“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு”
1 “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு”ம்படி தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் புத்திமதி கூறினார். (1 தீ. 6:12) சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தும் காட்டினார். மரணத்தின் வாசலில் நிற்கையில், தன்னைப் பொறுத்தவரை நல்ல போராட்டத்தைப் போராடியதாக உறுதியுடன் சொன்னார். (2 தீ. 4:6-8) எல்லா சந்தர்ப்பத்திலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். நாமும் பவுலை பின்பற்றி கிறிஸ்தவ விசுவாசத்திற்கான போராட்டத்தில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கையில் அவரைப் போன்ற மன உறுதியை நிச்சயம் பெறுவோம்.
2 தேவைப்படும் முயற்சியெடுங்கள்: ஊழியத்தில் பவுல் கடினமாய் உழைத்தார். (1 கொ. 15:10) நாமும் அவ்வாறே நம்முடைய பிராந்தியத்திலுள்ள தகுதியானவர்கள் அனைவரையும் தேடிக் கண்டுபிடிப்பதில் கடினமாய் உழைப்போமாக. (மத். 10:11, திருத்திய மொழிபெயர்ப்பு) தெரு ஊழியம் வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், கொஞ்சம் தூக்கத்தை தியாகம் செய்து அதிகாலை எழ வேண்டும். அல்லது இருட்டும் முன்பே மாலை வேளையில் ஆட்களை சந்திக்க வேண்டும்.
3 புத்தகப் படிப்பு தொகுதியாக வெளி ஊழியத்திற்கு கூடிவருகையில் சொன்ன நேரத்தில் அங்கிருப்பதற்கு சுயகட்டுப்பாடும் நல்ல திட்டமிடுதலும் அவசியம். உதாரணமாக, தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் சபைகளில் ஏற்பாடு செய்யும் ஊழியத்தில் வார இறுதி நாட்களில் கலந்துகொள்ள பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களில் சிலர் போவதற்கே ஒருமணி நேரமோ அதற்கு அதிகமாகவோ செலவழிக்கின்றனர். மேலும் நம்முடைய சபையிலுள்ள சில பிரஸ்தாபிகளும் குடும்பத்தினரும் வெகு தூரத்திலிருந்தாலும் நேரத்தோடு வந்துசேருவது மெச்சத்தக்கது. ஊழியத்தில் ஊக்கத்தையும் ஒழுங்கையும் தனிப்பட்ட விதத்தில் வெளிக்காட்டுபவர்களின் முன்மாதிரி பின்பற்றுவதற்கு தகுந்தது.
4 யாரெல்லாம் ஆர்வம் காட்டுகின்றனரோ அவர்களையெல்லாம் மீண்டும் சென்று சந்திக்கும் ஆவல் நமக்குத் தேவை. தெரு ஊழியத்தில் பிரசுரங்களை அளிக்கையில் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில், ஆர்வம் காட்டியவரின் விலாசத்தையோ தொலைபேசி எண்ணையோ பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை மீண்டும் சந்திப்பதன் மூலம் ஆர்வத்தை அதிகரிக்கலாம்; பைபிள் படிப்பை ஆரம்பிக்கவும் முயற்சிக்கலாம்.
5 ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்: பவுல் தவறாமல் பிரசங்கித்தார்; முழுமையாகவும் ஊழியத்தை செய்தார். (ரோ. 15:19) நீங்கள் எந்தளவுக்கு ஊழியத்தில் ஈடுபடுகிறீர்கள்? ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்கிறீர்களா? இந்த மாதத்தில் ஒருமுறையாவது ஊழியத்திற்குச் சென்றீர்களா? ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் புத்தகப் படிப்பு தொகுதியிலுள்ள ஒவ்வொருவரும் ஊழியத்தில் பங்குகொள்ள வேண்டும் என்பதே நடத்துனர்களின் விருப்பம். நீங்கள் ஊழியத்தில் ஈடுபட அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
6 நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நாம் முழு ஆதரவு காட்டுகையில் பவுலின் முன்மாதிரியை பின்பற்றுவோமாக. அப்போது நாமும் தொடர்ந்து “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு”வோம்.