யெகோவா வல்லமையை அளிக்கிறார்
1 யெகோவாவின் ஜனங்களாக, நாம் ‘மக்களிடையே நல்நடக்கையுள்ளவர்களாய்’ நடந்துகொண்டு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி நியமிப்பைப் பெற்றிருக்கிறோம். (1 பே. 2:12; மத். 24:14) நெருக்கடியான இக்காலங்களும் நமக்கே உரிய பலவீனங்களும் குறைகளும் இருப்பதால், நாம் நம் சொந்த பலத்தோடு இந்த வேலையை ஒருபோதும் செய்து முடித்துவிட முடியாது. (2 தீ. 3:1-5) உதவிக்கு நாம் யெகோவாவை நாடலாம் என்பதைக் குறித்து நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்!
2 அப்போஸ்தலனாகிய பவுல் அநேக சோதனைகளை சகித்தார். (2 கொ. 11:23-27) இவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து தனக்கு நியமிக்கப்பட்ட வேலையை செய்துமுடிக்க அவரால் எப்படி முடிந்தது? யெகோவா “இயல்புக்கு மேற்பட்ட வல்லமையை” அவருக்குக் கொடுத்தார். (2 கொ. 4:7, NW) கடவுளின் இத்தகைய உதவியை பவுல் அங்கீகரித்து, “எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்று எழுதினார். (பிலி. 4:13, தமிழ் கத்தோலிக்க பைபிள்) யெகோவா நமக்கும் இவ்விதமே உதவுவார். இந்த உதவியை நாம் எவ்விதம் பெறமுடியும்?
3 இடைவிடாமல் ஜெபிப்பதன் மூலம்: நாம் விட்டுவிடாமல் ‘தொடர்ந்து கேட்டுக்கொண்டும், தேடிக்கொண்டும், தட்டிக்கொண்டும்’ இருக்கும்படி இயேசு நம்மை ஊக்கப்படுத்தினார். (லூக். 11:5-10, NW) விடாமுயற்சியுடன் ஜெபத்தில் தரித்திருப்பது யெகோவாவுக்கு நமது கவலையின் ஆழத்தை, நமது விருப்பத்தின் பலத்தை, நமது உள்நோக்கத்தின் மாய்மாலமற்றத்தன்மையை நடப்பித்துக் காட்டுகிறது. (சங். 55:17; 88:1, 13; ரோ. 1:9-11) ஜெபத்தில் விடாமுயற்சியுடன் தரித்திருப்பதன் முக்கியத்துவத்தை பவுல் உணர்ந்து, “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்,” என்று நம்மை தூண்டினார். (1 தெ. 5:17) யெகோவாவின் உதவியை நாம் பெறுவதற்குப் பிரதான வழிகளில் ஒன்று ஜெபம் ஆகும்.
4 தேவாட்சியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதன் மூலம்: “தேவாட்சி” என்பது அன்பாகவே உள்ள “கடவுளுடைய ஆட்சி” என்று பொருள்படும். யெகோவாவின் அன்புள்ள அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு பெரிய தீர்மானங்களிலும் சிறிய தீர்மானங்களிலும் அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றுகையில் நாம் அவருடைய ஆட்சியினால் பயனடைகிறோம். ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் தேவாட்சியை இப்பூமியில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். (மத். 24:45-47, NW) யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் பெற வேண்டுமானால் அந்த ‘அடிமை’ பயன்படுத்தும் அமைப்புடன் ஒத்துழைப்பது அத்தியாவசியம். (எபிரெயர் 13:17-ஐ ஒப்பிடுக.) நமக்குத் தேவையான வல்லமையை ஏற்ற சமயத்தில் கொடுப்பதன் மூலம் யெகோவா அவர் பேரிலுள்ள நம் உண்மைப்பற்றுறுதிக்கும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்குள்ள விருப்பார்வத்துக்கும் பலனளிப்பார்.—எபி. 4:16.
5 நம் சகோதரர்களுடன் நெருங்கியிருப்பதன் மூலம்: அன்பு இயேசுவினுடைய சீஷர்களின் அடையாளக் குறியாகும். (யோவா. 13:34, 35) பல்வேறுபட்ட ஆளுமைகள் இருப்பதால் தனிப்பட்ட வேறுபாடுகளின் நிமித்தம் பிணக்கம் நம்மிடையே ஏற்படக்கூடும். நாம் மன உருக்கமாயிருந்து ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னிக்க வேண்டியது அவசியம். (எபே. 4:32) இதனால் விசுவாசத்திலுள்ள நம் சகோதரர்களுடன் நெருங்கியிருக்கவும் சோதனையின்கீழ் அவர்கள் காட்டும் உறுதியான சகிப்புத்தன்மையின் மூலம் உற்சாகம் பெறவும் சாத்தியமாகிறது. “உலகத்திலுள்ள [நம்] சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்”தவர்களாய் நாம் அவற்றுக்கு ஒப்பான அழுத்தங்களைச் சமாளிக்க கடவுளால் கொடுக்கப்பட்ட பலத்தைப் பெற்றிருக்கிறோம்.—1 பே. 5:9.
6 தனிப்பட்ட படிப்புக்கு நல்ல வழக்கமுறையை வைத்திருப்பதன் மூலம்: நம் மனங்களையும் இருதயங்களையும் ஆவிக்குரிய விதத்தில் வலுப்படுத்திக் கொள்வது சாத்தானின் தாக்குதலை எதிர்த்துப் போராட நம்மை தகுதியாக்குகிறது. (1 பே. 5:8) தனிப்பட்ட படிப்பை நல்ல வழக்கமுறையில் கொண்டிருப்பது நம் கடவுளுடைய அறிவின் சேமிப்பை அதிகரிக்கும். அன்றாட சவால்களை எதிர்ப்படுகையில் நாம் இதிலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இரட்சிப்பைப் பெறுவதில் ‘திருத்தமான அறிவு’ ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை பவுல் அழுத்தியுரைத்தார். (1 தீ. 2:3, 4, NW) ஆவிக்குரிய உணவை ஒழுங்காக உட்கொள்வது அத்தியாவசியமானது.
7 நம்மை பலமாக வைத்துக்கொள்ள தேவையான எல்லா ஏற்பாடுகளும் கிறிஸ்தவ சபையின் மூலம் தயாராக கிடைக்கின்றன. அதன் வேலைகளை முழு இருதயத்தோடு ஆதரிப்பது நாம் “நடந்தாலும் சோர்ந்துபோகா”மல் இருப்போம் என்ற உத்தரவாதமளிக்கும்.—ஏசா. 40: 29-31.