யெகோவாவுடனும் அவரது குமாரனுடனும் சந்தோஷமாக ஒன்றுபட்டிருத்தல்
இவ்வருடத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சி மார்ச் 28 அன்று அனுசரிக்கப்படும்
1 இந்த 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி, சூரிய மறைவுக்குப் பிறகு, கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிப்பதன் மூலம் யெகோவா தேவனுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நாம் சந்தோஷமாக ஒன்றுபட்டிருப்பதை வெளிக்காட்டுவோம். அந்த மிக முக்கியமான நிகழ்ச்சியில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீந்தவர்கள், சக ராஜ்ய சுதந்தரவாளிகளுடனும் பிதாவுடனும் அவருடைய குமாரனுடனும் விசேஷ ‘ஐக்கியத்தை’ அனுபவிப்பர். (1 யோ. 1:3; எபே. 1:11, 12) ‘வேறே ஆடுகளான’ லட்சக்கணக்கானோர், யெகோவாவுடனும் அவருடைய குமாரனுடனும் ஐக்கியமாயிருந்து, கடவுளுடைய வேலையை நிறைவேற்றுவதில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு இருதயத்திலும் மனதிலும் ஒன்றுபட்டிருக்கும் தங்களது அரிய வாய்ப்பை நினைவுகூருவர்.—யோவா. 10:16.
2 நெருங்கிய உறவில் சேர்ந்து உழைத்தல்: யெகோவாவும் இயேசுவும் எப்பொழுதுமே சந்தோஷமாக ஒன்றுபட்டு இருந்திருக்கின்றனர். மனிதனைப் படைப்பதற்கு முன்பே பற்பல யுகங்களாக நெருங்கிய கூட்டுறவை அனுபவித்தனர். (மீ. 5:2) எனவே அவ்விருவருக்கும் மத்தியில் கனிவான பாசப்பிணைப்பால் நெருங்கிய பந்தம் வளர்ந்தது. ஞானம் என்று வருணிக்கப்பட்டிருக்கும் இந்த முதற்பேறான குமாரன், மனிதராக வருவதற்கு முன்பு இவ்வாறு சொல்ல முடிந்தது: “நித்தம் அவருடைய [“யெகோவாவுடைய,” NW] மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.” (நீதி. 8:30) அன்பின் பிறப்பிடமாய் இருந்தவருடன் பற்பல யுகங்களாக நெருங்கிய கூட்டுறவு கொண்டிருந்தது, கடவுளுடைய குமாரன்மீது அளவிட முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது!—1 யோ. 4:8.
3 மனிதகுலத்திற்கு மீட்பு தேவை என்பதை மனதில் வைத்து, மீட்பின் பலியாக அளிப்பதற்கு பிரத்தியேகமாக மனுமக்களின்மீது அலாதி பிரியம் வைத்திருந்த தம் ஒரே பேறான குமாரனை யெகோவா தெரிந்தெடுத்தார்; அந்தப் பலியின் அடிப்படையில்தான் நம் ஒரே நம்பிக்கை உள்ளது. (நீதி. 8:31) ஒரே நோக்கத்தை நிறைவேற்றுவதில் யெகோவாவும் அவருடைய குமாரனும் ஒன்றுபட்டிருப்பதைப் போலவே நாமும் அவ்விருவருடனும் மற்றவர்களுடனும் கடவுளுடைய சித்தத்தை சந்தோஷத்துடன் செய்வதிலும் உறுதியான அன்பிலும் ஒன்றுபட்டிருக்கிறோம்.
4 நம் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்தல்: நினைவுநாள் ஆசரிப்பில் ஆஜராகியிருப்பதன் மூலமும் கவனத்துடனும் மரியாதையுடனும் செவிகொடுப்பதன் மூலமும் நமக்காக யெகோவா காட்டும் அன்பு, அவருடைய குமாரன் அளித்த பலி ஆகியவற்றிற்கு மனமார்ந்த நன்றியை நாம் செயலில் காட்டலாம். இயேசுவின் அன்பான முன்மாதிரி, மீட்பை அளிப்பதற்காக மரணம் வரை உண்மையுடன் இருந்தது, கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் ராஜாவாக அவரது ஆட்சி, அந்த ஆட்சியால் மனிதகுலத்திற்கு கிடைக்கவிருக்கும் ஆசீர்வாதங்கள் ஆகியவை அப்போது சிறப்பித்துக் காட்டப்படும். ‘சத்தியத்திற்கு உடன் வேலையாட்களாய்,’ யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக வைராக்கியத்துடன் உழைப்பவர்களாக, நம் விசுவாசத்தை தொடர்ந்து வெளிக்காட்டுவதன் அவசியமும் நமக்கு நினைப்பூட்டப்படும்.—3 யோ. 8; யாக். 2:17.
5 நம்மோடு சேர்ந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுதல்: கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள பிராந்தியத்திலுள்ள செயலற்ற சாட்சிகள் அனைவரையும் உற்சாகப்படுத்த மூப்பர் குழு விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். (மத். 18:12, 13) யாரையும் விட்டுவிடாமலும் தனிப்பட்ட வகையில் அழைப்பதற்கும் பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள்.
6 நினைவு ஆசரிப்புக்கு வருவார்களென நீங்கள் எதிர்பார்க்கும் எவர்களாவது இருக்கிறார்களா? வேறு எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? இந்த நிகழ்ச்சிக்கான அவர்களுடைய நன்றியுணர்வை பெருகச் செய்வதற்கு நீங்கள் முன்முயற்சி எடுங்கள். அவர்களுக்கு கனிவுடன் அழைப்பு கொடுங்கள், தாங்கள் வரவேற்கப்படுவதாக உணரச் செய்யுங்கள். வருடத்தின் மிக முக்கியமான இந்நிகழ்ச்சிக்கு நம் பைபிள் மாணாக்கர் அனைவரையும் ஆர்வம் காட்டும் மற்றவர்களையும் குடும்ப அங்கத்தினர்களையும் நமக்குத் தெரிந்தவர்களையும் வரவேற்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக. ‘கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையை’ கற்றுக்கொள்ளும் எல்லாருக்கும் மீட்பின் நன்மைகள் கிடைக்கத்தான் செய்கின்றன. (பிலி. 3:8) கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனுக்கான உறுதியான நம்பிக்கையைப் பெறலாம்.—யோவா. 3:16.
7 ஆர்வமுள்ளவர்கள்மீது நினைவு ஆசரிப்பு ஏற்படுத்தும் தாக்கத்தை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். பாப்புவா நியூ கினீ தீவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இக்கூட்டத்தில் கலந்துகொள்ள 11 பேர், பொங்கியெழுந்த கடல் வழியாக ஒரு சிறிய படகில் 17 மணிநேரம் பயணித்தனர். ஏன்? அவர்கள் சொன்னதாவது: “கிறிஸ்துவின் நினைவுநாள் ஆசரிப்பை யெகோவாவின் உடன் வணக்கத்தாருடன் சேர்ந்து அனுசரிக்க விரும்பினோம்; எனவே நாங்கள் கஷ்டப்பட்டு பயணித்தது துளியும் வீண் போகவில்லை.” ஆர்வமுள்ள அவர்கள் காட்டிய வைராக்கியத்தையும், யெகோவாவுடனும் அவர் குமாரனுடனும் கிறிஸ்தவ சகோதரத்துவத்துடனும் சந்தோஷத்துடன் ஒன்றுபட்டிருப்பதற்கு அவர்கள் காட்டிய நன்றியையும் சற்று நினைத்துப் பாருங்கள்!
8 பைபிள் படிப்புக்கான ஏற்பாட்டை அக்கறை காட்டும் அனைவரிடமும் தெரிவியுங்கள். தவறாமல் சபை கூட்டங்களுக்கு வரவும், அவர்கள் கற்று வரும் சத்தியங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் உற்சாகப்படுத்துங்கள். தங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களை பொருத்துவதன் மூலம் ‘ஒளியிலே நடக்கவும்,’ ‘சத்தியத்தின்படி நடக்கவும்’ அவர்களுக்கு உதவுங்கள். (1 யோ. 1:6, 7) யெகோவாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய சித்தத்தை செய்வதில் ஒன்றுபட்டிருக்கும் அரிய வாய்ப்புக்கான மதித்துணர்வை தொடர்ந்து வளர்க்க அவர்களுக்கு உதவுங்கள்.
9 ‘ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப் போராட’ சந்தோஷமாய் ஒன்றுபட்டிருப்பது எப்பேர்ப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பு! (பிலி. 1:27, 28) யெகோவாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்கும் வகையில், மார்ச் 28 அன்று நினைவு ஆசரிப்பில் இனிய நட்புறவை அனுபவிக்க ஆவலுடன் காத்திருப்போமாக!—லூக். 22:19.