நிலையான எதிர்காலத்தைப் பெற குடும்பங்களுக்கு உதவுதல்
1 “பேராசை பிரயோஜனமானது” என்று நிதி உதவியாளர் ஒருவர் கல்லூரி பட்டமளிப்பு வகுப்பின்போது சொன்னார், அவர் மேலும் சொன்னதாவது: “நீங்கள் பேராசையுள்ளவர்களாய் இருக்கலாம், அப்படியிருந்தாலும் உங்களைப் பற்றி நன்றாகவே உணருவீர்கள்.” ஒருவர் தன்னுடைய எதிர்காலத்துக்கு உத்தரவாதமளிக்க, தனக்கு நல்லதாகத் தோன்றுவதையே செய்யவேண்டும் என்ற எண்ணமே இந்த உலகத்தில் பொதுவாக இருக்கிறது. அதற்கு நேர்மாறாக ஒரு கிறிஸ்தவன், ‘தன் சொந்தம் கைவிட வேண்டும் . . . மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ என்று இயேசு கற்பித்தார். (மத்தேயு 16:24-26, NW) நிலையான எதிர்காலத்தைப் பெற, ஒருவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை மையமாகக் கொண்டே தன் முழு வாழ்வையும் அமைத்துக்கொள்ள வேண்டும், அதுவே இன்றைய குடும்பங்களுக்கு மிக முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. (சங். 143:10; 1 தீ. 4:8) குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் அந்தச் செய்தியே சொல்லப்படுகிறது. வாழ்வில் முக்கியமானவை எவை என்றும் தங்களுடைய குடும்ப நன்மைக்காக தாங்கள் எப்படி செயல்படலாம் என்றும் காண மக்களுக்கு இந்தப் புதிய பிரசுரம் உதவுகிறது. நாம் தொடர்ந்து நற்செய்தியை எங்கும் பிரசங்கிக்கையில், குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை வாசிக்கும்படி நாம் சந்திப்பவர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம்? சில ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன:
2 வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் தெரு ஊழியத்திலும், “குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்” என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி சம்பாஷணைகளை ஆரம்பிக்க நீங்கள் முயலலாம். நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼“நவீன வாழ்க்கைப்பாணியை நினைத்துப்பார்க்கையில், நமக்கு பல்வேறு வகையான கவலைகள் ஏற்பட்டுவிடுகின்றன, அப்படிப்பட்ட கவலைகள் எல்லாவற்றோடும், நம்முடைய குடும்ப வாழ்வை நிஜமாகவே சந்தோஷமானதாய் வைத்துக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்லவிடுங்கள்.] வைத்துக்கொள்ள முடியும் என்று இந்தத் துண்டுப்பிரதி நிச்சயமாய்ச் சொல்கிறது. இதை வாசிக்க விரும்புகிறீர்களா?” அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீங்கள் இப்படி சொல்வதன் மூலம் சம்பாஷணையைத் தொடரலாம்: “இந்த விஷயத்தில் உங்களுக்கு விருப்பம் இருப்பதால், இந்தப் புத்தகத்தை வாசிப்பதையும் நீங்கள் விரும்புவீர்கள். இந்தப் புத்தகத்தில், குடும்ப அளவில் சந்தோஷத்தை எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றி விவரமான ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது.” குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் இருக்கும் பொருளடக்கத்தைக் காட்டுங்கள். கவனத்தை ஈர்க்கும் ஒருசில அதிகாரத்தின் தலைப்புகளைச் சுட்டிக்காட்டுங்கள். பக்கம் 10-க்குத் திருப்புங்கள், அதில் பாரா 17-ன் கடைசி வாக்கியத்திலிருந்து 18-வது பாரா கடைசி வரையிலும் வாசியுங்கள். அந்தப் புத்தகத்தை அளியுங்கள். இன்னும் அதிகத்தை கலந்து பேச விரும்புகிறீர்கள் என்று விளக்குங்கள், பிறகு மறுபடியும் எப்பொழுது சந்திக்கலாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
3 குடும்ப மகிழ்ச்சியைப் பற்றிய ஆரம்ப சம்பாஷணைக்குப் பின் இப்படி சொல்வதன் மூலம் நீங்கள் தொடரலாம்:
◼“போன தடவை நீங்கள் வாங்கின புத்தகம் உங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கும் என்று நான் நினைக்கிறேன், அதிலிருந்து ஒருசில விஷயங்களை உங்களோடு கலந்து பேச நான் விரும்புகிறேன். அதில், கடைசி அதிகாரம் குடும்ப மகிழ்ச்சியின் நிஜமான இரகசியத்தைப் பற்றி முக்கியமாய்க் குறிப்பிட்டுக் காட்டுகிறது. [பக்கம் 183-ல் பாரா 2-ஐ வாசியுங்கள்.] கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு சேர்ந்து உழைக்க வேண்டியதே திறவுகோலாய் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். கடவுளுடைய சித்தம் என்ன, அதை வீட்டில் எப்படி பொருத்தலாம் என்று கற்றுக்கொள்வதற்காக பைபிளை குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து படிக்க நாங்கள் சிபாரிசு செய்கிறோம். ஓர் இலவச பைபிள் படிப்பு திட்டத்தை நாங்கள் அளிக்கிறோம். அந்தப் படிப்பை முடிக்க ஒருசில மாதங்களே எடுக்கும். நீங்கள் சரி என்றால், அது எப்படி நடத்தப்படுகிறது என்று நான் செய்துகாட்டுகிறேன்.” கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டுடனோ அல்லது அறிவு புத்தகத்துடனோ, எது அதிக பொருத்தமாய் இருக்குமோ அந்தப் பிரசுரத்துடன் திரும்பிச்செல்லுங்கள்.
4 பள்ளியில் சக மாணவர்களுடனோ அல்லது பிராந்தியத்தில் இளைஞருடனோ பேசுகையில், இந்தக் கேள்விக்கு நீங்கள் நல்ல பிரதிபலிப்பைப் பெறலாம்:
◼“பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவற்ற விதத்தில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது எவ்வளவு முக்கியமாய் இருக்கிறது? [பதில் சொல்லவிடுங்கள்.] குடும்ப வாழ்வைப் பற்றிய இந்தக் கையடக்கமான புத்தகம், ‘நேர்மையான மற்றும் ஒளிவுமறைவற்ற கருத்து பரிமாற்றம்’ என்ற விஷயத்தில் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். [குடும்ப மகிழ்ச்சி புத்தகம் பக்கம் 65-ல் பாரா 4 முழுவதையும் பாரா 5-ன் முதல் வாக்கியத்தையும் வாசியுங்கள்.] தொடர்ந்துவரும் பாராக்கள் ஒரு குடும்பத்துக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதில் எப்படி முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி நடைமுறையான ஆலோசனைகளைத் தருகிறது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். நீங்கள் ஒரு புத்தகத்தை வாங்கி அதை வாசிக்க நான் உற்சாகப்படுத்துகிறேன்.” தாங்கள் வாசிப்பதைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள பின்பு சந்திக்க வருவீர்கள் என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.
5 பெற்றோர்-பிள்ளை கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதைப் பற்றி ஓர் இளைஞரிடம் நீங்கள் ஆரம்பத்தில் பேசியிருந்ததை இவ்வாறு சொல்வதன் மூலம் தொடரலாம்:
◼“உங்கள் குடும்பத்துக்குள் நல்ல விதத்தில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதன் அவசியத்தைப் பற்றி நீங்கள் ஆர்வத்துடன் பேசினது எனக்குப் பிடித்திருந்தது. பெற்றோரும் பிள்ளைகளும் எதைப் பற்றி மிக முக்கியமாக பேசிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” [பதிலுக்காக காத்திருங்கள்.] பிறகு குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் பக்கம் 68-க்குத் திருப்புங்கள், பாரா 11-ன் முதல் பாதி பாகத்தில் காணப்படும் பதிலை வாசியுங்கள். “ஒரு வாராந்தர பைபிள் படிப்பை வைத்துக்கொள்வது கடவுளைப் பற்றிய அறிவைப் பெற ஒரு மிகச் சிறந்த வழியாய் இருக்கிறது.” கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை அளியுங்கள். அதிலிருக்கும் 16 பாடங்களில் பைபிள் செய்தியின் ஓர் அடிப்படை விஷயம் அடங்கியிருப்பதை விளக்குங்கள். பக்கம் 2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரையை வாசியுங்கள், அதற்குப் பிறகு முதல் பாடத்தைச் சேர்ந்து சம்பாஷியுங்கள்.
6 வீட்டுக்கு வீடு ஊழியத்திலோ, அல்லது ஒருவேளை ஒரு பூங்காவிலோ, அல்லது ஒரு விளையாட்டு மைதானத்திலோ நீங்கள் ஒரு பெற்றோரை சந்தித்தால், அவர்களுடைய ஆர்வத்தை இப்படி சொல்வதன் மூலம் தூண்டுவிக்கலாம்:
◼“பிள்ளைகளை வளர்ப்பது நிஜமாகவே ரொம்ப கஷ்டமாய் இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். தீய செல்வாக்குகளிலிருந்து உங்கள் குடும்பத்தை எது பாதுகாக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்லவிடுங்கள்.] எனக்குப் பிடித்தமான மிகச் சிறந்த ஆலோசனைகள் ஏதோ இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் பக்கம் 90-ல் இருக்கும் பாரா 1-ல் கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை விவரித்துச் சொல்லி, பிறகு பாரா 2-ஐ வாசியுங்கள். தீய செல்வாக்குகளிலிருந்து குடும்பங்களைப் பாதுகாக்க, நிஜமாகவே பிரயோஜனமாயிருக்கும் சமநிலையான வழிநடத்துதலை அது எப்படி கொடுக்கிறது என்று விளக்குங்கள். அந்தப் புத்தகத்தை அளியுங்கள், அதற்குப் பிறகு அதிலிருந்து எழுப்பப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க நீங்கள் எப்பொழுதும் தயாராய் இருங்கள்.
7 “குடும்ப மகிழ்ச்சி” புத்தகத்தை வாங்கிக்கொண்ட ஒரு பெற்றோரை நீங்கள் மறுபடியும் போய்ச் சந்திக்கையில், இப்படி சொல்வதன் மூலம் உங்கள் சம்பாஷணையை தொடரலாம்:
◼“நாம் முதலில் சந்தித்தபோது, உங்கள் பிள்ளைகளின்மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருப்பதையும், தீய செல்வாக்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் நான் பார்க்க முடிந்தது. ஒருவேளை அந்தப் புத்தகத்தை இன்னும் நீங்கள் வாசித்திருக்கமாட்டீர்கள், ஆனால் அதில் ஒரு முக்கியமான விஷயம் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை நீங்கள் பார்க்க விரும்பலாம். [பக்கம் 59-ல் பாரா 19-ஐ வாசியுங்கள்.] கடவுளோடு ஓர் உறவை வளர்க்க, அவருடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளினுடைய பக்கங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு குடும்பமாக நாங்கள் பைபிளை எப்படி படிக்கிறோம் என்பதை நான் செய்துகாட்ட நீங்கள் விரும்புகிறீர்களா?”
8 குடும்ப மகிழ்ச்சிக்கான வழியை உலக ஆலோசகர்கள் காட்ட முடியாது, ஆனால் நிச்சயமாக அவர்கள் ஏமாறும்படியே செய்வார்கள். குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் விநியோகிப்போம், அப்போதுதான் எங்குமுள்ள ஜனங்கள் நிலையான எதிர்காலத்தைப் பெற கடவுளுடைய வார்த்தையால் உதவப்பட முடியும்.—1 தீ. 6:19.