பிள்ளைகளே—நீங்கள்தான் எங்கள் வசந்தம்!
1 சிறுவர்களே, சிறுமிகளே, சபையின் நடவடிக்கைகளில் உங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா கொடுத்த கட்டளையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (உபா. 31:12; சங். 127:4) உங்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு, யெகோவாவை ஒன்றுசேர்ந்து வழிபடும்போது எங்களுக்கு மகிழ்ச்சி களைகட்டத் தொடங்குகிறதே! கூட்டங்களில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கவனத்தோடு கேட்கும்போது எங்கள் இதயத்தில் இன்பத் தேனாறு பாய்கிறது. நீங்கள் சொந்தமாக பதில் சொல்ல முயலும்போது நாங்கள் அடையும் மகிழ்ச்சியே அலாதி. நீங்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நியமிப்பில் பங்கேற்கும்போதும், ஆசையாக வெளி ஊழியத்தில் எங்களோடு சேர்ந்துகொள்ளும்போதும், பள்ளிப் பிள்ளைகளிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் தைரியமாகச் சாட்சி கொடுத்ததை கேள்விப்படும்போதும் முழு சபையே மகிழ்ச்சியில் திளைக்கிறது.—சங். 148:12, 13.
2 நீங்கள் நாகரிகமாக நடந்துகொள்ளும்விதம், உங்களது நேர்த்தியான தோற்றம், தூய நடத்தை, பெரியவர்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதை ஆகியவற்றை பார்க்கும்போது உங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்பதை மறக்கவேண்டாம். நீங்களாகவே தேவராஜ்ய இலட்சியங்கள் வைத்து, ‘வாலிபப்பிராயத்திலே . . . சிருஷ்டிகரை நினைக்கிறீர்கள்’ என்பதை வெளிக்காட்டுவீர்கள் என்றால் எங்கள் மகிழ்ச்சி கரைபுரண்டோடும்.—பிர. 12:1; சங். 110:3.
3 உங்கள் இலட்சியங்களை சொல்லுங்கள்: ஒரு எட்டு வயது பையன், மாவட்ட கண்காணியிடத்தில் இவ்வாறு கூறினான்: ‘முதல்ல நான் முழுக்காட்டுதல் எடுக்கணும், அப்புறம் சபையிலே சவுண்டு சிஸ்டத்திலே உதவி செய்யணும், மைக்குகளை ஹாண்டில் பண்ணணும், ஒரு அட்டண்டன்டா ஆகணும், லிட்ரேச்சர் கவுண்டரில் உதவி செய்யணும், புத்தகப் படிப்புலேயும் காவற்கோபுர படிப்புலேயும் வாசிக்கணும். அதுக்கப்புறம், நான் ஒரு உதவி ஊழியராக ஆகணும், அதுக்கும் அப்புறம், ஒரு மூப்பராக வரணும். ஒரு பயனியராக ஆகி, பயனியர் பள்ளிக்கு போகணும். அப்புறமா பெத்தேலுக்கு போகணும், ஒரு சர்க்யூட் ஓவர்ஸியரா இல்லாட்டி டிஸ்ட்ரிக்ட் ஓவர்ஸியரா ஆகணும்.’ ஆஹா, கடவுளை சேவிக்கும் சிலாக்கியத்திடம் அவனுக்கு எத்தகைய ஒரு மதித்துணர்வு!
4 நீங்கள் உடல் ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் வளரும்போது, உங்கள் இலட்சியங்களை எப்படி அடைகிறீர்கள் என்பதைப் பார்க்கையில் நாங்கள் மகிழ்வோம். (லூக்கா 2:52-ஐ ஒப்பிடுக.) உலகம் முழுவதிலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இளம் தளிர்கள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆகிறார்கள். பிறகு முழுக்காட்டுதலுக்கு தகுதிபெற்று, யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளாக ஆகிறார்கள். அதன்பின், துணைப் பயனியர் என்ற தகுதியை நீங்கள் அடையும்போதும், முழுநேர ஊழியத்தில் அடியெடுத்து வைக்கும்போதும் எங்கள் மகிழ்ச்சி வளர்ந்துகொண்டே போகிறது. உண்மையில், பிள்ளைகளே நீங்கள்தான் எங்கள் வசந்தம்! நம் பரலோக தந்தைக்கு துதியைக் கொண்டுவர நீங்கள்தான் அருமையான ஓர் ஊற்றுமூலம்! உங்களை யெகோவா திரளாக ஆசீர்வதிப்பாராக!—நீதி. 23:24, 25.