தனிப்பட்ட படிப்பு ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு வழிநடத்துகிறது
1 யெகோவா படிப்படியாய் காரியங்களைச் செய்கிற கடவுள். அது இந்தப் பூமியை அவர் படைத்த விதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மனிதவர்க்கம் என்றென்றும் வாழ்வதற்காக ஒரு அழகிய கோளத்தை உண்டுபண்ணுவதை நோக்கி சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளும் முன்னேறிச்சென்றது. மனிதன் கீழ்ப்படியாமல் உண்மை வணக்கத்தைப் புறக்கணித்த போதிலும், முடிவாக பூமியில் பரதீஸை மறுபடியும் ஸ்தாபிப்பதற்கு, ஒரு படிப்படியான ஏற்பாட்டைத் தொடங்க அன்பு யெகோவாவைத் தூண்டியது.—ஆதி. 3:15.
2 ஆதியில் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதால், முன்னேற்றமடையும் இயல்பு அவனுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று அநேகர் முன்னேற்றம் என்பதை சொத்துக்களை அதிகரிக்கும் கருத்தில் மட்டுமே நோக்குகின்றனர். தம்முடைய ஊழியர்களிடம் இப்படிப்பட்ட முன்னேற்றத்தையா கடவுள் இக்காலங்களில் எதிர்பார்க்கிறார்? உங்களுடைய வாழ்க்கையில் எந்த வகையான முன்னேற்றம் முனைப்பாக தெரிகிறது?
3 கடவுள்மீதும் அயலார்மீதுமுள்ள அன்பு ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தூண்டுகிறது: கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்துக்கு தேவையானவற்றை அளிக்க வேண்டியதன் அவசியத்தை மதித்துணரும்போதிலும், அதிலேயே முழுவதும் அவர்களுடைய கவனம் முக்கியமாக ஒருமுகப்பட்டிருக்க வேண்டியதில்லை என்பதையும் அவர்கள் உணரவேண்டும். ஒரு இளம் மனிதனாக, இயேசு ஆவிக்குரிய முன்னேற்றத்தையே வாழ்க்கையின் மிக முக்கியமான இலக்காக கருதினார். (லூக். 2:52) அவருடைய வாழ்க்கையின் பிற்காலங்களில், மாற்கு 12:29-31-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளைச் சொல்லும்போது தன்னுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு பின்னிருந்த தூண்டுதலைச் சுட்டிக் காட்டினார்.
4 நாம் செய்து கொண்டிருக்கும் ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறித்து சிந்திக்க சிறிது நேரத்தை எடுத்துக்கொள்வோம். யெகோவாவையும் அவருடைய ஆள்தன்மையையும் குறித்து நாம் ஆரம்பத்தில் கற்றுக்கொண்டபோது, அவர்மீதான நம்முடைய அன்பும் போற்றுதலும், நம்முடைய வாழ்க்கைமுறையிலும் சிந்தனையிலும் சரிப்படுத்துதல்களைச் செய்ய நம்மை தூண்டின. கடவுளுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக வெளிப்படையாக அடையாளப்படுத்த வேண்டுமென்கிற ஆசையை நம்மில் உண்டுபண்ணுமளவுக்கு இந்த அன்பு விருத்தியடைந்தது. கடவுளுக்கான நம்முடைய சேவையிலும், உடன்மனிதரிடமாக அன்பான கரிசனையைக் காட்டுவதிலும், தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்முடைய உறுதியான தீர்மானத்தை இது வெளிப்படுத்திக் காட்டியது. இப்போது காலங்கள் கடந்துவிட்டிருக்க, பிலிப்பியர் 3:16-லுள்ள ஏவப்பட்ட வார்த்தைகளின் உட்கருத்தைக் கவனமாய் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கலாம்.
5 கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது, நாம் செய்திருப்பவற்றிலேயே மிக முக்கியமான தீர்மானமாக இருந்ததால், நம்முடைய வாழ்க்கைமுறையில் பெரியளவான மாற்றங்கள் செய்வதைத் தேவைப்படுத்தியது. நாம் மனமுவந்து அத்தகைய படிகளை எடுத்ததோடு, மகிழ்ச்சியுடன் அவருடைய வழிகளுக்கு இசைவாக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டோம். ஏனெனில் நம்மீதான கடவுளுடைய அன்பின் அநேக வெளிக்காட்டல்களால் நாம் தூண்டப்பட்டோம், இதன் விளைவாக அவர்மீதான நம்முடைய அன்பும் அதிகரித்தது. அதுமுதற்கொண்டு கடவுளிடமான நம்முடைய அன்பு வளரத்தொடங்கியுள்ளதா? அது நம்முடைய வாழ்க்கையின் மிகப் பலமான சக்தியாக ஆகியுள்ளதா? அல்லது ‘ஆதியில் கொண்டிருந்த அன்பைவிட்டுவிட்ட’ எபேசு சபையிலிருந்த கிறிஸ்தவர்களைப் போல ஆகிவிட்டோமா?—வெளி. 2:4, 5.
6 கடவுளிடமான அன்பு உயிரற்றதாகவோ, செயலற்றதாகவோ இல்லை, அது முன்னேறுகிறதாக இருக்கிறது. கடவுளிடமான அன்பில் உச்சத்தை நாம் அடைந்துவிட்டோம் என்றோ, இனியும் முன்னேற்றம் செய்யவேண்டிய எந்த அம்சமுமில்லை என்றோ உணரும் கட்டத்தை நம் வாழ்க்கையில் நாம் ஒருபோதும் அடைய மாட்டோம். கடவுளைப் பற்றிய நம் அறிவை ஆழப்படுத்தும்போது, அவர்மீதான நம்முடைய அன்பும் வளரத்தொடங்குகிறது. அது நித்தியகாலமாக தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும். ரோமர் 11:33-36-ல் (NW) எவ்வளவு நன்றாக பவுல் இதை தெரிவித்திருக்கிறார். ‘யெகோவாவின் சிந்தையை அறிந்தவன் யார்?’ என்ற கேள்வியின் உண்மைத்தன்மையை நாமும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
7 அந்த வார்த்தைகள் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து சிந்திக்க வைக்கவும் யெகோவாவிடமான நம்முடைய அன்பின் ஆழத்தை பரிசோதிக்கச் செய்யவும் வேண்டும். நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா அல்லது வாழ்க்கையிலுள்ள அழுத்தங்களின் காரணமாக ஆவிக்குரிய காரியங்களுக்கு குறைந்தளவு நேரமே இருப்பதாக காண்கிறோமா? கிறிஸ்தவ சபைக்கு வெளியிலுள்ள நம் அயலாரிடமும், நம்முடைய நெருங்கிய அயலாரான நம் சகோதர சகோதரிகளிடமும் அன்பை வெளிப்படுத்திக்காட்டுவதற்கான நேரத்தை கண்டடைவது அதிக கடினமாக ஆகிவருகிறதா? அப்படியென்றால் முன்னர் இடக்குறிப்பு காட்டப்பட்ட வசனமாகிய பிலிப்பியர் 3:16 நமக்கு தனிப்பட்ட முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
8 கடவுள்மீதும் அயலார்மீதுமுள்ள அன்பு நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தூண்டுமளவுக்கு போதுமானதாக உள்ளது என்று நாம் எப்படித் தீர்மானிக்கலாம்? நாம் செய்யும் தீர்மானங்கள் எப்போதுமே கடவுள்மீதும் அயலார்மீதுமுள்ள அன்பால் வழிநடத்தப்படுகின்றனவா? 2 கொரிந்தியர் 13:5-க்கு இசைவாக இதைக் குறித்து நாம் எப்படி பகுத்தாய்வு செய்யலாம்? இது சபையிலுள்ள மற்றவர்களுடன் ஒப்பிடுவதன் மூலம் செய்யப்படுவதில்லை. கடவுள்மீதும் அயலார்மீதுமுள்ள அன்பு என்பது தனிப்பட்ட விஷயம். நம்முடைய சொந்த அடையாளப்பூர்வமான இருதயத்திலிருந்து வெளிப்படுத்தப்படும் அன்பே இதில் முக்கியமாக உள்ளது. கலாத்தியர் 6:4-ல் பவுல் சரியான மனநிலையை காட்டினார். இதே கருத்தை அவர் ரோமர் 14:12-லும் வலியுறுத்தினார்.
9 கடவுளிடமான நம்முடைய அன்பு தணிந்துபோவதே, நாம் பின்தங்குவதற்கு காரணமாக உள்ளது என்று நாம் பகுத்துணருகிறோமா? ஆவிக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நம்முடைய ஆர்வம் குன்றிவிட்டதா? ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இவ்விதமாக உணர்ந்தார்கள். இதுவே 2 தெசலோனிக்கேயர் 3:13-ல் காணப்படும் உற்சாகமூட்டும் வார்த்தைகளை எழுதும்படி பவுலைத் தூண்டியிருக்கலாம். இந்த உலகம் அவர்கள்மீது திணிக்க முயலும் காரியங்களின் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய வேண்டுமென்று பவுல் அறிந்திருந்தார். அவருடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் பொருத்துவோமென்றால், ஆவிக்குரிய வெற்றியைக் குறித்து உறுதியுடன் இருக்கலாம். பிலிப்பியர் 4:13-ல் அவர் நமக்கு கூடுதலான உற்சாகத்தைக் கொடுத்தார்.
10 பைபிள் வாசிப்பிலிருந்தும் தனிப்பட்ட படிப்பிலிருந்தும் ஆவிக்குரிய பலம்: யெகோவா தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாக ஆவிக்குரிய பலத்தையும் சக்தியையும் கொடுக்கிறார். (எபி. 4:12) இந்த உலக அழுத்தங்களின் காரணமாக பின்தங்கிவருவதற்கான எந்த மனச்சாய்வையும் மேற்கொள்வதற்கு நாம் பைபிளை எப்படி பயன்படுத்தலாம். பத்து, இருபது என எண்ணற்ற ஆண்டுகளாகவும்கூட அநேகர் யெகோவாவுக்கான தங்களுடைய உண்மையுள்ள சேவையில் நிலைத்திருக்கின்றனர். இப்போது அவர்கள் வியாதி அல்லது வயோதிபத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைமையில் நாம் இருந்தால், எபிரெயர் 6:10-லுள்ள வார்த்தைகளிலிருந்து நாம் உற்சாகம் பெறலாம். ஆனால் நாம் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் குறைவுபடுவதற்கு வியாதி அல்லது வயது காரணமாக இல்லை என்று நாம் பகுத்துணர்ந்தால் அப்போது என்ன? கடவுளுடைய வார்த்தை நமக்கு எப்படி ஆவிக்குரிய பலத்தைக் கொடுக்கக்கூடும்?
11 கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும் படிப்பதும் நமக்கு உதவி செய்யக்கூடிய இரண்டு வழிகளை நாம் சுருக்கமாக சிந்திக்கலாம். முதலாவதாக, பைபிளை தினந்தோறும் வாசிப்பதும், நாம் வாசித்தவற்றை தியானிப்பதும் யெகோவாவின் ஆள்தன்மையினிடமாக நமக்கு ஆழ்ந்த உட்பார்வையை அளிக்கும். அவருடைய எல்லா செயல்தொடர்புகளிலும், நியமங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஞானத்தையும் அன்பையும் நாம் மதித்துணர கற்றுக்கொள்வோம். சங்கீதம் 119:97-ஐ எழுதிய சங்கீதக்காரன் உணர்ந்த விதமாகவே நாமும் உணருவோம். கடவுளுடைய வார்த்தையினிடமாக நம்முடைய அன்பு வளரும்போது, இந்த வார்த்தையின் ஊற்றுமூலரிடமாகவும் நம்முடைய அன்பு அதிகரிக்கும். கடவுளிடமாக ஆழமான அன்பு நம்முடைய வாழ்க்கையின் பலமான உந்தும்சக்தியாக ஆகிவிடுகிறது. (உன். 8:6, 7) அவருடைய சேவையில் ‘நம்மை மும்முரமான பிரயாசத்துடன்’ வைத்துக்கொள்வதற்கான ஆவிக்குரிய வாஞ்சையையும் பலத்தையும் அது நமக்கு கொடுக்கிறது.—லூக். 13:24, NW.
12 இரண்டாவதாக, பைபிள் பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்ட ஒரு புத்தகமாக உள்ளது. தினமும் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது பரிசுத்த ஆவியின் அற்புதமான ஊற்றுமூலத்திற்கு வழிவகுக்கும். சரியானதை செய்வதை விட்டுவிடாதிருப்பதற்கான பலத்தை அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு சாத்தியமாக்கியது பரிசுத்த ஆவியே. அதே பரிசுத்த ஆவி இன்றுள்ள எல்லாருக்கும்கூட கிடைக்கும். ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதற்கும், காத்துக்கொள்வதற்கும், நம்முடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த அனுமதிப்பதற்கும் நம்முடைய பங்கில் முயற்சி தேவைப்படுகிறது.
13 பின்தொடரும் கூற்றுகள் நம்முடைய உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றனவா? “எனக்கு அவ்வளவாக வாசிக்கிற பழக்கமில்லை.” “படிக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.” “நான் ஒண்ணும் பெரிய படிப்பாளி இல்லை அதனால படிக்கிறதும் வாசிக்கிறதும் எனக்கு அதிக சந்தோஷத்தை கொடுப்பதில்லை.” “என்னுடைய சுறுசுறுப்பான அட்டவணையில் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரத்தைக் கண்டடைவது கடினமாக இருக்கிறது.” “நான் படிக்கனும் என்கிற நல்ல நோக்கத்துடன் தொடங்குவேன், ஆனால் அதற்குள்ளாக வேறே காரியங்கள் வந்துவிடுகின்றன, இதனால் வாசிக்கிறதற்கும் படிக்கிறதற்குமான என்னுடைய அட்டவணை ஒதுக்கித் தள்ளப்படுவதாகிறது.” இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றை அல்லது அதிகமானவற்றை நாம் எதிர்ப்படுகிறோமா? அப்படியென்றால், நாம் என்ன செய்யலாம்? முதல் காரியமானது கடவுளிடமாக நம்முடைய இருதய நிலையை கண்டறிவதே. ஓர் அன்பான நெருங்கிய நண்பரிடமிருந்தோ உறவினரிடமிருந்தோ நாம் ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டால், அதை படிப்பதற்கு நமக்கு நேரமில்லை என்று சொல்வோமா அல்லது வாசிப்பதில் விருப்பமில்லை என்று சொல்லிக்கொண்டு நாம் அதை திறக்காமலிருப்போமா? இல்லை. அதை திறப்பதற்கும் வாசிப்பதற்கும் நாம் ஆர்வமாக இருப்போம். அப்படியென்றால் பைபிளின் மூலமாக நம்முடைய பரலோகத் தகப்பனுடன் பேச்சுத்தொடர்பு கொள்வதைக் குறித்து நாம் வித்தியாசமாக உணர வேண்டுமா?
14 ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலைமையும் வித்தியாசமாக இருப்பதால், சங்கமோ மூப்பர்களோ நமக்காக உறுதியான ஒரு பைபிள் வாசிப்பு அட்டவணையை ஏற்படுத்த முடியாது. கடவுளிடமான நம்முடைய அன்பும் அதை ஆழமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற ஆவலும் பைபிள் வாசிப்பு மற்றும் தனிப்பட்ட படிப்பை நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் ஓர் ஒழுங்கான அம்சமாக ஆக்குவதற்கு தூண்டும். ஒவ்வொரு குடும்பத் தலைவரும் குடும்பத்தின் ஆவிக்குரிய அக்கறைகளைக் கவனிப்பதிலும் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதிலும் இதை ஒரு முக்கியமான பாகமாக கருத வேண்டும். பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பிள்ளைகளுடைய இருதயத்தில் கடவுளுக்கான அன்பை ஆழமாக பதியச்செய்ய வேண்டுமென்று கட்டளையிடப்பட்டிருக்கின்றனர். (உபா. 6:4-9) கடவுள் தேவைப்படுத்துகிற இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்கு பைபிள் வாசிப்பு மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. சரியானதை செய்வதை நாம் ஒருபோதும் விட்டுவிடாதிருப்போமாக! கடவுளிலும் கிறிஸ்துவிலுமான நம்முடைய அன்பு தினமும் பைபிளை வாசிப்பதற்கு நம்மை உந்துவிக்கட்டும். (2 கொ. 5:14) மற்றவர்களும் கடவுளிடமான நம்முடைய அன்பு ஆவிக்குரிய முன்னேற்றத்தின் மூலம் வெளிப்படுவதை கவனிக்க ஆரம்பிப்பார்கள்.—1 தீ. 4:15.
15 அறிவு புத்தகம் பக்கம் 158-லிருந்து, தினந்தோறும் பைபிளை வாசிப்பதைக் குறித்து பின்வருமாறு சொல்லுகிறது: “நமக்கு ஆரோக்கியம் தரும் சரீரப்பிரகாரமான உணவுக்கு நாம் ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொள்வது அவசியமாயிருப்பது போலவே, நாம் ‘திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும்படியாக’ துரிதப்படுத்தப்படுகிறோம். கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிப்பதன் மூலம் ஆவிக்குரிய உணவின்மீது ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். . . .பைபிளில் நீங்கள் வாசிப்பதன் பேரில் தியானம் செய்யுங்கள். . . .அப்படியென்றால் அவ்விஷயத்தின்பேரில் நீங்கள் ஆழ்ந்து யோசிப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. . . .நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பவற்றை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஆவிக்குரிய உணவை ஜீரணிக்கலாம். அந்தத் தகவல் எவ்விதமாக உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள், அல்லது அது யெகோவாவின் பண்புகளையும் செயல்தொடர்புகளையும் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதன்பேரில் சிந்தித்துப்பாருங்கள். யெகோவா அளிக்கும் ஆவிக்குரிய உணவை இவ்விதமாக தனிப்பட்ட படிப்பின் மூலம் நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்களை கடவுளிடம் நெருங்கிவரச் செய்யும், மேலும் தினசரி பிரச்சினைகளைக் கையாளுவதற்கு இது உங்களுக்கு உதவிசெய்யும்.”
16 எனவே, தனிப்பட்ட படிப்பை ஒருபோதும் அசட்டை செய்யாதீர்கள்; அது ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது மேலும் ஆவிக்குரிய முன்னேற்றம் கடவுளுடைய அதிசயமான புதிய உலகத்திற்குள் தப்பிப்பிழைப்பதற்கு இன்றியமையாதது. முன்னேற்றம் செய்யுமளவிற்கு யெகோவாவையும் நம்முடைய அயலாரையும் நேசிப்போமாக, மேலும் இந்த முன்னேற்றத்தை நம்முடைய தனிப்பட்ட படிப்பில் ஊக்கம் தளராமல் இருப்பதன் மூலம் அடைவோமாக.—நீதி. 2:1-9.