நற்செய்தியை அறிவிப்பதில் இடைவிடாதிருத்தல்
1 பூர்வ கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஊழியத்தை அதிக கருத்தாய் ஏற்றார்கள். லூக்கா அறிவித்தார்: “தினந்தினம் தெய்வாலயத்திலும் வீடுகள்தோறும் இடைவிடாமல் உபதேசஞ்செய்து கிறிஸ்துவாகிய இயேசுவை நற்செய்தியாகப் பிரசங்கித்துவந்தார்கள்.” (அப். 5:42, தி.மொ.) எதுவும், துன்புறுத்தலும்கூட அவர்களைத் தடுத்துநிறுத்த முடியவில்லை! (அப். 8:4) அவர்கள் ஒவ்வொரு நாளும் சத்தியத்தைப்பற்றி மற்றவர்களிடத்தில் பேசினார்கள்.
2 நம்மைப்பற்றி என்ன? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘காலத்தின் அவசரத்தன்மையை நான் உணருகிறேனா? இடைவிடாமல் தொடர்ந்து நற்செய்தியை அறிவிக்கும் மனச்சாய்வு எனக்கு இருக்கிறதா?’
3 இடைவிடாமல் பிரசங்கிக்கும் நவீனநாளைய உதாரணங்கள்: போலியோவுக்கு இரையான ஒரு சகோதரி, செயற்கை நுரையீரல் கருவிக்குள் படுத்தபடுக்கையாய் கிடந்தார். அவரால் ராஜ்ய மன்றத்திற்கோ மாநாட்டுக்கோ செல்ல இயலவில்லை. ஆனால், நற்செய்தியை அறிவிப்பதில் தீவிரமாய் ஈடுபட்டவராக இருந்தார். தான் அடைபட்டுக்கிடந்த 37-வருடத்தில், 17 ஆட்கள் சத்தியத்தைத் கற்றுக்கொள்வதற்கு அவரால் உதவ முடிந்தது! அவர் அதை எவ்வாறு செய்தார்? வீட்டுக்கு வீடு போக முடியாவிட்டாலும், தன்னோடு தொடர்புகொள்ள வருவோரிடத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான ஒரு வழியை ஒவ்வொரு நாளும் அவர் கண்டார்.
4 பாஸ்னியாவிலுள்ள நம் சகோதரர்கள் போரையும் இழப்பையும் சமாளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதை அவர்கள் ஒழுங்காகத் தொடர்கிறார்கள். சரஜெவோவிலுள்ள பிரஸ்தாபிகள் நற்செய்தியைப் பற்றி மற்றவர்களிடத்தில் பேசுவதில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக இரண்டு பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். அவர்களுடைய கடினமான சூழ்நிலைமைகள் மத்தியிலும், அவர்கள் இடைவிடாமல் பிரசங்கிக்கிறார்கள் மற்றும் போதிக்கிறார்கள்.
5 ஊழியத்திற்கான வைராக்கியத்தை இளம் பிள்ளைகளும் வெளிக்காட்டுகிறார்கள். ருவாண்டாவில் உள்ள ஒரு சாட்சி குடும்பம் ஓர் அறையிலே போடப்பட்டிருந்தார்கள், அங்கே அவர்களைக் கொல்வதற்காக இராணுவத்தினர் தயாராக இருந்தார்கள். முதலில் ஜெபிப்பதற்கு குடும்பம் அனுமதி கேட்டது. அனுமதி அளிக்கப்பட்டது, இளம் மகள் டெபரா சத்தமாக ஜெபித்தாள்: “யெகோவாவே நானும் அப்பாவும் இந்த வாரம் அஞ்சு பத்திரிகைகள கொடுத்தோம். எப்படி நாங்க மறுபடியும் அவுங்கக்கிட்டபோய், சத்தியத்த சொல்லிக்கொடுத்து, அவுங்க ஜீவனைப் பெற உதவி செய்யப் போறோம்?” ஊழியத்தின் பேரில் அவளுக்கிருந்த பலமான விசுவாசம் மற்றும் அன்பின் காரணமாக, அந்த முழு குடும்பமும் காப்பாற்றப்பட்டது.
6 இன்று, மற்றவர்களிடத்தில் சாட்சிகொடுப்பதற்கும், “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்” எவர்களோ அவர்களைத் தேடுவதற்கும் சந்தர்ப்பங்களுக்காக விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. (அப். 13:48) உள்ளூர் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப, வசதியான நேரங்களில் காலைநேரங்களிலோ, மதிய வேளைகளிலோ, மாலைநேரங்களிலோ தொகுதியாக சாட்சிகொடுப்பதற்கு சபை மூப்பர்கள் ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ராஜ்ய சாட்சிகொடுத்தலின் பல்வேறு அம்சங்களில் பங்குகொள்வதற்கு, காலத்திற்கேற்ற ஆலோசனைகளையும் உற்சாகத்தையும் நம் ராஜ்ய ஊழியத்தில் வரும் கட்டுரைகள், மற்றும் ஊழியக் கூட்டங்களில், வட்டார மாநாடுகளில், மாவட்ட மாநாடுகளில் வரும் பகுதிகள் அளிக்கின்றன. இதற்கும் கூடுதலாக, வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகள் பிரஸ்தாபிகளுக்கு தெரு ஊழியத்தில் பயிற்றுவிப்பை தருகிறார்கள்; வியாபார பிராந்தியத்தில் எவ்வாறு வேலைசெய்ய வேண்டும் என்று காண்பிக்கிறார்கள் மற்றும் ஜனங்கள் எங்கெல்லாம் காணப்படுகிறார்களோ அங்கெல்லாம் சாட்சிகொடுக்க மற்ற வழிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இவை அனைத்தும் நற்செய்தியை அறிவிப்பதில் இடைவிடாதிருத்தலை வலியுறுத்துகிறதே!
7 இயேசுவின் அப்போஸ்தலர் தைரியமாய் அறிவித்ததாவது: “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே.” அனைத்து இடையூறுகளின் மத்தியிலும் எவ்வாறு அவர்கள் தொடர்ந்து நிலைத்திருந்தார்கள்? தங்களுக்கு உதவும்படி யெகோவாவிடம் அவர்கள் கேட்டார்கள், அதை அவர் செய்தார், “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.” (அப். 4:20, 29, 31) ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்க அனுபவங்களால் ஒருவேளை ஆசீர்வதிக்கப்படாமல் இருக்கலாம்; ஆனால் இடைவிடாமல் நற்செய்தியை அறிவிப்பதற்கு உண்மையான ஆவலை நாம் கொண்டிருந்தால், அதனைத் தினந்தோறும் என்ற அடிப்படையிலும் செய்யவேண்டும் என்று நாம் முயற்சி செய்தால், யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார்.