இந்துக்களை சந்திக்கையில் என்ன சொல்வீர்கள்?
1 நாம் இந்து மதத்தவரையே பெரும்பாலும் வெளி ஊழியத்தில் சந்திக்கிறோம். அவர்களை சந்திக்கையில் எப்படி பேசுவீர்கள்?
2 நினைவில் வைக்க வேண்டிய குறிப்புகள்: சாதாரணமாக, ஆனால் சாதுரியமாக சத்தியத்தை எடுத்துக்கூறினால் நிறையபேர் நன்றாக கேட்பர். முதலில் இல்லத் தலைவனிடம் பேச முடியுமா என்று கேளுங்கள். அப்படி அவரிடம் பேசிவிட்டால், வீட்டிலுள்ள மற்றவர்களிடத்தில் பேசுவது சுலபம். எல்லா உயிர்களிடத்தில் கருணை காட்டவும், மக்களிடத்தில் அன்பு காட்டவும் இந்து கலாச்சாரம் ஊக்குவிக்கிறது. அதனால், மக்களை உடனடியாக பாதிக்கிற விஷயங்களைப் பற்றி பேசுங்கள். அது அர்த்தமுள்ள, இரு சாராருக்கும் பயனுள்ள உரையாடலாக அமையும். இந்து மதம் ஆன்மீகத்தையும் ஊக்குவிக்கிறது. அதனால்தான் கடவுளுடன் ஐக்கியமாக விரும்புகிறார்கள். ஆகவே, அவர்களும் ஒத்துக்கொள்கிற விஷயங்களையே குறிப்பிடுங்கள். நம்மை படைத்த கடவுளிடத்தில் எப்படி நட்புறவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை பைபிளிலிருந்தும், நம் பிரசுரங்களிலிருந்தும் எடுத்துக்காட்டுங்கள். கிட்டத்தட்ட எல்லா இந்துக்களும் பண்போடும், நட்போடும் இருப்பார்கள். அப்படியென்றால் நாமும் பண்போடும் நட்போடும் இருக்க வேண்டும். முரண்படும் விவாதங்களில் இறங்கிவிடாதீர்கள். இந்து மதத்தைப் பற்றி கரைத்துக்குடிக்க வேண்டியதில்லை. அவர்களது நம்பிக்கைகளைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தால் போதுமானது.
3 ஏற்ற பிரசுரங்களை எடுத்துக்கொடுங்கள்: இந்துக்களுக்காகவே தயாரிக்கப்பட்ட எத்தனையோ பிரசுரங்கள் உள்ளன. நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேடு ஆங்கிலத்தைத் தவிர 13 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? போன்ற சிற்றேடுகளும் இந்துக்களுக்கு ஏற்றவையே. குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் என்ற புக்லெட் பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மொழிகளில் கிடைக்கிறது. மரணத்தின்மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? என்ற புக்லெட் ஆங்கிலம், குஜராத்தி, நேப்பாளி, பஞ்சாபியிலும்; விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை என்ற ஆங்கிலம், மிஸோ, மலையாளம், தெலுங்கு, உருது மொழிகளில் கிடைக்கின்றன. வேதப்படிப்புகளை வெற்றிகரமாக நடத்த தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும், அறிவு புத்தகத்தையும் உபயோகிக்கலாம்.
4 கருத்தொற்றுமை உள்ள விஷயங்களை பேசுங்கள்: இந்துக்களோடு கருத்தொற்றுமை உள்ள விஷயங்களை பேசுவது சுலபம். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில் அநியாயம் அக்கிரமங்கள் உச்சநிலையில் இருக்கும் என்றும்; அவற்றை அகற்ற கடவுள் பேரழிவு கொண்டு வருவார் என்றும்; அதன் பிறகு சத்திய யுகம் வரும் என்றும் இந்துக்கள் நம்புகிறார்கள். இவர்களது இந்த நம்பிக்கைகளை பைபிளோடு சுலபமாக இணைத்து பேசலாம். ஏனென்றால் கடைசி நாட்களை பற்றியும், மகா உபத்திரவத்தை பற்றியும், புதிய உலகம் வரப்போவதை பற்றியும் பைபிள் போதிக்கிறது. வாழ்க்கை என்றாலே நிறைய பிரச்சினைகள் இருக்கும். அவற்றிற்கு தீர்வு கிடையாது என்றே பெரும்பாலான இந்துக்கள் நினைக்கிறார்கள். ஆகவே, குடும்ப வாழ்க்கை, குற்றச்செயல், பாதுகாப்பு, மரணத்திற்குப்பின் என்ன நேரிடுகிறது போன்ற தலைப்புகளில் பேசினால் ஆர்வமாக கேட்பார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விதங்களில் நீங்களும் பேசி பார்க்கலாம்.
5 குடும்பஸ்தருக்கு இது பொருந்தும்:
◼ “இப்போ நெறைய நாடுகள்ல குடும்ப பிரச்சனைகள் ரொம்ப அதிகமாகிக்கிட்டே போகுது. இதை பத்தி கவலைப்படற எல்லார்கிட்டேயும் நாங்க பேசிட்டு வர்றோம். குடும்ப ஒற்றுமைக்கு என்ன தேவைனு நீங்க நெனைக்கிறீங்க? [அவரை பேசவிடுங்கள்.] குடும்பத்தைப் பத்தி இந்து மத புத்தகங்கள் என்ன சொல்லுதுனு சிலருக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா அதை பைபிளோடு ஒப்பிட்டிருக்க மாட்டாங்க! கொலோசெயர் 3:12-14-ல் என்ன சொல்லியிருக்குனு பாருங்களேன்.” வசனத்தை வாசித்தப் பிறகு, அறிவு புத்தகத்தில் 15-ம் அதிகாரத்தை காட்டி, இவ்வாறு சொல்லுங்கள்: “நீங்க கொஞ்ச நேரம் கொடுத்தீங்கன்னா, இந்த அதிகாரத்த உங்களுக்கு படிச்சு காட்றேன்.”
6 இளவட்டங்களிடம் இப்படி பேசலாமே:
◼ “நீங்க கடவுளை நம்புறீங்க. அப்படின்னா, நமக்கு கடவுள் எதாவது செய்வாருன்னு நீங்க நெனைக்கிறீங்களா?” அவர் பதில் சொல்லட்டும். பிறகு, ஆதியாகமம் 1:28-ஐ வாசித்துவிட்டு, இப்படி சொல்லுங்கள்: “நிறைய இடங்கள்ல இன்னிக்கு மக்கள் தொகை பெருக்கத்தால பிரச்சனைக்கு மேல பிரச்சனை வந்து வாட்டியெடுக்குது. நம் பிரச்சினைகள் எல்லாத்தயும் தீர்க்க படைச்சவரே முன்வந்து நமக்கு உதவுவார்னு நெனைக்கிறீங்களா?” அவர் சொல்வதை கேட்டுவிட்டு, பொருத்தமான பிரசுரத்தை கொடுங்கள்.
7 கண்டிப்பாக கைமேல் பலனிருக்கும்: ஒரு சகோதரி மார்கெட்டில் சாட்சிக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, 22 வயது வாலிபன் ஒருவன் அவரிடம் வந்து, தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டான். அந்த வாலிபனின் அம்மாவிடம் அந்தச் சகோதரி பைபிளைப் பற்றி பேசியதை அவன் எட்டு வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்ததாக கூறினான். மனிதனுடைய பிரச்சினைகளுக்கு பைபிள் நடைமுறையான தீர்வுகளை கொடுப்பதைக் கேட்ட அவனுக்கு அந்த வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அவனுடைய அம்மா ஆர்வம் காட்டவில்லை. அதோடு அவன் சிறுவனாக இருந்தான். ஆகவே அவனால் மேற்கொண்டு சத்தியத்தை கற்க முடியவில்லை. இப்போது வளர்ந்துவிட்டதால், நிறைய கற்றுக்கொள்ள விரும்பினான். உடனே தேடி வந்துவிட்டான். அந்தச் சகோதரியை சந்தித்து 23 நாட்களுக்குள் அறிவு புத்தகத்தை படித்து முடித்துவிட்டு, நான்கே மாதங்களுக்குள் முழுக்காட்டுதலுக்கு தயாரானான்!
8 இரயிலில் சந்தித்த ஒரு இந்து மதத்தவரோடு ஒரு சகோதரர் பைபிள் படிப்பை ஆரம்பித்தார். அந்த மனிதருக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. குடிப்பழக்கம் வேறு இருந்தது. குடும்ப வாழ்க்கைக்காக பைபிளிலிருந்து ஆலோசனை தரும்படி கேட்டு சகோதரரை வீட்டிற்கு வர சொன்னார். பைபிளின் ஒழுக்க நெறிகள் அவருக்கு மிகவும் பிடித்துபோனதால் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். அவரும் அவரது குடும்பமும் கூட்டங்களுக்கு வரத்தொடங்கினார்கள். பிறகு அவர்கள் கற்ற சத்தியத்தை அவர்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச்சொன்னார்கள். அவர்களில் இதுவரை ஆறுபேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்!
9 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” கடவுள் விரும்புகிறார். (1 தீ. 2:4) அப்படியென்றால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும், அதாவது இந்துக்களையும் இது உட்படுத்துகிறது. உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் இந்துக்களை சந்திக்க செல்லும்போது, இந்தக் கட்டுரையில் உள்ள ஒருசில ஆலோசனைகளை நீங்களும் பின்பற்றிதான் பாருங்களேன்!