‘உலகின் ஒளியிடம்’ கவனத்தைத் திருப்புங்கள்
1 ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா முன்னுரைத்ததாவது: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.” (ஏசா. 9:2) கடவுளின் சொந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் செயல்களில் அந்த ‘பெரிய வெளிச்சம்’ பிரகாசித்தது. அவர் பூமியில் இருந்தபோது செய்த ஊழியமும், அவருடைய பலியால் விளைந்த ஆசீர்வாதங்களும் இருளில் இருந்தவர்களின் ஆன்மீக நிலையை மேம்படுத்தியது. இருள் சூழ்ந்த இக்காலத்தில் அந்த ஆன்மீக வெளிச்சம்தான் ஜனங்களுக்குத் தேவை. ‘உலகின் ஒளியிடம்’ அவர்களுடைய கவனத்தைத் திருப்ப கர்த்தருடைய இராப்போஜனம் ஓர் அருமையான சந்தர்ப்பத்தை நமக்குத் தருகிறது. (யோவா. 8:12, பொ.மொ.) “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று இயேசு கட்டளையிட்டிருக்கிறார். (லூக். 22:19) இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியும் விதத்தில், கடந்த ஆண்டு லட்சக்கணக்கானோர் நம்மோடுகூட இதில் கலந்துகொண்டதன் மூலம் தங்களுக்கு ஓரளவு விசுவாசம் இருந்ததை வெளிக்காட்டினார்கள். இந்த வருட நினைவுநாள் ஆசரிப்பு சமீபத்திலிருப்பதால், யெகோவா பிரகாசிக்கச் செய்திருக்கும் அந்தப் பெரிய வெளிச்சத்திடம் எல்லாருடைய கவனத்தையும் திருப்பும் வேலையில் நாம் எவ்வாறு பங்குகொள்ளலாம்?—பிலி. 2:14, 15.
2 இதயப்பூர்வ நன்றியை அதிகரியுங்கள்: மீட்கும் பலி ஏற்பாட்டின் மூலம் யெகோவாவும் இயேசுவும் மனிதர்கள்மீது அளவிலா அன்பைக் காட்டியிருக்கிறார்கள்; இந்த அன்பைக் குறித்து தியானிக்க நினைவுநாள் ஆசரிப்புக் காலம் வெகு பொருத்தமான காலமாகும். (யோவா. 3:16; 2 கொ. 5:14, 15) இவ்வாறு தியானிப்பது, இந்தப் புனிதமான சந்தர்ப்பத்திற்கு இதயப்பூர்வமான நன்றியை நம்மில் அதிகரிக்கச் செய்யும். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறுபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் பிரத்தியேகமாக வாசிக்க வேண்டிய பைபிள் பகுதிகளை வாசிக்கவும் அவற்றைத் தியானிக்கவும் நாம் அனைவருமே நேரம் ஒதுக்க வேண்டும். மீட்கும் பலி ஏற்பாட்டில், யெகோவாவின் ஈடிணையற்ற குணங்கள் அற்புதமாக வெளிப்படுகின்றன. இவற்றைப் பற்றி சிந்திக்கும்போது, அவரை நம் கடவுளாக ஏற்றிருப்பதை எண்ணிப் பெருமிதம் அடைகிறோம். மீட்கும் பலி தனிப்பட்ட விதத்தில் நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது என்பதைத் தியானிப்பது, கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் இதயப்பூர்வ நன்றியை அதிகரிக்கச் செய்கிறது; கடவுளுடைய சித்தத்தை மும்முரமாகச் செய்வதற்கும் நம்மைத் தூண்டுகிறது.—கலா. 2:20.
3 இரட்சிப்பிற்கான யெகோவாவின் ஏற்பாட்டுக்கு நாம் இன்னுமதிக நன்றியோடு இருந்தோமென்றால், நினைவுநாள் ஆசரிப்பு சம்பந்தமாக நம்மிடம் உற்சாகம் வெளிப்படும்; அதைப் பார்த்து மற்றவர்களும் உற்சாகம் அடைவார்கள்; ஆம், நினைவுநாள் ஆசரிப்புக்கு நாம் அழைக்கும் பைபிள் மாணாக்கர், ஆர்வமுள்ளோர், உறவினர்கள், அக்கம்பக்கத்தார், பள்ளித்தோழர்கள், சக பணியாட்கள் போன்ற இன்னும் அநேகரும் உற்சாகமடைவார்கள். (லூக். 6:45) ஆகவே, அத்தகைய அனைவரையும் அழைக்க விசேஷ முயற்சி எடுங்கள்; நினைவுநாள் ஆசரிப்பு அழைப்பிதழைக் கொடுத்து அவர்களை அழையுங்கள்; அவர்களுக்கு நினைப்பூட்ட அது ஓர் ஏதுவாக இருக்கும். யாரையும் மறந்துவிடாமல் இருப்பதற்காக பெரும்பாலோர் தாங்கள் வழக்கமாக அழைக்கும் நபர்களுடைய பெயர்களை பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள்; அதில், புதியவர்களுடைய பெயர்களை வருடா வருடம் சேர்த்துக்கொள்கிறார்கள்; அப்படிச் செய்வதை நடைமுறையானதாகக் காண்கிறார்கள். இப்படி நன்கு திட்டமிட்டு, ஆர்வம் காட்டுவோரைத் தவறாமல் அழைப்பது, யெகோவா தேவன் “அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு” நம் நன்றியை வெளிக்காட்ட மிகச் சிறந்த வழியாகும்.—2 கொ. 9:15.
4 ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுதல்: மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியத்தில் உங்களால் அதிக நேரம் செலவிட முடியுமா? ‘கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை’ மற்றவர்களுக்கு அறிவிக்கப் பிரயாசப்பட்டால் கடவுளுடைய ஆசீர்வாதம் நிச்சயமாகவே உங்களுக்குக் கிடைக்கும். ஆன்மீக அறிவொளிக்கு ஊற்றாக விளங்கும் யெகோவா தேவன், “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று கட்டளையிட்டிருக்கிறார். (2 கொ. 4:4-6; பொ.மொ.) தேவைக்குத் தகுந்தாற்போல், வெவ்வேறு நேரங்களிலும் இடங்களிலும் அதிகளவு வெளி ஊழியம் செய்வதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள்; ஊழியத்தில் அதிக நேரம் செலவிட விரும்பும் பிரஸ்தாபிகளை முன்நின்று வழிநடத்தி அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். இதற்காக அதிகாலையில் தெரு ஊழியம் செய்வது, பிற்பகலில் அல்லது சாயங்காலத்தில் டெலிபோனில் சாட்சிகொடுப்பது, வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்வது போன்ற ஏற்பாடுகளை அவர்கள் செய்யலாம். நீங்கள் ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்காக, குறிப்பிட்ட மணிநேரத்தை எடுக்க வேண்டுமென்ற நியாயமான இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள், அதை எட்டுவதற்குக் கடினமாக உழையுங்கள். தங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு அளிப்பதில் துணைப் பயனியர் சேவையும் உட்பட்டிருப்பதாக அநேகர் நினைக்கிறார்கள்.—கொலோ. 3:23, 24.
5 உங்களால் துணைப் பயனியர் சேவை செய்ய முடியுமா? துணைப் பயனியர் சேவைக்குரிய மணிநேரத்தைக் குறைத்து ஏழு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவ்வாறு குறைத்திருப்பது, துணைப் பயனியர் சேவையால் வரும் ஆசீர்வாதங்களை இன்னும் அநேகர் ருசிக்க வழிசெய்திருக்கிறது. நீங்கள் இந்தச் சேவையில் ஈடுபட்டிருக்கிறீர்களா? சிலர் வழக்கமாக ஒவ்வொரு வருடமும் துணைப் பயனியர் சேவை செய்கிறார்கள். அநேக சபைகளில் ஒவ்வொரு வருடமும் பல பிரஸ்தாபிகள் ஒன்றுசேர்ந்து இந்தச் சேவையைச் செய்கிறார்கள்; இது அந்த வருடத்தில் அச்சபையின் நடவடிக்கைகளிலேயே மிகுந்த பலன்தரும், விசேஷ நடவடிக்கையாகிவிடுகிறது. நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் ஒரு மாதம் துணைப் பயனியர் சேவை செய்து மகிழ உங்களால் திட்டமிட முடியுமா? குறிப்பாக ஏப்ரல் மாதம் சிலருக்கு மிகச் சிறந்த மாதமாக இருக்கலாம், ஏனெனில் அந்த மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் உள்ளன.
6 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உங்கள் சபையை வட்டாரக் கண்காணி சந்திக்கப்போகிறாரா? அப்படியானால், அது உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கலாம். முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 2006 ஊழிய ஆண்டில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது பயனியர்களுக்கென நடத்தப்படும் கூட்டத்தின் முதல் பகுதியில் கலந்துகொள்வதற்காக, துணைப் பயனியர் சேவை செய்யும் எல்லா பிரஸ்தாபிகளும் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கூட்டத்தில், ஆன்மீக ரீதியில் தெம்பூட்டும் தகவல்கள் அளிக்கப்படும்; இவை, ஒழுங்கான பயனியர் ஊழியம் ஆரம்பிப்பதைப் பற்றிச் சிந்திக்க துணைப் பயனியர்களை நிச்சயமாகவே தூண்டும். அத்துடன், மார்ச் மாதத்தில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புதிய பிரசுரத்தின் மூலமாக ஜனங்களுக்கு ஆன்மீக அறிவொளியூட்டுகிற சந்தோஷம் நமக்கு இருக்கிறது. இந்தப் புதிய புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு ஆரம்பிப்பதை உங்கள் இலக்காக வைக்கலாம், அல்லவா?
7 துணைப் பயனியர் சேவையில் 50 மணிநேரம் செலவிட வேண்டியுள்ளதால், ஒவ்வொரு வாரமும் சத்திய ஒளியை சுமார் 12 மணிநேரம் பிரகாசிப்பதற்கு எந்த அட்டவணை உங்களுக்குப் பொருந்தும் என்று தீர்மானியுங்கள். துணைப் பயனியர் செய்து வெற்றி கண்டவர்களுடனும் மற்றவர்களுடனும் பேசிப் பாருங்கள். இதனால் உங்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய அவர்களும் தூண்டப்படலாம். நன்கு திட்டமிட்டால், மெச்சத்தக்க இந்த இலக்கை எட்டுவது அப்படியொன்றும் சிரமமாக இருக்காது; இதை முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள்—இளைஞரும் சரி, முதியோரும் சரி—அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அச்சேவை செய்வது குறித்து ஜெபியுங்கள். பின்னர், முடிந்தால் திட்டமிடுங்கள், துணைப் பயனியர் சேவையை ருசியுங்கள்!—மல். 3:10.
8 எல்லாரும் ஒத்துழைத்தால், குடும்பத்தில் ஒருவராவது துணைப் பயனியராக சேவை செய்யலாம்; அநேக குடும்பங்கள் அதை அனுபவத்தில் கண்டிருக்கின்றன. ஒரு குடும்பத்தில், முழுக்காட்டுதல் பெற்றிருந்த ஐந்து பேரும் துணைப் பயனியர் சேவை செய்யத் தீர்மானித்தார்கள். முழுக்காட்டுதல் பெறாத இன்னும் இரண்டு பிள்ளைகள், ஊழியத்தில் அதிக நேரத்தைச் செலவிட விசேஷ முயற்சி எடுத்தார்கள். இவ்வாறு பிரயாசப்பட்டதால் அந்தக் குடும்பத்தார் எப்படிப் பலன் அடைந்தார்கள்? அவர்கள் எழுதியதாவது: “அந்த மாதம் வெகு இனிய மாதமாய் இருந்தது, எங்கள் மத்தியில் உறவு பலப்பட்டதை நன்கு உணர முடிந்தது. இந்த அருமையான ஆசீர்வாதத்திற்காக யெகோவாவுக்கு நன்றி!”
9 மார்ச், ஏப்ரல் மாத விசேஷ ஊழியத்தில் நாம் கலந்துகொள்வது நம் உற்சாகத்தைத் தூண்டுமா, நம் பரம தகப்பனிடம் இன்னுமதிகம் நெருங்கி வரச் செய்யுமா? கடவுள் மீதும் அவருடைய குமாரன் மீதும் உள்ள நம் அன்பை அதிகரிப்பதற்கு தனிப்பட்ட முயற்சி எடுப்பதையும், ஊழியத்தில் நாம் அதிக நேரம் செலவிடுவதையும் பொறுத்தே அது இருக்கிறது. “கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்” என்று சங்கீதக்காரன் பாடியதைப் போலவே நம் தீர்மானமும் இருப்பதாக. (சங். 109:30) இந்த வருட நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் நாம் ஊக்கமாய்ச் செய்யும் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிப்பார். எனவே, இன்னும் அநேகர் இருளிலிருந்து வெளியேறுவதற்கும், ‘ஜீவ ஒளியை அடைவதற்கும்,’ மாபெரும் விதத்தில் நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வோமாக.—யோவா. 8:12.
[கேள்விகள்]
1. பைபிளில் முன்னுரைக்கப்பட்டிருக்கும் பெரிய வெளிச்சம் எது, இந்த வெளிச்சத்திடம் விசேஷ கவனத்தைத் திருப்புகிற சந்தர்ப்பம் எது?
2. மீட்கும் பலிக்கு நம் இதயப்பூர்வ நன்றியை எப்படி அதிகரிக்கலாம், இப்படிச் செய்வதால் என்ன பலன்?
3. நினைவுநாள் ஆசரிப்புக்கு நம் நன்றியை எப்படி வெளிக்காட்டலாம்?
4. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊழியத்தில் அதிக நேரம் செலவிட எது நமக்கு உதவும்?
5. துணைப் பயனியர் சேவைக்குரிய மணிநேரம் குறைக்கப்பட்டிருப்பதால் அநேகர் எப்படிப் பயன் அடைகிறார்கள்?
6. மகிழ்ச்சிதரும் என்னென்ன ஏற்பாடுகள் நமக்கு இருக்கின்றன?
7, 8. (அ) துணைப் பயனியர் சேவை செய்ய அட்டவணையிட எது நமக்கு உதவும்? (ஆ) குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எப்படி உதவும், முழு குடும்பமுமே எப்படிப் பலன் அடையலாம்?
9. இந்த வருட நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் நம் வெளிச்சத்தை எப்படிப் பிரகாசிக்கச் செய்யலாம்?