அதிகம் கொடுக்கப்படுகிறது —அதிகம் கேட்கப்படுகிறது
1 சத்தியத்தை உடையவர்களாயிருப்பதற்கு நாம் எவ்வளவு தயவுகூரப்பட்டவர்கள்! யெகோவாவுக்கான நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் காரணமாக, நமக்கு ‘சுவிசேஷம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.’ (1 தெ. 2:4) இது நம்மை பெரிய உத்தரவாதத்தில் வைக்கிறது. இயேசு கூறினார்: “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்.”—லூக். 12:48ஆ.
2 அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! நாமனைவருமே கடவுளுடைய வார்த்தையின் அறிவு, சகோதரர்களின் அற்புதமான கூட்டுறவு, மகத்தான ஒரு நம்பிக்கை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், நம்மிடம் அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக உண்மையிலேயே சொல்லமுடியும். இதற்கு பதிலாக நம்மிடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது நியாயமானதே.
3 தேவைகளைப் பற்றிய சரியான நோக்கை காத்துக்கொள்ளுங்கள்: நம்மிடம் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது என்ற முடிவுக்குச் சிலர் வந்திருக்கின்றனர். கிறிஸ்தவ சபையின் தலைவராக, அதைச் சரியாக இயங்கும்படி செய்வதற்கு ‘தேவையாயிருக்கிறதை’ இயேசு கிறிஸ்து தீர்மானிக்கிறார். (எபே. 4:15, 16, NW) ‘அவருடைய நுகம் மெதுவாயும், அவருடைய சுமை இலகுவாயும் இருக்கிறது,’ என்பதாக நமக்கு உறுதியளிக்கிறார். (மத். 11:28-30) வரம்புகள் உள்ளவர்களுக்காக அவர் அன்பாக இசைந்துசெல்கிறார். (லூக். 21:1-4) எந்த அளவானாலும்சரி, நம்முடைய மிகச் சிறந்ததை நாம் அளிப்போமாகில் ஆசீர்வதிக்கப்படுவோம்.—கொலோ. 3:23, 24.
4 ‘இராஜ்ய அக்கறைகள் என்னுடைய வாழ்க்கையில் முதலிடம் வகிக்கின்றனவா? நான் என்னுடைய நேரத்தையும் என்னுடைய உடைமைகளையும் கடவுளுடைய நாமத்திற்குத் துதியையும் மற்றவர்களுக்கு நன்மையையும் கொண்டுவருகிற விதத்தில் பயன்படுத்திவருகிறேனா? என்னுடைய மிகப் பெரிய இன்பம், பொருள் சம்பந்தமாக காரியங்களை சுயநலமாக அனுபவித்து மகிழ்வதிலிருந்து வருவதற்குப் பதிலாக, யெகோவாவை சேவிப்பதிலிருந்து வருவதாக நான் காண்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளுக்கான நம்முடைய நேர்மையான பதில்கள் நம்முடைய இருதயத்திலிருக்கிற உள்ளெண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.—லூக். 6:45.
5 தீமையானதைச் செய்வதற்கு சோதிக்கப்படுவதைத் தவிருங்கள்: சுயநலம், பேராசை, புலன் இன்பத்திற்கான ஆசை ஆகியவற்றினிடமாக இப்படிப்பட்ட சோதனைகளும் அழுத்தங்களும் முன்னொருபோதும் இருந்ததில்லை. ஒத்துப்போவதற்கான சோதனைகளோடு, ஒவ்வொரு நாளும் நாம் ஒழுக்கநெறி சவால்களை எதிர்ப்படுகிறோம். இந்தச் சவால்களை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு, நமக்கு உதவிசெய்யும்படி நாம் யெகோவாவிடம் கேட்கவேண்டும். (மத். 26:41) அவருடைய ஆவியின்மூலம் அவர் நம்மை பலப்படுத்த முடியும். (ஏசா. 40:29) கடவுளுடைய வார்த்தையை அனுதினமும் வாசிப்பது பெரிதும் உதவியாக இருக்கிறது. (சங். 1:2, 3) சுயசிட்சையும் சுயக்கட்டுப்பாடும்கூட பெரும்பாகத்தை வகிக்கின்றன.—1 கொ. 9:27.
6 நன்மையானது எதுவோ அதை நேசிப்பது போதுமானதல்ல—தீமை எதுவோ அதை வெறுக்கவும் வேண்டும். (சங். 97:10) தீமையான காரியங்களுக்கான ஓர் ஆசையை வளர்க்காமலிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. நீதிமொழிகள் 6:16-19 யெகோவா வெறுக்கிற ஏழு காரியங்களைப் பட்டியலிடுகிறது. தெளிவாகவே, யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிறவர் இப்படிப்பட்ட காரியங்களையும் வெறுக்க வேண்டும். சத்தியத்தின் திருத்தமான அறிவால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், நம்முடைய மனங்களை நற்காரியங்களின்மீது ஊன்றவைத்து, நாம் அந்த அறிவுக்கு இசைவாக செயல்பட விரும்பவேண்டும்.
7 ‘எப்பொழுதும் கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருக்க’ சாதகமாயிருக்கிற சூழ்நிலைமைகளுக்காக ஜெபிப்பது சரியானதே. (1 கொ. 15:58, NW) யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாயிருப்பது வீணான காரியங்களை நாடிச்செல்வதற்கு அதிக நேரமில்லாமல் செய்வதால், ஒரு பாதுகாப்பாக இருக்கிறது என்பதாக அநேகர் கண்டிருக்கின்றனர்.
8 சிந்திக்கப்பட்ட எல்லா காரியங்களும், யெகோவா நம்மிடம் கேட்பவை மிகவும் நியாயமானதேயாகும். (மீகா 6:8) சேவைக்கான ஒவ்வொரு சிலாக்கியத்திற்காகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது. (எபே. 5:20) ஆகவே, நம்முடைய பரிசு நம்மிடம் கேட்கப்படுகிற எந்தவொன்றையும்விட எல்லையில்லா அளவு மிகப் பெரியதாயிருக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளவர்களாக, தொடர்ந்து ‘கடினமாக உழைத்து பிரயாசப்படுவோமாக.’—1 தீ. 4:10.