1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மையடைவீர்—பகுதி 3
1 அப்போஸ்தலனாகிய பவுல், நற்செய்தியை தைரியமாய்ப் பேசுவதற்கான திறமையைத் தான் பெறும்படிக்கு, தன் சகோதரர் தனக்காக ஜெபிக்கும்படி விரும்பினார். (எபே. 6:18-20) அதே திறமையை நாமும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். இந்தத் திறமையைப் பெறுவதற்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி அளிக்கிற உதவியை நன்றியோடு மதிக்கிறோம்; கூட்டங்களுக்கு வருவோரில் தகுதிபெற்றவர்கள் அதில் பெயர்ப்பதிவு செய்துகொள்ளும்படி ஊக்கமூட்டப்படுகிறார்கள்.
2 மாணாக்கராக, நம்முடைய பேசும் மற்றும் கற்பிக்கும் திறமைகளை முன்னேற்றுவிக்க நமக்கு உதவிசெய்வதற்கு, அவரவருக்குத் தேவையான தனிப்பட்ட அறிவுரையை நாம் பெறுகிறோம். (நீதி. 9:9) மற்ற மாணாக்கர் பெறும் அறிவுரைக்கும் செவிகொடுத்துக் கேட்டு, நாம் கற்பதை நமக்குப் பொருத்திப் பயன்படுத்துவதிலிருந்தும் நாம் பயனடையலாம். நமக்குக் கொடுக்கப்படும் ஒரு பேச்சைத் தயாரிக்கையில், அதன் மூலாதாரத் தகவலை நாம் கவனமாய்ப் படித்து, அதைப்பற்றிய நம்முடைய விளக்கம் திருத்தமானதாக இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் முக்கிய குறிப்புகளும் வேதவசனங்களும் மொத்தத்தில் அதன் பொருளைப் படிப்படியாக விவரிப்பதில் பொருந்த வேண்டும். அந்தப் பேச்சு நியமிப்பு மற்றொருவரையும் உட்படுத்துகிறதென்றால், பள்ளியில் அதைக் கொடுப்பதற்கு வெகு முன்னதாகவே அதை அவரோடு ஒத்திகை பார்க்க வேண்டும். நாம் முன்னேற்றம் செய்து வருகையில், பேச்சு முழுவதையும் எழுதப்பட்ட தாளுக்குப் பதிலாக, குறிப்புகளை மட்டுமே வைத்து மனதிலிருந்து பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
3 பள்ளியில் பேச்சு நியமிப்புகள் அளிக்கப்பட்டிருக்கிற யாவரும் முன்கூட்டியே வந்திருந்து, பள்ளி கண்காணியிடம் தங்கள் பேச்சு ஆலோசனை சீட்டைக் கொடுத்துவிட்டு, மன்றத்தின் முன் பகுதியில் உட்கார வேண்டும். சகோதரிகள், தங்கள் பேச்சின் அமைப்பு என்னவென்பதையும், தங்கள் பேச்சை நின்றுகொண்டா அல்லது உட்கார்ந்தா கொடுப்பார்கள் என்பதையும், பள்ளிக் கண்காணிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த வகைகளில் ஒத்துழைப்பது, நிகழ்ச்சிநிரல் சுமுகமாக நடப்பதற்கும், மேடையைக் கவனிப்போர் எல்லாவற்றையும் முன்னதாகவே தயாராக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
4 பேச்சு நியமிப்பு எண் 2-ஐத் தயாரித்தல்: பைபிள் வாசிப்பின் ஒரு நோக்கமானது, தன் வாசிப்புத் திறமையை முன்னேற்றுவிக்க மாணாக்கருக்கு உதவிசெய்வதாகும். இதை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் முயன்று அடையலாம்? வாசிப்பு பாகத்தைச் சத்தமாகத் திரும்பத்திரும்ப வாசிப்பது, அதில் தேர்ச்சியடைவதற்கு மிகச் சிறந்த வழியாக உள்ளது. பழக்கப்படாத சொற்களின் அர்த்தத்தையும் சரியான உச்சரிப்பையும் கற்றுக்கொள்வதற்கு, மாணாக்கர் அவற்றை அகராதியில் எடுத்துப் பார்க்க வேண்டும். இது, அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ள உச்சரிப்புக் குறியீடுகள் குறித்துக் காட்டுபவற்றோடு பழக்கப்படுவதையும் தேவைப்படுத்தலாம்.
5 புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளானது, அதில் காணப்படுகிற ஆங்கில இடுகுறி பெயர்களையும் பழக்கப்படாத சொற்களையும் உச்சரிப்பதற்கான உதவியை அளிக்கிறது. அவற்றை அது அசைகளாகப் பிரித்து, ஒலியழுத்தக் குறிகளை அளிப்பதன்மூலம் இதைச் செய்கிறது. (வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது [ஆங்கிலம்], பக்கங்கள் 325-6, பத்திகள் 27-8-ஐக் காண்க.) பொதுவாக, ஒலியழுத்தக் குறிக்கு முன்னுள்ள அசை, முக்கிய அழுத்தத்தைப் பெறுகிறது. ஒலியழுத்தம் பெற்ற அசை, உயிரெழுத்தில் முடிந்தால், அந்த உயிரெழுத்து நீண்ட உச்சரிப்பை உடையதாக இருக்கிறது. ஒரு அசை மெய்யெழுத்தில் முடிந்தால், அந்த அசையிலுள்ள உயிரெழுத்து குறுகிய உச்சரிப்பையுடையது. ([Saʹlu] சேலு என்பதை [Salʹlu] சல்லு என்பதுடன் ஒப்பிட்டுக் காண்க.) சகோதரர்கள் சிலர், தங்கள் பைபிள் வாசிப்பு நியமிப்புகளைத் தயாரிப்பதற்கு, சங்கத்தின் ஆடியோகேஸட்டுகளுக்குச் செவிகொடுத்துக் கேட்கின்றனர்.
6 வாசிப்பு நியமிப்புக்குத் தயாரிக்க, பெற்றோர் தங்கள் இளம் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம். அந்தப் பிள்ளை ஒத்திகை பார்க்கையில், அவன் வாசிப்பதற்குச் செவிகொடுத்துக் கேட்டு, முன்னேற்றத்துக்கு உதவியான ஆலோசனைகள் கொடுப்பதை இது உட்படுத்தலாம். கொடுக்கப்பட்ட நேரம், சுருக்கமான ஒரு முன்னுரைக்கும், முக்கிய குறிப்புகளைப் பொருத்திப் பிரயோகிக்கும் பொருத்தமான ஒரு முடிவுரைக்கும் நேரத்தை அனுமதிக்கிறது. இவ்வாறு மாணாக்கர், குறிப்புகளை மாத்திரமே வைத்து மனதிலிருந்து பேசும் திறமையை வளர்க்கிறார்.
7 சங்கீதக்காரர் ஜெபத்துடன் இவ்வாறு வேண்டிக்கொண்டார்: “என் வாய்தானே உம்முடைய துதியை அறிவிக்கும்படி, யெகோவாவே, இந்த என் உதடுகளைத் திறந்தருளுவீராக.” (சங். 51:15, NW) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நாம் பங்குகொள்வது அதே ஆவலைத் திருப்தி செய்ய அது நமக்கு உதவிசெய்வதாக.