மாவட்ட மாநாட்டில் புதிய புத்தகத்தை வெளியிட்டதில் எல்லாரும் கிளர்ச்சியூட்டப்பட்டனர்
புதிய புத்தகம் கடவுளைப் பற்றிய அறிவை முக்கியப்படுத்திக் காட்டுகிறது
1 நம்முடைய “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டு முழு நிகழ்ச்சிநிரலிலும் நாம் எவ்வளவு அதிக மகிழ்ச்சியடைந்தோம்! சனிக்கிழமை பிற்பகலில், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புதிய புத்தகத்தைப் பற்றிய அறிவிப்பையும், அதன் சம்பந்தமாக அதைத் தொடர்ந்து சொல்லப்பட்ட தகவலையும் நாம் கேட்டபோது நம்முடைய சந்தோஷம் பொங்கியது. கடவுள் மாத்திரமே கொடுக்கும் அறிவு—கடவுளைப் பற்றியதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியதுமான அறிவு—பூமியின் கோடிக்கணக்கான மக்களுக்குத் தேவை.—நீதி. 2:1-6; யோவா. 17:3.
2 இந்தப் புத்தகத்தின் பகுதிகளைப் பேச்சாளர் எவ்வளவு எழுச்சியூட்டும் முறையில் விவரித்தார்! அதிகாரங்களின் மனதைக் கவரும் தலைப்புகள், நடைமுறையான படவிளக்கங்கள், சத்தியத்தைப் பற்றிய நம்பிக்கையுறுதியான விவரிப்புகள், சிக்கலற்ற கேள்விகள், ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், “உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்” என்ற தலைப்பையுடைய பெட்டி ஆகியவை அதை வாசிப்போர் யாவரையும் கவரும் அம்சங்களில் சில ஆகும். ஆனால் நம்முடைய பைபிள் மாணாக்கர்கள், பைபிள் போதகங்களின் அடிப்படை அறிவை விரைவில் அடைந்து வருகையில் முக்கியமாய்ப் பயனடைவார்கள்.
3 சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் முடிவாகக் கொடுக்கப்பட்ட பேச்சுகளின்போது, இந்தப் புதிய புத்தகத்தைப் பயன்படுத்தி குடும்பப் படிப்பை நடத்தும்படி நாம் ஊக்கப்படுத்தப்பட்டோம். இதற்குள், நாம் அதன் பொருளடக்கத்தை பெரும்பாலும் தெரிந்துகொண்டிருப்போம். வெளி ஊழியத்தில் இந்தப் புதிய புத்தகத்தை அளிக்கும்போது மனதில் வைத்திருப்பதற்கான குறிப்புகளையும் நீங்கள் சந்தேகமில்லாமல் கலந்துபேசியிருப்பீர்கள்.
4 மறுபார்வைக்கான குறிப்புகள்: “ஏன் மனிதவர்க்கத்துக்குக் கடவுளைப் பற்றிய அறிவு தேவை” என்ற பொருளின்பேரில் பேசினபோது, பின்வருபவை உள்ளிட்ட பல குறிப்புகளை பேச்சாளர் அறிவுறுத்தினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்: (1) படிப்புகளை நடத்துவதற்கு இந்தப் புத்தகத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, கூடுதலான தகவல்களைச் சேர்ப்பது ஞானமல்ல, அவ்வாறு செய்வது முக்கிய குறிப்புகளை மறைத்துப்போடக்கூடும்; ஒவ்வொரு அதிகாரத்திலும் இந்தப் புத்தகம் நிரூபிப்பதைத் தெரிவிப்பதில் மாத்திரமே கவனத்தை ஊன்ற வையுங்கள். (2) அதிகாரங்கள் மிதமான நீளமுள்ளவையாக இருக்கின்றன, ஆகையால் நீங்கள் படிப்பு நடத்தும் ஒவ்வொரு சமயத்திலும் பொதுவாய் ஒரு அதிகாரத்தை முழுமையாகப் படித்துமுடிக்கக்கூடும். (3) ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், “உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்” என்ற தலைப்பைக்கொண்ட பெட்டியிலுள்ள கேள்விகள் சுருக்கமான மறுபார்வைக்கு உதவும்.
5 பைபிள் படிப்புகளில் பயன்படுத்துதல்: தங்கள் பைபிள் படிப்புகளை இந்தப் புதிய புத்தகத்திலிருந்து படிக்கும்படி மாற்றிக்கொள்வது உசிதமானதா என்று பிரஸ்தாபிகள் சிலர் கேட்டிருக்கின்றனர். தற்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் பேரளவு முடித்துவிட்டிருந்தால், அந்தப் பிரசுரத்தைப் படித்து முடித்துவிடுவது நடைமுறைக்குகந்ததாக இருக்கும். இல்லையெனில், அறிவு புத்தகத்துக்கு நீங்கள் மாற்றிக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்படுகிறது. பைபிள் படிப்பைத் தொடங்குவதற்கு ஒரு சிற்றேட்டை அல்லது ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்தியிருந்தீர்களென்றால், பொருத்தமான சமயத்தில் இந்தப் புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தி, படிப்புக்கு இதைப் பயன்படுத்துங்கள். வரவிருக்கும் மாதங்களில் நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவு புத்தகத்தைப் பயன்படுத்துவதன்பேரில் மேலுமதிகமானத் தகவல்கள் கொடுக்கப்படும்.
6 நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிக்க நமக்கு உதவிசெய்வதற்கு, யெகோவா இந்தப் புதிய புத்தகத்தை அளித்திருக்கிறார். இப்போது நாம் நன்றாய் தயாரித்து, இன்னும் செய்யப்படவிருக்கிற வேலையில் முழுமையாகப் பங்குகொள்ள வேண்டும்.