மீட்பைக் கொண்டுவருகிற அடையாளக்குறியிடுதல்
1 யெகோவா தம்முடைய நீதியான நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்குமுன், அவர் எப்போதும் எச்சரிப்பு விடுக்கிறார்; மேலும், சாந்தகுணமுள்ளவர்கள் தப்பிப்பதற்கான ஒரு வழியையும் கொடுக்கிறார். எசேக்கியேலின் காலத்தில், அங்கு செய்யப்பட்டுவந்த எல்லா அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டு அழுதுகொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். யெகோவா அப்படிப்பட்ட தகுதிவாய்ந்தவர்கள் மீட்பிற்காக அடையாளக்குறியிடப்படும்படி செய்தார். (எசே. 9:4-6) இன்று நம் பிரசங்க வேலை அதே காரியத்தைத்தான் செய்கிறது. நாம் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கலாம்.
2 நேர்மையான ஆட்களைக் கண்டுபிடிப்பது முதல் படி மட்டுமே. நாம் ஒரு மறுசந்திப்பிற்காக ஏற்பாடு செய்கிறோம். மறுசந்திப்பிற்கான தயாரிப்பு முதல் சந்திப்பில் செய்யப்படுகிறது; கொடுக்கப்பட்ட பிரசுரத்தையும் பேசப்பட்ட பொருளையும் குறித்து வைப்பதன்மூலம் இது செய்யப்படுகிறது. மீண்டும் சந்திப்பதில் நம்முடைய வெற்றி, மறுபடியும் செல்லும்போது நாம் எதைச் சொல்லவும் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்பதன்பேரிலேயே பெரிதளவும் சார்ந்திருக்கும்.
3 “காவற்கோபுரம்” கொடுத்ததற்கு மறுசந்திப்பு செய்தால் அதன் முக்கிய பொருளுக்குக் கவனத்தைத் திருப்பலாம்:
◼ “காவற்கோபுர பிரதியின் முன் அட்டையில், ‘யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது’ என்ற கூற்று இருப்பதைக் கவனியுங்கள். இந்தப் பத்திரிகையை தனித்தன்மை வாய்ந்ததாக்குவது என்னவென்றால், உலகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அது கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரித்துப் பேசுகிறது. கடவுளுடைய சித்தம் பூமியிலே செய்யப்படும்போது கடவுளுடைய ராஜ்யம் எதை நிறைவேற்றும் என்பதை அது விளக்குகிறது. பூமியெங்கும் அறிவிக்கப்படும் என்பதாக இயேசு சொன்ன நற்செய்தி இதுவே.” மத்தேயு 24:14-ஐ வாசித்து, காவற்கோபுரத்தை எவ்வாறு ஒழுங்காகப் பெறலாம் என்றும் தனிப்பட்ட பைபிள் படிப்பிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் விவரியுங்கள்.
4 பைபிளில்தானே கவனத்தை ஒருமுகப்படுத்தி, அதை ஒழுங்காக வாசிப்பதற்கான தேவையை அழுத்திக் காண்பிக்க நீங்கள் விரும்பக்கூடும். இவ்வாறு சொல்லலாம்:
◼ “அன்றாடக வாழ்க்கை பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு ஏதாவது நடைமுறையான ஆலோசனையை கிட்டத்தட்ட எல்லாருமே போற்றுவார்கள் எனத் தெரிகிறது. நாம் நம்பகமான ஆலோசனையை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நண்பர்களுடைய ஆலோசனையில் நம்பிக்கைவைத்த அல்லது பணம்செலுத்தி நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெற்ற அநேகர் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். மறுபட்சத்தில், லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் உண்மையிலே நம்பிக்கை வைக்கக்கூடிய ஆலோசனையின் ஊற்றுமூலமாக இருப்பது பைபிள் மட்டுமே என கண்டிருக்கின்றனர். நாம் எதிர்ப்படக்கூடிய எந்தப் பிரச்சினையையும் எப்படி சமாளிப்பது என்பதுபற்றி பைபிள் அறிவுரை கொடுக்கிறது. [2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.] பைபிளைப் புரிந்துகொள்வதை நீங்கள் கடினமானதாகக் கண்டிருக்கக்கூடும் என்றாலும், ஞானமான ஆலோசனையின் ஒரு களஞ்சியத்தைத் திறக்கும் விதத்தில் நீங்கள் எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.” புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளில் பின்புறத்தில் “பைபிள் வார்த்தைகளின் அகர வரிசை பட்டியல்” என்ற பகுதியில், “அன்பு” என்பதற்கு கவனத்தைத் திருப்பி, தொடருங்கள்; மற்றவர்களுடனுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு அன்பு எவ்வாறு உதவும் என்பதற்குச் சில மேற்கோள்களைச் சுட்டிக் காண்பியுங்கள்.
5 பைபிள் படிப்பைத் தொடங்கும் இலக்குடன், இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி, “நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்” என்ற புத்தகத்தைப் பயன்படுத்த தெரிவு செய்யலாம்:
◼ “நாம் நம்முடைய குடும்பங்களை நேசிக்கிறோம்; அவை மிகச் சிறந்த சூழ்நிலைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இப்படிப்பட்ட ஒரு உலகில் வாழ்வதிலிருந்து உங்கள் குடும்பம் எப்படி நன்மையடையும்?” பக்கங்கள் 156-7-லுள்ள படங்களைக் காண்பியுங்கள். அந்தப் பக்கங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு வசனங்களை வாசித்து, இவை பொய்சொல்ல முடியாத யெகோவா தேவனால் செய்யப்பட்ட வாக்குறுதிகள் என்பதை விளக்குங்கள். பக்கங்கள் 5-6-லுள்ள அத்தியாயங்களின் பட்டியலைக் காண்பித்து, அதில் எந்தப் பொருள் வீட்டுக்காரருக்கு அதிக அக்கறைக்குரியதாய் இருக்கிறது என்று கேளுங்கள்; அவர் தேர்ந்தெடுக்கிற அத்தியாயத்திற்குத் திருப்பி, ஓரிரண்டு பத்திகளைக் கலந்தாராயுங்கள்.
6 மீட்பிற்காக அடையாளக்குறியிடப்படும்படி மற்றொரு நபருக்கு உதவ நீங்கள் விரும்புகிறீர்களா? நன்கு தயாரிப்பதிலும், அக்கறை காண்பிக்கும் அனைவரையும் தவறாமல் தொடர்ந்து சந்திப்பதிலுமே, ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதன்’ வெற்றி சார்ந்திருக்கிறது.—2 தீ. 4:5, NW.