எல்லா மொழியினருக்கும் மதத்தினருக்கும் சாட்சிகொடுத்தல்
1 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், பலதரப்பட்ட மொழியினருக்கும் மதத்தினருக்கும் வைராக்கியமாய் சாட்சிகொடுத்தனர். அதன் விளைவாக, “100-ம் ஆண்டிற்குள், மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கிறிஸ்தவ சமுதாயம் இருந்தது.”—இடைக்காலங்களின் சரித்திரம் (ஆங்கிலம்).
2 இந்தியாவில் மக்கள் அநேக மொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பாலும், ஒரேவித மொழியைப் பேசும் மக்கள் ஒரே மாநிலத்தில் தொகுதியாக வாழ்கின்றனர். இருந்தபோதிலும், அநேக இந்திய நகரங்களும் பட்டணங்களும் இப்போது மாநகரங்களாய் மாறியிருக்கின்றன; அதாவது, பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் அங்கே வாழ்கின்றனர். மொழிகள் வேறுபடுவதன் காரணமாக, அப்படிப்பட்ட மக்களிடம் எப்படி பேசி சாட்சிகொடுப்பது என்பதை அறிந்திருப்பது சிலசமயங்களில் சவாலாக இருக்கிறது. சொல்லப்போனால் நாம் வாழும் பகுதியிலேயே மிஷனரி பிராந்தியம் இருக்கலாம். “ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும்,” எல்லா மொழியினருக்கும் மதத்தினருக்கும் “முழுமையாய் சாட்சிகொடுக்கவும்” இயேசு கொடுத்த கட்டளையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?—அப். 10:42, NW.
வேறொரு மொழியினருக்கு சாட்சிகொடுத்தல்
3 அநேக மக்கள், தங்களது தாய்மொழியில் கற்பிக்கப்படும்போது அதிக விரைவாகவும் ஆழமான புரிந்துகொள்ளுதலோடும் கற்றுக்கொள்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை. “நற்செய்தியின் நிமித்தமும்,” அதில் ‘மற்றவர்களோடு உடன்பங்காளிகளாகும்’படியும், உலகம் முழுவதிலுமுள்ள அநேக சகோதர சகோதரிகள் வேறொரு மொழியைக் கற்றிருக்கின்றனர். (1 கொ. 9:23, NW) ஆங்கிலம் பேசப்படும் ஒரு நாட்டில், அந்த மொழி பேசும் ஒரு சகோதரி, சீன மொழி பேசும் ஒரு பெண்ணிற்கு பல வருடங்களாக பத்திரிகைகளை தவறாமல் அளித்துவந்தார்; அந்தப் பெண்ணோ பைபிள் படிப்பை மறுத்துவந்தாள். ஒருமுறை சீன மொழி கற்றுக்கொண்டிருந்த மற்றொரு சகோதரி அந்த மொழியிலுள்ள புத்தகத்தை அவருக்கு அளித்தார். அப்புத்தகத்தையும் பைபிள் படிப்பையும் அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். வெற்றிக்குக் காரணம், அந்த இரண்டாவது சகோதரி அந்தப் பெண்ணின் சொந்த மொழியில் ஒருசில வார்த்தைகளைப் பேச முயற்சி எடுத்ததுதான்.—அப்போஸ்தலர் 22:2-ஐ ஒப்பிடுக.
4 நீங்கள் வசிக்கும் பகுதியில் பொதுவாக பேசப்படும் மொழி போக வேறொன்றை நீங்கள் அறிந்திருக்கலாம்; அச்சந்தர்ப்பத்தில், உங்கள் பிராந்தியத்தில் அந்த மொழியைப் பேசும் மக்கள்மீது நீங்கள் விசேஷ கவனம் செலுத்தலாம். (மத். 9:37, 38) உதாரணத்திற்கு, ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு சகோதரர் சத்தியத்திற்கு வருவதற்குமுன் வியட்நாமிய மொழி கற்றிருந்தார்; இப்போது வியட்நாம் மொழி பேசும் மக்களோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். அந்த மொழியிலுள்ள தனது அறிவை சாட்சிகொடுப்பதற்காக அர்ப்பணிக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாய் இருந்தது; ஆகவே வேறொரு நாட்டிற்கு அவர் குடும்பமாக குடிபெயர்ந்தார்; அது, தேவை அதிகமிருந்த, வியட்நாமிய மொழியினரது பகுதியாய் இருந்தது. அவ்வாறு இடம் மாறி சென்றது முதற்கொண்டு, வியட்நாமியர் அநேகரோடு பைபிள் படிப்பு நடத்துவதில் அதிக வெற்றிகண்டிருக்கிறார்.
5 ஒரு பயனியர் சகோதரி தனது பிராந்தியத்தில் அநேக செவிடர்களைச் சந்தித்தார். சைகை மொழியைக் கற்றுத்தரும் எவரையாவது தான் சந்திப்பதற்கு உதவும்படி அவர் யெகோவாவிடம் ஜெபித்தார்; ஏனெனில் அப்போதுதானே அவரால் செவிடர்களுக்கு சத்தியத்தைக் கற்பிக்க முடியும். ஒருமுறை அருகிலிருந்த சூப்பர்மார்க்கெட்டிற்கு சென்றிருந்தபோது, காதுகேளாத ஒரு இளம் பெண் இவரை அணுகினாள்; ஒரு பொருளைக் கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு எழுதிக் காண்பித்தாள். அதைக் கண்டுபிடிக்க அவளுக்கு அச்சகோதரி உதவினார்; அதன்பின் அப்பகுதியிலிருந்த காதுகேளாதோருக்கு உதவுவதற்காக தான் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புவதாக அந்தப் பயனியர் சகோதரி எழுதிக் காண்பித்தார். அதற்கு அந்தக் காதுகேளாத பெண், “ஏன் செவிடர்களுக்கு உதவ வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்?” என எழுதிக் கேட்டாள். சகோதரி எழுதிய பதில்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சி. பைபிளைப் புரிந்துகொள்ள காதுகேளாதவர்களுக்கு உதவ வேண்டுமென்பது என் ஆசை. நீங்கள் எனக்கு சைகை மொழியைக் கற்றுக்கொடுத்தால் நான் உங்களுக்கு பைபிளை கற்றுக்கொடுப்பதில் சந்தோஷமடைவேன்.” அந்தச் சகோதரி சொல்கிறார்: “அவள் ‘சரி’ என சொன்னபோது நான் அடைந்த சந்தோஷம் இருக்கிறதே, அதை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது.” அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஒவ்வொரு சாயங்காலமும் அச்சகோதரி ஆறு வாரங்களுக்குச் சென்றார். அவர் சைகை மொழியைக் கற்றுக்கொண்டார்; காதுகேளாத அந்தப் பெண்ணோ சத்தியத்தைக் கற்றுக்கொண்டு முழுக்காட்டப்பட்டாள்! அது 30 வருடங்களுக்கு முன் நடந்தது, அந்தப் பயனியர் சகோதரி காதுகேளாதோருக்கு இன்னமும் சாட்சிகொடுத்து வருகிறார்.
6 நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பிராந்தியம் அடிக்கடி செய்துமுடிக்கப்படலாம்; வெகுசில சாட்சிகளே இருக்கும் ஒரு பகுதியில் பேசப்படும் ஒரு மொழியை நீங்கள் சரளமாய் பேச அறிந்திருக்கலாம்; அந்தப் பிராந்தியத்திற்கு குடிமாறிசெல்ல உங்களுக்கு விருப்பம் இருக்கலாம், உங்களால் அது முடியும்கூட; இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், உங்களது சபை மூப்பர்களிடம் இதைக் குறித்து ஏன் பேசக்கூடாது. உங்களுக்குத் தகுதியிருப்பதாக அவர்கள் நினைத்தால், சங்கத்திற்கு நீங்கள் எழுதலாம்; ஆனால் மூப்பர்கள், உங்களது தகுதிகளைப் பற்றியும் மொழி திறமைகளைப் பற்றியும் தாங்கள் கவனித்தவற்றைக் குறித்து ஒரு விவரக் கடிதத்தை அத்துடன் சேர்த்து அனுப்பவேண்டும்.—ஆகஸ்ட் 15, 1988, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ஐக் காண்க.
7 அளிக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்துதல்: நமது பிரசுரம் அநேக மொழிகளில் கிடைக்கிறது. துண்டுப்பிரதிகளை அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது வேறொரு சிற்றேட்டை, உங்கள் பிராந்தியத்தில் பேசப்படும் எல்லா மொழிகளிலும் எடுத்துச்செல்வது பிரயோஜனமாய் இருக்கும். அப்பகுதியில் பேசப்படும் மொழி, வீட்டுக்காரரது தாய்மொழி அல்ல என்பது தெளிவாக தெரிந்தால், அவர் எந்த மொழியில் வாசிக்க விரும்புகிறார் என கேளுங்கள். அதன்பின், கூடுமானால் அந்த மொழியில் அவருக்கு பிரசுரத்தை அளியுங்கள்.
8 ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் ஒரு நபரது மொழியை உங்களால் பேச முடியாவிட்டாலும், நற்செய்தியை அவரிடம் உங்களால் பகிர்ந்துகொள்ள முடியும். எப்படி? எல்லா தேசத்தாருக்கு நற்செய்தி என்ற சிற்றேட்டைப் பயன்படுத்துவதன் மூலமாகும். அதில் சுருக்கமான ஒரு செய்தி 59 மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அச்சிற்றேட்டின் 2-ம் பக்கத்திலுள்ள குறிப்புரைகள் விளக்கும் பிரகாரம், வீட்டுக்காரரது மொழியை கேட்டு தெரிந்துகொண்ட பின்னர், சிற்றேட்டின் பொருத்தமான பக்கத்திற்கு திருப்பி அச்சிடப்பட்டிருக்கும் தகவலை வாசிக்கச் சொல்லுங்கள். அதை வாசித்த பிற்பாடு, அவரது மொழியில் ஒரு பிரசுரத்தைக் காண்பியுங்கள். அந்த மொழியில் உங்களிடம் இல்லையென்றால், எந்த மொழியில் இருக்கிறதோ அதைக் காண்பியுங்கள். அவரது மொழியிலுள்ள ஒரு பிரதியுடன் மீண்டும் வர முயற்சிப்பதாக அவரிடம் சொல்லுங்கள். அவரது பெயரையும் விலாசத்தையும் கேட்டு எழுதிக்கொள்ளுங்கள். ஒருவேளை அந்தத் தகவலை, உங்கள் சபையில் அந்த மொழி தெரிந்த எவரிடமாவது கொடுக்கலாம். மறுசந்திப்பு செய்வதற்கு அம்மொழி பேசும் எவரும் இல்லையென்றால், நீங்களே அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளலாம்; ஒருவேளை உங்கள் மொழியிலுள்ள பிரசுரத்தை நீங்கள் வைத்துக்கொண்டு அந்த நபரோடு சேர்ந்து படிக்கலாம்.—1 கொ. 9:19-23.
புறமதத்தினருக்கு சாட்சிகொடுத்தல்
9 ஒரு நபரது மத பின்னணியைக் குறித்து கொஞ்சம் அறிந்திருப்பது, கடவுளது ராஜ்யத்தைப் பற்றி திறம்பட்ட விதத்தில் சாட்சிகொடுக்க நமக்கு உதவுகிறது. கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடல் என்ற ஆங்கில புத்தகம், உலகின் முக்கிய மதங்களைக் குறித்து நமக்கு விளக்கமளிக்கிறது; ஆகவே அவர்களது நம்பிக்கைகளை நம்மால் போதுமானளவு புரிந்துகொள்ள முடியும்; இவ்வாறு சத்தியத்தின் அறிவைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு நாம் உதவலாம்.
10 இந்த உட்சேர்க்கையின் கடைசி பக்கத்திலுள்ள பெட்டி, புறமதத்தினருக்கு சாட்சிகொடுக்கையில் பயன்படுத்த யெகோவாவின் அமைப்பு அளித்திருக்கும் பிரசுரங்களில் சிலவற்றை பட்டியலிடுகிறது. இந்தப் பிரசுரங்களை வாசிப்பதன் மூலம், எவ்வாறு மக்களை அணுகி நற்செய்தியை சொல்வதென்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகமும் உதவியளிக்கும் ஒரு கருவி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்புத்தகம், 21-4 பக்கங்களில், புத்த மதத்தினர், இந்துக்கள், யூதர்கள், முஸ்லிம்கள் போன்றோரிடம் எவ்வாறு பேசுவது என்பதைப் பற்றி நடைமுறை ஆலோசனைகளை வழங்குகிறது.
11 என்ன சொல்கிறீர்கள் என்பதைக் குறித்து உஷார்: ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களைக் குறித்து எப்போதும் ஒரேவிதமான அபிப்பிராயத்தோடு இராதபடி நாம் கவனமாய் இருக்கவேண்டும்; அந்த மதத்தைச் சேர்ந்த அனைவருக்குமே ஒரேவித நம்பிக்கைகள்தான் இருக்கின்றன என்று முடிவுசெய்துவிடக் கூடாது. அதற்கு மாறாக, நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நபர் எவ்வாறு சிந்திக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். (அப். 10:24-35) சாலிமுன் என்பவர், குர்ஆன் கடவுளது வார்த்தை என நம்பும்படி ஒரு முஸ்லிமாக வளர்க்கப்பட்டிருந்தார். ஆனால் மிகுந்த இரக்கமுள்ள கடவுள் எரிநரகத்தில் மக்களை வதைப்பார் என்ற முஸ்லிம் போதகத்தை அவரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் அவரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். அவர் உடனடியாக சத்தியத்தை அடையாளம் கண்டுகொண்டார்; இப்போது கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராக சந்தோஷமாய் பணியாற்றிவருகிறார்.
12 புறமத நம்பிக்கையுள்ளவர்களிடம் சாட்சிகொடுக்கையில், அவர்களை அணுகும் விதத்தைக் குறித்து நாம் உஷாராய் இருக்கவேண்டும்; இல்லையென்றால், நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே பறிபோகலாம். (அப். 24:16) சில மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்களை ‘மதமாற்றம்’ செய்வதற்கு சிறிதளவு முயற்சி எடுக்கப்பட்டாலும் மிகுந்த ஆத்திரமடைகின்றனர். ஆகவே கடவுளது வார்த்தையின் குறைவற்ற சத்தியத்தினிடம் அவர்களை கவர்ந்திழுக்க, இருசாராரும் ஒத்துப்போகும் விஷயத்தை முதலில் சொல்வதற்கு குறிப்புகளைக் கவனமாக தேர்ந்தெடுங்கள். தயவாக அணுகுகையிலும், சத்தியத்தைத் தெளிவாக சொல்கையிலும் செம்மறியாடு போன்ற மக்கள் செவிகொடுப்பார்கள்.
13 நாம் சொல்லப்போகும் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுப்பதும் முக்கியம்; இல்லையென்றால், அனாவசியமாக, நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்காதவாறு செய்துவிடுவோம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என எடுத்த எடுப்பில் சொன்னால், கேட்பவர், நீங்கள் கிறிஸ்தவமண்டல சர்ச்சை சேர்ந்தவர் என முடிவுசெய்துவிடலாம்; இது ஒரு தடையை ஏற்படுத்தலாம். பைபிளை, ‘வேதவாக்கியம்’ அல்லது “பரிசுத்த வேத எழுத்துக்கள்” என சொல்வதும் பிரயோஜனமாய் இருக்கலாம்.—மத். 21:42; 2 தீ. 3:15.
14 புத்த மதத்தினரிடம் சாட்சி பகருதல்: (கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடல் புத்தகத்தில் 6-ம் அதிகாரத்தைக் காண்க.) புத்த மதத்தைச் சேர்ந்தவர்களது நம்பிக்கைகள் ஆளுக்கு ஆள் மிகவும் வேறுபடுகின்றன. புத்த மதம், ஒரு தனிப்பட்ட சிருஷ்டிகர் இருப்பதை ஆதரிப்பதற்கு பதிலாக, பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌதம புத்தரை மத வழிகாட்டியாக கருதுகிறது. புத்தர் ஒரு நோயாளியையும் ஒரு முதியவனையும் ஒரு சவத்தையும் முதன்முதலில் பார்த்தபோது வாழ்க்கையின் அர்த்தத்தை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். ‘மனிதர் வெறுமனே துன்பப்பட்டு, வயதாகி, இறந்துபோவதற்காகவா பிறந்தனர்?’ என சிந்தித்தார். புத்த மதத்தைச் சேர்ந்த பற்றுள்ள நபர்கள் இக்கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்பலாம்; சந்தேகமின்றி, அப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் பதிலளிக்க முடியும்.
15 புத்த மதத்தினரிடம் பேசுகையில், பரிசுத்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததான பைபிளில் காணப்படும் நம்பிக்கையளிக்கும் செய்தியையும் தெளிவான சத்தியங்களையும் மட்டுமே குறிப்பிடுங்கள். பெரும்பாலானவர்களைப் போலவே, புத்த மதத்தினரும் சமாதானத்திலும் ஒழுக்கத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் அதிக ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர்; இந்த விஷயங்களைக் குறித்து கலந்தாலோசிக்க விரும்புகின்றனர். இதன் மூலம், மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு ராஜ்யமே என்பதை நீங்கள் சிறப்பித்துக்காட்டலாம். ஒரு சகோதரி, மளிகைக் கடையில் சீன நாட்டவர் ஒருவரை பார்த்தபோது அவரது மொழியில் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்து, பைபிள் படிப்பைப் பற்றி சொன்னார். “பரிசுத்த பைபிளைப் பற்றியா சொல்கிறீர்கள்? இத்தனை நாளும் இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்!” என அவர் சொன்னார். அந்த வாரமே படிப்பு ஆரம்பிக்கப்பட்டு, எல்லா கூட்டங்களுக்கும் அவர் வரத் துவங்கினார்.
16 மற்றொரு பயனியர் சகோதரி, பத்து வருடங்களுக்கும் மேலாக சீன மாணாக்கர்களுக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுத்து வந்திருக்கிறார். இந்த மாணாக்கர்கள், எட்டு வீடுகள் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்தனர்; அந்தச் சகோதரி அங்கு ஊழியம் செய்கையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படிப்பை ஆரம்பிக்க தனக்கு உதவுமாறு யெகோவாவிடம் ஜெபித்தார். இரண்டு வாரங்களில், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு மாணாக்கரோடாவது அவர் படிப்பை நடத்திவந்தார். மாணாக்கர்களுக்கு பொதுவாக அக்கறையளிக்கும் ஒரு விஷயத்தை தான் தெரிந்துகொண்டிருப்பதாக சொல்லி ஆரம்பிப்பதையே பலனளிப்பதாக அவர் கண்டிருக்கிறார்; அதாவது அவர்கள் அனைவரும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் விரும்புகின்றனர் என சொல்வார். பின், அதுதான் அவர்களது விருப்பமுமா என அவர்களைக் கேட்பார். அவர்கள் எப்போதுமே அதை ஒப்புக்கொள்வர். சீன மக்களுக்காக வெளியிடப்பட்டிருக்கும் நிலையான சமாதானமும் சந்தோஷமும்—அவற்றை எவ்வாறு கண்டடைவது என்ற சிற்றேட்டை அவர்களிடம் காண்பிப்பார். வெறுமனே ஐந்து முறை பைபிள் படிப்பு நடத்திய பிறகு, ஒரு மாணாக்கர், தான் வெகு காலமாக சத்தியத்தைத் தேடிவந்ததாகவும் இப்போது அதைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவரிடம் சொன்னார்.
17 இந்துக்களிடம் சாட்சி பகருகையில்: (கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடல் புத்தகத்தில் 5-ம் அதிகாரத்தைக் காண்க.) நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கும் பிரகாரம், இந்து மதத்தில் எந்தத் தெளிவான கோட்பாடும் இல்லை. அதன் தத்துவம் மிகவும் சிக்கலானது. அவர்களது உன்னத கடவுள், மும்மூர்த்தியென (பிரம்மா படைப்பவர், விஷ்ணு பாதுகாப்பவர், சிவன் அழிப்பவர்) நம்புகின்றனர். மறுபிறவி கோட்பாட்டை ஆதரிப்பதற்கு, ஆத்துமா அழியாதென அவர்கள் நம்புவது அவசியம்; இதனால், விதிப்படி வாழ்க்கை அமைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 317-21-ஐயும், காவற்கோபுரம், மே 15, 1997, பக்கங்கள் 3-8-ஐயும் காண்க.) இந்து மதம், மத சகிப்புத்தன்மையை கற்பிக்கிறது; அதாவது, எல்லா மதங்களும் ஒரே சத்தியத்திற்கே வழிநடத்துகின்றன என கற்பிக்கிறது.
18 ஒரு இந்துவிடம் சாட்சிகொடுக்கையில், இந்து தத்துவங்களைப் பற்றி வெகுநேரம் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்; மாறாக, பூமியில் மனித பரிபூரணத்தோடு என்றென்றும் வாழும் பைபிள்-அடிப்படையிலான நமது நம்பிக்கையைப் பற்றியும், எல்லா மனிதவர்க்கமும் எதிர்ப்படும் முக்கிய கேள்விகளுக்கு பைபிள் அளிக்கும் திருப்தியான பதில்களைப் பற்றியும் விளக்க வேண்டும்.
19 யூதர்களுக்கு சாட்சிகொடுக்கையில்: (கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடல் புத்தகத்தில் 9-ம் அதிகாரத்தைக் காண்க.) யூத மதம், மற்ற புறமதங்களிலிருந்து வேறுபடுகிறது; ஏனெனில் கட்டுக்கதை அல்ல ஆனால் சரித்திரமே அதன் அடிப்படை. ஏவப்பட்ட எபிரெய வேதாகமம், உண்மையான கடவுளை மனிதவர்க்கம் தேட ஒரு முக்கிய பாலமாக அமைந்தது. இருந்தபோதிலும், மனித ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கையே நவீன யூத மதத்தின் அடிப்படை போதனையாகும்; இது கடவுளுடைய வார்த்தைக்கு முற்றிலும் நேர்மாறானது. ஆபிரகாமின் கடவுளையே நாம் வணங்குகிறோம் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலமும், இன்றைய உலகில் ஒரேவிதமான பாடுகளையே நாம் அனைவரும் அனுபவிக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதன் மூலமும் இணக்கமான பேச்சிற்கு அடித்தளம் அமைக்கலாம்.
20 கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு யூதரை நீங்கள் சந்தித்தால், எப்போதுமே அவர் அவ்வாறு நம்பிக்கையற்றவராய் இருந்திருக்கிறாரா என கேட்கலாம்; எந்த விஷயம் அவருக்கு அக்கறையூட்டும் என புரிந்துகொள்வதற்கு இது உங்களுக்கு உதவும். உதாரணத்திற்கு, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதற்கு ஒரு திருப்தியான விளக்கத்தை அவர் ஒருபோதும் கேட்டிருக்க மாட்டார். இயேசு உண்மையில் மேசியாவா என மறுபடியும் ஆராய்ந்து பார்க்கும்படி மதப் பற்றுள்ள யூதர்களை உற்சாகப்படுத்தலாம்; கிறிஸ்தவமண்டலம் இயேசுவை பிரதிநிதித்துவம் செய்யும் தவறான விதத்தின் மூலம் அல்ல, ஆனால் கிரேக்க வேதாகமத்தின் யூத ஆசிரியர்கள் அவரை பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்குமாறு உற்சாகப்படுத்தலாம்.
21முஸ்லிம்களுக்கு சாட்சிகொடுக்கையில்:
(கடவுளுக்கான மனிதவர்க்கத்தின் தேடல் புத்தகத்தில் 12-ம் அதிகாரத்தைக் காண்க.) இஸ்லாம் மதத்தினரான முஸ்லிம்கள், அல்லாவே தங்களது ஒரே கடவுள் என்பதாகவும், முகமது (பொ.ச. 570-632) அவரது கடைசியான மிக முக்கிய தீர்க்கதரிசி என்பதாகவும் நம்புகின்றனர். முஸ்லிம்கள், கடவுளுக்கு ஒரு குமாரன் இருந்தார் என்பதை நம்பாததன் காரணமாக, இயேசு கிறிஸ்துவை சற்று குறைவான ஸ்தானத்திலுள்ள கடவுளது தீர்க்கதரிசியாக மாத்திரமே கருதுகின்றனர். 1,400-க்கும் குறைவான ஆண்டுகள் பழமையான குர்ஆன், எபிரெய வேதாகமத்தையும் கிரேக்க வேதாகமத்தையும் மேற்கோள் காட்டுகிறது. இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க சமயங்களுக்கிடையே அதிக ஒற்றுமைகள் இருக்கின்றன. இரு மதங்களுமே ஆத்துமா அழியாமை, தற்காலிகமான வதைத்தல், எரிநரகம் ஆகியவற்றை கற்பிக்கின்றன.
22 ஒரேவொரு உண்மையான கடவுள் மாத்திரமே இருக்கிறார், பைபிள் அவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்ற நம்பிக்கைகளே இருமதத்தினருக்கும் பொதுவானவை என்பது தெளிவாயிருக்கிறது. குர்ஆனை கவனமாக வாசித்திருக்கும் ஒருவர், தோரா, சங்கீதங்கள், சுவிசேஷங்கள் ஆகியவை கடவுளது வார்த்தை என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்; அவற்றை அவ்வாறே புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும் என்பதையும் வாசித்திருக்கிறார். ஆகவே, இவற்றை அந்த நபருடன் படிக்க விரும்புவதாக நீங்கள் சொல்லலாம்.
23 இந்த பிரசங்கம், முஸ்லிமாக இருக்கும் ஒருவருக்கு பயனளிக்கலாம்: “இந்தச் சிறு புத்தகத்தில் உங்கள் மத போதகங்கள் சிலவற்றைக் குறித்து நான் படித்திருக்கிறேன். [நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 24-ம் பக்கத்திற்குத் திருப்புங்கள்.] இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும் முகமதுவே கடைசியான மிக முக்கிய தீர்க்கதரிசியாய் இருந்தார் என்று நீங்கள் நம்புவதாக அது சொல்கிறது. மோசேயும் ஒரு உண்மை தீர்க்கதரிசி என நீங்கள் நம்புகிறீர்களா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] கடவுளது தனிப்பட்ட பெயரைப் பற்றி அவரிடமிருந்து மோசே என்ன தெரிந்துகொண்டார் என்று நான் உங்களுக்குக் காட்டட்டுமா?” யாத்திராகமம் 6:2, 3-ஐ வாசிக்கவும். மறுசந்திப்பின்போது, கடவுளுக்கு உண்மையாய்க் கீழ்ப்படுவதற்குக் காலம் என்ற ஆங்கில சிற்றேட்டில் 13-ம் பக்கத்திலுள்ள, “ஒரே கடவுள், ஒரே மதம்” என்ற உபதலைப்பை கலந்தாலோசிக்கலாம்.
24 இன்று, ஏசாயா 55:6-ல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு இசைவாக அநேகர் நடக்கின்றனர்: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” இது நேர்மை இருதயமுள்ள அனைவருக்கும், அவர்களது மொழியோ மதப் பின்னணியோ எதுவாக இருந்தாலும்சரி பொருந்துகிறது. நாம் புறப்பட்டுப்போய் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்க’ எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என நாம் நிச்சயமாக இருக்கலாம்.—மத். 28:19.
[பக்கம் 6-ன் பெட்டி]
புறமதத்தினருக்காக வடிவமைக்கப்பட்ட பிரசுரங்கள்
புத்த மதத்தினர்
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (சிற்றேடு)
தகப்பனைத் தேடி (ஆங்கிலம்) (சிறுபுத்தகம்)
சீன மதத்தினர்
நிலையான சமாதானமும் சந்தோஷமும்—அவற்றை எவ்வாறு கண்டடைவது (ஆங்கிலம்) (சிற்றேடு)
இந்துக்கள்
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் (சிறுபுத்தகம்)
நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? (சிற்றேடு)
மரணத்தின்மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? (சிறுபுத்தகம்)
விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை (சிறுபுத்தகம்)
யூதர்கள்
போரில்லா உலகம் சாத்தியமா? (ஆங்கிலம்) (சிற்றேடு)
முஸ்லிம்கள்
கடவுளுக்கு உண்மையாய்க் கீழ்ப்படுவதற்குக் காலம் (ஆங்கிலம்) (சிறுபுத்தகம்)
சுவனத்திற்கு செல்லும் பாதையைக் கண்டடைவது எப்படி (ஆங்கிலம்) (துண்டுப்பிரதி)