நீங்கள் அதிக வேலையாக இருக்கிறீர்களா?
1 ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு எப்பொழுதும் அதிகத்தை வைத்துக்கொள்ளும்படி’ பவுல் அறிவுரை கூறினார். (1 கொ. 15:58, NW) தனிப்பட்ட படிப்புக்காக அன்றாட பழக்க முறையை கடைப்பிடித்து வரும்படியும், தவறாமல் ஊழியத்தில் பங்குகொள்ளும்படியும், உண்மையுடன் கூட்டங்களுக்கு ஆஜராகும்படியும், சபை நியமிப்புகளை சுறுசுறுப்பாக கவனிக்கும்படியும் நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். அதோடுகூட, நம்முடைய உதவி தேவைப்படுகிற மற்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும். செய்வதற்கு அதிகம் இருப்பதால், சில சமயங்களில் நாம் பாரமடைந்தவர்களாக உணரலாம்; நம்முடைய வேலை சுமையைக் குறைப்பதற்கான வழிகளை நாம் தேடவேண்டும் என்று நினைக்கலாம்.
2 சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை விட்டொழிப்பதை அல்லது அதன் அளவைக் குறைப்பதை விவேகமானதாகவும் நியாயமானதாகவும் செய்யக்கூடிய சூழ்நிலைமைகள் இருக்கின்றன. மற்றவர்களால் கேட்கப்படுகிற அனைத்தையும் செய்யும்படி தாங்கள் எதிர்பார்க்கப்படுவதாக சில ஆட்கள் நினைக்கிறார்கள். இதன் சம்பந்தமாக சமநிலை இல்லாமை, முடிவில் அலைக்கழிப்பதாய் ஆக்கக்கூடிய அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் உண்டுபண்ணலாம்.
3 சமநிலையோடு இருங்கள்: சமநிலைக்கான திறவுகோல், ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி,’ பவுல் கொடுத்த ஆலோசனையைப் பொருத்திப் பயன்படுத்துவதில் இருக்கிறது. (பிலி. 1:10, NW) உண்மையிலேயே முக்கியத்துவமுள்ள காரியங்களின் பேரில் நாம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதையே இது வெறுமனே குறிக்கிறது. நேரமும் சூழ்நிலைகளும் அனுமதித்தால், குறைந்த முக்கியத்துவமுள்ள சில காரியங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். மிக இன்றியமையாத காரியங்களில் குடும்ப உத்தரவாதங்கள் நிச்சயமாகவே முதலிடம் பெறுகின்றன. உலகப்பிரகாரமான குறிப்பிட்ட சில பொறுப்புகளை கையாள வேண்டும். இருப்பினும், கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவதாக தேடும் நியமத்தின் அடிப்படையில் நம்முடைய முன்னுரிமைகள் இருக்க வேண்டும் என்று இயேசு போதித்தார். நாம் முதலாவதாக யெகோவாவுக்கான நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றுவதற்கு நம்மை அனுமதிக்கிற காரியங்களை செய்ய வேண்டும்.—மத். 5:3, NW; 6:33.
4 இதை மனதில் கொண்டவர்களாய், தேவையில்லாத எந்தத் தனிப்பட்ட நாட்டங்களையும், மிதமிஞ்சிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும், நாம் செய்வதாக மற்றவர்களிடம் ஒப்புக்கொள்கிற முக்கியமல்லாத காரியங்களையும் நம்முடைய ஏகப்பட்ட வேலைகள் நிறைந்த அட்டவணையிலிருந்து நீக்கிவிடுவதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்வோம். ஒவ்வொரு வாரத்திற்கான நம்முடைய நடவடிக்கைகளை திட்டமிடுகையில், போதுமானளவு தனிப்பட்ட படிப்புக்காகவும், ஊழியத்தில் நியாயமானளவு பங்குகொள்வதற்காவும், கூட்டங்களுக்கு ஆஜராவதற்காகவும், நம்முடைய வணக்கத்துடன் நெருங்கிய விதமாக சம்பந்தப்பட்ட மற்றெந்த வேலைகளுக்காகவும் நாம் நேரத்தை ஒதுக்கி வைப்போம். ராஜ்யத்தை முதலாவதாக வைக்கிற சமநிலையான கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்ற நம்முடைய பிரதானமான இலக்கை அடைவதற்கு எந்தளவுக்கு அவை உதவும் என்பதைப் பொருத்து, மீதமுள்ள நேரத்தை மற்ற நாட்டங்களுக்காக ஒதுக்கி வைக்கலாம்.
5 அப்படி செய்தபோதிலும்கூட, நம்முடைய சுமை அழுத்துவதாக நாம் இன்னும் உணரலாம். அப்படியானால், நாம் இயேசுவின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டியது அவசியம்: “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத். 11:28) அதோடு, ‘நமக்காக அன்றாடம் பாரஞ்சுமந்து,’ சோர்ந்து போகிறவருக்கு வல்லமையை அளிக்கிறவராகிய யெகோவாவை நோக்கியிருங்கள். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் என்பதாக அவர் நமக்கு வாக்குக்கொடுக்கிறார். (சங். 55:22; 68:19, NW; ஏசா. 40:29) தேவராஜ்ய நடவடிக்கையின் சுறுசுறுப்பான வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் தொடர்ந்திருப்பதை நமக்கு சாத்தியமாக்குவதன் மூலம், நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்று நாம் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கலாம்.
6 பயனுள்ள ராஜ்ய அக்கறைகளை நாம் நாடுவதில் சுறுசுறுப்பாக நம்மை வைப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளும்போது, கர்த்தர் நிமித்தம் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராது என்று அறிந்து களிகூரலாம்.—1 கொ. 15:58.