2001 “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 யெகோவாவை மகத்தான போதகர் என தீர்க்கதரிசியாகிய ஏசாயா விவரித்தார். “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என தகப்பனைப் போல யெகோவா நம்மை உற்சாகப்படுத்துகிறார். (ஏசா. 30:20, 21) ஆனால், நம்முடைய நன்மைக்காக யெகோவா பேசுவதை நாம் எப்படி கேட்கிறோம்? பைபிள் வாயிலாகவும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ அளிக்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள், கூட்டங்கள், வட்டார மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் வாயிலாகவும் யெகோவா தம்முடைய ஜனங்களிடம் பேசுகிறார். (மத். 24:45, NW) ஆகவே, நாம் நடக்க வேண்டிய வழியில் யெகோவா நம்மை தொடர்ந்து நடத்துவதற்கு நன்றியோடிருக்கலாம்.
2 சக விசுவாசிகளுடன் கூடிவருவதற்கும் யெகோவாவின் போதனைகளுக்கு கவனமாய் செவிசாய்ப்பதற்கும் மாவட்ட மாநாடுகள் ஒவ்வொரு வருடமும் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாடுகளில் கடந்த வருடம் 32,349 பேர் கலந்துகொண்டனர். எவ்வளவு ஆவிக்குரிய புத்துணர்ச்சியை இவை அளித்தன! 2001-ல், “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” என்ற பொருளில் மூன்று-நாள் மாநாடு நாடு முழுவதும் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆவலோடிருப்பீர்கள் என எங்களுக்குத் தெரியும். இதோ உங்களுக்கு உதவும் சில குறிப்புகள்:
3 தங்கும் வசதி: ஒவ்வொரு மாநாட்டிலும் ரூமிங் டிபார்ட்மென்ட் உள்ளது. அது உங்களுக்குத் தேவையான தகவலை அளித்து, மாநாட்டு நகரத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறது. எங்கு தங்குவது என்பதைக் குறித்து முன்னதாகவே திட்டமிடுங்கள். உங்கள் சபை செயலரிடம் கேட்டால் ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தைக் கொடுப்பார். அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து அவரிடம் கொடுங்கள்; நீங்கள் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கும் மாநாட்டு தலைமை அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைப்பார். எப்போதும் உங்கள் படிவத்துடன் சுயவிலாசம் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரையும் சேர்த்து கொடுங்கள். அந்த நகரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநாடுகள் நடக்கவிருந்தால் நீங்கள் கலந்துகொள்ளவிருக்கும் மாநாட்டின் தேதிகளை மறக்காமல் அதில் குறிப்பிடுங்கள்.
4 யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஹோட்டல் பணியாளர்களின் கருத்து: யெகோவாவின் ஜனங்களுடைய நன்னடத்தையை மெச்சி அமெரிக்காவிலுள்ள ஒரு ஹோட்டலின் ஜெனரல் மேனேஜர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் வியாழக்கிழமை தங்க வருகிறார்கள் என்றால் அடுத்த திங்கட்கிழமை காலை வரை நான் அங்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் வராது என எனக்குத் தெரியும். உங்கள் ஜனங்கள் எப்போது வந்து தங்கினாலும் எங்களுக்கு சந்தோஷம்தான்.” “அவர்கள் நல்ல ஜனங்கள்! எல்லாருமே கண்ணியமாய் நடந்துகொள்பவர்கள்” என ஹோட்டலில் விற்பனையாளராக இருக்கும் ஒருவர் வியந்து பாராட்டினார். இப்படி நம் சகோதரர்களைப் பற்றி சொல்வதைக் கேட்பதற்கு உங்களுக்குப் பெருமையாக இல்லையா? தம்முடைய பெயருக்கு துதிசேர்க்கும் விதத்தில் நாம் நடந்துகொள்கையில் யெகோவா தேவன் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
5 வயதானவர்களையும், விசேஷ உதவி தேவைப்படுகிறவர்களையும் கவனித்தல்: வயதானவர்கள், சுகவீனமானவர்கள், அல்லது விசேஷ உதவி தேவைப்படுகிறவர்கள் ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ள உறவினர்களும் மூப்பர்களும் மற்றவர்களும் அன்பும் கரிசனையும் காட்டலாம். (1 தீமோத்தேயு 5:4-ஐ ஒப்பிடுக.) நிகழ்ச்சிநிரலிலிருந்து முழுமையாக பலனடைய மாநாட்டு வளாகத்தில் வசதியான இடத்தில் அவர்களை உட்கார வையுங்கள். அவர்களுக்கு உதவ சகோதர சகோதரிகள் தாங்களாக முன்வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவர்கள் சாப்பிட உதவுவது, குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது, கழிவறைக்கு அழைத்துச் செல்வது போன்றவை இதில் அடங்கும். வயதானவர்கள் அல்லது விசேஷ உதவி தேவைப்படுகிறவர்களைப் பார்த்துக்கொள்ளும் பாக்கியத்தைப் பலர் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களை எப்போதும் கவனித்துவரும் உறவினர்கள், சபை பிரஸ்தாபிகள் உட்பட அனைவருமே நிகழ்ச்சிநிரலிலிருந்து பயனடையலாம். இந்த அன்பான அறிவுரையைப் பின்பற்றுவது நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பை செயலில் காண்பிக்க வாய்ப்பளிக்கிறது, உலகத்தில் நிலவும் ‘நான்-முதல்’ என்ற மனப்பான்மையை தவிர்க்கவும் உதவுகிறது.—1 கொ. 10:24.
6 முடிவாக: மாநாடு நெருங்கி வருகிறபடியால், மூன்று நாள் நிகழ்ச்சிநிரலிலும் கலந்துகொண்டு எல்லா பேச்சுகளிலிருந்து முழுமையாய் பலனடைய யெகோவாவிடம் தவறாமல் ஜெபியுங்கள். மாவட்ட மாநாட்டின் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே விடுப்பு எடுப்பதற்கு விண்ணப்பியுங்கள். கடைசி நேரத்தில் விண்ணப்பித்தால் பொதுவாக விடுப்பு கிடைப்பதில்லை. நமக்கு ஆவிக்குரிய அறிவுரை அளிப்பதற்கும் நம் விசுவாசம் இன்னும் அதிகரிப்பதற்கும், இந்த வருடம் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை, “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. எனவே, “சபையின் நடுவே . . . தேவனை ஸ்தோத்திரியுங்கள்” என்று சொன்ன சங்கீதக்காரனின் புத்திமதியைப் பின்பற்றி மாநாட்டில் கலந்துகொள்ள இப்போதே திட்டமிடுங்கள்!—சங். 68:26.
[பக்கம் 3-ன் பெட்டி]
நிகழ்ச்சிநிரல் நேரம்
வெள்ளியும் சனியும்
காலை 9:30 - மாலை 5:00
ஞாயிறு
காலை 9:30 - மாலை 4:00