்களாகவும் முழு இருதயத்தோடு செயல்படுபவர்களாகவும் இருப்போம்.—2 கொ. 4:1, 7.