நம்முடைய ஊழியத்தில் விடாமற் தொடர்ந்திருத்தல்
1 இந்த முடிவு காலத்தினுள் நாம் ஆழமாய் உட்செல்லச் செல்ல இந்த உலகத்தின் நிலைமைகள் தீவிரமாய் மாறிக்கொண்டிருக்கின்றன. (1 கொரி. 7:31) பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, உலகத்தை அசைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நம்மை சுற்றியுள்ள உலகம் மற்றும் தேவராஜ்ய அமைப்பு ஆகிய இரண்டிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதன் பேரில் நாம் ஆழ்ந்து சிந்தனைச் செய்கையில் அந்த ராஜ்யத்தின் “நற்செய்தியை” பிரசங்கிப்பது எவ்வளவு அவசரமானது என்பதை நாம் போற்றக்கூடும்.—மாற்கு 13:10.
2 நம்முடைய தலைவரும் முன்மாதிரியுமானவராகிய இயேசு கிறிஸ்துவே சீஷராக்கும்படி இந்தக் கட்டளையைக் கொடுத்தார். இந்தக் கட்டளையை கொடுக்கையில், “இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்” என்ற தம்முடைய வாக்குறுதியின் மூலம் இந்த வேலையில் கிடைக்கும் வெற்றியை அவர் உறுதியளித்தார். (மத். 28:19, 20) இயேசுவின் சீஷர்கள் அவருடைய வார்த்தைகளை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதினார்கள். கடும் எதிர்ப்பை சந்தித்தப்போதிலும் “இடைவிடாமல் உபதேசம் பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.” (அப். 5:42) நமக்காக ஆ, என்னே ஒரு சிறந்த முன்மாதிரியை அவர்கள் வைத்தார்கள்!
3 1990-ம் ஆண்டு வருடாந்தர புத்தகத்தை நாம் வாசிக்கையில் புதிய சீஷர்களில் சிறந்த அதிகரிப்பை கொண்டுவருவதன் மூலம் யெகோவா நம்முடைய வேலைகளை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நம்மால் காணமுடிகிறது. சில நாடுகளில் அறிக்கை செய்யப்பட்டிருக்கும் அதிகரிப்பு மெய்யாகவே குறிப்பிடத்தக்க ஒன்றாயிருக்கிறது. இதுவரையிலுமாக உலக முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்தமான அதிகரிப்பு வெறும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நம்மில் எவரும் கற்பனைச் செய்து பார்த்திராத அளவுக்கு மிஞ்சிவிட்டது. (ஏசா. 60:22) ஆனால் நம்முடைய உள்ளூர் பிராந்தியத்தைப் பற்றியதென்ன? நம்முடைய தனிப்பட்ட ஊழியத்தைப் பற்றியதென்ன? ஊழியத்தில் நம்முடைய சொந்த பாகத்தைக் குறித்த விஷயத்திலும் அதோடுகூட எல்லா இடங்களிலுமுள்ள நமது உடன் ஊழியர்கள் மொத்தமாக செய்யும் அந்த ஊழியத்திலும் நாம் மகிழ்ச்சியடைகிறோமா? ஊழியத்தில் நமது சொந்த முயற்சிகளை நாம் இடைவிடாமல் தொடருகிறோமா?
நம்முடைய தனிப்பட்ட பாகம்
4 எல்லாப் பிராந்தியங்களிலும் சரிசமமான பலன்கள் கிடைப்பதில்லை என்பது உண்மையே. (மத். 13:23-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.) அயர்லாந்து, கியூபெக் போன்ற இடங்களில் நம்முடைய வைராக்கியமுள்ள ஊழியர்கள் பங்கில் பல ஆண்டுகளடங்கிய கடின உழைப்பிற்கு பின்பே பலன்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் மெய்யே. சில இடங்களில் அநேக எதிராளிகள் இருக்கின்றனர், மற்ற சில இடங்களில் ஜனங்கள் ராஜ்ய செய்தியினிடமாக பொதுவில் அலட்சிய மனப்போக்கும் செவிகொடாத மனநிலையும் உள்ளவர்களாக இருக்கின்றனர், இன்னும் சில இடங்களில் வெளி ஊழியத்தில் அதிகமான ஆட்கள் இருக்கிறார்கள், ஆனால் ஊழியம் செய்வதற்கு பிராந்தியமோ மிக குறைவாக இருக்கிறது. நாம் என்ன வகையான பிராந்தியத்தில் ஊழியம் செய்ய வேண்டியதாக இருந்தாலும் நம்முடைய வைராக்கியம் குன்றிவிடக்கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமலிருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்.” (கலா. 6:9) அவருடைய புத்திமதிகள் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. நாம் அதை எவ்வாறு செய்யக்கூடும்? நமது ஊழியத்தை விட்டுக்கொடாமல் தொடர்ந்து செய்வதற்கு எது உதவி செய்யும்?
5 யெகோவாவின் பேரில் நமது நம்பிக்கையை வைத்து நம்மை பேணிக்காப்பதற்கு அவருடைய பலத்தின் பேரில் நாம் சார்ந்திருப்போமானால் நம்மை சுறுசுறுப்புள்ளவர்களாக வைத்துக்கொள்ளலாம். நமது ஊழியத்திலும் வெற்றியடையலாம். விளையச் செய்கிறவர் யெகோவா தேவனே என்பதை நாம் எப்பொழுதும் நம் மனதில் கொண்டிருக்க வேண்டும். (1 கொரி. 3:6) உதவிக்கான நமது ஜெபங்களுக்கு பதிலளிப்பவராக, யெகோவா தேவன் ஆலோசனைகளையும் நடைமுறையான அறிவுரைகளையும் மேலும் மற்றவர்கள் அவரை அறிந்துகொள்வதற்காக நம்முடைய தனிப்பட்ட உபயோகத்திற்கு ஏராளமான பைபிள் இலக்கியங்களையும் அளிக்கிறார். இந்த ஏற்பாடுகளை நாம் முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்ளுகிறோமா?
சரியான மனநிலையைக் காத்துவாருங்கள்
6 நாம் நம்பிக்கையற்ற ஒரு மனநிலையை கொண்டிருப்போமானால் ஒரு பலனுள்ள ஊழியத்திற்கான பாதையில் அது ஒரு வினைமையான தடையாக இருக்கக்கூடும். நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்கள் முந்தின சமயங்களில் காட்டிய செவிகொடாத தன்மைகளை ஆதாரமாக கொண்டு அவர்களைப் பற்றி நாம் ஒரு சாதகமற்ற அபிப்பிராயத்தை உண்டுபண்ணிவிட்டோமானால், அந்த மனநிலையானது, நமது பேச்சின் தொனியில், முகப்பாவனையில், மற்றும் வெளி ஊழியத்துக்கான ஊக்கமான தயாரிப்பு குறைவுபடுவதில் வெளிக்காட்டப்படும். பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்குமான கட்டளையை நாம் பெற்றிருக்கிறோம். வேலை முடிந்துவிட்டது என்று இதுவரை நமக்கு சொல்லப்படவில்லை. தெய்வீக வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிதலையும் பணிவையும் காட்டுவதற்கான நமது ஆவல் நமது ஊழியத்தில் விடாமற் தொடர்ந்திருக்க நம்மை உந்துவிக்க வேண்டும்.
7 துன்மார்க்கரை எச்சரிப்பது மற்றும் சீஷர்களை கூட்டிச் சேர்ப்பது சம்பந்தமான யெகோவாவின் நோக்கம் முடிவு வருவதற்கு முன்பாக நிறைவேற்றமடையும். அந்த ஊழியத்தின் மகிழ்ச்சியில் நாம் இப்பொழுது பங்குகொள்ளலாம். நம்முடைய ஊழியத்தில் விடாமற் தொடருவதன் மூலம் விசுவாசத்தையும் அன்பையும் நாம் நடப்பித்துக் காட்டுவோமானால் கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் நித்திய ஆசீர்வாதங்களுக்காக எதிர்நோக்கியிருக்கலாம்.