கேள்விப் பெட்டி
▪ நமது ஊழியம் சம்பந்தமாக, எதிர்பாலார் எவருடனாவது தொடர்புகொள்கையில் எந்தெந்த விதங்களில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
தனிப்பட்ட நடத்தையில் மிக உயர்ந்த ஒழுக்க தராதரங்களைக் கடைபிடிக்க நம் சகோதர சகோதரிகள் விரும்புவார்கள் என நாம் எதிர்பார்ப்பதற்கு காரணம் இருக்கிறது. இருந்தபோதிலும், ஒழுக்க சம்பந்தமாக அதிகக் கட்டுப்பாடில்லாத, அசுத்தமான, எதையும் ஏற்றுக்கொள்கிற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். நமக்கு சிறந்த உள்நோக்கங்கள் இருந்தாலும், அவதூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும் தவறான ஏதோவொன்றில் ஈடுபடாமலிருக்கவும் தொடர்ந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது ஊழியம் செய்யும்போது எச்சரிக்கையாய் இருப்பதையும் உட்படுத்துகிறது.
வெளி ஊழியத்தில், சத்தியத்தில் உண்மையான ஆர்வம் காண்பிப்போர்போல் தோன்றும் எதிர்பாலாரை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். அவரைச் சந்திக்கையில் நாம் தனியாக இருந்தாலோ, அவரது வீட்டில் வேறு எவரும் இல்லாவிட்டாலோ, வீட்டிற்குள்ளே செல்லாமல் கதவருகே நின்றுகொண்டு சாட்சி கொடுப்பது பொதுவாக சிறந்தது. ஆர்வம் காண்பிக்கப்பட்டால், வேறொரு பிரஸ்தாபியுடன் நாம் மீண்டும் செல்லலாம் அல்லது வீட்டில் மற்றவர்களும் இருக்கும் சமயத்தில் கலந்துபேச ஏற்பாடுகள் செய்யலாம். இது சாத்தியமாய் இல்லாவிட்டால், அதே பாலின பிரஸ்தாபி ஒருவரை மறுசந்திப்பு செய்யச்சொல்வது ஞானமுள்ளதாய் இருக்கும். எதிர்பாலாரோடு பைபிள் படிப்பு நடத்துகையிலும் இது பொருந்துகிறது.—மத். 10:16.
ஊழியத்தில் நம்மோடு வேலைசெய்பவர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் நாம் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். சிலசமயங்களில், எதிர்பாலார் ஒன்றுசேர்ந்து ஊழியம் செய்கிறபோதிலும், தொகுதியாக ஊழியம் செய்யும்போதே இவ்வாறு செய்வது நல்லது. பொதுவாக, ஊழியம் செய்யும்போதுகூட, நம் திருமணத் துணைவராய் இல்லாத எதிர்பாலார் ஒருவரோடு தனியே அதிக நேரம் செலவழிப்பது ஞானமான காரியமல்ல. ஆகவே, ஊழியக் குழுவை கண்காணிக்கும் சகோதரர், பருவவயதினர் உட்பட பிரஸ்தாபிகளை ஜோடிகளாக ஊழியத்திற்கு பிரித்து அனுப்பும்போது விவேகமாக செயல்பட வேண்டும்.
எப்போதுமே விவேகமாக செயல்படுவதன் மூலம், நமக்கோ மற்றவர்களுக்கோ நாம் “யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்” இருப்போம்.—2 கொ. 6:3.