யெகோவாவின் பொறுமையை மதிக்கிறீர்களா?
1 எல்லாருக்கும் சாட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த 10, 20, அல்லது அதற்கும் அதிகமான வருடங்களை யெகோவா பொறுமையோடு அனுமதித்திருக்கிறார். இப்படி அனுமதித்திருக்காவிட்டால், சத்தியத்தை நீங்கள் கற்றிருக்க முடியுமா? அநேகர் “மனந்திரும்ப வேண்டுமென்று” இந்த காலப்பகுதியை யெகோவா அனுமதித்திருக்கிறார். இதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டாமா? இருந்தாலும், யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் மகா நாள் “திருடன் வருகிறவிதமாய் வரும்.” (2 பே. 3:9, 10) எனவே, கடவுளின் பொறுமையை நாம் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவை கொண்டு வருவதில் கடவுள் தாமதிக்கிறார் என தவறாக எண்ணக்கூடாது.—ஆப. 2:3.
2 ஜனங்களிடம் பரிவு: யெகோவாவின் நீடிய பொறுமையை நம்மால் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அதனால், அவருடைய நோக்கத்தை நாம் தவற விட்டுவிடக் கூடாது. (யோனா 4:1-4, 11) மனிதகுலத்தின் பரிதாப நிலையை கண்டு, அவர்களுக்கு யெகோவா பரிவு காட்டுகிறார். இயேசுவும் அப்படித்தான் நினைக்கிறார். யாருக்கெல்லாம் பிரசங்கித்தாரோ அவர்களிடம் அவர் பரிவு காட்டினார். அதோடு, இன்னும் அநேகர் நித்திய ஜீவனுக்கான வாய்ப்பை பெற, இந்தப் பிரசங்க வேலை விரிவாக்கப்பட வேண்டுமெனவும் விரும்பினார்.—மத். 9:35-38.
3 எதிர்பாரா விபத்துக்களும் இயற்கை நாசங்களும் ஏற்படும்போது, அவற்றால் அல்லல்படும், சத்தியத்தை அறியாத மக்களுக்காக நீங்கள் பரிதாபப்படுவதில்லையா? மக்கள் இன்று, “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்” போல், உலக நிலைமைகளுக்கு காரணம் தெரியாமலும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமலும் தவிக்கின்றனர். (மாற். 6:34) நற்செய்தியை வைராக்கியமாய் பிரசங்கிப்பதனால், நல் இருதயமுள்ள ஆட்களுக்கு ஆறுதலைத் தருகிறோம். அதோடு, யெகோவாவின் பொறுமையையும் மதிக்கிறோம்.—அப். 13:48.
4 நம் வேலை அவசரமானது: போன வருடம் 3,23,439 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். 1,40,00,000-க்கும் அதிகமானோர் நினைவு ஆசரிப்பிற்கு வந்தனர். இன்னும் அநேகர் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் அழிவிலிருந்து தப்பிக்க சாத்தியம் இருக்கிறதென்பதை இந்த எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது! அழிவை தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டம்’ எவ்வளவு பெரிய கூட்டமாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது. (வெளி. 7:9) எவ்வளவு காலம் இன்னும் பிரசங்கிக்க வேண்டுமென்பதும் நமக்கு தெரியாது. ஆனால், அதை யெகோவா அறிவார். அவர் போதுமென்று நினைக்கும்வரை நற்செய்தி பிரசங்கிக்கப்படும். பிறகுதான், “முடிவு வரும்.”—மத். 24:14.
5 முடிவுக்கு சிறிது காலமே மீதமிருக்கிறது. கடவுளுடைய நாள் வெகு விரைவில் வரவிருக்கிறது. (1 கொ. 7:29ஆ; எபி. 10:37) “நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.” இதில் சிறிதும் சந்தேகமில்லை. (ரோ. 13:11) கடவுளுடைய பொறுமையின் நோக்கத்தை நாம் தவற விடாதிருப்போமாக. அதற்கு பதிலாக, பிரசங்க வேலையின் அவசரத்தன்மையை உணர்ந்து சுறுசுறுப்பாக ஈடுபடுவோமாக. நீதிக்காக ஏங்கும் இன்னும் அநேகர் யெகோவாவின் மாபெரும் இரக்கத்தை அனுபவிக்க வழிவகுப்போமாக!