நாம் வித்தியாசமானவர்கள் என்பதை அவர்களே புரிந்துகொள்ளட்டும்
1 கடந்த வருடம் 3,00,000-க்கும் அதிகமான புதியவர்கள் முழுக்காட்டுதல் எடுத்து நம்மோடு சேர்ந்திருக்கின்றனர். கடவுளுடைய அமைப்பின் பாகமாவதற்கு யெகோவாவின் சாட்சிகளிடத்தில் அவர்கள் அப்படியென்ன வித்தியாசத்தைக் கண்டார்கள்? மற்ற மதத்தவரைக் காட்டிலும் நாம் ஏன் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறோம்? இதோ! வெளிப்படையான சில பதில்கள்:
—நம் சொந்த கருத்துக்களைவிட பைபிளையே நாம் பின்பற்றுகிறோம்: இயேசு கிறிஸ்து செய்யச்சொன்ன விதமாக, நாம் யெகோவா தேவனை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குகிறோம். இது மதங்களின் போலித்தன்மைகளை களைந்துவிட்டு, கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தைக்கு இசைய வாழ்வதைக் குறிக்கிறது.—யோவா. 4:23, 24; 2 தீ. 3:15-17.
—மக்கள் நம்மிடம் வர காத்திராமல் நாம் அவர்களிடத்தில் போகிறோம்: பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்குமான இயேசுவின் கட்டளையை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நேர்மையான இருதயமுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கு இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றுகிறோம். வீடுகளிலும் தெருக்களிலும் வேறு எங்கெல்லாம் மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நாம் அவர்களை தேடுகிறோம்.—மத். 9:35; 10:11; 28:19, 20; அப் 10:42.
—நாம் பைபிள் போதனையை இலவசமாக எல்லாருக்கும் அளிக்கிறோம்: நம்முடைய சொந்த பணத்தையும் சக்தியையும் பயன்படுத்தி இலவசமாக ஒவ்வொரு வருடமும் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை கடவுளுடைய சேவையில் செலவிடுகிறோம். வேறுபாடில்லாமல் எல்லாவிதமான மக்களோடும் நாம் பைபிளை படிக்கிறோம்.—மத். 10:8; அப். 10:34, 35; வெளி. 22:17.
—மக்களுக்கு ஆவிக்குரிய ரீதியில் உதவி செய்ய நன்கு பயிற்சி பெற்றிருக்கிறோம்: பைபிளை தனிப்பட்ட விதமாக படிப்பதன் மூலமாகவும் அசெம்பிளிகள் மற்றும் மாநாடுகள் வாயிலாகவும் விலைமதிப்பற்ற அறிவுரைகள் நமக்கு கிடைக்கின்றன. வீறுநடைபோடும் தேவராஜ்ய கல்வி திட்டமும் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய விதமாக உதவி செய்ய நம்மை தயார்படுத்துகிறது.—ஏசா. 54:13; 2 தீ. 2:15; 1 பே. 3:15.
—சத்தியத்தை ஏனோதானோ என விட்டுவிடாமல் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுகிறோம்: கடவுளை நாம் நேசிக்கிறோம். இதனால் அவருடைய விருப்பத்திற்கு இசைய வாழ்க்கையில் மாற்றங்களை செய்கிறோம். நம்முடைய கிறிஸ்தவ புதிய ஆள்தன்மை மற்றவர்களை சத்தியத்தினிடமாக கவர்ந்திழுக்கிறது.—கொலோ. 3:9, 10; யாக். 1:22, 25; 1 யோ. 5:3.
—நாம் மற்றவர்களோடு சமாதானமாய் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் பெருமுயற்சி செய்கிறோம்: தெய்வீக பண்புகளை பேணிவளர்ப்பது நம்முடைய நடத்தையையும் பேச்சையும் நாம் காத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் நாம் எல்லாரோடும் ‘சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருகிறோம்.’—1 பே. 3:10, 11; எபே. 4:1-3.
2 யெகோவாவின் அமைப்பில் கிறிஸ்தவ வாழ்க்கை முறையின் முன்மாதிரியை மற்றவர்கள் பார்க்கும்போது சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தூண்டப்படுகின்றனர். நம்மைப் பற்றி தெரிந்தவர்களும் நம் நடவடிக்கையைக் கவனிப்பவர்களும் அதேவிதமாக தூண்டப்பட நமது தனிப்பட்ட நடத்தை நல்ல முன்மாதிரியாக இருப்பதாக.