கிறிஸ்து இளைஞருக்கு ஓர் மாதிரியாக
1 நீண்ட நேர பைபிள் கலந்தாலோசிப்பிற்குப் பின் ஓர் இளைஞன் சொன்னான்: “நான் இயேசு கிறிஸ்துவின் வல்லமைவாய்ந்த ஆளுமையினால் மனங்கவரப்பட்டேன். நான் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர் இவரே.” இதே கூற்று அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றிலுள்ள எந்தத் தலைவரையும் பற்றி சொல்லப்பட முடியாது. உலக தராதரங்களையும் கிறிஸ்தவமுறையற்ற வாழ்க்கை பாணிகளையும் பகிரங்கமாக கடைப்பிடிப்பவர்களை மெய் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு முன்மாதிரிகளாக கருதுவதில்லை.—சங். 146:3, 4.
2 இளைஞர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, தங்களை அவர்கள் கடவுளின் ஆடுகளாக அளித்து, இயேசுவினால் அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று நிச்சயமாயிருக்கலாம். அந்த நல்ல மேய்ப்பன் அவர்களில் அக்கறை கொண்டிருக்கிறார். (யோவா. 10:14, 15, 27) கிறிஸ்துவைத் தங்கள் மாதிரியாக பின்பற்றும் இளைஞர் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.
3 தற்போது புரூக்லின் பெத்தேலில் சேவை செய்துவரும் ஒரு சகோதரர் எட்டு வயது முதற்கொண்டே இந்த ஊழிய சிலாக்கியத்தைத் தன் இலக்காகக் கொண்டிருந்தார். அவர் வளர்ந்த பிறகு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுவதற்கு பெத்தேல் சேவையை ஓர் நடைமுறையான வழியாகக் கருதும்படி ஊக்கமூட்டப்பட்டார். அவருடைய பெற்றோரும் பயணக் கண்காணிகளும் இந்த இலக்கை அவர் முன் வைத்தனர். அவர் தன்னை தயார்செய்துகொள்ள உதவும்வண்ணம், வீட்டு வேலைகளைச் செய்வதிலும், ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பதிலும், ஊழியத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் பெத்தேல் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரைப் போன்றே தன்னை ஊக்கமாக ஈடுபடுத்திக்கொள்ளும்படி அவர்கள் உற்சாகப்படுத்தினர். தான் வளர்ந்து வந்தபோது கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்ற முயற்சி எடுத்ததைக் குறித்து பல ஆண்டுகளாக பெத்தேல் சேவையை அனுபவித்தப்பின் இப்போது அவர் நன்றியுள்ளவராக இருக்கிறார்.
4 இயேசு உலகத் தொழில் ஒன்றை நாடவில்லை; அவர் ஊழியத்தைத் தெரிந்துகொண்டார். ஓர் இளம் சகோதரி பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றதும் பயனியர் சேவை செய்ய விரும்பினாள், ஆனால் பொருத்தமான பகுதிநேர வேலை இல்லாததால் தயங்கிக்கொண்டிருந்தாள். ‘முதலாவது நான் ஒரு வேலையை தேடிப் பிடிப்பேன், பிறகு என் பயனியர் விண்ணப்பத்தைக் கொடுப்பேன்’ என அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் எந்தளவுக்கு காத்திருந்தாளோ அந்தளவுக்கு ஒரு முழுநேர வேலை விரும்பத்தக்கதாக தோன்றும், ஏனெனில் அதை ஏற்றுக்கொள்ளாதபடி அவளை தடுக்க எதுவும் இருக்காது என்பதை ஒரு மூப்பர் சுட்டிக்காட்டினார். அவள் சொன்னாள்: “நான் யெகோவாவிடம் அவருடைய ஆவி என்னை வழிநடத்தும்படி ஜெபித்தேன்.” அவள் உடனடியாக ஒரு துணைப் பயனியராக சேர்ந்து பின்பு ஓர் ஒழுங்கான பயனியர் ஆனாள். அதற்குச் சற்று பின்னர், அவளுடைய பயனியர் அட்டவணைக்குப் பொருத்தமான ஒரு வேலையைக் கண்டுபிடித்தாள்.
5 இயேசு தைரியமாக ராஜ்ய செய்தியை அனைவருக்கும் அறிவித்தார். (மத். 4:23) இளம் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயந்துவிடாமல் பிரசங்கிப்பதில் தைரியமாக இருக்கவும் கற்றுக்கொள்ளலாம். ஓர் 14-வயதான சாட்சி சொன்னான்: “ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய நிலைநிற்கை பள்ளியிலுள்ள அனைவருக்கும் தெரியும். . . . அதை அவர்கள் அவ்வளவு நன்றாக தெரிந்திருப்பதால், ஊழியத்தின் போது என் வகுப்பு மாணவனை சந்திக்க நேரிட்டால் நான் வெட்கப்படுவதில்லை. உடன் மாணவர்கள் பொதுவாக செவிகொடுப்பர், அநேக சமயங்களில் பிரசுரங்களையும் ஏற்றுக்கொள்வர்.”
6 கிறிஸ்துவின் முன்மாதிரியைக் கருத்தில்கொள்வது தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ஞானமான தீர்மானங்களை செய்ய இளைஞருக்கு உதவக்கூடும். உலகப்பிரகாரமான நாட்டங்களில் மூழ்கியிருப்பதற்குப் பதிலாக, அவர்கள் யெகோவாவின் சேவையில் வைராக்கியத்தைக் காண்பிப்பதன் மூலம் ‘தங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினைக்கின்றனர்.’ (பிர. 12:1, NW) கிறிஸ்து இயேசுவைப் போல், அவர்கள் ‘பரம தந்தையின்மீது அன்பை’ வளர்க்கின்றனர், அது இந்த உலகம் தரக்கூடிய எதையும்விட அதிக விரும்பத்தக்க ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. பழைய உலகத்தோடு ‘மறைந்து போவதற்கு’ பதிலாக, ‘என்றும் நிலைத்திருக்க’ அவர்கள் எதிர்பார்க்கலாம்.—1 அரு. 2:15-17, கத்.பை.