உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/03 பக். 3-6
  • தோள்கொடுக்க நீங்கள் தயாரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தோள்கொடுக்க நீங்கள் தயாரா?
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பெத்தேல் சேவைக்கான அடிப்படை தேவைகள்
  • இதுவே உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கைப்பணியாக இருக்க முடியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • பெத்தேல் சேவை—கூடுதலான வாலண்டியர்கள் தேவை
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • ‘கடவுளுடைய வீட்டை’ போற்றுதல் மனப்பான்மையோடு நோக்குதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • மறக்கப்படாத நல்ல செயல்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 9/03 பக். 3-6

தோள்கொடுக்க நீங்கள் தயாரா?

1 அசாதாரண சம்பவம் ஒன்று பொ.ச.மு. 778-⁠ல் நிகழ்கிறது. தீர்க்கதரிசியாகிய ஏசாயா ஒரு தரிசனத்தில், “ஆண்டவர் [யெகோவா] உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்” காண்கிறார். அதன் பிறகு, யெகோவாவின் மகிமைக்கு கவனத்தைத் திருப்பும் வகையில் சேராபீன்கள், “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என சொல்வதை ஏசாயா கேட்கிறார். அது எவ்வளவு பயபக்தியை ஏற்படுத்தியிருக்கும்! அந்த சூழமைவில், “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” என்ற சவால்மிக்க கேள்வியை யெகோவா கேட்கிறார். அது எப்படிப்பட்ட வேலை என்றோ அதை செய்ய முன்வருபவருக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா என்றோ எந்த விளக்கமும் கொடுக்கப்படுவதில்லை. எனினும், எந்தத் தயக்கமும் இன்றி, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என ஏசாயா பதிலளிக்கிறார்.​—⁠ஏசா. 6:1, 3, 8.

2 யெகோவா கேட்கும் எதையும் செய்ய மனமுள்ளவர்களாய் இருப்பது அவருடைய ஜனத்தாருக்கே உரிய பண்பு. (சங். 110:3) தோள்கொடுக்க மனமுள்ளவர்களுக்கு இப்போது விசேஷித்த அழைப்பு விடுக்கப்படுகிறது. ஏசாயாவைப் போல் மனமுவந்து செயல்பட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

3 பெத்தேலில் சேவை செய்வதற்கு சகோதரர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள். இதற்காக, ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்க அதிக ஆர்வம் இருப்பதும் உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்க தேவைப்படும் எதையும் செய்ய மனமுள்ளவர்களாய் இருப்பதும் அவசியம். (மத். 6:33) பெத்தேல் குடும்ப அங்கத்தினராக சேவை செய்வது உண்மையிலேயே முழு ஆத்துமாவோடு யெகோவாவை சேவிக்க ஒருவருக்கு விசேஷித்த வாய்ப்பை அளிக்கிறது. எப்படி?

4 பெத்தேலில் நடைபெறும் வேலை: கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் அமைந்துள்ள பெத்தேல் வளாகத்தில் தவறாமல் நடைபெற்று வரும் வேலைகள் அனைத்தையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். பெத்தேல் குடும்பத்தில் 220 சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்; இவர்கள், உலகளாவிய பிரசங்க வேலைக்கும் தனிப்பட்ட படிப்பிற்கும் பயன்படும் பைபிள் பிரசுரங்களை தயாரிப்பதில் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பையும் அதன் ஆளும் குழுவையும் ஆதரிப்பதில் நெருக்கமாக செயல்படும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். (மத். 24:45, NW) உதாரணமாக, கடந்த ஊழிய ஆண்டில் பெங்களூர் பெத்தேல் குடும்பத்தார் அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்ததால் 75,207 புத்தகங்களும், 2,63,784 சிறுபுத்தகங்கள் மற்றும் சிற்றேடுகளும், 15,665 காலண்டர்களும், 20,20,021 பத்திரிகைகளும், 33,39,239 துண்டுப்பிரதிகளும், 1,033 வீடியோ கேசட்டுகளும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இந்தப் பிரசுரங்களுக்காக, ‘இதமான வார்த்தைகளையும்,’ ‘செவ்வையும் சத்தியமுமுள்ள வாக்கியங்களையும்’ ஆராய்ந்து, தேர்ந்தெடுக்க பெரும் முயற்சி செய்யப்படுகிறது. (பிர. 12:9, 10) 25-⁠க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரங்களை தயாரிக்க உதவும் சுமார் 70 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேண்டிய வழிநடத்துதலும் கொடுக்கப்படுகிறது. பிரசுரங்களை அச்சடித்து அனுப்ப, சுத்தம் செய்ய, பழுதுபார்க்க, உணவு தயாரிக்க, பொருட்களை வாங்க, உடல்நலத்தை கவனிக்க, பெத்தேலில் செய்யப்படும் இன்னும் அநேக வேலைகளுக்கு தோள்கொடுக்க மனமுள்ள அநேக வாலண்டியர்கள் தேவை.

5 இந்த அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பது மாபெரும் பணியே, ஆனாலும் ஆவிக்குரிய விதத்தில் அது திருப்தியளிக்கும் ஒரு பணி. பிரசங்கித்து கற்பிக்கும் வேலையை ஆதரிக்க நம் பலத்தையும் சக்தியையும் முழுமையாக பயன்படுத்துகிறோம் என்பதை அறிவது அதிக சந்தோஷத்தை தருகிறது. யெகோவாவின் அமைப்பைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள பெத்தேல் சேவை நமக்கு உதவுகிறது. பூமியில் தேவராஜ்ய ஆட்சியின் மையமாக அன்று திகழ்ந்த இடத்தை நன்கு அறிந்துகொள்ளும்படி இஸ்ரவேலரை சங்கீதக்காரன் உற்சாகப்படுத்தியது நம் நினைவிற்கு வருகிறது.​—⁠சங். 48:12, 13.

6 பெத்தேல் சேவையின் ஆசீர்வாதங்கள்: பெத்தேலில் சேவை செய்பவர்கள் தங்கள் ஊழிய சிலாக்கியங்களை எப்படி கருதுகிறார்கள்? பெத்தேல் குடும்பத்தை சேர்ந்த இளையவர்களும் சரி முதியவர்களும் சரி, என்ன சொல்கிறார்களென சற்று கவனியுங்கள். மூன்று வருடமாய் பெத்தேல் சேவையை அனுபவித்து மகிழும் ஒருவர் சொல்வதாவது: “பெத்தேலில் இருப்பதால் யெகோவாவுடன் உள்ள என் உறவு பலப்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிக நாட்கள் இங்கு சேவை செய்து, பெத்தேல் செயல்படுவதை அதிகமாக கற்றுக்கொள்கிறேனோ, அவ்வளவு அதிகமாக யெகோவாவின் குணங்களைப் பற்றி அது எனக்கு கற்றுத் தருகிறது. எல்லா விதமான ஜனங்களையும் யெகோவா உபயோகிக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவும் எனக்கு உதவியிருப்பதால் பெத்தேல் சேவை என் கண்களை திறந்திருக்கிறது. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள நாம் பரிபூரணமானவராக இருக்க வேண்டியதில்லை என்பதையும் எனக்கு உணர்த்தியிருக்கிறது.”

7 “புதிய உலகில் நுழைந்து, உயிர்த்தெழுந்து வரும் பூர்வகால விசுவாசிகளிடம், ‘நான் பணம் சம்பாதித்து பெரிய ஆள் ஆவதற்கு பதிலாக பல வருடங்கள் பெத்தேலில் சேவித்தேன்’ என சொல்வது எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நான் யோசித்ததுண்டு” என ஓர் இளம் சகோதரர் நினைவுபடுத்தி சொல்கிறார்.

8 தனக்குக் கிடைத்திருக்கும் பயிற்சியைக் குறித்து ஓர் இளம் சகோதரர் இப்படி சொல்கிறார்: “என்னையும், நான் எதில் குறைவுபடுகிறேன் என்பதையும் அறிந்து, பிறகு அக்குணங்களை வளர்த்துக்கொண்டது பெரும் ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. இப்போது இன்னும் சிறந்த விதத்தில் யெகோவாவை சேவிக்க முடிவதாக உணருகிறேன். என் பொறுமை கொஞ்சம் அதிகரித்திருக்கிறது, தன்னடக்கத்திலும் முன்னேற்றம் தெரிகிறது, இன்னும் அதிகமாக அன்பு காட்டவும் கற்றிருக்கிறேன்.”

9 இதுவரை கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றி ஒரு சகோதரி இவ்வாறு கூறுகிறார்: “இங்குள்ள ஆவிக்குரிய ஏற்பாடுகள் யெகோவாவைப் பற்றியும், என் சிந்தனையிலும், உணர்ச்சியிலும், செயலிலும் அவரை இன்னும் நன்கு எப்படி பின்பற்றலாம் என்பதைப் பற்றியும் எனக்கு கற்பித்திருக்கின்றன. இந்தப் பயிற்சி நித்தம் தொடருவதால் இந்த ஆசீர்வாதமும் நித்தம் கிடைக்கிறது.”

10 முழுநேர ஊழியத்தில் மொத்தம் 59 வருடங்கள் செலவழித்திருக்கிறார் ஒரு சகோதரர்; அவற்றில் 43 வருடங்களுக்கும் அதிகமாக பெத்தேலில் சேவை செய்திருக்கிறார். அவர் சொல்வதாவது: “சிலர் நினைப்பது போல பெத்தேல் ஒரு துறவி மடம் அல்ல. எல்லாவற்றையும் அட்டவணைப்படி செய்வதால் அநேக காரியங்களை சாதிக்கிறோம். . . . நான் வேலை செய்வதற்காக வந்து, செய்த வேலையில் சந்தோஷம் காணாத நாளே இருந்ததில்லை. ஏன்? ஏனென்றால் யெகோவாவுக்காக நம்மையே முழு ஆத்துமாவோடு அர்ப்பணிக்கையில், ‘செய்ய வேண்டிய கடமையை செய்த’ திருப்தி நமக்கு ஏற்படுகிறது.”​—⁠லூக். 17:⁠10.

1 பெத்தேல் சேவையில் 62 வருடங்களை செலவிட்ட மற்றொரு சகோதரர் கூறுவதாவது: “பூமிக்குரிய பரதீஸ் வருவதற்கு முன் பூமியில் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடம் பெத்தேல்தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. முழுநேர ஊழியத்தை என் வாழ்க்கைப் போக்காக ஏற்றதற்காக நான் துளிகூட கவலைப்படுவது இல்லை. யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் பெரும் வளர்ச்சியைக் கண்டிருப்பதிலும் அதில் பங்குகொண்டிருப்பதிலும் எவ்வளவு சந்தோஷம்! யெகோவாவின் உதவியோடு, பெத்தேலிலேயே நிரந்தரமாக சேவிக்கவும், ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் முழுமையாய் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் வேண்டும் என்பதே என் தீர்மானம்.”

12 பெத்தேல் சேவைக்கு தோள்கொடுத்தால் நீங்கள் அனுபவிக்கப் போகும் அநேக ஆசீர்வாதங்களில் சிலவற்றையே இந்த பெத்தேல் குடும்பத்தினர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் எந்த ஊழிய சிலாக்கியத்தையும் போலவே இதற்கும் முதலாவது நீங்கள் தகுதிகளைப் பெற வேண்டும். பெத்தேல் குடும்பத்தினராக சேவிப்பதற்கு அவசியமான சில தகுதிகள் யாவை?

13 பெத்தேல் சேவைக்கான தகுதிகள்: பெத்தேல் சேவைக்காக விண்ணப்பிக்கிறவர்களிடம் எதிர்பார்க்கப்படும் அடிப்படை தகுதிகள் அருகிலுள்ள பெட்டியில் காணப்படுகின்றன. மேலும், ‘சுகபோகப்பிரியராக’ இராமல் கடும் உழைப்பாளியாக இருக்க தயாராக இருப்பதும் முக்கியம். (2 தீ. 3:4; 1 கொ. 13:11) பெத்தேல் குடும்பத்தினர், நல்ல தனிப்பட்ட படிப்பு பழக்கம் உள்ளவர்களாகவும், ‘நன்மை தீமையை வித்தியாசம் காண’ தங்கள் பகுத்தறியும் ஆற்றலை பயன்படுத்த பயிற்சி பெற்ற ஆவிக்குரிய ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பது அவசியம். (எபி. 5:14, NW) உடை, சிகை அலங்காரம், விருப்பமான இசை, பொழுதுபோக்கு உட்பட வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கிறிஸ்தவ முதிர்ச்சியை அவர்கள் ஏற்கெனவே காண்பித்திருக்க வேண்டும். பெத்தேல் குடும்பத்தினர், தேவைப்படும் எந்த வேலைக்கும் தோள்கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இளம் அங்கத்தினர்களுக்கு பொதுவாக, அச்சடிப்பது, பிரசுரங்களை தயாரித்து அனுப்பி வைப்பது, பழுதுபார்ப்பது, ரூம்களை சுத்தம் செய்வது, மற்ற இடங்களை சுத்தம் செய்வது, சலவை செய்வது, உணவு தயாரிப்பது போன்ற சரீர உழைப்பை உட்படுத்தும் வேலைகள் கொடுக்கப்படும். (நீதி. 20:29) என்றாலும், உலகப்பிரகாரமான வேலையைப் போலில்லாமல் ஒவ்வொரு வேலையும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் பரிசுத்த சேவையாக இருப்பதால் அதிக திருப்தியை அளிக்கிறது.​—⁠கொலோ. 3:⁠24.

14 பெத்தேல் சேவைக்கு அழைக்கப்படுகிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அங்கிருக்க வேண்டும். பயனுள்ள ஊழியராவதற்கு தேவையான பயிற்றுவிப்பை பெற இது அவர்களுக்கு உதவும். அவர்கள் பெத்தேலிலேயே தங்கள் சேவையை தொடருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் சொந்த விருப்பங்களுக்கு மேலாக ராஜ்ய வேலையை முதலிடத்தில் வைக்க யெகோவா மேலுள்ள அன்பே பெத்தேல் குடும்பத்தாரை தூண்டுவிக்கிறது; அது யெகோவாவை பிரியப்படுத்துகிறது.​—⁠மத். 16:⁠24.

15 தற்போதைய தேவைகள்: பெத்தேலில் செய்யப்படும் வேலையின் தன்மை காரணமாக திருமணமாகாத சகோதரர்களே தற்போது எங்களுக்கு முக்கியமாக தேவை. ஒழுங்கான பயனியர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையென்றாலும், பயனியர் சகோதரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே முழுநேர ஊழியத்தில் இருக்கிறார்கள். சில சமயங்களில் பெத்தேலுக்கு தேவைப்படும் பிரத்தியேக திறமைகளை உடைய 19 முதல் 35 வயதுக்குட்பட்ட திருமணமாகாத சகோதரிகளும் திருமணமான தம்பதியினரும் அழைக்கப்படலாம். மேலும், பெத்தேலுக்கு பயன்படும் விசேஷித்த திறமைகளும் பயிற்சியும் பெற்ற 35-⁠க்கும் சற்று அதிகமான வயதுடைய சகோதர சகோதரிகளும் விண்ணப்பிக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம். உதாரணமாக, இவர்களில் பல் மருத்துவர்கள், டாக்டர்கள், அங்கீகாரம் பெற்ற அக்கவுண்டென்ட்டுகள், கட்டட கலைஞர்கள், என்ஜினியர்கள், பதிவு செய்யப்பட்ட நர்ஸ்கள், வாகன மெக்கானிக்குகள், அல்லது எலக்ட்ரானிக் டெக்னீஷியன்கள் போன்றவர்கள் அடங்குவர். எனினும், பெத்தேலில் சேவை செய்ய அழைக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் விசேஷ படிப்பில் அல்லது பயிற்சியில் தகுதி பெறும்படி நாங்கள் யாரையும் உற்சாகப்படுத்துவதில்லை. ஒருவேளை சத்தியத்திற்கு வருவதற்கு முன்பே இப்படி விசேஷ பயிற்சி பெற்றவர்கள் இருந்தால், அதைப் பற்றி விவரமாக எழுதி பெத்தேல் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பலாம்.

16 பெத்தேல் சேவைக்காக விண்ணப்பித்தும் அழைக்கப்படவில்லை என்றால் சோர்ந்துவிடாதீர்கள். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். பெத்தேலுக்கு தேவைப்படும் விசேஷ பயிற்சியும், திறமைகளும் பெற்ற சில சகோதரர்கள், தற்காலிக வாலண்டியராக சேவை செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வாரங்களுக்கு அல்லது மூன்று மாதங்கள் வரை பெத்தேலில் தற்காலிகமாக சேவை செய்ய அவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு உதவ விரும்புகிறவர்கள் தற்காலிக வாலண்டியர் விண்ணப்ப படிவத்தை சபை செயலரிடமிருந்து பெறலாம். தற்காலிக வாலண்டியர் விண்ணப்ப படிவங்கள் அதிகமாக தேவைப்பட்டால் லிட்ரேச்சர் ரிக்குவெஸ்ட் படிவத்தில் ஆர்டர் செய்யலாம்.

17 கிறிஸ்துவின் சகோதரர்களோடு நெருக்கமாக சேர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்வது பெத்தேல் ஊழியர்களின் ஒப்பற்ற சிலாக்கியம். நம் உலகளாவிய சகோதரத்துவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தோள்கொடுக்க முன்வரும் சுயதியாக மனம் படைத்த அனைவரையும் ஆளும் குழு போற்றுகிறது.​—⁠பிலி. 2:20-22; 2 தீ. 4:11.

18 இளைஞர்களே​—⁠பெத்தேல் சேவைக்காக இப்போதே தயாராகுங்கள்: பெத்தேல் சேவைக்காக தயாராவது அதற்கு தகுதி பெறும் 19 வயதை அடைவதற்கு வெகு முன்னதாகவே தொடங்குகிறது. பெத்தேல் சேவைக்காக இளைஞர்கள் எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்? ‘உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்தால் . . . முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?’ என இயேசு கேட்டார். (லூக். 14:28, 30) தயாரிப்பும் திட்டமிடுதலும் எந்தவொரு கட்டட பணிக்கும் முக்கியமென்பதால், யெகோவாவின் சேவையில் எதிர்காலத்திற்காக எவ்வாறு கட்டுகிறார்கள் என்பதைக் குறித்து இளைஞர்கள் அதிக கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியம்! ஆவிக்குரிய இலக்குகளை அடைய சிறு வயதிலேயே பலமான அஸ்திவாரம் போட வேண்டும். இளைஞராக நீங்கள் எந்தளவுக்கு சிறந்த அஸ்திவாரத்தை போடுகிறீர்கள்? பெத்தேலில் சேவை செய்ய நீங்கள் விரும்பினால் பின்வருபவற்றை கவனமாய் சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலம் பயனடைவீர்கள்.

19 இந்த விசேஷ ஊழிய சிலாக்கியத்திற்காக “இடமுண்டாக்குங்கள்”: மத்தேயு 19:12-⁠ல் (NW) பதிவு செய்யப்பட்டிருப்பது போல், திருமணம் செய்யாமல் வாழும் வாழ்க்கைக்கு ‘இடமுண்டாக்கும்படி’ இயேசு தம் சீஷர்களை உற்சாகப்படுத்தினர். ஏன்? சொந்த காரணங்களுக்காக அல்ல, ஆனால் “பரலோக ராஜ்யத்தின் பொருட்டு” அவ்வாறு செய்யும்படி கூறினார். அதேபோல், ‘கவனச் சிதறலில்லாமல் கர்த்தருக்கு தொடர்ந்து ஊழியம் செய்ய’ அப்படிப்பட்ட வாழ்க்கைப் போக்கை பின்தொடர பவுலும் உற்சாகப்படுத்தினார். (1 கொ. 7:32-35, NW) இளம் வயதிலேயே திருமணம் செய்வதால் ஆண்களில் அநேகர் பெத்தேலில் மணமாகாதவர்களாக சேவை செய்யும் சிலாக்கியத்தை இழப்பது வருத்தத்திற்குரிய விஷயம். எந்த குடும்பப் பொறுப்புகளும் இல்லாமல் இருக்கும் காலப் பகுதியில் தங்கள் சக்தியை முழுநேர ஊழியத்தில் செலவிடும்படி இளம் சகோதரர்களை உற்சாகப்படுத்துகிறோம். பின்னர், ஒரு காலக்கட்டத்தில் திருமணம் செய்ய தீர்மானித்தால், வாழ்க்கையிலும் கிறிஸ்தவ ஊழியத்திலும் பெற்ற அனுபவம் சிறந்த கணவர்களாக இருக்க அவர்களுக்கு கைகொடுக்கும். பெத்தேலில் பல வருடங்கள் சேவை செய்த பின் சிலர் திருமணம் செய்து கொண்டு ஒரு தம்பதியாக அங்கேயே தொடர்ந்து சேவிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். பின்னர் வட்டார அல்லது மாவட்ட சேவை போன்ற வேறு ஊழிய சிலாக்கியங்களை அவர்கள் பெற்றாலும் பெத்தேல் சேவையில் செலவழித்த நாட்களை எண்ணி நிச்சயம் கவலைப்படுவதில்லை.

20 பொருளாதார நாட்டங்களால் திசை திரும்பிவிடாதீர்கள்: ‘படிப்பு முடிந்ததும் என்னுடைய இலக்கு என்ன, உலகப்பிரகாரமான முழுநேர வேலையை தேடுவதா அல்லது யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்வதா?’ என ஒவ்வொரு இளைஞரும் கேட்டுக்கொள்வது நல்லது. முழுநேர ஊழியத்தை தெரிவு செய்தால் தியாகங்கள் செய்ய வேண்டும் என்பது உண்மையே. ஆனால் உலகப்பிரகாரமான முழுநேர வேலையிலும் அந்த நிலைதானே! முடிவில், எந்த வேலை உண்மையிலேயே நீண்ட கால, நன்மையான பலனை தரும்? இயேசு தெளிவான பதிலை கொடுத்தார். மத்தேயு 6:19-21-⁠ல் இவ்வாறு கூறினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு சேவை செய்வதற்கு மாறாக உலகப்பிரகாரமான முழுநேர வேலையை தேட அல்லது பொருளாதார காரியங்களை பின்தொடர நம் இதயம் ஒருபோதும் நம்மை கவர்ந்திழுக்காதிருப்பதாக. யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் வண்ணம், அவரோடு நல்லுறவை அனுபவிப்பதே நாடத்தக்க ஒரே பொக்கிஷம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். (நீதி. 27:11) இளம் பிராயத்திலேயே யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் எதை மதிப்புமிக்கதாக கருதுகிறோம் என்றும் ராஜ்யம் நமக்கு எந்தளவுக்கு முக்கியமாக உள்ளது என்றும் காட்டுகிறோம். “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்பதை நினைவில் வையுங்கள். (நீதி. 10:22) யெகோவா தங்களுக்கு கொடுத்த அனைத்திற்காகவும் மதிப்புமிக்க ஒன்றை அவருக்கு திரும்ப கொடுப்பதன் மூலம் தங்கள் இதயம் எங்கிருக்கிறது என்பதைக் காட்ட இளைஞர்களுக்கு ஒப்பற்ற வாய்ப்பிருக்கிறது. தேவைப்படும் தகுதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு பெத்தேல் சேவை இத்தகைய அற்புத வாய்ப்பை அளிக்கிறது.

21 பெத்தேலில் சேவை செய்பவர்களுக்கு ஒழுக்க சுத்தம் அவசியம்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” என சங்கீதக்காரன் கேட்டுவிட்டு “உமது [யெகோவாவின்] வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” என பதிலளித்தார். (சங். 119:9) சாத்தானிய உலகின் ஒழுக்கக்கேடு சம்பந்தப்பட்ட எதையும் தவிர்ப்பதை அது உட்படுத்துகிறது. இன்டர்நெட்டில் ஆபாசம், எதிர்பாலாரோடு தவறான நடத்தை, இழிவான இசை, மட்டரகமான பொழுதுபோக்கு, சிறுவயதிலேயே குடிப்பழக்கம் போன்றவை நம் இளைஞர்கள் ஆவிக்குரிய இலக்குகளை அடைவதை தடுக்க சாத்தான் விரிக்கும் சில தந்திர வலைகளாகும். இந்த சூழ்ச்சிகளை எதிர்க்க திடதீர்மானம் அவசியம். இளைஞராகிய நீங்கள் இத்தகைய காரியங்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருந்தால் உங்கள் சபை மூப்பர்களிடம் அதைக் குறித்து பேசுங்கள், பெத்தேல் சேவைக்காக விண்ணப்பிக்கும் முன்பு இப்பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுங்கள். யெகோவாவை முழுமையாக சேவிக்க சுத்தமான மனசாட்சி தேவை.​—⁠1 தீ. 1:⁠5.

22 மற்றவர்களை அனுசரித்துப் போக கற்றுக்கொள்ளுங்கள்: பெத்தேல் சேவையில் வெற்றி காண்பதற்கு முக்கியமாய் தேவை மற்றவர்களை அனுசரித்து போக கற்றுக்கொள்வது. பெங்களூரில் உள்ள பெத்தேல் குடும்பத்தில் பல்வேறு பின்னணிகளையும் சேர்ந்த சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேறுபாடு பெத்தேலுக்கு ஆவிக்குரிய அழகை சேர்க்கிறபோதிலும், சில சமயங்களில் சவால்களையும் ஏற்படுத்தலாம். பெத்தேல் சேவையைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ‘என் கருத்தை மற்றவர்கள் ஏற்காதபோது எளிதில் புண்பட்டுவிடுகிறேனா? மற்றவர்களால் என்னுடன் சுலபமாக அனுசரித்துப் போக முடிகிறதா?’ என உங்களையே கேட்டுக்கொள்வது நல்லது. இந்த விஷயங்களில் முன்னேற வேண்டியிருந்தால் இப்போதே அதற்காக முயற்சி எடுங்கள். அவ்வாறு செய்வது பெத்தேல் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் எளிதில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள உங்களுக்கு உதவும்.

23 யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய நபராக திகழ கடினமாய் உழையுங்கள். பைபிளை தினந்தோறும் வாசிப்பது உட்பட தவறாமல் தனிப்பட்ட படிப்பில் ஈடுபடுவதற்கான நல்ல திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மும்முரமாக ஈடுபடுங்கள். இந்தக் காரியங்களை செய்து வந்தால் உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் அனைவருக்கும் தெரியும். (1 தீ. 4:15) முழுநேர ஊழியத்தை வாழ்க்கைப் போக்காக ஏற்க இப்போதே ஆயத்தமாகிறவர்களுக்கு எப்பேர்ப்பட்ட அருமையான வாய்ப்புகள் காத்திருக்கின்றன!

24 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்: இளைஞர் முழுநேர ஊழியத்தை ஏற்கும்படி உற்சாகப்படுத்த பெற்றோர் என்ன செய்யலாம்? “தேறினவன் எவனும் தன் குருவைப் போலிருப்பான்” என இயேசு சொன்னார். (லூக். 6:40) நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மாணவன், ஈடுபாடுமிக்க தனது ஆசிரியரின் சிறந்த குணங்களை வெளிக்காட்டுவது இயல்பானதே. ‘தேவபக்திக்கேதுவாக முயற்சி பண்ண’ பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் கடினமாக உழைக்கையில் கிறிஸ்தவ பெற்றோர்கள் இந்த நியமத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். (1 தீ. 4:7) ஆவிக்குரிய காரியங்களில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மனநிலையை வெளிக்காட்டுவது இயல்பு என்பதால் பெற்றோர் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவாவின் உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக பெத்தேலில் செய்யப்படும் வேலைகளை நாங்கள் தனிப்பட்ட விதமாக மதித்துணருகிறோமா? பெத்தேல் ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதித்திருப்பதை உணருகிறோமா? யெகோவாவுக்கு சேவை செய்ய வாழ்க்கையை அர்ப்பணிப்பதே நம் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த வாழ்க்கைப் போக்கு என நம்புகிறோமா?’ பெத்தேல் சேவையிடமும் அங்கு நடைபெறும் வேலையிடமும் நாம் காட்டும் மனமார்ந்த போற்றுதல் நம் பிள்ளைகளின் மனதிலும் அதே விதமான போற்றுதலை வளர்க்க உதவும்.

25 உண்மை வணக்கத்திடம் எல்க்கானாவும் அன்னாளும் மிகுந்த போற்றுதல் காட்டினார்கள். இன்றைய கிறிஸ்தவ பெற்றோருக்கு அவர்கள் ஒப்பற்ற முன்மாதிரி. பூர்வ இஸ்ரவேலில் வருடத்திற்கு மூன்று முறை ஆசரிப்புக்கூடாரத்தில் ‘கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரும்படி’ இஸ்ரவேலிலுள்ள ஆண்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் யெகோவாவின் இந்த வணக்க மையத்தில் “வருஷந்தோறும்” பலி செலுத்துவதற்காக, எல்க்கானா சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பெரும்பாலும் நடந்தே தன் முழு குடும்பத்தையும் அழைத்துச் சென்றார். (யாத். 23:17; 1 சா. 1:3, 4, 9, 19; 2:19) ஆவிக்குரிய காரியங்களிடம் தான் காட்டிய அதே மதித்துணர்வை தன் முழு குடும்பமும் காட்ட வேண்டுமென்று இந்தக் குடும்பத் தலைவன் விரும்பியது தெளிவாக தெரிகிறது.

26 உண்மை வணக்கத்திடம் தன் கணவருக்கிருந்த அதே அக்கறை அன்னாளுக்கும் இருந்தது. ஆசரிப்புக்கூடாரத்தில் நடைபெற்ற உண்மை வணக்கத்தை ஆதரிக்க தானும் கடமைப்பட்டிருப்பதாக அவள் மனதார உணர்ந்தாள். தனக்கு யெகோவா ஒரு மகனைக் கொடுத்தால் ஆசரிப்புக்கூடார பணிக்கு அவனை அர்ப்பணிப்பதாக அன்னாள் பொருத்தனை பண்ணினாள். (1 சா. 1:11) மனைவியின் பொருத்தனை சரியானதாக இல்லையென்றால் அதை கணவன் ரத்து செய்வதற்கு மோசேயின் நியாயப்பிரமாண சட்டம் இடமளித்தது. (எண். 30:6-8) ஆனால், அன்னாளின் பொருத்தனைக்கு எல்க்கானா ஒப்புதலளித்தார் என்றே தோன்றுகிறது; உண்மை வணக்கத்திற்கு வெளிக்காட்டாக அவள் செய்யவிருந்ததை அவரும் ஆதரித்தார் என்பதையே இது காட்டுகிறது!​—⁠1 சா. 1:22, 23.

27 தன் பெற்றோர் காட்டிய போற்றுதலும் சிறந்த மனப்பான்மையும் அவர்களுடைய மகன் சாமுவேல் மீது நல்ல விதத்தில் செல்வாக்கு செலுத்தியதா? ஆம், நிச்சயமாகவே. சிறு வயதுமுதல் தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளை சாமுவேல் மனமுவந்து உண்மையோடு செய்தார்; கடவுளுடைய வேலையில் இன்னும் அருமையான சிலாக்கியங்களைப் பெற பயிற்றுவிக்கப்பட்டார். ஆசரிப்புக்கூடாரத்தில் சாமுவேல் சேவை செய்வதில் எல்க்கானாவும் அன்னாளும் காட்டிய அக்கறை அவர் அங்கு தன் வேலைகளை ஆரம்பித்த உடன் முடிந்துவிடவில்லை. அவர் முழுநேர சேவையை செய்து வருகையில், அவர்கள் தவறாமல் போய் அவரை சந்தித்து உற்சாகமூட்டி, ஆதரித்தார்கள்.​—⁠1 சா. 2:18, 19.

28 எல்க்கானாவும் அன்னாளும் இன்றைய கிறிஸ்தவ பெற்றோருக்கு எத்தகைய ஒப்பற்ற முன்மாதிரியாக திகழ்கிறார்கள்! பெத்தேலில் சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பற்றி நாம் இதயப்பூர்வமாக புகழ்ந்து பேசுவதை பிள்ளைகள் கேட்கையிலும், ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் நம்முடைய சுயதியாக மனப்பான்மையை காண்கையிலும், மற்றவர்களுக்கு சேவை செய்யும் மனச்சாய்வை அவர்களும் வளர்த்துக்கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளில் இத்தகைய சிறந்த மனப்பான்மையை உருவாக்குவதில் அநேக பெற்றோர் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஏழு வயது சிறுமி இவ்வாறு எழுதினாள்: “நான் பெரியவளாகும்போது பெத்தேலுக்கு வர விரும்புகிறேன். அங்கு சில வேலைகளை செய்ய ஆசைப்படுகிறேன். (1) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை டைப் செய்வேன், (2) படம் வரையும் வேலை செய்வேன், (3) லாண்ட்ரியில் துணி மடித்து கொடுப்பேன். எந்த வேலை கொடுத்தாலும் பரவாயில்லை, நான் அதை செய்யத் தயார்.” நம் பிள்ளைகளின் இதயத்தில் இப்படி மனப்பூர்வமாய் சேவை செய்யும் மனப்பான்மை வளர்வதை காண்பது எவ்வளவு சந்தோஷமளிக்கிறது!

29 இளைஞர்களே, “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்பதை நினைவில் வையுங்கள். (1 யோ. 2:17) விசேஷ சிலாக்கியமான பெத்தேல் சேவை உட்பட ஆவிக்குரிய இலக்குகளை அடைய தொடர்ந்து முயலுங்கள். பெற்றோர்களே, தேவ பக்தியை வளர்த்துக்கொள்ள தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்திய பூர்வ கால விசுவாசிகளின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். (2 பே. 3:11) நம் மகத்தான படைப்பாளருக்கு முடிந்தளவு முழுமையாக சேவை செய்ய நம் இளம் சகோதர சகோதரிகளுக்கு உதவுவதில் நம் பங்கை நாம் அனைவரும் செய்வோமாக. ஏனெனில், அதுவே “இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ள[து].”​—⁠1 தீ. 4:8; பிர. 12:⁠1.

[பக்கம் 4-ன் பெட்டி]

பெத்தேல் சேவைக்கான அடிப்படை தேவைகள்

● முழுக்காட்டுதல் பெற்று குறைந்தது ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்

● யெகோவாவிடமும் அவருடைய அமைப்பிடமும் ஆழ்ந்த அன்புடைய ஆவிக்குரிய நபராக இருக்க வேண்டும்

● ஆவிக்குரிய ரீதியிலும், மன ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், உடல் ரீதியிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

● இந்திய பிரஜையாக அல்லது சட்டப்படி நிரந்தரமாக தங்கும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும்

● ஆங்கிலம் நன்கு படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்

● 19-35 வயதுள்ளவராக இருக்க வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்