காலத்திற்கேற்ற ராஜ்ய செய்தி உலகளாவ விநியோகிக்கப்பட வேண்டும்
1 ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 23 அன்று, “பொய் மதத்தின் முடிவு சமீபம்,” என்ற கவனத்தைக் கவரும் பொருளில் ஒரு விசேஷ பொதுப் பேச்சு கொடுக்கப்படும். அந்நாளைய கூட்டத்தின் முடிவில், சிந்தனையைத் தூண்டும் நான்கு பக்க ராஜ்ய செய்தி வெளியிடப்படும். அதில் அடங்கியுள்ள காலத்திற்கேற்ற செய்தியானது ஏப்ரல் 24 முதல் மே 14 வரையிலான மூன்று வார காலப்பகுதியில் உலகளாவ விநியோகிப்பு செய்யப்படும்.
2 உலகின் அனைத்து பாகங்களிலும் மக்கள் குழப்பமடைந்தவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, பிரச்சினைகளால் பீடிக்கப்படுகிறார்கள். சம்பவித்துவரும் காரியங்களைப் பற்றி உள்ளப்பூர்வமாக கவலைப்பட்டுக்கொண்டிருப்போருக்கு ராஜ்ய செய்தி உண்மையான அக்கறைக்குரியதாக இருக்கும். ஏனென்றால் அது மனிதனுக்கான வழிநடத்துதலின் மாசற்ற ஊற்றுமூலமாக இருக்கிற கடவுளுடைய வார்த்தையினிடம் அவர்களை வழிநடத்தும். (சங். 119:105) ஏப்ரல் 23 அன்று ராஜ்ய செய்தி வெளியிடப்படும்போது அந்தப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நாமனைவரும் எதிர்நோக்கியவர்களாய் இருக்கிறோம். இதற்கிடையில், இந்தத் தீவிர மூன்று வார பிரச்சாரத்திற்காக தயாரிப்பு வேலை செய்வதற்கு அதிகமிருக்கிறது.
3 வைராக்கியமாக பங்குகொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்: இந்த வேலையில் யார் பங்குகொள்ளலாம்? நிச்சயமாகவே, ஏற்கெனவே பிரஸ்தாபியாக உள்ள அனைவரும் அவ்விதமாக செய்வதற்கு ஆவலுள்ளவர்களாய் இருப்பர்! சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் ஆஜராகிவருகிற பைபிள் மாணாக்கர்களைப் பற்றியென்ன? சிலர் நம்முடன் அதிக காலத்திற்குக் கூட்டுறவுகொண்டு, சீரான முன்னேற்றம் செய்துவருகிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வேதப்பூர்வ நியமங்களுக்கு இசைவாக மாற்றிக்கொண்டிருந்தால், ராஜ்ய அறிவிப்பாளர்களாக கருதப்படுவதற்குத் தகுதியுள்ளவர்களா? பைபிள் படிப்பை நடத்துகிற பிரஸ்தாபியானவர் இந்தக் காரியத்தைக் குறித்து அந்த மாணாக்கரிடம் கலந்துபேசலாம்; அந்த மாணாக்கர் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு விருப்பமுள்ளவராக இருந்தால், நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், 98 மற்றும் 99-ம் பக்கங்களிலுள்ள விஷயத்தை அவருடன் இரண்டு மூப்பர்கள் மறுபார்வை செய்வார்கள். கூடுமானவரை இதை விரைவில் செய்யவேண்டும், அப்பொழுது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக தகுதிபெறுகிறவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் முழுப்பங்கைக் கொண்டிருக்க முடியும். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக கருதப்படுவதற்கு இன்னும் தகுதிபெறாத பைபிள் மாணாக்கர்கள், காலத்திற்கேற்ற அந்த ராஜ்ய செய்தியை அறிமுகமானவர்கள் அல்லது குடும்ப அங்கத்தினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.—காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, பக்கம் 14, பாரா 8-ஐ காண்க.
4 இந்த வேலை கடினமானதல்ல; எல்லாரும் பங்குகொள்ளலாம். வாராந்தர குடும்ப பைபிள் படிப்பின் பாகமாக, பெற்றோர் இந்த ராஜ்ய செய்தியை உபயோகிக்க பயிற்சி நேரங்களை (practice session) வைத்துக்கொள்ளலாம்; இதன்மூலமாக அதை வீட்டுக்கு வீடு அளிப்பதற்கு குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் நன்கு தயார்நிலையில் இருப்பார்கள். சாதாரணமாக ஓர் எளிய பிரசங்கமே மிகச் சிறந்தது. ஒரு சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு, வீட்டுக்காரரிடம் ராஜ்ய செய்தியை அளித்து, அதை வாசிக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். வீட்டுக்காரர் அக்கறை காட்டுவாராகில், அந்த அக்கறையை வளர்க்க நீங்கள் மீண்டும் சென்று பார்ப்பதற்காக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். (1 கொ. 3:6, 7) எளிய, நன்கு தயார்செய்யப்பட்ட பிரசங்கமே வெற்றிக்கான திறவுகோலாகும்.
5 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ‘செய்வதற்கு அதிகமுள்ளது.’ அடுத்த மாத நம் ராஜ்ய ஊழிய பிரதியில், “கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகமுள்ளது,” என்று தலைப்பிடப்பட்ட உட்சேர்க்கையில் கூடுதலான தகவல் வழங்கப்படும்.—1 கொ. 15:58, NW.