மீட்கும்பொருளை நன்றியோடு நினைவுகூருதல்
1 இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் விதத்தில், உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் மார்ச் 22, 2008 சனிக்கிழமை அன்று சூரிய மறைவுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதற்காக ஒன்றுகூடுவோம். (லூக். 22:19; 1 கொ. 11:23-26) 1,975 வருடங்களுக்கு முன்பு அதே நாளில் செய்யப்பட்ட அனைத்திற்காகவும் நம் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதற்காகவே அவ்வாறு செய்யத் தூண்டப்படுகிறோம். இயேசு, கழுமரத்தில் வேதனைப்பட்டு மரணமடையும்வரை பரிபூரண உத்தமத்தன்மையைக் கைவிடாமல் காத்துக்கொண்டதன் மூலம் தம் தகப்பனின் பெயரைப் பரிசுத்தப்படுத்தினார்; இவ்வாறு, சாத்தானின் நிந்தனைகளுக்கு மிகச் சிறந்த உத்தரவைக் கொடுத்தார்.—யோபு 1:11; நீதி. 27:11.
2 இயேசு சிந்திய இரத்தம் புது உடன்படிக்கையை உறுதிப்படுத்தியது; இதனால் பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சிசெய்யும் எதிர்பார்ப்புடன் அபூரண மனிதர்கள் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட முடிந்தது. (எரே. 31:31-34; மாற். 14:24) மேலும், தாம் நெஞ்சார நேசித்த மகனையே பலியாக அளித்ததிலிருந்து, கடவுளுக்கு மனிதகுலத்தின் மீதிருந்த அன்பு எந்தளவு ஆழமானது என்பது தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டது; இதை இயேசுவே நிக்கொதேமுவிடம் கூறியிருந்தார்.—யோவா. 3:16.
3 மற்றவர்களை அழையுங்கள்: நமக்குத் தெரிந்தவர்களையெல்லாம் பட்டியல் போட்டு நேரில் சென்று அழைக்கும்படி இந்த மாத நம் ராஜ்ய ஊழிய இதழிலுள்ள உட்சேர்க்கையில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வாறு பட்டியல் போட்டு ஆட்களை அழைக்க ஆரம்பித்துவிட்டீர்களா? நினைவுநாள் ஆசரிப்பிற்கு ஆட்களை அழைப்பதற்காக மார்ச் 1 முதல் துவங்கும் விசேஷ அழைப்பிதழ் விநியோகிப்பில் முழுமையாகக் கலந்துகொள்ள ஏற்பாடு செய்துவருகிறீர்களா? இக்கூட்டத்திற்கு வருபவர்கள் மீட்கும்பொருள்மீது விசுவாசத்தை வளர்க்க உதவும் வேதப்பூர்வமான தகவலை அறிந்துகொள்வார்கள்; இந்த விசுவாசமே அவர்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது.—ரோ. 10:17.
4 இந்த விசேஷ அழைப்பை ஏற்றுக் கூட்டத்திற்கு வந்திருப்பவர்களைக் கனிவுடன் வரவேற்கும்படி, தங்களால் முடிந்தவர்கள் எல்லாரும் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே வந்துவிடத் திட்டமிட வேண்டும். இக்கூட்டத்திற்கு நிறையப் பேர் வருவார்களென்பதால், நாம் புதியவர்கள்மீதும் எப்பொழுதாவது கூட்டத்திற்கு வருபவர்கள்மீதும் முக்கியக் கவனம் செலுத்துவது அவசியம்.
5 உங்கள் இருதயங்களைத் தயார்படுத்துங்கள்: தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2008 மற்றும் 2008—யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் ஆகியவற்றில் நினைவுநாளையொட்டி விசேஷ பைபிள் வாசிப்பு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது; இந்த வாசிப்பு மார்ச் 17-ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தின் கடைசிக் கட்டத்தில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களை நினைத்துப் பார்ப்பது, நினைவுநாள் ஆசரிப்பிற்கு உங்கள் இருதயத்தைத் தயார்படுத்த உதவும். (எஸ்றா 7:10) இந்த பைபிள் பதிவுகளை ஜெபத்துடன் தியானிப்பது, மீட்கும்பொருளை அளிப்பதில் யெகோவா மற்றும் அவருடைய மகன் காட்டியுள்ள அன்பிற்கான உங்களது நன்றியுணர்வை அதிகரிக்கும்.—சங். 143:5.
6 நினைவுநாள் நெருங்க நெருங்க, இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு நம்மையும் மற்றவர்களையும் தயார்படுத்த நாம் கவனம் செலுத்துவோமாக. மீட்கும்பொருளை நன்றியோடு நினைவுகூருவது யெகோவாவோடும் அவருடைய மகனோடும் உள்ள நமது உறவைப் பலப்படுத்தும். (2 கொ. 5:14, 15) அவர்களைப் போலவே நாமும் மற்றவர்கள்மீது சுயதியாக அன்பைக் காட்டும்படி நம்மைத் தூண்டும்.—1 யோ. 4:11.
[கேள்விகள்]
1, 2. நாம் ஏன் மீட்கும்பொருளை நன்றியோடு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்?
3. நினைவுநாள் ஆசரிப்புக் கூட்டத்திற்கு வருபவர்கள் எவ்வாறு நன்மை அடைவார்கள்?
4. நினைவுநாள் ஆசரிப்புக் கூட்டத்திற்கு நாம் ஏன் முன்னதாகவே வர வேண்டும்?
5. இந்நிகழ்ச்சிக்கு உங்கள் இருதயத்தை நீங்கள் எப்படித் தயார்படுத்தலாம்?
6. மீட்கும்பொருளை நன்றியோடு நினைவுகூருவது என்ன செய்யும்படி நம்மைத் தூண்டும்?